பாகிஸ்தானின் அஹ்மதியா முஸ்லிம்கள் உயிருக்கு அஞ்சி நேபாளத்திற்கு தப்பிச் செல்வது ஏன்?

பட மூலாதாரம், BBC/SHARAD KC
- எழுதியவர், ஷரத் கே.சி
- பதவி, பிபிசி செய்திகள், நேபாளம்
அன்வர் ஹுசைன் என்பவர் பாகிஸ்தான் முக்கிய நகரான கராச்சியில் உள்ள மன்சூர் காலனியில் வசித்து வந்தார். காலையில் அவரது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கு முன், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்பதை அவர் உறுதி செய்வார்.
"வண்டியை ஆன் செய்வதற்கு முன்பு, ஆயுதம் ஏந்தியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நான் சுற்றிப் பார்ப்பேன்," என்று அவர் கூறினார்.
அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறிய பின்பு, இந்த பயம் மறைந்துவிட்டது. இவர் கடந்த 11 ஆண்டுகளாக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் வசித்து வருகிறார்.
அன்வர் ஹுசைன் ஒரு அஹ்மதியா முஸ்லிம். பாகிஸ்தானில் அஹ்மதியா பிரிவினர், முஸ்லிம் அல்லாதவராக கருதப்படுகின்றனர்.
பாகிஸ்தானில் அஹ்மதியா முஸ்லிம்கள் தாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது. கராச்சியில் அன்வர் ஹுசைன் வசிக்கும் காலனியில், அஹ்மதியா முஸ்லிம் என்ற காரணத்தால் 14 முதல் 15 பேர் கொல்லப்பட்டனர். அங்கு தற்போது வசிப்பவர்களும் கூட மிகுந்த பயத்துடனே இருக்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அல்லாவிடம் முறையிடுதல்
அன்வர் ஹுசைனைப் போல பல அஹ்மதியா முஸ்லிம்கள், தங்கள் தாய் நாடான பாகிஸ்தானை விட்டு இந்து மத பெரும்பான்மை கொண்ட நாடான நேபாளத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
காத்மாண்டுவில் சுமார் 188 பாகிஸ்தான் அகதிகள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் அஹ்மதியா முஸ்லிம்கள் ஆவார்கள். பாகிஸ்தானைச் சேர்ந்த பல அஹ்மதியா முஸ்லிம்கள் காத்மாண்டுவில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.
அன்வர் ஹுசைன் பாகிஸ்தானை விட்டு நேபாளத்திற்கு வந்து 11 வருடங்கள் ஆகின்றன. இங்கு அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட காயங்களில் இறந்து அவர் இன்னும் மீளவில்லை. அவரது உறவினர்கள் அனைவரும் பாகிஸ்தானில் உள்ளனர்.
"எனது அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. என்னை பார்க்க வேண்டும் என்பதே அவரது கடைசி ஆசை என்று கடந்த 2 ஆண்டுகளாக என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை" என்று அன்வர் ஹுசைன் கூறினார்.

