அமெரிக்காவை அச்சுறுத்தும் ‘ட்ரிபிள் ஈ’ வைரஸ் - எவ்வாறு பரவுகிறது? என்ன ஆபத்து?

EEE வைரஸ், கொசு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜெரிமி ஹோவெல்
    • பதவி, பிபிசி உலக சேவை

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கொசுக்களில் ‘EEE’ எனப்படும் அரிய, ஆனால் மிகவும் ஆபத்தான வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடும்.

‘ஈஸ்டர்ன் ஈக்வைன் என்செபாலிடிஸ் அல்லது ‘ட்ரிபிள் ஈ’ (Eastern Equine Encephalitis - EEE) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கொசுக்கள் கடிப்பதால் பரவுகிறது.

இந்த வைரஸ் அங்கு கண்டறியப்பட்டவுடன், மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சமூகங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் 40 வயதுடைய ஒருவர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மசாசூசெட்ஸ் மாகாணத்தில் 80 வயதுடைய ஒரு நபரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த நோய் அரிதானது என்றும், அந்நாட்டில் ஆண்டுதோறும் இந்த நோய்த்தொற்று 11 பேருக்கு மட்டுமே ஏற்படும் என்றும் அமெரிக்காவில் உள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention - CDC) தெரிவித்துள்ளது.

மசாசூசெட்ஸில், 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் 17 பேருக்கு ‘ட்ரிபிள் ஈ’ வைரஸ் தொற்று ஏற்பட்டது, இதனால் ஏழு பேர் இறந்தனர்.

கனடாவிலிருந்து மெக்ஸிகோ வளைகுடா மற்றும் கரீபியன் வரையிலும், தெற்கே அர்ஜென்டினா வரையிலும் - அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும் இந்த வைரஸ் தொற்றுப் பரவல் அவ்வப்போது நிகழ்ந்திருக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

EEE வைரஸ், கொசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சமூகங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

EEE என்பது என்ன? எவ்வாறு பரவுகிறது?

‘ட்ரிபிள் ஈ’ வைரஸ், கொசுக் கடி மூலம், முக்கியமாகப் பறவைகள், குதிரைகள், மற்றும் மனிதர்களுக்குப் பரவும் ஒரு வைரஸ் ஆகும்.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு எந்த அறிகுறிகளும் உருவாகவில்லை.

இந்த வைரஸ் மிகவும் அரிதானது. ஆனால் இது மிகவும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இது காய்ச்சல் மற்றும் ஆபத்தான மூளை வீக்கத்தை ஏற்படுத்தும்.

தொற்று ஏற்பட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் இறக்கக் கூடும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறுகிறது.

இந்த தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவாது.

பொதுவாக, கோடையின் பிற்பகுதியிலும், இலையுதிர் காலத்தின் துவக்கத்திலும் இந்த வைரஸ் தொற்று பரவும். இது பெரும்பாலும் அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலும், எப்போதாவது அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் நிகழும்.

EEE வைரஸ், கொசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பகுதிகளுக்கு வானில் இருந்தும், லாரிகளில் இருந்தும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன

EEE-இன் அறிகுறிகள் என்ன?

‘ட்ரிபிள் ஈ’ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொதுவாக, 4 முதல் 10 நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகளைக் ஏற்படும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறுகிறது.

காய்ச்சல், சளி, உடல்வலி, மற்றும் மூட்டு வலி ஆகியவை இதில் அடங்கும்.

இந்தத் தொற்று ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். இதனால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படாவிட்டால், மக்கள் முழுமையாக குணமடைகின்றனர்.

ஆனால், சிலருக்கு மெனிஞ்சிடிஸ் (meningitis - மூளைக்காய்ச்சல்) அதாவது மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளின் வீக்கம், அல்லது மூளையில் வீக்கம் ஏற்படும்.

இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட கால பாதிப்பாக, அறிதல் குறைபாடு, ஆளுமைக் கோளாறுகள், வலிப்பு, பக்கவாதம், மற்றும் கழுத்துப் பிரச்னைகள் ஏற்படலாம்.

EEE வைரஸ், கொசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த வைரஸ் மனிதர்கள் அதிகம் செல்லாத சதுப்பு நிலங்களில் இருக்கும் நீர்ப்பறவைகள் போன்ற உயிரினங்களைப் பாதிக்கிறது

‘ட்ரிபிள் ஈ’ தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

ட்ரிபிள் ஈ தொற்றுக்கு தடுப்பூசி இல்லை, அதனை குணப்படுத்தும் மருந்து இல்லை.

இதற்கான சிகிச்சையில் நரம்பு வழி திரவங்கள் மற்றும் செயற்கை சுவாசம் ஆகியவை அடங்கும்.

