விண்வெளி வீரர் அல்லாத கோடீஸ்வரர் ஒருவரை 'விண்வெளி நடை' போட வைத்த ஸ்பேஸ் எக்ஸ் - எப்படி?

பொலாரிஸ் டான், ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம், SPACE-X

    • எழுதியவர், பல்லப் கோஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

விண்வெளி வீரர் அல்லாத சாமானியரை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலரிஸ் டான் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அவர்கள் 5 நாட்களை விண்வெளியில் கழித்த பின்னர் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

விண்வெளி வீரர் அல்லாத ஒருவரை விண்வெளி நடை போட வைத்ததன் மூலம் இந்த திட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விண்வெளிச் சுற்றுலாவுக்கான கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

விண்வெளிக்கு சென்ற கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேரையும் சுமந்து கொண்டு டிராகன் பெட்டகம் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.37 மணிக்கு இறங்கியது. இந்த முழு நிகழ்வையும் ஸ்பேஸ் எக்ஸ் தனது சமூக ஊடக பக்கத்தில் நேரலை செய்தது.

பொலாரிஸ் டான், ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம், SPACE X HANDOUT/EPA-EFE/REX/Shutterstock

பொலாரிஸ் டான், ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம், SPACE-X

கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் முதல் தனியார் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இது தனியார் நிதியுதவியுடன் இயங்கும் முதல் விண்வெளிப் பயணம் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் போலரிஸ் டான் (Polaris Dawn).

கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், அன்னா மேனன், ஸ்காட் போட்டீட், சாரா கில்லிஸ் ஆகியோர் போலரிஸ் டான் திட்டத்தின் குழுவில் உள்ளனர். இந்த நான்கு பேரும் நேற்று (செப்டம்பர் 12) விண்வெளிக்குச் சென்று ஸ்பேஸ் வாக் அனுபவத்தை மகிழ்ச்சியோடு அனுபவித்துள்ளனர். இதற்கென பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட 'போலரிஸ் டான்' என்ற விண்கலம் இவர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

அவர்கள் விண்வெளியையும், பூமியின் பிரமாண்ட காட்சியையும் வியந்து பார்த்த காணொளியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பணம் பரிமாற்றச் செயலாக்க வணிகமான ஷிஃப்ட் 4-இன் (Shift4) நிறுவனர் ஜாரெட் ஐசக்மேன் மூன்று விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு நிதியளித்தார். அவர் நிதியளித்த மூன்று திட்டங்களில் `போலரிஸ் டான்’ முதல் திட்டம் ஆகும்.

ஜாரெட் ஐசக்மேன் இந்த திட்டத்திற்குத் தலைமை வகித்து கமாண்டர் பொறுப்பில் இருக்கிறார். தனது நெருங்கிய நண்பரான ஸ்காட் 'கிட்' போட்டீட் (ஓய்வு பெற்ற விமானி), மற்றும் இரண்டு ஸ்பேஸ்எக்ஸ் பொறியாளர்கள் அன்னா மேனன், சாரா கில்லிஸ் ஆகியோருடன் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

`ரெசிலியன்ஸ்’ எனப்படும் இந்த விண்கலம் சுற்றுப்பாதையில் பயணித்து இறுதியில் பூமிக்கு மேலே 870 மைல்கள் (1,400 கிமீ) வரை சென்றது.

கடந்த 1970களில் நாசாவின் அப்பல்லோ திட்டம் நிறுத்தப்பட்டதில் இருந்து, எந்த விண்வெளி வீரரும் அவ்வளவு தூரம் வரை பயணிக்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முதல் தனியார் ஸ்பேஸ் வாக்: விண்வெளியை கண்டு ரசித்த கோடீஸ்வரர் - எப்படி சாத்தியமானது?

பட மூலாதாரம், Polaris/X

முதல் ஸ்பேஸ் வாக்

ஒரு கோடீஸ்வரர் மற்றும் ஒரு பொறியாளர் அடங்கிய குழு, விண்வெளியில் மிகவும் ஆபத்தான `ஸ்பேக் வாக்’ செயல்பாட்டை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளனர். விண்வெளியில் தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்லாத குழு ஒன்று ஸ்பேஸ் வாக் செய்திருப்பது இதுவே முதல்முறை.

கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் மற்றும் பொறியாளர் சாரா கில்லிஸ் ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்திலிருந்து 15 நிமிட இடைவெளியில் வெளியேறினர். இந்திய நேரப்படி மாலை 4.22 மணிக்கு அவர்களது ஸ்பேஸ் வாக் தொடங்கியது. அவர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஸ்பேஸ் உடைகளை அணிந்திருந்தனர்.

"இங்கிருந்து பார்க்கும்போது பூமி நிச்சயமாக ஒரு முழுமையாக கிரகமாகத் தெரிகிறது" என்று ஐசக்மேன் கூறியுள்ளார்.

பூமிக்கு மேலே 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் மிதப்பதற்காக, இருவரும் வெள்ளை டிராகன் காப்ஸ்யூலில் இருந்து வெளிவருவதை புகைப்படங்கள் காட்டுகிறது.

காப்ஸ்யூலில் இருந்து ஐசக்மேன் முதலில் வெளிப்பட்டார், அவரது உடையை சோதிக்க அவரது கைகால்களை அசைத்தார்.

அவர் மீண்டும் காப்ஸ்யூல் உள்ளே சென்றார். அதன் பின்னர் ஸ்பேஸ் எக்ஸில் பணிபுரியும் சாரா கில்லிஸ், வெளியேறினார். இருவரும் தங்கள் ஸ்பேஸ் வாக் அனுபவத்தை விவரித்தனர், அவர்களின் ஆடைகள் விண்வெளியில் எப்படி செயல்பட்டது என்பதையும் விவரித்தனர்.

அதிக கதிர்வீச்சை எதிர்கொண்ட குழு

முதல் தனியார் ஸ்பேஸ் வாக் மேற்கொள்ளும் கோடீஸ்வரர் : சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Reuter

படக்குறிப்பு, இடமிருந்து வலமாக, அன்னா மேனன், ஸ்காட் போட்டீட், கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், சாரா கில்லிஸ் ஆகியோர் போலரிஸ் டான் மிஷனின் குழுவில் உள்ளனர்

விண்வெளி வீரர்கள் `வான் ஆலன் பெல்ட்’ எனப்படும் விண்வெளிப் பகுதி வழியாகச் செல்வார்கள், இது அதிக அளவிலான கதிர்வீச்சைக் கொண்டிருக்கும். ஆனால் குழுவினர் விண்கலம் மற்றும் அவர்களின் மேம்படுத்தப்பட்ட விண்வெளி உடைகளால் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.

வான் ஆலன் பெல்ட் பகுதியில் சில கடப்புகளில், அதீத கதிர்வீச்சை விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்பட்டது. மூன்று மாதத்திற்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தால் ஏற்படும் அனுபவத்திற்கு இணையாக இந்தக் கதிர்வீச்சின் தாக்கம் இருக்கும். ஆனால், இது ஏற்றுக்கொள்ளக் கூடிய வரம்புகளுக்குள் இருக்கும்.

ஒப்பீட்டளவில் குறுகிய, அதே சமயம் பாதுகாப்பான கதிர்வீச்சு வெளிப்பாட்டுக்கு, மனித உடல் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்வதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

சோதனைகள் மேற்கொள்ளத் திட்டம்

விண்வெளியில் தங்கள் இரண்டாவது நாளின்போது இந்தக் குழுவினர் அதிகபட்ச உயரத்தில் இருப்பார்கள். அப்போது 40 சோதனைகள் வரை மேற்கொள்வர்.

