தி கோட்: விஜய்-வெங்கட் பிரபு கூட்டணி வெற்றி பெற்றதா? - ஊடக விமர்சனம்

தி கோட், நடிகர் விஜய், வெங்கட்பிரபு

பட மூலாதாரம், X/Ags_production

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாரான தி கோட் (The Greatest of All Time - The GOAT) திரைப்படம் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 5) வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன், நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகிபாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்படத்தில், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு, மற்றும் டி-ஏஜிங் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

சென்னை 600028, சரோஜா, மங்காத்தா, மாநாடு என தமிழ்த் திரையுலகில் கவனத்தை ஈர்த்த படங்களைக் கொடுத்த வெங்கட்பிரபுவுடன் முதல்முறையாக விஜய் இணைந்திருக்கிறார். அதோடு, விஜய்யின் அரசியல் பிரவேசம் காரணமாக அவர்மீது அதிகப்படியான கவனம் குவிந்திருக்கும் இச்சமயத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி, 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருக்கிறது.

ஆகவே, 'தி கோட்' படத்தின் மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தி கோட், நடிகர் விஜய், வெங்கட்பிரபு

பட மூலாதாரம், AGS Entertainment

'தி கோட்' படத்தின் கதை என்ன?

படத்தின் கதை 2008 காலகட்டத்தில், கென்யாவில் இருந்து ஆரம்பிக்கிறது. அங்கு ஓமர், மற்றும் ராஜீவ் மேனன் (நடிகர் மோகன்) தலைமையிலான தீவிரவாதிகள் குழுவிடம் இருந்து, கடத்தப்பட்ட யுரேனியத்தை, சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படையான ‘SAT Squad’ மீட்கின்றனர். யுரேனியத்தையும் தீவிரவாதி ஓமரையும் பத்திரமாகக் கொண்டு வருவதே இந்த குழுவின் முக்கிய பணி.

விஜய் (காந்தி), பிரசாந்த் (சுனில்), பிரபுதேவா (கல்யாண்) ஆகியோர் அடங்கிய SAT Squad, ஆயுதங்களுடன் களம் இறங்குகின்றனர். இருதரப்புக்கும் இடையே நடக்கும் கடுமையான மோதலில் ரயில் வெடித்து, தீவிரவாதியான மேனன் (நடிகர் மோகன்) இறந்துவிடுகிறார்.

மற்றொரு காட்சியில் காந்தி (விஜய்), தன் மனைவி (சினேகா) மற்றும் மகன் ஜீவனுடன் தாய்லாந்திற்கு செல்லும் போது, ஒரு குழுவால் தாக்கப்படுகிறார். காந்தியின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மகன் ஜீவன் கடத்தப்பட்டு, கொல்லப்படுவது போல் காட்டப்படுகிறது.

காந்தி தனது மகனை அங்கு இழக்கிறார். குடும்பம் சிதைகிறது. ஒரு கட்டத்தில் இறந்துவிட்டதாக நம்பப்படும் ஜீவனை, காந்தி ஒரு சிக்கலான சூழலில் சந்திக்க நேர்கிறது.

அது என்ன சூழல்? என்ன பிரச்னை? காந்திக்கும், அவரது மகன் ஜீவனுக்கும் அதன் பின் உறவு எப்படி இருந்தது? இதுதான் ‘தி கோட்’ படத்தின் கதை.

தி கோட், நடிகர் விஜய், வெங்கட்பிரபு

பட மூலாதாரம், Twitter : Aishwarya Kalpathi

நடிகர் விஜய் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தாரா?

பெரும்பலான ஊடக விமர்சனங்கள், நடிகர் விஜய்யின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகப் பாராட்டியிருக்கின்றன.

“விஜய், ஒரு நடிகராக, திரையில் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இளம் விஜய்யாக, அவர் 'அழகிய தமிழ் மகன்' பட கதாபாத்திரத்தை உயிர்ப்பிக்கிறார்,” என்று ‘இந்தியா டுடே’ விமர்சனம் பாராட்டி உள்ளது.

