இஸ்ரேல்: 3,500 ஆண்டுகள் பழைய ஜாடியை உடைத்த 4 வயது சிறுவன் – ஏன்?

இஸ்ரேல்: 3,500 ஆண்டுகள் பழைய ஜாடியை உடைத்த 4 வயது சிறுவன் – ஏன்?

பட மூலாதாரம், Shay Levy, Hecht Museum

    • எழுதியவர், ஜாக் பர்ஜெஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்

இஸ்ரேலில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடி ஒன்று 4 வயது சிறுவனால் தற்செயலாக உடைக்கப்பட்டுள்ளது.

ஹெக்ட் அருங்காட்சியகம், இஸ்ரேலில் இருக்கும் ஹைஃபா நகரில் அமைந்துள்ளது. அங்கு கி.மு.2200 மற்றும் 1500க்கு இடைப்பட்ட வெண்கல காலத்தைச் சேர்ந்த ஒரு ஜாடி இருந்தது. அது தற்போது அங்கு சென்றிருந்த 4 வயது சிறுவனால் தற்செயலாக உடைக்கப்பட்டுள்ளது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா பல்கலைக்கழக மைதானத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அந்த அருங்காட்சியகம், தொல்பொருட்கள் மற்றும் கலைப் பொருட்களைச் சேகரித்து, காட்சிப்படுத்துகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதன் நுழைவாயிலுக்கு அருகில் 4 வயது சிறுவனால் உடைக்கப்பட்ட ஜாடி கண்ணாடிக் கவசம் எதுவுமின்றி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

தொன்மையான கண்டுபிடிப்புகளை எந்தவித ‘தடைகளும் இன்றி’ காட்சிப்படுத்துவதில் ‘தனிச்சிறப்பு மிக்க வசீகரம்’ இருப்பதாக அருங்காட்சியகம் நம்புகிறது. அதுவே அப்படி எந்தவித பாதுகாப்பும் இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததற்குக் காரணம்.

அருங்காட்சியக நிர்வாகம் என்ன செய்தது?

ஜாடியை தற்செயலாக உடைத்த சிறுவனின் தந்தை அலெக்ஸ், தனது மகன் “ஜாடியின் உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கும் ஆவலில், அதை லேசாக இழுத்ததால்” அது கீழே விழுந்ததாகக் கூறினார்.

கீழே விழுந்து நொறுங்கிய ஜாடிக்கு அருகில் தனது மகன் இருப்பதைப் பார்த்து தான் “அதிர்ச்சியில்” இருந்ததாகவும், முதலில் “அதைச் செய்தது தனது குழந்தை இல்லை” என்று நினைத்ததாகவும் அலெக்ஸ் கூறினார்.

இருப்பினும், சிறுவனை அமைதிப்படுத்திய பிறகு, அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் சம்பவம் குறித்துப் பேசியதாகவும் அலெக்ஸ் பிபிசியிடம் கூறினார்.

இந்தச் சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிறுவனையும் அவரது குடும்பத்தினரையும் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட காட்சிப்படுத்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்ததாக ஹெக்ட் அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“காட்சிக்கு வைக்கப்படும் பொருட்கள் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. அத்தகைய சூழ்நிலைகள் காவல்துறையின் தலையீட்டுடன், மிகத் தீவிரமாகக் கையாளப்படுகின்றன” என்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த லிஹி லாஸ்லோ பிபிசியிடம் தெரிவித்தார்.

இருப்பினும், “இந்த விஷயத்தில் நிலைமை வேறு. அருங்காட்சியகத்திற்குச் சென்ற ஒரு சிறு குழந்தையால் தற்செயலாக பழமைவாய்ந்த ஜாடி சேதமடைந்தது. ஆகையால், அதற்கு ஏற்றவாறுதான் எதிர்வினையும் இருக்கும்,” என்று அவர் கூறினார்.

பழங்காலப் பொருட்களைப் பதப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், உடைந்த ஜாடியை மீட்டெடுக்கும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், “விரைவாக” அந்த ஜாடி அதன் இடத்தில் மீண்டும் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உடைக்கப்பட்ட பழங்கால ஜாடி மீட்டெடுக்கப்படுவதைக் கண்டு தாம் “நிம்மதி” அடைவதாக சிறுவனின் தந்தை அலெக்ஸ் கூறினார். அதேவேளையில், “இனி அது அதே பொருளாக இருக்காது” என்று கூறிய அலெக்ஸ், அதற்காக “மன்னிப்பும்” கேட்டுள்ளார்.

பழக்காலப் பொருளை பாதுகாப்பின்றி வைத்தது ஏன்?

இஸ்ரேல்: 3,500 ஆண்டுகள் பழைய ஜாடியை உடைத்த 4 வயது சிறுவன் – ஏன்?

பட மூலாதாரம், Shay Levy, Hecht Museum

“சாத்தியப்படும் போதெல்லாம் தடைகளோ, கண்ணாடிக் கவசங்களோ இல்லாமல் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம்” என்று அருங்காட்சியக நிர்வாகம் பிபிசியிடம் கூறியது.

இத்தகைய “அரிய சம்பவம் நடந்தபோதிலும்” இந்தப் பாரம்பரியத்தைத் தொடர விரும்புவதாக அருங்காட்சியகம் கூறுகிறது.

உடைக்கப்பட்ட ஜாடியானது, ஒயின், ஆலிவ் எண்ணெய் போன்ற உள்ளூர் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகப் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

அது விவிலிய மன்னர் டேவிட் மற்றும் மன்னர் சாலமன் காலத்திற்கும் முந்தையது. இது கிழக்கு மத்தியத் தரைக்கடல் கடற்கரையில் உள்ள கனான் பகுதியின் தனித்துவமான ஒன்று.

தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்படும் இதுபோன்ற மட்பாண்டங்கள் பொதுவாக கிடைக்கும்போதே உடைந்திருக்கும் அல்லது முழுமையடையாத நிலையில் இருக்கும். ஆகையால், இத்தகைய உடையாத, முழுமைபெற்ற நிலையில் கிடைத்த ஜாடி “ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பாக” பார்க்கப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)