முதல் தனியார் ஸ்பேஸ் வாக் மேற்கொள்ளும் கோடீஸ்வரர் : சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Polaris/X

ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்புக்கும் டிராகன் விண்கலத்திற்கும் இடையே செயற்கைக்கோள் வழியாக நடத்தப்படும் லேசர் தொடர்பு சோதனையும் இதில் அடக்கம்.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்து, மூன்றாம் நாளில் ஐசக்மேன் மற்றும் சாரா கில்லிஸ் ஆகியோர் முதன்முதலில், தனியாரால் நிதி அளிக்கப்பட்ட ஸ்பேஸ் வாக் (spacewalk) செயல்பாட்டை முயன்று பார்த்தனர். ஸ்பேஸ் வாக் சுமார் இரண்டு மணிநேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் சுற்றுவட்டப் பாதையில் 700 கி.மீ தொலைவில் இருக்கும்போது இது நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

விண்வெளி வீரர்கள் புதிய எக்ஸ்ட்ராவெஹிகுலர் ஆக்டிவிட்டி (ஈவிஏ) என்னும் விண்வெளி வீரர் சூட்களை (உடைகளை) சோதனை செய்ய உள்ளதாக கூறப்பட்டது. இது அதன் பெயருக்கு ஏற்ப, விண்கலத்திற்கு வெளியே வேலை செய்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ்-இன் இன்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிட்டி (ஐவிஏ) சூட்களில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஈவிஏ (EVA) சூட்டின் ஹெல்மெட்டில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே இருக்கும். இது பயன்பாட்டில் இருக்கும்போது சூட் பற்றிய தகவலை வழங்கும். ஈவிஏ சூட்கள், விண்வெளியில் ஏவப்படும்போதும் தரையிறங்கும் போதும் அணிவதற்கு வசதியாகவும் இலகுவாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஸ்பேஸ் வாக் செய்யத் தேவையான ஸ்பேஸ் சூட்

முதல் தனியார் ஸ்பேஸ் வாக் மேற்கொள்ளும் கோடீஸ்வரர் : சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், SpaceX

படக்குறிப்பு, விண்வெளி வீரர்கள் புதிய எக்ஸ்ட்ராவெஹிகுலர் ஆக்டிவிட்டி (ஈவிஏ) என்னும் விண்வெளி வீரர் சூட்களை சோதனை செய்தனர்.

விண்வெளி ஸ்பேஸ் வாக்கிற்காக பயிற்சியில் இருந்தபோது அளித்த பேட்டியில் கில்லிஸ், மனிதர்களை வேற்றுகிரகங்களுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் திட்டங்களில் இதுவொரு அவசியமான அம்சம் என்று கூறினார்.

“இதுவரை அரசுகளால் மட்டுமே `ஸ்பேஸ் வாக்’ செயல்பாட்டைச் சாத்தியமாக்க முடிந்தது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய் கிரகத்திற்குச் சென்று மனித வாழ்க்கையை மற்றொரு கிரகத்திலும் சாத்தியப்படுத்தும் லட்சியத்தைக் கொண்டுள்ளது.

அங்கு செல்வதற்கான நடைமுறைகளை நாம் தொடங்க வேண்டும். அதற்கான முதல்படி ஈவிஏ ஸ்பேஸ் சூட்டின் பயன்பாட்டைச் சோதிப்பது. இதன்மூலம் ஸ்பேஸ் வாக் மற்றும் அதற்கான எதிர்கால ஆடை வடிவமைப்புகளைச் சிறப்பாக உருவாக்க முடியும்” என்று ஐசக்மேன் கூறினார்.

"இன்னொரு கிரகத்தில் வாழ்விடங்களை அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கனவை அவர்கள் நனவாக்கப் போகிறார்கள் எனில், அவர்களுக்கு ஈவிஏ சூட்டின் திறன் தேவை என்பதை ஸ்பேஸ் எக்ஸ் அறிந்திருக்கிறது."

மனிதர்கள் மத்தியில் விண்வெளிப் பயணம் மிகவும் பொதுவான செயல்பாடாக மாறும்போது அதற்கான உடைகள் அனைத்துத் தரப்பு விண்வெளி வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும். எனவே ஸ்பேஸ் சூட் வாங்குவதற்கான செலவைக் குறைப்பதே இதன் நோக்கம்.

