'தி கோட்' படம் நடிகர் விஜயின் அரசியலைப் பேசுமா? பிபிசிக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேட்டி

தி கோட், நடிகர் விஜய்

பட மூலாதாரம், AGS Entertainment

படக்குறிப்பு, இளவயது விஜய்யின் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா ஆகியோர் நடித்து, வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் The Greatest of All Time திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படம் தொடர்பான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்திருக்கும் நிலையில், இந்தப் படம் குறித்தும், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து படத்தில் ஏதும் இருக்கிறதா என்பது குறித்தும் விரிவாகப் பேசினார் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ஏஜிஎஸ் ஸ்டுடியோசின் சிஇஓவுமான அர்ச்சனா கல்பாத்தி.

அவருடைய பேட்டியிலிருந்து

கே. The Greatest of All time படம் எப்படி வந்திருக்கிறது?

ப. இந்தப் படத்திற்காக ஒரு ஆண்டு பணியாற்றினோம். இது ஒரு கூட்டு முயற்சி. இவர்கள் அனைவரது உழைப்பும் படம் பார்க்கும்போது தெரிந்தது. ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். தளபதியின் ரசிகர்களுக்கும் பொதுவான ரசிகர்களுக்கும் இது ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என நம்புகிறோம்.

கே. இந்தப் படத்தின் அடிப்படையான அம்சம் என்ன?

ப. இந்தப் படம் ஒரு ஆக்ஷன் - பொழுதுபோக்குப் படம் எனச் சொல்லலாம். சுவாரஸ்யமான ஒரு கதைக்கு வேகமாக நகரக்கூடிய திரைக்கதையை அமைத்திருக்கிறோம். ஒரு கமர்ஷியல் படத்தில் இருக்கக்கூடிய எல்லா விஷயங்களும் இதில் இருக்கும். எல்லோரும் விரும்பக்கூடிய ஒரு கமெர்ஷியல் பொழுதுபோக்குப் படமாக இதைச் சொல்லலாம்.

கே. 'பிகில்' படத்திற்குப் பிறகு விஜய்யை வைத்து நீங்கள் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுக்க முடிவுசெய்தது எப்படி.. கதை மட்டுமே காரணமா?

ப. விஜய்யோடு படம் செய்வதென்பது ஒரு சிறப்பான அனுபவம். அவரை வைத்து நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருக்கும். அதனால், அடுத்த படம் எப்போது சேர்ந்து செய்யலாம் என கேட்டுக்கொண்டேதான் இருப்போம். அப்படி ஒரு சந்தர்ப்பமும் நல்ல கதையும் கையில் கிடைத்தது. எங்களுக்கு விதவிதமான கதைகளை, வெவ்வேறு செலவில் சொல்லப் பிடிக்கும். ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில், அந்த இடத்தில்தான் எங்களை நாங்கள் வெளிப்படுத்திக்கொள்ள முடியும். உச்சத்தில் இருக்கும் நடிகரை வைத்து படம் செய்யும்போது, தைரியமாக இறங்கலாம். புதிய முயற்சிகளைச் செய்யலாம். அப்படித்தான் இந்தப் படத்தைத் தயாரித்தோம்.

தி கோட், நடிகர் விஜய்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கே. விஜய் விரைவில் தீவிர அரசியலில் இறங்கவிருக்கிறார். GOAT படம் தயாரிப்பில் இருந்தபோதுதான் அரசியல் தொடர்பான அவரது அறிவிப்புகளில் பெரும்பகுதி வெளியானது. தயாரிப்பாளராக இது உங்களுக்கு ஏதாவது அழுத்தத்தை அளித்ததா அல்லது இதையும் ஒரு சாதகமான அம்சமாக பார்க்கிறீர்களா?

