வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு வீழ்ந்த ஒரு மாதத்தில் நடந்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வன்முறைப் போராட்டத்தால் ஒரு மாதத்திற்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியா வந்தார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் டாக்டர் முகமது யூனுஸ் நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகப் பதவியேற்றார்.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஒரு மாத காலமாக நிர்வாகத்தின் உயர் பதவிகளில் தொடர்ந்து பெரியளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனுடன், பொருளாதாரம் உட்பட நாட்டின் பல துறைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதிலாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வங்கித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காகத் தனி ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் சட்டவிரோதமான மற்றும் மோசடியான முறையில் பெற்ற கடன்களை, சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வங்கதேச போலீசாரும் தாக்குதல் குறித்த அச்சத்தில் இருந்து மீண்டு பணிக்குத் திரும்பியுள்ளனர். உடை மற்றும் சின்னத்தை மாற்றி காவல்துறையை நட்புறவு கொண்டதாக மாற்றுவது குறித்தும் புதிய இடைக்கால அரசு பேசியுள்ளது.
இதற்கிடையே, ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் எம்.பி.க்கள், அமைச்சர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்யும் செயல்முறை தொடர்கிறது. இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மாறாக, அரசின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் யூனுஸ், பிஎன்பி தலைவர் காலிதா ஜியா ஆகியோருக்கு எதிரான பல வழக்குகளில் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிஎன்பி மற்றும் ஜமாத் தவிர, நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீவிரவாத செயல்கள் மற்றும் பிற தீவிர வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர், இதுவும் விமர்சிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் என்ன நடந்தது?

ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று அவாமி லீக் அரசு கவிழ்ந்த பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
அந்தக் காலகட்டத்தில் நாட்டிலுள்ள 639 காவல் நிலையங்களில் குறைந்தது 450 காவல் நிலையங்கள் தாக்கப்பட்டதாக வங்கதேச காவல்துறை சங்கம் கூறுகிறது.
தாக்குதல்களின்போது, காவல் நிலையங்களை நாசப்படுத்துதல், தீ வைப்பு, ஆயுதங்கள், சொத்துகளைச் சூறையாடுதல் மற்றும் போலீசாரை கொலை செய்த சம்பவங்கள் நடந்தன.
ஷேக் ஹசீனா அரசின் வீழ்ச்சிக்கு முன்னும் பின்னும் வன்முறையின்போது நாடு முழுவதும் குறைந்தது 44 போலீசார் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதன் பின்னர், பணியிடப் பாதுகாப்பு, காவலர்கள் கொலை வழக்கில் நீதி, இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து, நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது.
ஒரு கட்டத்தில், உள்ளூர்வாசிகள் மற்றும் தன்னார்வலர்கள் இரவு முழுவதும் சுற்றுப்புறங்களில் ரோந்து செல்லத் தொடங்கினர்.
இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் வங்கதேசம் இருந்தபோது பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றார். பிறகு, இடைக்கால அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் முயற்சியைத் தொடங்கியது.
அப்போதைய உள்துறை அமைச்சக ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு) எம்.சகாவத், பல சுற்றுக் கூட்டங்களுக்குப் பிறகு காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தார்.
பணிக்குத் திரும்பிய போலீசார்

பட மூலாதாரம், President's Press Wing
மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்பவில்லை என்றால், அவர்கள் பணியில் ஆர்வம் காட்டவில்லை என்றே கருதப்படும் என்றும் அவர் காலக்கெடு விதித்து தெரிவித்தார்.
அதன்பிறகு ஆகஸ்ட் 11ஆம் தேதி போலீசார் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.
இருப்பினும், அனைத்து இழப்புகளையும் ஈடுசெய்த பிறகு, நிலைமை மற்றும் செயல்பாடு முற்றிலும் இயல்பு நிலைக்கு வர இன்னும் சில காலம் எடுக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மறுபுறம், காவல்துறையினரின் மன உறுதியை அதிகரிக்கவும், அவர்களை மேலும் நட்பானவர்களாக மாற்றவும் அவர்களின் உடை மற்றும் இலச்சினையை மாற்றவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஆனால், உடை, லோகோவை மாற்றுவதால் காவல்துறையின் பணியில் எந்த அளவுக்கு மாற்றம் வரும் எனப் பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும், அதற்கு ஏற்பட்டுள்ள பெரும் செலவு குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது.
இருந்தபோதிலும், சமீபத்திய நிகழ்வுகளின் பின்னணியில் உடையில் மாற்றம் அவசியம் என்று புதிய காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) முகமது மொய்னுல் இஸ்லாம் நம்புகிறார்.
அவர் பிபிசி பங்களாவிடம் பேசியபோது, "சமீபத்திய சம்பவங்களில், போலீசார் சீருடையில் இருக்கும்போது பல சம்பவங்கள் நடந்துள்ளன. சீருடை ஒரு மனநிலையை வளர்க்கிறது. அதனால்தான் அதை மாற்ற வேண்டும். காவல்துறை அநீதி இழைக்காமல் இருக்கவும் சமூகத்தின் நம்பிக்கையைப் பெறவும் முயற்சிகளை எடுப்போம்,” என்று தெரிவித்தார்.
நீதித்துறையில் பெரும் மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images
அவாமி லீக் அரசாங்கம் ஆட்சியை விட்டு வெளியேறிய பிறகு, வங்கதேசத்தின் நீதித்துறையிலும் பெரிய மாற்றங்கள் காணப்படுகின்றன.
ஆகஸ்ட் 10 அன்று, நாட்டின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுப் பதவி விலகினார்.
ஹசீனா அரசின் ஆட்சிக் காலத்தில் அவர் நியமிக்கப்பட்டார். அவருடன் மேல்முறையீட்டுப் பிரிவின் மற்ற நீதிபதிகளும் ராஜினாமா செய்தனர்.
அதன்பிறகு, புதிய நீதிபதியாக மேல்முறையீட்டுப் பிரிவைச் சேர்ந்த நீதிபதி சையத் ரிஃபாத் அகமது பதவியேற்றுக் கொண்டார். அதேபோல், மேல்முறையீட்டுப் பிரிவில் நான்கு புதிய நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர்.
மறுபுறம், புதிய அட்டர்னி ஜெனரலாக உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் முகமது அசாதுஸ்மான் நியமிக்கப்பட்டார். பிஎன்பியின் மத்திய மனித உரிமைகள் விவகார செயலாளராக அசாதுஸ்மான் இருந்தார்.
எனவே, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு அவர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுகிறது.
நாடு முழுவதும் உள்ள துணை அட்டர்னி ஜெனரல், உதவி அட்டர்னி ஜெனரல் ஆகிய பதவிகளுக்கு இடைக்கால அரசு சமீபத்தில் 227 வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.
இதில் 66 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் துணை அட்டர்னி ஜெனரலாகவும், 161 உதவி அட்டர்னி ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முகமது யூனுஸ், காலிதா ஜியா தண்டனை ரத்து