மேலும், “இளம் விஜய்யை உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாது. தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான விஜய் புகழின் உச்சத்தில் இருக்கும் போது சினிமாவில் இருந்து விடைபெறுகிறார் என்பதை இந்தப் படம் அப்பட்டமாக நினைவூட்டுகிறது,” என்றும் எழுதியுள்ளது.

‘நடிகர் விஜய்யின் ரசிகர்களைப் போலவே நமக்கும் அவர் தொடர்ந்து நடிக்கலாமே? என்கிற எண்ணமே தோன்றுவதாக’ தினமணி குறிப்பிட்டுள்ளது.

“வசனமாகட்டும், கணவனாக, தந்தையாக எனப் பல பரிணாமங்களிலும் அழகான நடிப்பை வழங்கியிருக்கிறார் [விஜய்]. எங்கும் சலிக்காத முகமாக இருப்பதுதான் அவரது பலமாகவும் இருக்கிறது. தந்தை காந்திக்கும், மகனுக்கும் பெரிய வித்யாசங்களை விஜய் கொடுத்திருக்கிறார். ஆக்ஷன், நடிப்பு, நடனம் என அனைத்து தரப்பிலும் குறையே வைக்காத நடிகராகவே இதிலும் தொடர்கிறார்,” என தினமணி நாளிதழின் விமர்சனம் குறிப்பிடுகிறது.

விஜய்-வெங்கட் பிரபு காம்போ எப்படி?

விஜய்-வெங்கட் பிரபு காம்போவில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தை ‘ஆக்‌ஷன் கலந்த, ஒரு முழுமையான எண்டர்டெயினர்’ என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் விவரித்துள்ளது.

படத்தில் சில அரசியல் குறியீடுகள் இருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருப்பதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’, தனது விமர்சனக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

“நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடங்கிய பின் வெளியான முதல் படமான 'தி கோட்' படத்தில் விஜய் பயன்படுத்தும் காரின் நம்பரில் அரசியல் சொல்லி இருப்பதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தி கோட் படத்தில் ‘TN 07 CM 2026’ என்ற எண் கொண்ட காரை படம் முழுக்க விஜய் ஓட்டி வருகிறார்,” என அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

‘தி எகனாமிக் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழின் விமர்சனம், “நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. முதல் பாதி ட்விஸ்ட்டுகளுடன் விறுவிறுப்பாக நகர்ந்தது. ஆனால் இரண்டாம் பாதி மெதுவாக நகர்கிறது. யூகிக்கக்கூடிய காட்சிகளை கொண்டுள்ளது. இருப்பினும் க்ளைமாக்ஸ் காட்சிகள் படத்தை தொய்வில் இருந்து மீட்டெடுத்து விட்டது,” என்கிறது.

தி கோட், நடிகர் விஜய், வெங்கட்பிரபு

பட மூலாதாரம், Venkat Prabhu

படக்குறிப்பு, விஜய்-வெங்கட் பிரபு காம்போவில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தை ‘ஆக்‌ஷன் கலந்த, ஒரு முழுமையான எண்டர்டெயினர்’ என்று ஒரு விமர்சனம் கூறுகிறது

இயக்குநராக வெங்கட் பிரபு வெற்றி பெற்றாரா?

ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் தனது விமர்சனத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளது.

“உலகம் முழுவதும் பயணிக்கும் திரைக் கதையை எழுதிய இயக்குநர் வெங்கட் பிரபுவை முதலில் பாராட்ட வேண்டும். குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், நகைச்சுவை, ஆகியவற்றுடன் பல திருப்பங்களை திரைக்கதையில் சேர்க்கப்பட்டுள்ளன.” என ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த சில வருடங்களாக வெளியான திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை அவர் விஜய்க்கு கொடுத்துள்ளதாகவும் அந்த விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழ், தனது விமர்சனத்தில், படத்தின் நீளமும், கிளைமாக்ஸில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் போட்டி தொடர்பான காட்சிகளும் சற்று தொய்வை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளது.

“ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன், படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் கதைகளத்தில் ஏராளமான திருப்பங்கள் உள்ளன, ஆனால் க்ளைமாக்ஸ் காட்சி சற்று இழுவையாக உள்ளது.

“கதை மிகவும் பழக்கமான டெம்ப்ளேட்டைப் பின்பற்றுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது எளிதில் கணிக்க முடிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளும் சராசரியாகவே இருக்கிறது,” என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் விமர்சித்துள்ளது.

வெங்கட் பிரபுவின் இயக்கம் ஏமாற்றம் அளித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் தினமணி விமர்சனம், “முதல்பாதி முழுக்க கதை என்னவாக இருக்கும் என்பதிலிருக்கும் ஆர்வம், இரண்டாம் பாதியில் இல்லை சஸ்பென்ஸ் காட்சிகள்கூட ஊகிக்கும்படியாகவே இருக்கின்றன. ‘அடுத்தது என்ன’ என வெங்கட் பிரபு போன்ற இயக்குநர்கள் சிந்திக்க வைப்பார்கள் என்று படத்தைப் பார்த்தால் பல இடங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது,” என்று இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

தி கோட், நடிகர் விஜய், வெங்கட்பிரபு

பட மூலாதாரம், Twitter : Aishwarya Kalpathi

படக்குறிப்பு, கடந்த சில வருடங்களாக வெளியான திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை விஜய்க்கு கொடுத்துள்ளதாக ஒரு விமர்சனம் குறிப்பிட்டுள்ளது

‘த்ரோபேக்’ காட்சிகள்

நடிகர் விஜயகாந்த், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகி பவதாரிணி ஆகியோரை நினைவுப்படுத்தும் காட்சிகளும் 'தி கோட்' படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

வெங்கட் பிரபு, படத்தின் பல இடங்களில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘த்ரோபேக் டச்’ கொடுக்கும் காட்சிகளை வைத்திருப்பதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழ் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

“வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ உள்ளிட்ட சில பிரபலமான திரைப்படங்கள் மற்றும் ஒரு சில விஜய் படங்களில் இருந்து சில ‘த்ரோபேக் காட்சிகள்’ மற்றும் அவை தொடர்பான உரையாடல்கள், படத்தின் காட்சிகளில் மிகையாக இல்லாமல் இயல்பாக சேர்க்கப்பட்டுள்ளன,” என ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

‘கில்லி’ திரைப்படத்தில் வரும் மருதமலை பாடல், ‘அப்படி போடு’ நடன அசைவுகள் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பதாகவும் இந்த விமர்சனம் கூறுகிறது.

தி கோட், நடிகர் விஜய், வெங்கட்பிரபு

பட மூலாதாரம், YouTube/T-Series

படக்குறிப்பு, ‘டி-ஏஜிங்’ எனும் தொழில்நுட்ப உத்தி மூலம் நடிகர் விஜய் 22-23 வயது இளைஞர் தோற்றத்தில் திரையில் தோன்றுகிறார்

டி-ஏஜிங் தொழில்நுட்பம் வேலை செய்ததா?

‘தி கோட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான சமயத்தில், ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது நடிகர் விஜய்யின் அரும்பு மீசை தோற்றம்.

‘டி-ஏஜிங்’ எனும் தொழில்நுட்ப உத்தி மூலம் நடிகர் விஜய் 22-23 வயது இளைஞர் தோற்றத்தில் திரையில் தோன்றுகிறார். கலவையான எதிர்வினைகளை பெற்ற அரும்பு மீசை விஜய் தோற்றம் திரைப்படத்துக்கு பலம் சேர்த்ததா?

திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கும் ‘டி-ஏஜிங்’ தொழில்நுட்பம் அற்புதமாக இருப்பதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் பாராட்டியிருக்கிறது.