ப. விஜய்யைப் பொறுத்தவரை, தன் அரசியல் பிரவேசத்தையும் இந்தப் படத்தையும் கலக்கவேயில்லை. நாங்கள் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தினோம். ஐந்து நாடுகளுக்கு பயணம் செய்து எடுக்க வேண்டிய கதைக் களம் இது. இங்கே படப்பிடிப்பு நடத்தினால் கூட்டம் சேர்ந்துவிடும் என்பதால் வெளிநாட்டில் போய் படப்பிடிப்பை நடத்துவதைப் போலவோ, ஒரு பாட்டிற்காக வெளிநாட்டிற்குச் செல்வதைப் போலவே இல்லை இது. கதையே ஒரு நாட்டில் ஆரம்பித்து பல நாடுகளில் நடப்பதைப் போல இருக்கும்.

அதற்கு எந்த அளவுக்குத் திட்டமிட வேண்டும் என்று பாருங்கள். ஒரு சிறிய படத்திலேயே 150 பேர் இருப்பார்கள். இது போன்ற படங்களில் படப்பிடிப்புக் குழுவில் சுமார் 300 பேராவது இருப்பார்கள். இவர்கள் குழுவாகப் பிரிந்து, படப்பிடிப்பிற்கு முந்தைய வேலை, படப்பிடிப்பு, எடிட்டிங் எனச் செயல்படுவார்கள். ஆகவே அதில்தான் கவனம் செலுத்தப்பட்டது. தயாரிப்பு நிறுவனம், விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு என எல்லோருக்குமே இது ஒரு பெயர் சொல்லும் படமாக இருக்க வேண்டுமென நினைத்தோம். ஆகவே அவருடைய அரசியலுக்கும், படத்திற்கும் இடையில் ஒரு கலப்பே வரவில்லை.

கே. ஒரு நடிகர் படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே, அரசியலுக்கு வருவதாக இருந்தால் தனது அரசியல் நுழைவுக்கான புள்ளியாக திரைப்படங்களைப் பயன்படுத்துவார்கள்

ப. எங்களுக்கு அப்படி நடக்கவில்லை. நாங்கள் ஒரு கார்ப்பரேட் நிறுவனம். எங்களுக்கு அப்படி எந்த நிர்பந்தமும் வரவில்லை. விஜய்யும் அப்படி கிடையாது. இது ஒரு கலகலப்பான, ஆக்ஷன் - பொழுதுபோக்குப் படம். ஒரு படத்திற்கு ஏன் வருகிறோம்? நம் கவலைகளையெல்லாம் மறந்துவிட்டு, கைதட்டி ரசித்து கொண்டாடுவதற்காக வருகிறோம். அந்த விஷயத்தில் விஜய் மிகக் கவனமாக இருப்பார். அவருடைய ரசிகர்களுக்கு எது தேவையோ, அவர்கள் எதனை ரசிப்பார்களோ அதுபோன்ற ஒரு படத்தையே நாங்கள் எடுத்திருக்கிறோம்.

கே. இந்தப் படம் மிகப் பெரிய செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இவ்வளவு பெரிய செலவில் தயாரிக்கும் திட்டமும் நம்பிக்கையும் எப்படி வந்தது?

