நேருக்கு நேர் விவாதம்: டிரம்புடன் மோதும் கமலா ஹாரிஸின் பலமும் பலவீனமும்

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், ஜெர்மி ஹோவெல்
- பதவி, பிபிசி உலக சேவை
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இரண்டாவது விவாதம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விவாதத்தில் முதல்முறையாக டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் விவாதிக்க உள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வேட்பாளர்கள் மத்தியில் நடக்கும் விவாதங்கள் உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது. இந்த விவாதங்கள் அமெரிக்காவில் மக்களின் வாக்களிக்கும் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
கமலா ஹாரிஸ் விவாதிக்கும் திறன் பெற்றவர் என்று கூறப்படுகிறது. அதே நேரம் டொனால்ட் டிரம்ப் கடந்த 2016 மற்றும் 2020 அதிபர் தேர்தல் விவாதங்களில் தான் ஒரு வலிமையான வேட்பாளர் என்பதை நிரூபித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விவாதம் எப்போது நடக்கும்? அதன் விதிகள் என்ன?
பிலடெல்பியாவில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்த விவாதம் நடைபெறுகிறது.
இரவு 9 மணிக்கு (Eastern Time) தொடங்கும். இது 2024ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலை முன்னிட்டு நடக்கும் இரண்டாவது விவாதம்.
முதல் விவாதம் ஜூன் மாதம் டொனால்ட் டிரம்ப் மற்றும் அதிபர் ஜோ பைடனுக்கு இடையே நடைபெற்றது. அதன் பின்னர் பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக முடிவு செய்தார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் ஏபிசி ஊடகத்தில் ஒளிபரப்பப்படும் மற்றும் ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி+ மற்றும் ஹுலு ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும்.
இந்த விவாதத்தில் நேர வரம்புகள் கடுமையாகப் பின்பற்றப்படும். மதிப்பீட்டாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒவ்வொரு வேட்பாளருக்கும் அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படும். அதன் பின்னர் எதிர் வேட்பாளரின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து விவாதிக்க இரண்டு நிமிடங்கள் வழங்கப்படும்.
ஒரு வேட்பாளர் பேசும்போது மற்றொரு வேட்பாளர்களின் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்து வைக்கப்படும். மேலும் விவாத அறையில் பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள்.
கமலா ஹாரிஸ் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்யப்படக் கூடாது என்று விரும்பினார், ஆனால் சமீபத்தில் விவாத விதிகளுக்கு ஒப்புக் கொண்டார்.
இந்தக் குறிப்பிட்ட விதி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. டிரம்புக்கும் பைடனுக்கும் இடையிலான முதல் விவாதம் பல்வேறு குறுக்கீடுகள் மற்றும் வாக்குவாதங்களால் நிறைந்திருந்தது. அதைத்தொடர்ந்து இது கொண்டு வரப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இந்த விவாதம் டேவிட் முயர் மற்றும் லின்சி டேவிஸ் ஆகிய இரண்டு மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. இருவரும் ஏபிசி ஊடகத்தின் செய்தியாளர்கள்.
கமலா ஹாரிஸின் பலம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
கமலா ஹாரிஸ் 2003இல் சான் பிரான்சிஸ்கோ வழக்கறிஞராக போட்டியிட்டு வெற்றி பெற்றதில் இருந்தே தேர்தல் விவாதங்களில் பங்கேற்று வருகிறார்.
கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகவும், கலிபோர்னியாவுக்கான அமெரிக்க செனட்டராகவும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அவரின் வெற்றிகரமான பிரசாரங்களின் போதும் அவர் விவாதங்களில் பங்கேற்றார்.
கமலா ஹாரிஸ் 2019இல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பதவிக்குப் போட்டியிட்டபோது ஜோ பைடனுடன் விவாதித்தார். மேலும் அவர் 2020 துணை அதிபர் விவாதத்தில் மைக் பென்ஸை எதிர்கொண்டார்.
மேடையில் நிற்கும்போது அந்தச் சூழலைத் தனது பேச்சுத் திறனால் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதை அவர் காட்டினார். 2020ஆம் ஆண்டு பென்ஸுட் உடனான விவாதத்தில் அவர் குறுக்கிட்டதற்காக அவரைத் தயங்காமல், "மதிப்பிற்குரிய துணை அதிபரே, நான் பேசி கொண்டிருக்கிறேன்" என்று கண்டித்தார்.
கமலா ஹாரிஸ் அமெரிக்க செனட்டில் நிறைய விவாத அனுபவங்களைப் பெற்றுள்ளார். அதற்கு முன், அவர் கலிபோர்னியா நீதிமன்றங்களில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றினார், ஒவ்வொரு வழக்கிலும் எதிர்க்கட்சியினரின் குறைபாடுகளை அடையாளம் காண்பதில் வல்லவர்.
விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் முன்வைக்கும் கருத்துகளை மறுத்து வாதிடும்போது இந்தத் திறமை அவருக்குப் பயனளிக்கும்.
இருப்பினும், 2020 ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆவதற்கான முயற்சியில் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார். மேலும் அவர் நிலையான கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதே அவர் மீது வைக்கப்பட்ட முக்கிய விமர்சனம்.