பட மூலாதாரம், BBC/SHARAD KC
உறவினர்களை பிரிந்து வாழும் வலி
காத்மாண்டுவின் சக்ரபாத்தில் ஒரு வழிபாட்டுத் தலம் உள்ளது. அங்கு பேச வாய்ப்பை எதிர்பார்த்து இளைஞர் ஒருவர் காத்திருக்கிறார்.
அந்த இளைஞரின் பெயர் ஷாஹித் மக்பூல். "எனது சகோதரிக்கு புற்றுநோய் உள்ளது. இரவு முழுவதும் எங்களால் தூங்க முடியாது. எங்கள் குடும்பத்தில் பலர் மனச்சோர்வுக்கு மருந்து எடுத்துக் கொள்கிறார்கள்", என்று அவர் கூறினார்.
இது குறித்து பேசிக் கொண்டே இருக்கும்போது, இடையில் ஷாஹித் மக்பூல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் திரும்பி வந்த போது, அவர் கையில் மருத்துவ அறிக்கைகள் இருந்தன. அந்த அறிக்கைகளை படித்துவிட்டு, நாங்கள் அவருடனே அவரது வீட்டிற்குச் சென்றோம்.
அவரது வீட்டில் மின்சாரம் இல்லை. அங்கு இருந்த அவரது தங்கை ஃபரிதா அகமது புற்றுநோயாளி ஆவார். 2013-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதியன்று பாகிஸ்தானை விட்டு வெளியேறியதாக ஷாஹித் கூறுகிறார்.
"எங்கள் உயிரைக் காப்பாற்ற நாங்கள் இங்கு வருகிறோம் என்று நினைத்தேன். ஆனால் இங்கு நாங்கள் தினமும் இறந்து கொண்டிருக்கிறோம்," என்று ஃபரிதா கூறினார்.
குடும்பத்திற்காக பணம் ஈட்ட ஃபரிதாவின் கணவர் அஸ்கர் காத்மாண்டுவில் ஒரு தொழிலாளியாக வேலை செய்கிறார். ஆனாலும் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
“எங்கள் வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு சமைக்கப்படுகிறது. அதே உணவை இரண்டு நாள் வரை வைத்து உண்ண கூட முயற்சிகள் எடுக்கிறோம். பசியுடன் பல இரவுகளை கழித்தோம் ஆனால் அதை யாரிடமும் சொல்லவில்லை".
"நாங்கள் குளிர்காலத்தில் தரையில் தான் தூங்குவோம்", என்று அவர் கூறினார். "எங்களிடம் உள்ள அனைத்து ஆடைகளையும் குழந்தைகளுக்கு அணிவித்து அவர்களை குளிரில் இருந்து பாதுகாத்து வருகிறோம், ஆனால் நாங்கள் குளிர் நடுக்கத்தில் இரவு முழுவதையும் கழிப்போம்" என்கிறார் அவர்.
சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயை குணப்படுத்த ஃபரிதா அறுவை சிகிச்சை ஒன்றை செய்துகொண்டார். ஆனாலும் அவர் புற்றுநோய் பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீளவில்லை.
அவரை மீண்டும் கீமோதெரபி செய்யுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளார். "கீமோதெரபியின் போது எனக்கு ஏதாவது நேர்ந்தால், என் குழந்தைகளை யார் கவனிப்பார்கள்?" என்று ஃபரிதா கூறுகிறார்.
காத்மாண்டுவில் உள்ள அகதிகளின் குழந்தைகளுக்கான பள்ளியில் அவரது குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கான பள்ளி கட்டணத்தை ஐ.நா அகதிகள் ஆணையம் செலுத்துகிறது.
"பள்ளிக்கூடம் இங்கிருந்து தொலைவில் இருக்கிறது. நேபாள குழந்தைகளை பள்ளிக்கு காரில் செல்லும் போது, ஏன் அதே கார் தங்களை அழைத்துச் செல்லவில்லை என்று எனது கடைசி குழந்தை கேட்கிறது. அந்த காருக்கான வாடகையை என்னால் செலுத்த முடியாது", என்று ஃபரிதா கூறுகிறார்.
"எங்கள் குழந்தைகள் சிறிய விஷயங்களைக் கேட்கும் போது எங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை", என்று ஃபரிதாவின் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் வருத்தம் தெரிவித்தார்.

ஃபரிதாவின் கடைசி ஆசை
"எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் அவர்களை விட்டுச் செல்ல விரும்புகிறேன்" என்கிறார் ஃபரிதா.
கனடா நாடு தான் பாதுகாப்பான இடம் என்று அவர் கருதுகிறார். இரண்டு முறை அவர்களுக்கு கனடா விசா கிடைத்தாலும், அவரது குடும்பத்தினரால் நேபாளத்தை விட்டு கனடா செல்ல முடியவில்லை.
நேபாள சட்டத்தின்படி, ஒரு நபர் தனது விசாவில் குறிபிடப்பட்டுள்ள காலத்திற்கு பிறகும் அங்கு தொடர்ந்து தங்கினால், அவர்கள் அபராதம் செலுத்தாமல் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாது. ஒரு நபர் விசா காலாவதியான பிறகு தங்கும் ஒவ்வொரு நாளுக்கும், எட்டு டாலரை அபராதமாக செலுத்த வேண்டும்.
ஃபரிதாவின் குடும்பத்தினரால் அபராதத்தை செலுத்த முடியவில்லை. இதனால் அவரது கனடா விசா 2 முறையும் காலாவதியானது.
90 பேர் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை தள்ளுபடி செய்யுமாறு ஐநா அகதிகள் ஆணையம் நேபாள அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாள அதிகாரிகள் கூறுவதென்ன?
நேபாளத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வெளிநாட்டு அகதிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த அபராதத்தை முற்றிலுமாக ரத்து செய்தால், தங்கள் நாட்டில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சமும் நேபாளத்திற்கு இருக்கிறது.
மற்ற நாடுகளில் இருந்து சிலர் நேபாளத்திற்கு அதிகமான அகதிகளை அனுப்புவதாக நேபாள அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். நேபாளத்தில் சிறிது காலம் தங்கினால் கனடா, அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்படுவர் என்று மக்களை ஏமாற்றிய சிலரை கைது செய்திருப்பதாக காவல் துறை அதிகாரி ஒருவர் பிபிசி நேபாளத்திடம் தெரிவித்தார்.
மேலும் அவர், அகதிகள் என்ற பெயரில் ஆள் கடத்தல் அதிகரிக்காமல் இருப்பதை நேபாள அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்றார்.
“ஆயிரம் பேருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை அரசாங்கம் தள்ளுபடி செய்வது பெரிய விஷயமல்ல, ஆனால் எதிர்காலத்தில் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை”, என்று நேபாள உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் பிபிசி நேபாளிடம் கூறினார்.
"எங்கள் நாடு அகதிகளின் புகலிடமாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை", என்று நேபாள உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரசாத் பட்டராய் கூறினார். வேறு நாட்டிற்கு செல்வதற்கான ஒரு தளமாக நேபாளத்தை பயன்படுத்தவில்லை என்று பல அகதிகள் கூறுகின்றனர்.
"நாங்கள் எங்கள் உயிரைக் காப்பாற்ற இங்கு வந்துள்ளோம், ஆனால் எங்கள் பிரச்னைகளுக்கு இங்கும் தீர்வு இல்லை, எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடக்கூடும்", என்று பாகிஸ்தான் அகதிகளில் ஒருவரான காலித் நூர் கூறுகிறார்.