ப. அந்த நம்பிக்கை எப்போதுமே இருந்திருக்கிறது. எந்தப் படத்தையும் நாங்கள் திட்டமிடாமல் எடுக்க மாட்டோம். விஜய் தற்போது உச்சத்தில் இருக்கிறார். அவருடைய மார்க்கெட் என்பது மிகவும் பெரியது. குறிப்பாக அவருடைய தமிழ்நாடு மார்க்கெட்டை மட்டும் எடுத்துக்கொண்டாலே, அதுவே மிகவும் பெரியது. 'பிகில்' படத்திற்கும் இந்தப் படத்திற்கும் இடையிலான ஐந்தாண்டுகளில், அவருடைய வெளிநாட்டு மார்க்கெட் மூன்று மடங்கு பெரிதாகியிருக்கிறது. அவருடைய ஓடிடி, சாட்டிலைட் சந்தை பெரிதாகியிருக்கிறது. அவருடைய ஆந்திரா மார்க்கெட் பெரிதாகியிருக்கிறது. கர்நாடகா, கேரளா மார்க்கெட் பெரிதாகியிருக்கிறது. வட இந்தியாவிலும் சுமார் 50 கோடி ஓபனிங் தரக்கூடிய நட்சத்திரமாகியிருக்கிறார் விஜய். இதுபோன்ற ஒரு நட்சத்திரத்தை வைத்து படம் செய்தால், அடிப்படையான வியாபாரம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆகவே, எவ்வளவு செலவு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது முதலிலேயே தெரியும். ஆகவே கதைக் களத்தை பெரிதாக்கினால் அந்தப் படத்தின் மார்க்கெட் இன்னும் பெரிதாகும். இந்தப் படத்தைப் பற்றி பேசுபவர்களில் பலர், இத்தனை கோடி, அத்தனை கோடி என எண்களிலேயே சிக்கிக் கொள்கிறார்கள். பொதுவான ரசிகர்களேகூட, இந்தப் படம் 700 கோடி ரூபாய் சம்பாதிக்குமா, 800 கோடி ரூபாய் சம்பாதிக்குமா என்று பேசுகிறார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தின் 'ஓபனிங்' என்ன என்பதைத்தான் கவனிப்பேன். ஓபனிங்தான் ஒரு நட்சத்திரத்திற்கு மிக முக்கியமான விஷயம். ஒரு படம் சராசரிக்கு சற்று மேலே இருந்தாலே, நல்ல தொகை வசூலாகிவிடும். சூப்பர் ஹிட்டாக இருந்தால் அதனால் கிடைக்கக்கூடிய வசூல், எவ்வளவு இருக்கும் என யாராலும் கணிக்க முடியாது. ஆகவே, ஒரு நல்ல படத்தை விஜய்யை வைத்துக் கொடுத்தால், அடிப்படையிலேயே இவ்வளவு லாபம் வந்துவிடும் என்பதை முதலிலேயே கணக்கிட்டுவிடுவோம். அதுபோன்ற ஒரு கதைக் களத்தை தேர்வுசெய்வோம்.

அப்படி ஒரு கதை எங்களுக்கு அமைந்தது. ஆகவே, பல நாடுகளில் போய் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்தோம்.

தி கோட், நடிகர் விஜய்

பட மூலாதாரம், AGS Entertainment

கே. பொதுவாக ஒரு திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கும்போது அந்த செலவின் பெரும் பகுதி நடிகர்களின் சம்பளத்திற்கே சென்றுவிடுகிறது என்றும் குறைவான பகுதியே படத்தின் தயாரிப்பிற்காகச் செலவிடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. உங்கள் அனுபவம் என்ன?

ப. இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அப்படிக் கிடையாது. அப்படிச் செய்தால் ஒரு குறிப்பிட்ட சந்தைக்குள் பணியாற்றுவதைப் போல ஆகிவிடும். மேலும் அது அந்தப் படத்திற்கும் நல்லதல்ல. தயாரிப்பிற்கு நன்றாகச் செலவுசெய்தால்தான், குறிப்பிட்ட சந்தையைத் தாண்டியும் படம் பயணிக்கும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். 'பாகுபலி' படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் பிரபாஸ், ராணா போன்ற பெரிய நட்சத்திரங்கள் இருந்தனர். ஒரு பெரிய இயக்குநர் இருந்தார். இவர்கள் எல்லோருக்குமே அதிக சம்பளம் இருக்கும். ஆனாலும் அவர்கள் படத்தைத் தயாரிக்க நிறைய செலவுசெய்தார்கள். இதனால் என்ன ஆனது என்றால் அந்தப் படத்தின் சந்தை மிகப் பெரியதானது.

பிகில் படத்திற்குமே அப்படித்தான் செய்தோம். அந்த காலகட்டத்தில், அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 180 கோடிக்கு ஒரு படத்தைத் தயாரிப்பது என்பது பெரிய விஷயம். ஆனால், அந்தப் படம்தான் சந்தையை விரிவுபடுத்தியது. தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் அந்தப் படம் பார்க்கப்பட்டது. வெளிநாட்டுகளில் ஒரு சந்தையை ஏற்படுத்தியது. அப்படித்தான் இந்த வர்த்தகத்தை பார்க்க வேண்டும்.