அதன் விமர்சம், “டிரெய்லர் வெளியான போது டி-ஏஜிங் தொழில்நுட்பம் குறித்து நாம் பார்த்த கருத்துக்களுக்கு மாறாக, திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்கிறது.

“ஒரு வழக்கமான கதையுடன், இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யின் முத்திரை பதிக்கும் தோற்றத்தை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். டி-ஏஜிங் தொழில்நுட்பம் மூலம், அவர் இரண்டு விதமான விஜய்யை நம் முன் நிறுத்துகிறார். வயது முதிர்ந்த கதாபாத்திரத்திலும், இளம் வயது விஜய்யாகவும் அவரின் நடிப்பு முழு மதிப்பெண்களைப் பெறுகிறது,” என்று எழுதியிருக்கிறது.

ஆனால், தினமணி தமிழ் நாளிதழ், தனது விமர்சனத்தில் ‘டி-ஏஜிங்’ தொழில்நுட்பம் படத்தில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.

அதில், “வயதான விஜய், இளம்வயது விஜய் என இதுவரை தமிழில் செய்யாத முயற்சியாகவே டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை அசத்தலாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இனி தமிழில் உருவாகும் டீ-ஏஜிங் படங்களுக்கு கோட் படமே முன்னோடியாக இருக்கப்போகிறது. முக்கியமாக, இளவயது விஜய் கதாபாத்திரம். ஆனால், சிறுவயது விஜய்யை டி-ஏஜிங் என்கிற பெயரில் சொதப்பியிருக்கிறார்கள்,” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா

பட மூலாதாரம், X/Venkat Prabhu

படக்குறிப்பு, யுவன் ஷங்கர் ராஜா இன்றும் தனித்தே தெரிவதற்கு அவரது பாணி இசையமைப்பே காரணம் என்பதை ‘தி கோட்’ படத்திலும் உணர முடிகிறது என்று ஒரு விமர்சனம் கூறுகிறது

யுவன் ஷங்கர் ராஜா இசை எப்படி?

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழ், தனது விமர்சனத்தில், “தி கோட்’ திரைப்படத்துக்கு இன்னும் சிறப்பாக இசை அமைத்திருக்கலாம். யுவன் ஷங்கர் ராஜா ஆக்‌ஷன் மற்றும் எலிவேஷன் சீக்வென்ஸ்களில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். ஆனால் த்ரிஷாவுடனான பாடல் உட்பட அனைத்து பாடல்களிலும் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஒளிப்பதிவும் சராசரியாகவே உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் தினமணி நாளிதழ், ‘யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் வெளியானபோது இல்லாத சுவாரஸ்யம் திரைப்படமாக பார்க்கும்போது ரசிக்க வைப்பதாகக்’ குறிப்பிட்டுள்ளது.

“விசில் போடு பாடல், மற்றும் மற்ற பாடல்கள், அதிரடியான பின்னணி இசை ஆகியவை காதைக் கிழிக்காமல் கதையோடு ஒன்றச் செய்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இன்றும் தனித்தே தெரிவதற்கு அவரது பாணி இசையமைப்பே காரணம் என்பதை கோட்டிலும் உணர முடிகிறது,” என தினமணி குறிப்பிட்டுள்ளது.

நடிகை சினேகாவின் நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்திருப்பதாக கூறியிருக்கும் தினமணி, “நயன்தாரா, த்ரிஷா போல் வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் சினேகாவுக்கான வாய்ப்புகளைக் கொடுக்கலாம். இன்னும் அவரிடமிருக்கும் வசீகரம் விலகவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளது.

பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, ஜெய்ராம், மீனாட்சி செளத்ரி ஆகியோர் விஜய்யின் நடிப்புக்கு பலம் சேர்ப்பதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் தனது குறிப்பிட்டுள்ளது.

“யோகி பாபுவும், பிரேம்ஜியும் நகைச்சுவையின் மூலம் புத்துணர்ச்சி தருகிறார்கள்,” எனவும் இந்த விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)