நேபாள குடிவரவுத் துறை பல ஆண்டுகளாக வெளிநாட்டவரை வெளியேற்றி வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் மூவாயிரம் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டதாக, நேபாள அரசின் அறிக்கை கூறுகிறது.
நேபாளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டவரின் உயிருக்கு அவர்களின் சொந்த நாட்டிலேயே அச்சுறுத்தல் இருப்பதாக ஐநா அகதிகள் ஆணையம் கூறுகிறது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து நேபாளம் வந்த மஹ்மூத் ரஷீத், இது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனால் வெளிநாட்டவரை நேபாளத்தை விட்டு வெளியேற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மஹ்மூத் ரஷீத் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதியன்று நேபாளம் சென்றார். மறுநாளே தஞ்சம் கோரி விண்ணப்பித்தார்.
2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதியன்று விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நேபாளத்தில் தங்க அவர் அனுமதிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தில், பாகிஸ்தானில் சுன்னி இஸ்லாமியர்களால் சித்திரவதை செய்யப்பட்டதால், தனது இரு சகோதரர்களுடன் நேபாளத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நேபாள உச்சநீதிமன்றம், "விண்ணப்பதாரர்களை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புமாறு உத்தரவிட முடியாது, மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் தங்கியிருக்க அனுமதிக்கலாம்" என்று தீர்ப்பு அளித்தது.
தஞ்சம் கோரி நேபாளம் செல்லும் பாகிஸ்தானியர் குறித்து பேசுவதற்கு காத்மாண்டுவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை தொடர்பு கொள்ள பிபிசி முயன்றது. ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

பாகிஸ்தான் அகதிகள் நேபாளத்தை தேர்வு செய்தது ஏன்?
நேபாளத்தில் பாகிஸ்தானியருக்கு 'விசா ஆன் அரைவல்' வசதி இருப்பதால் நேபாளம் எளிதான தேர்வாக இருப்பதாக பாகிஸ்தான் அகதிகள் கூறுகின்றனர்.
முன்னதாக, பாகிஸ்தானில் இருந்து அஹ்மதியா முஸ்லிம்கள் இலங்கைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் 'விசா ஆன் அரைவல்' வசதியை நிறுத்திவிட்டது.
காத்மாண்டுவில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை தகனம் செய்ய இடம் இல்லை என்று நேபாளத்தில் உள்ள அஹ்மதியா சமூகத் தலைவர்கள் கூறுகிறார்கள்.
நேபாளத்தில் 10,000 முதல் 12,000 அஹ்மதியா முஸ்லிம்கள் இருப்பதாக உள்ளூர் தலைவர் சலீம் அகமது கூறுகிறார். "ஒரு அஹ்மதியா முஸ்லிம் காத்மாண்டுவில் இறந்தால், அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய 130 கிமீ பயணம் செய்ய வேண்டும்". என்கிறார் அவர்.
"ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாகிஸ்தானிய அஹ்மதியா முஸ்லிம் அகதி இறந்த போது, அவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய பர்சா மாவட்டத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது." என்று அவர் நினைவுகூர்ந்தார்.
பாகிஸ்தானிய அகதியான யாமீன் அகமதின் தாய் 2016-ஆம் ஆண்டு காத்மாண்டுவில் இறந்ததாகவும், அவரது விருப்பத்தை நிறைவேற்ற அவரது உடல் பாகிஸ்தானுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
அவரது தாயின் உடலை பாகிஸ்தானுக்கு எடுத்து செல்ல ஏழு நாட்கள் ஆனதாகவும், இதற்கு பாகிஸ்தான் தூதரகம் தனக்கு உதவவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
நேபாள சட்டத்தின்படி, சட்டவிரோதமாக உள்ள அகதிகள் நாட்டில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பெரும்பாலும் தலைமறைவாக வேலை செய்கிறார்கள் மற்றும் சிலர் நேபாள குடிமக்கள் பெயரில் வணிகங்களை நடத்தி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