அதிக ஆபத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் மசாசூசெட்ஸில் உள்ள ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்பு வளாகங்களில், தற்போது மக்கள் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப் படுகிறார்கள்.

அதற்கு கீழ்கண்ட வழிகள் அறுவுறுத்தப்பட்டிருக்கின்றன:

  • கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ​​அந்தி வேளைக்குப் பிறகு வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்ப்பது
  • கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது
  • உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிவது
  • ஜன்னல்களில் கொசு வலைகளை அமைத்தல் மற்றும் சரிசெய்தல்
  • கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய உதவும், தேங்கிய நீரை வெளியேற்றுதல்

ஆபத்தில் உள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பகுதிகளுக்கு வானில் இருந்தும், லாரிகளில் இருந்தும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன.

EEE வைரஸ் எவ்வளவு பரவலாக உள்ளது?

ட்ரிபிள் ஈ வைரஸ் அமெரிக்காவின் கிழக்குக் கடற்பரப்பில் இருந்து தெற்கே அர்ஜென்டினா வரையிலும், கிரேட் லேக்ஸ் மற்றும் கரீபியன் தீவுகளிலும் இருப்பதாக அறியப்படுகிறது.

இது முதன்முதலில் 1933-இல் டெலாவேர், மேரிலேண்ட், மற்றும் வர்ஜீனியாவில் குதிரைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதர்கள் அதிகம் செல்லாத சதுப்பு நிலங்களில் இருக்கும் கொசுக்கள் இந்த வைரஸை கடத்துவதால், இது பொதுவாக மனிதர்களுக்குப் பரவுவதில்லை. ஆனால், இந்த வைரஸ் நீர்ப்பறவைகள் போன்ற அப்பகுதியில் வாழும் உயிரினங்களைப் பாதிக்கிறது. பல பறவை இனங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதனால் அவற்றுக்கு இதனால் நோய் ஏற்படுவதில்லை.

இந்த ஆண்டு, இந்த வைரஸால் அமெரிக்காவில் 5 மாகாணங்களில் இதுவரை 5 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்கப் பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனமான VDCI-யின் தரவுகள் படி, 2011 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இந்த வைரஸால் அதிகப்படியாக 26 பேர் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மிச்சிகன் (18), புளோரிடா (9), ஜார்ஜியா (7) மற்றும் வட கரோலினா (7) ஆகிய மாகாணங்களில் அதிக EEE வைரஸ் தொற்று பதிவானதாக அந்நிறுவனம் கூறுகிறது.

2010-ஆம் ஆண்டு, பனாமாவின் டேரியன் பகுதியில் ட்ரிபிள் ஈ வைரஸ் பரவல் ஏற்பட்டது. இதில் ஏழு பேர் பாதிக்கப்பட்டனர், இரண்டு பேர் இறந்தனர் என்று ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ சஞ்சிகை தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் இருந்த 50 குதிரைகளையும் இந்த வைரஸ் தாக்கியது.

சமீபத்திய ஆண்டுகளில் டிரினிடாட் நாட்டில் இரண்டு நபர்களுக்கு ட்ரிபிள் ஈ தொற்று ஏற்பட்டது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், பிரேசிலில் ஒரு நபருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது.

1981-இல் அர்ஜென்டினாவில் ட்ரிபிள் ஈ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அதனால் அந்நாட்டில் மனிதர்கள் பாதிக்கப்படவில்லை. ‘வெஸ்டர்ன் எக்வைன் என்செபாலிடிஸ்’ எனப்படும் இதேபோன்ற மற்றொரு நோய் அந்த நாட்டில் மிகவும் தீவிரமான பிரச்னையாகும். அது அங்கு பல மனித இறப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

EEE வைரஸ், கொசு

பட மூலாதாரம், Getty Images

ட்ரிபிள் ஈ பரவல் அதிகரிக்குமா?

காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் ட்ரிபிள் ஈ பரவல்களின் எண்ணிக்கை அதிகரிக்க க்கூடும் என்ற அச்சம் உள்ளது.

கொசுக்கள் 10C மற்றும் 32C வெப்பநிலையிலும், காற்றில் குறைந்தபட்சம் 42% ஈரப்பதம் இருக்கும் போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும்.

‘க்ளைமேட் சென்ட்ரல்’ என்ற ஆய்வுக் குழுவின் கூற்றுப்படி, அமெரிக்காவின் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பகுதிகளில், 1979-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் காலகட்டம், ​​ஆண்டுக்கு சராசரியாக 16 நாட்கள் அதிகரித்துள்ளது.

ஒரு வருடத்தில் கொசுக்கள் எந்தளவு நீண்ட காலம் சுறுசுறுப்பாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவை ட்ரிபிள் ஈ போன்ற ஆபத்தான நோய்த்தொற்றுகளைக் கடத்தும் அபாயம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)