ஒரு நட்சத்திரத்தின் சம்பளம் என்பது, அந்த நட்சத்திரத்திற்கும் தயாரிப்பாளருக்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பானது. அப்படி சம்பளம் கொடுத்து லாபம் சம்பாதிக்க முடியும் என்றால்தான் நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவே செய்வோம். ஒரு கதைக்குத் தேவையான நட்சத்திரத்தை தேர்வுசெய்ய வேண்டும், அதற்கேற்ற தயாரிப்புச் செலவைச் செய்ய வேண்டும். இந்தப் படத்தில் தயாரிப்புச் செலவை பெரிதாகத்தான் செய்திருக்கிறோம்.

தி கோட், நடிகர் விஜய்
படக்குறிப்பு, அர்ச்சனா கல்பாத்தி

கே. நடிகர்களின் சம்பளம், எவ்வளவு செலவாகியிருக்கிறது என்பதையெல்லாம் பேசினால் ஒரு சந்தைக்குள் சிக்கிக்கொள்வோம் என்கிறீர்கள். அப்படியென்றால் என்னவென விளக்க முடியுமா?

ப. ஒரு நட்சத்திரத்தின் சந்தை மதிப்பு எல்லா மார்க்கெட்டையும் சேர்த்து 100 கோடி என வைத்துக்கொள்வோம். 100 கோடியில் எனக்கு லாபம் 25 கோடி வேண்டும் என தனியாக எடுத்துவைத்துவிடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். மீதமிருப்பது 75 கோடிதான். இதில் 50 - 55 கோடி ரூபாயை நட்சத்திரங்களின் சம்பளமாகக் கொடுத்துவிட்டால், மீதமுள்ள 20 கோடியில்தான் படத்தை எடுக்க முடியும். அப்போது அந்தப் படம், எந்த மார்க்கெட்டை இலக்கு வைத்து உருவாக்குகிறோமோ அந்த மார்க்கெட்டிற்குள் மட்டும்தான் ஓடும். வேறு சந்தைகளுக்கே கொண்டுபோக முடியாது. அப்படியானால், அதே போன்ற படங்கள்தான் வந்துகொண்டிருக்கும். ஆனால், அதற்குப் பதிலாக 100 கோடி ரூபாய் எல்லைவரை எடுத்துச் சென்று படத்திற்குச் செலவுசெய்தால், பல்வேறு சந்தைகளுக்குமான படத்தை உருவாக்க முடியும். ஆனால், இதற்கு நல்ல கதை தேவைப்படும்.

கே. சமீப நாட்களில் ஒரு பெரிய நடிகரின் படத்தில் வேறு நாயகர்களும் நடிக்க ஒப்புக்கொள்கிறார்கள். இந்தப் படத்திலும் அப்படி பிரசாந்த், பிரபுதேவா போன்றவர்கள் இருக்கிறார்கள். கதைக்காக இது செய்யப்படுகிறதா அல்லது கூடுதல் மதிப்பிற்காகவா?

ப. கதைக்குத் தேவைப்படுகிறது. மார்க்கெட்டிங் வியூகம் என இதைச் சொல்வது தவறு. அந்த வியூகமெல்லாம் சரியாக வராது. காரணம், ஒரு படத்தின் மதிப்பு என்பது அந்தப் படத்தில் உள்ள பெரிய நட்சத்திரத்தின் வர்த்தகம்தான். அதற்கு மேல் வர்த்தகம் செய்ய முடியாது. இந்தப் படத்தில் வேறு யாரைச் சேர்த்தாலும் விஜயக்கு வரும் ஓபனிங்தான் வரும். அந்த அளவுக்கான வர்த்தகம்தான் நடக்கும். இந்தப் படத்தில் கதைக்குத் தேவைப்பட்டதால் இந்த நாயகர்களையும் சேர்த்தோம்.

