அஜித்துக்கு மங்காத்தா போல, விஜய்-க்கு ‘தி கோட்’? ரசிகர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், AGS ENTERTAINMENT
நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘தி கோட்’ (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம், இன்று (வியாழன், செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
தமிழ்நாடு தவிர, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தவிர, நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி என ஏராளமானோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ‘தி கோட்’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காலை 9 மணிக்குச் சிறப்பு காட்சிகள் துவங்கின. ஆனால் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காலை 4 மற்றும் 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டன.
படம் பார்த்த ரசிகர்கள், அது குறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், AGS ENTERTAINMENT
விஜய் நடிப்பு எப்படி?
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள திரையரங்கங்களில் காலை 4 மணிக்கு ‘தி கோட்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. முதல் காட்சியைக் காண கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் எல்லை கடந்து வந்திருந்தனர்.
முதல் காட்சி முடிந்த பிறகு பிபிசி தமிழிடம் பேசிய காஜா, விஜய் நடிப்பில் ‘தி கோட்’ திரைப்படம் சிறப்பாக உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார்.
“சின்ன வயது விஜய் கதாபாத்திரம் சூப்பராக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியான நாளைய ‘தீர்ப்பு படத்தில்’ வரும் அவரது முகம் போல இந்தப் படத்தில் வரும் காட்சி நன்றாக உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு ‘நாளைய தீர்ப்பு’ படம் வந்த போது விஜய்யின் முகத்தை விமர்சனம் செய்தவர்களுக்கு ‘தி கோட்’ படம் அதே முகத்தை மீண்டும் திரையில் காட்டி பதிலடி கொடுத்துள்ளது,” என்று தெரிவித்தார்.
“வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘மங்காத்தா’ திரைப்படம் மாதிரி இருக்கும் என்று நான் நினைத்து படம் பார்க்க வந்தேன். விஜய் ரசிகரான எனக்கு இந்தப் படம் திருப்தி அளிக்கவில்லை. விஜய்யின் காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்,” என்றார் மற்றொரு ரசிகர்.
நடிகர் விஜய்யின் திரை அனுபவத்திற்காகப் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்கிறார் மற்றொரு ரசிகரான ஜீவா.
முதல்முறையாக ரசிகர்களின் சிறப்புக் காட்சியைக் காண வந்திருக்கிறேன். படம் நல்ல அனுபவமாக இருந்தது என்றார், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த அனுபமா.
சென்னையில் படம் பார்த்து விட்டு வந்து பிபிசியிடம் பேசிய ரசிகை ஒருவர், “விஜய் அழுகும் அந்த காட்சி எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. நானும் அந்த காட்சியில் அழுதுவிட்டேன். ஓவ்வொரு படத்திற்கு புதிய உயரங்களை விஜய் அடைகிறார்,” என்று தெரிவித்தார்.
கோவையைச் சேர்ந்த ரசிகரான இளையராஜா, படம் குறித்து பிபிசி-இடம் பேசும் போது, “விஜய்யின் இந்த ‘கெட்டப்’ வித்தியாசமாக இருந்தது. முந்தைய படங்களை விட தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கோட் படத்தின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
படம் வெளியாவதற்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்ட பாடலில் வரும் விஜய்யின் கெட்டப் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன என்றும், ஆனால் படத்தில் அந்தப் பாடலைப் பார்க்கும் போது அந்த ‘கெட்டப்’ ஏன் வருகிறது என்று புரிகிறது என்றும் கூறினார் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர் ஒருவர்.
“விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வெளிவரும் படம் என்பதால் அரசியல் கருத்துகள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அரசியல் கலவையின்றி ரசிகர்களுக்காக இந்த படம் உள்ளது,” என்கிறார் என்றார் ஆஷிக் என்ற ரசிகர்.

பட மூலாதாரம், AGS ENTERTAINMENT
பழைய கதை, ஆனால்…
படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக இருந்ததால், 3 மணி நேரம் படம் நீளமாகத் தெரியவில்லை என்கிறார், பாலக்காட்டில் படம் பார்த்து விட்டு வந்த ஜோவிஷ்.
பிபிசி-இடம் பேசிய மற்றொரு ரசிகர், படத்தின் முதல் பாதி தனக்கு பிடித்திருந்தாகவும், இரண்டாவது பாதியில் நிறைய குழப்பமான காட்சிகள் இருந்தன என்றார்.
தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குப் படம் பார்க்கச் சென்ற ரசிகரான மணி, தி கோட் படத்தின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருப்பதாகக் கூறினார். “இரண்டாவது பாதியில் நிறைய கதபாத்திரங்கள் வருகின்றன. குறிப்பாக, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் வரும் காட்சி எனக்குப் பிடித்திருந்தது,” என்றார்.