ஸ்பேஸ்வாக்கின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், ரெசிலியன்ஸ் எனப்படும் டிராகன் விண்கலம், ஒரு ஏர்லாக்கை (airlock) கொண்டிருக்கவில்லை, இது விண்கலத்தின் மீதமுள்ள பகுதிக்கும் வெற்றிடத்திற்கு (vacuum) வெளியே செல்லும் நுழைவாயிலுக்கும் இடையில் ஒரு சீல் செய்யப்பட்ட இடமாகும்.

பொதுவாக விண்வெளி வீரர்கள் உள்ளே நுழைவதற்கும் வெளியே செல்வதற்கும் ஏர்லாக் அழுத்தம் நீக்கம்( depressurise) செய்யப்படும். ஆனால் ரெசிலியன்ஸ் விஷயத்தில், முழு குழுவும் அழுத்தம் நீக்கம் செய்யவேண்டும். ஸ்பேஸ் வாக் செய்யாத விண்வெளி வீரர்களும் முழுமையாக சூட் அணிய வேண்டும்.

வெற்றிடத்தைத் தாங்கும் வகையில் விண்கலம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலன்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் நான்கு விண்வெளி வீரர்களும் ஈவிஏ உடைகளை அணிந்திருப்பர். ஆனால் இருவர் மட்டுமே விண்கலத்தில் இருந்து வெளியேறுவார்கள்.

விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் உடல்நல பிரச்னைகள்

இந்தக் குழு, `பெண்ட்ஸ்’ என அழைக்கப்படும் அழுத்தத் தளர்வு நோயின் (decompression sickness) தாக்கம் குறித்த சோதனைகளையும் செய்யவுள்ளது. விண்வெளி வீரர்கள் சில நேரங்களில் அனுபவிக்கும் மங்கலான பார்வை பிரச்னையையும் சோதனை செய்யவுள்ளனர். விண்வெளிப் பயணத்தின்போது ஏற்படும் நியூரோ-கண் பிரச்னை இது.

முதல் தனியார் ஸ்பேஸ் வாக் மேற்கொள்ளும் கோடீஸ்வரர் : சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Polaris/X

வான் ஆலன் பெல்ட்களில் இருந்து கதிர்வீச்சின் தாக்கத்தைச் சோதிப்பதும், ஸ்பேஸ் வாக் மேற்கொள்வதும் விண்வெளிப் பயணங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். நிலவு அல்லது செவ்வாய்க்கு தனியார் நிதியளிக்கும் திட்டத்தின் மூலம் அதிக பயணங்களை மேற்கொள்ள இது அடித்தளம் அமைக்கும்.

முதல்முறையாக விண்வெளிக்குப் பயணிக்கும் நபர்களைக் கொண்ட இந்தக் குழு, பல விஷயங்களை முதல்முறையாக அனுபவித்து, சாதிக்க முடியும். ஐசக்மேன் இதற்கு முன்பு ஒருமுறை மட்டுமே விண்வெளியில் இருந்துள்ளார். மற்ற மூவர் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல்முறை.

கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ராக்கெட் உந்துவிசை நிபுணரான டாக்டர் ஆடம் பேக்கரின் கூற்றுப்படி, "இதில் நிறைய ஆபத்துகள் இருப்பதாக ஓர் உணர்வு இருக்கிறது.”

"அவர்கள் அனைவரும் தங்களுக்குள் நிறைய லட்சிய நோக்கங்களை அமைத்துக் கொண்டனர். ஆனால் ஒப்பீட்டளவில் அவர்கள் குறைந்த விண்வெளிப் பயண அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.”

"மறுபுறம், அவர்கள் இப்பணியை உருவகப்படுத்தி அது எப்படி இருக்கும் எனத் திட்டமிட ஆயிரக்கணக்கான மணிநேரங்களை முதலீடு செய்துள்ளனர். எனவே, ஆபத்துகளைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.”