ஐந்து நாடுகளில் நடக்கும் பெரிய கதையில் இவர்கள் நண்பர்களாக வருகிறார்கள். இதில் இவர்களது நட்பைச் சொல்ல வேண்டுமானால், அதற்கு நேரம் எடுக்கும். அதற்குப் பதிலாக ஏற்கனவே நல்ல அறிமுகமான முகங்களை வைக்கும்போது, நட்பை புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை.

கே. கூடுதலாக வரும் நாயகர்கள் இதனை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள். தங்கள் முக்கியத்துவம் குறித்து கவலைப்படுகிறார்களா?

ப. அப்படியல்ல. ஒரு திரைப்படம் என்பது கூட்டு முயற்சி. ஒருவர்தான் எல்லாவற்றையும் தீர்மானிப்பார் என்றால் படம் சரியாக வராது. இது எல்லோரும் சேர்ந்து செய்யும் வேலை. ஒரு படத்திற்கு யார் தேவை என்பதை இயக்குநர் தீர்மானிப்பார். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் இரண்டு, மூன்று நடிகர்களை தயாரிப்புத் தரப்பிடம் பரிந்துரைப்பார். ஒருவரது தேதி கிடைக்காவிட்டால் இன்னொருவரைத் தேர்வுசெய்வதற்காக இப்படி இரண்டு, மூன்று நடிகர்களை இயக்குநர் சொல்வார். அதற்குப் பிறகு தயாரிப்புத் தரப்பு நடிகர்களிடம் பேசுவோம். மொத்தமாக இத்தனை தேதிகள் தேவை என்போம். அது யாருக்கு சரியாக வருகிறதோ, பிறகு படத்தில் இணைப்போம். அப்படித்தான் இது நடக்கிறது.

கே. இந்தப் படத்தில் இளவயது விஜய்யின் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அவரது தோற்றம் ஏன் இப்படி வடிவமைக்கப்பட்டது?

ப. இளம் வயது விஜய்யின் தோற்றத்திற்காக விஎஃப்எக்ஸ் ஸ்டுடியோவுக்குச் சென்றபோது, அந்த ஸ்டுடியோவில் பல வாய்ப்புகளை எங்கள் முன் வைத்தார்கள். அதாவது, முகத்தின் தோற்றத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்றார்கள். கண்ணைப் பெரிதாக்கலாம், மூக்கைச் சிறிதாக்கலாம் என்பதைப்போல. ஆகவே, தந்தையைவிட மகனுக்கு முகத்தின் கீழ் பகுதியை சற்று நீளமாக வைக்கலாம் என நினைத்தோம். இதன் மூலம் தோற்றத்தில் ஒரு வித்தியாசத்தைக் காட்டலாம் எனக் கருதினோம். ஆனால், அந்தப் பாடலில் அவரைப் பார்க்கும்போது, வேறு ஒருவரைப் போல இருந்ததாக பலரும் நினைத்தார்கள். ஆகவே, அதனை மாற்றிவிட்டோம். இப்போது டிரைலரைப் பார்த்தால் அந்த மாற்றம் உங்களுக்குத் தெரியும். படம் முழுக்க அப்படித்தான் வருவார்.

கே. கடந்த 18 ஆண்டுகளாக தயாரிப்புத் துறையில் இருக்கிறீர்கள். 25 படங்களைத் தயாரித்திருக்கிறீர்கள். ஒரு படத்தைத் தயாரிக்க முடிவுசெய்யும்போது எதை முக்கிய அம்சமாக நினைக்கிறீர்கள்?

ப. கதைதான். கதையைச் சரியாகத் தேர்வுசெய்யவில்லையென்றால், எவ்வளவு செலவுசெய்தாலும் சரியாக வராது. அதேபோல, பல்வேறு விதமான கதைகளைச் சொல்லவும் எங்களுக்கு விருப்பம். பெரிய படங்கள்தான் செய்வோம், சிறிய படங்கள்தான் தயாரிப்போம் என எந்த வரையறையும் எங்களுக்குக் கிடையாது. எங்களுடைய 25 படங்களை எடுத்துப் பார்த்தால், வெவ்வேறு விதமான படங்கள் செய்திருப்பதைப் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)