பிபிசி-இடம் பேசிய சென்னையைச் சேர்ந்த கிஷோர், முதல் பாதி மெதுவாக நகர்ந்ததாகவும், . இரண்டாவது பாதி திருப்தியாக இருந்ததாகவும் தெரிவித்தார். “கதை எளிதில் கணிக்கும் வகையில் இருந்தது. நிறைய கதாபாத்திரங்கள் இருந்தது நினைவில் நிற்கவில்லை. எதிர்பார்த்து படத்துக்கு வந்த எனக்கு முழு திருப்தியில்லை,” என்றார்.
“ ‘தி கோட்’ படத்தில் பல்வேறு நடிகர், நடிகைகள் நடித்திருந்தாலும், விஜய் மட்டுமே கதை முழுக்க வருகிறார். அவரது கதாபாத்திரத்திற்கு நிறைய முக்கியத்துவம் அளித்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரும் நினைவில் நிற்கும்படி காட்சிகள் இல்லை,” என்கிறார் கோவையைச் சேர்ந்த விக்னேஷ்.
தென்காசியில் இருந்து பாலக்காட்டில் உள்ள திரையரங்குக்கு நண்பர்களுடன் படம் பார்க்க வந்திருந்த குமரன் பிபிசி-இடம் பேசுகையில், “படத்தின் கதை பழைய கதையாக இருந்தாலும், அதனை சுவாரசியமாகப் படமாக்கி உள்ளனர். விஜய்யின் வேறொரு பரிணாமத்தை இந்தப் படத்தில் பார்க்க முடியும். நிறைய ஆச்சரியங்கள் படம் முழுக்க உள்ளது,” என்றார்.
கதை, திரைக்கதை சரியில்லை என்று பலரும் சொல்வார்கள். அதையெல்லாம் தவிர்த்துவிட்டு லாஜிக் பார்க்காமல் படத்தை பார்த்தால் ரசிக்க முடியும், என்றார் ரசிகர் ஒருவர்.
விஜயகாந்த் ஒரு காட்சியில் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருவார். அந்தக் காட்சி நல்ல அனுபவத்தைக் கொடுத்தது என்றார் ஒரு ரசிகர். ஆனால், பிபிசி-இடம் பேசிய மற்றொரு ரசிகை, சில வினாடிகளே நீடிக்கும் அந்த விஜயகாந்த் காட்சி திரையில் எந்த தாக்கத்தையும் தனக்கு ஏற்படுத்தவில்லை, என்கிறார்.

பட மூலாதாரம், AGS ENTERTAINMENT
மாஸ் காட்சிகள் உண்டா?
படத்தில் வரும் இரண்டு விஜய் கதாபாத்திரங்களில், சின்ன வயது விஜய் கதாபாத்திரம் நன்றாக உள்ளது. அதே போல யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘ராப்’ பாடல் சிறப்பாக உள்ளது என்றார் கேரளாவைச் சேர்ந்த ரசிகர்.
“இயக்குநர் வெங்கட் பிரபு காட்சிகளை விட தொழிநுட்பத்தை நம்பியிருக்கிறார். செயற்கை நுண்ணறிவு (AI), டீ-ஏஜிங் எனப் பல இடங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் காட்சிகள் அவ்வளவு தாக்கத்தை தனக்கு ஏற்படுத்தவில்லை,” என்கிறார் கேரளாவைச் சேர்ந்த ரெஜிஷ்.
சென்னையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், பாடல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பு குறைவாக இருந்தது. ஆனால் இப்போது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது, என்றார்.
ஆனால் மற்றொரு ரசிகர், அந்தக் கருத்தை ஏற்கவில்லை. படத்திற்குப் பொருந்தாத வகையில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை இருந்ததாகவும், படத்தில் வரும் ஒரு ராப் பாடல் மட்டுமே ரசிக்கும்படி இருந்தது என்றும் தெரிவித்தார்.
“வெங்கட் பிரபு - விஜய் காம்போ முழுமையாக வொர்க் ஆகவில்லை. படத்தில் எந்த இடத்திலும் மாஸ் காட்சிகள் இல்லாமல் இருந்தது. அதை வெங்கட் பிரபு சரி செய்து இருக்கலாம்,” என்றார் சென்னையைச் சேர்ந்த கிஷோர்.
வெங்கட் பிரபு - விஜய் காம்போ மற்றொரு மங்காத்தா கேங் போல இருந்தது. படத்தில் சில இடங்களில் அஜித் படத்தின் சில குறியீடுகள் உள்ளன. அது நிச்சயம் ரசிகர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் என்றார் பிபிசி-இடம் பேசிய ரகு.
டீ-ஏஜிங், செயற்கை நுண்ணறிவு என தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரைக்கதையில் சுவாரசியமான காட்சிகளை வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார், என்றார் ஒரு ரசிகர்.
“அடுத்த காட்சியில் என்ன டுவிஸ்ட் வரும் என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக நகர்ந்தது. நிறைய நடிகர்கள் கௌரவ கதாபாத்திரத்தில் படத்தில் வந்துள்ளனர். அது செயற்கையாக திணிப்பது போல இல்லாமல், படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவுகிறது என்றார்,” ரோஷிணி என்ற ரசிகர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