இந்தப் பணி வெற்றியடைந்தால், அரசு விண்வெளி ஏஜென்சிகளைவிட அதிகமான மக்களைக் கொண்டு செல்லும் தனியார் சார்ந்த விண்வெளிப் பயணங்களின் தொடக்கத்திற்கு இது வழிவகுக்கும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பெரிய தொகை, நிறைய விளம்பரங்கள்

முதல் தனியார் ஸ்பேஸ் வாக் மேற்கொள்ளும் கோடீஸ்வரர் : சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டிராகன் விண்கலத்தில் ஏர் லாக் இல்லை, எனவே விண்வெளியின் வாக்யூமை தாங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஆனால் டாக்டர் பேக்கர் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை முன்வைக்கிறார்.

"இதுவரையிலான சாதனையானது தனியார் துறையால் செலவழிக்கப்பட்ட ஒரு பெரிய தொகை, நிறைய விளம்பரங்களை உள்ளடக்கியது. ஆனால் 500 அல்லது அதற்கு மேல் 100க்கும் குறைவான கூடுதல் நபர்கள் மட்டுமே அரசு நிதியுதவி பெற்ற விண்வெளி வீரர்களாக விண்வெளிக்குச் சென்று திரும்பினர். அதுவும் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே அங்கு இருந்தனர்.

"விண்வெளிப் பயணம் கடினமானது, விலையுயர்ந்தது மற்றும் ஆபத்தானது. எதிர்காலத்தில் நீங்கள் பெரும் பணக்காரர்களுக்கு மாறாக, பல சாதாரண மனிதர்கள் விண்வெளிக்குச் செல்வதைக் காண்பீர்களா அல்லது அவர்களில் ஒருவராக இருப்பீர்களா என்பது சந்தேகமே” என்கிறார் டாக்டர் பேக்கர்.

கோடீஸ்வரர்கள் தங்கள் சொந்த விண்வெளிப் பயணத்திற்கு நிதி அளிப்பார்கள் என்பதைச் சிலர் வெறுக்கத்தக்க ஒன்றாகக் கருதுகின்றனர். மேலும் பயணத்திற் பணம் செலுத்தும் நபர், திட்டத்திற்குத் தலைமை தாங்கும் கமாண்டராக இருப்பதைச் சிலர் புருவம் உயர்த்திக் கேட்கின்றனர்.

``இது ஒரு மாயைத் திட்டமாக மறைந்துவிடக் கூடாது” என்று ஓபன் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானியான டாக்டர் சிமியோன் பார்பர் கூறுகிறார். அவர் முழுக்க முழுக்க அரசாங்க நிதியுதவி திட்டங்களில், விண்கலங்களுக்கான அறிவியல் கருவிகளை உருவாக்குகிறார்."

முதல் தனியார் ஸ்பேஸ் வாக் மேற்கொள்ளும் கோடீஸ்வரர் : சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், SpaceX/X

"அந்த குழுவினரில் ஐசக்மேன் உண்மையில் மிகவும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர். அவர் மட்டும்தான் இதற்கு முன்பு விண்வெளிக்குச் சென்றவர். ஸ்பேஸ் எக்ஸுடன் மற்றொரு தனியார் நிதித் திட்டத்தில் இருந்தார், அங்கு அவர் கமாண்டர் பதவியையும் பெற்றார்” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"இன்னும் விரிவாகப் பார்த்தால், இந்த நட்சத்திர வகுப்பு விண்வெளிப் பயண டிக்கெட்டை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் பூமியில் பயன்படுத்தப்படும். சம்பளம் கொடுக்கவும், பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கவும், வரி செலுத்தவும் பயன்படுத்தப்படும். தொண்டுக்காக இந்தத் திட்டம் திரட்டும் பணத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.”

விண்வெளித் துறையில் உள்ள பலர் பணக்காரர்களின் ஈடுபாட்டை ஒரு நல்ல விஷயம் என்று நம்புவதாக அவர் கூறுகிறார்.

"அவர்கள் பூமிக்கு வெளியே, ஒரு நாள் சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல விரும்பினால், அது அறிவியல் வளர்ச்சிக்கு உதவும். மேலும் விண்வெளியை ஆராய்வதற்கான பல்வேறு காரணங்கள் இருப்பதால், இந்தத் திட்டம் மிகவும் நிலைத்தன்மை அடையும்.”

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)