ஷேக் ஹசீனா அரசின் வீழ்ச்சி மற்றும் நீதித்துறையில் ஏற்பட்ட மாற்றங்களால், பல வழக்குகளில் முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவாமி லீக் ஆட்சியின்போது தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக பேராசிரியர் முகமது யூனுஸ் மற்றும் முன்னாள் கிராமீன் வங்கி நிர்வாக இயக்குநர் நூர்ஜஹான் பேகம் ஆகியோருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், இடைக்கால அரசின் ஆலோசகராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட மறுநாளே, அவர்கள் இருவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், ஊழல் தடுப்பு ஆணையத்தின் பண மோசடி வழக்கில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், தன்னைத் துன்புறுத்துவதற்காகவே பொய் வழக்கில் சிக்க வைத்ததாக பேராசிரியர் யூனுஸ் ஆரம்பம் முதலே கூறி வந்தார்.
மறுபுறம், ஷேக் ஹசீனா ஆட்சியின்போது பி.என்.பி. தலைவராக இருந்த காலிதா ஜியாவுக்கு, ஜியா அறக்கட்டளை ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் ஹசீனா அரசாங்கம் வீழ்ந்த அடுத்த நாளே, ஜனாதிபதி அவரது தண்டனையை மன்னித்து விடுதலை செய்து உத்தரவிட்டார். பி.என்.பி. தலைவர் ஐந்து அவதூறு வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகள் போலியானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று பிஎன்பி குற்றம் சாட்டியது. இதுதவிர இடஒதுக்கீடு இயக்கத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற பி.என்.பி, ஜமாத் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளின் பல முக்கியத் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கயாசுதீன் அல் மாமூனும் அடக்கம்.
தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட அன்சருல்லா பங்களா என்ற அமைப்பின் தலைவர் முப்தி ஜாசிமுதீன் ரஹ்மானி, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஷேக் அஸ்லாம் ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முடிவு வங்கதேசத்திலும் விமர்சிக்கப்படுகிறது.
ஷேக் ஹசீனா உட்படப் பலர் மீது வழக்குகள்

பட மூலாதாரம், Getty Images
இப்போது வங்கதேசத்தில் பல ‘சக்தி வாய்ந்த’ நபர்கள் மீது கொலை, ஊழல், மனித உரிமை மீறல்கள் உட்படப் பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் ஷேக் ஹசீனா அரசின் ஆட்சியில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது இதுவரை 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான வழக்குகள் கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பானவை.
இதேபோல், அவாமி லீக் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களான சஜீப் வாஜேத், சைமா வஜேத், ஷேக் ரிஹானா உட்பட முன்னாள் எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் பல அவாமி லீக் தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஷேக் ஹசீனா, அவரது அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், பல்வேறு வழக்குகளில் உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் பலர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் தண்டிக்கப்படுவார்களா இல்லையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
செயல்படத் தொடங்கிய தடைசெய்யப்பட்ட குழுக்கள்

பட மூலாதாரம், jamaat-e-islami.org
அதிகாரத்தை இழப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, அவாமி லீக் அரசாங்கம் ஜமாத்-இ-இஸ்லாமி பங்களாதேஷ் மற்றும் அதன் மாணவர் அமைப்பான இஸ்லாமிய சத்ரா ஷிவிர் ஆகியவற்றை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் தடை செய்தது.
ஆனால் இடைக்கால அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மூன்றாவது வாரத்திலேயே அந்த முடிவு மாற்றப்பட்டது.
முந்தைய அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த அமைப்பின் தலைவர்கள், தொண்டர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 15 விடுமுறை ரத்து
கடந்த 2009ஆம் ஆண்டு அவாமி லீக் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 15 ஆண்டுகளாக, 'வங்கதேசத்தின் தந்தை' எனப் போற்றப்படுபவரும் நாட்டின் முதல் அதிபராகப் பதவி வகித்தவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மறைவு நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி, நாடு முழுவதும் துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினம் நாட்டில் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரு வாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய இடைக்கால அரசு விடுமுறையை ரத்து செய்ய முடிவு செய்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