செவ்வாய்க் கிழமை நடக்கும் விவாதத்தில், கமலா ஹாரிஸிடம் மதிப்பீட்டாளர்கள் அவரது கொள்கைகள் பற்றிப் பல கடினமான கேள்விகளைக் கேட்க வாய்ப்பிருக்கிறது.
கமலா ஹாரிஸ் தனது பொது மேடைப் பேச்சுகளில் நீளமாகப் பேசக் கூடியவர் என்பதால் விவாதத்தில் காலக்கெடுவைப் பின்பற்றிச் சொல்ல வேண்டிய கருத்துகளைத் தெளிவாக, சுருக்கமாகச் சொல்ல வேண்டிய சூழலில் இருக்கிறார்.
அவரது சமீபத்திய சிஎன்என் நேர்காணலில் "ஒரு அவசரமான விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்றார்.
அதிபர் தேர்தல் விவாதங்களில், பொதுவாகப் பேசும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும். வேட்பாளர்களின் பிரசாரத் தகவல்கள் வாக்காளர்களுக்குத் தெளிவாகச் சென்றடைய வேண்டும்.
டிரம்பின் பலம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
கமலா ஹாரிஸுக்கு எதிராக டிரம்ப் எதிர்கொள்ளும் இந்த விவாதம் அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
அவர் 2016 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அதிபர் தேர்தலுக்கான 4 விவாதங்களில் பங்கேற்றார். அவர் மிகவும் வாக்குவாதம் செய்யும், வித்தியாசமான வேட்பாளர் என்பதை நிரூபித்தார்.
ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான 2016 விவாதங்களின் போது, அவர் மேடையைச் சுற்றிச் சென்று, அவர் பேசிக் கொண்டிருக்கையில் அவருக்குப் பின்னால் சென்று நின்றார். இது "பயத்தை ஏற்படுத்தியது” என்று ஹிலாரி கூறினார்.
கடந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் முதல் விவாதத்தில், அவர் ஜோ பைடன் பேசுகையில் குறுக்கிட்டு, "நீங்கள் வாயை மூடுங்கள்" என்று சொன்னார்.
இந்தத் தந்திரங்கள் அவரது தேர்தல் எதிரிகளைச் சீர்குலைத்து அவரைக் கவனத்தின் மையமாக மாற்றுகின்றன.
இருப்பினும், டிரம்ப் அடிக்கடி விவாதங்களின்போது பேச்சை மாற்றி, வேறு ஏதோ பேசி மழுப்புகிறார். அவர் பேசும் விஷயங்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பதாக உண்மை சரிபார்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருப்பது யார்?

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஜூலை மாதம் அதிபராக மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, ஜோ பைடன் தேசிய அளவிலும் பல முக்கிய மாகாணங்களிலும் வாக்காளர்களின் கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்பைவிட பின்தங்கி இருந்தார்.
ஆனால், கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஆனதில் இருந்து டிரம்பைவிட மிகவும் பிரபலமாகிவிட்டார் என்று தேசிய கருத்துக் கணிப்புகளின் சராசரியைத் தொகுக்கும் அரசியல் பகுப்பாய்வு அமைப்பான ``RealClearPolitics’’ கூறுகிறது.
செப்டம்பர் 3ஆம் தேதி நிலவரப்படி, அவர் தேசிய அளவில் 1.9 புள்ளிகள் என்ற அளவில் டிரம்பைவிட முன்னிலை வகிக்கிறார்.
இருப்பினும், ஹிலாரி கிளிண்டன் 2016இல் இதே கட்டத்தில் தேசிய வாக்கெடுப்பில் ஐந்து புள்ளிகள் முன்னிலையில் இருந்தார். ஆனால் தேர்தலில் டிரம்பிடம் தோல்வியடைந்தார்.
தேசிய தேர்தல்களைவிட, மாகாணங்களுக்குள் நடக்கும் கருத்துக் கணிப்புகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், தனிப்பட்ட மாகாணங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஒரு வேட்பாளர் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறது, மேலும் யார் அதிபராக வர வேண்டும் என்பதைத் தேர்தல் கல்லூரி தீர்மானிக்கிறது.
அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், வட கரோலினா மற்றும் பென்சில்வேனியா போன்ற மாகாணங்கள் உள்ளன. அவை வேட்பாளர்களின் வெற்றிக்கு முக்கியமானவை. இந்த இடங்களில் தேர்தல் முடிவுகளைக் கணிப்பது கடினம். அங்கு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
செப்டம்பர் தொடக்கத்தில், RealClearPolitics, மிச்சிகன் மற்றும் ஜார்ஜியாவில் நடந்த கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் ட்ரம்பை முந்தினார். மேலும் பென்சில்வேனியாவில் அவருக்கு இணையான வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் அரிசோனா மற்றும் வட கரோலினாவில் பின்தங்கினார்.
அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படும் ஒருமித்த கருத்து என்னவெனில், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை மதிப்பிடுவது கடினம். ஒரு வேட்பாளருக்கு அதிபர் பதவிக்கு வர 270 தேர்தல் எலக்டோரல் காலேஜ் வாக்குகள் தேவை.
ஜனநாயகக் கட்சிக்கு 226 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், குடியரசுக் கட்சியினருக்கு 219 வாக்குகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 93 வாக்குகள் இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












