முதல்முறையாக பூமிக்கு 32,000கி.மீ. நெருக்கமாக வரப்போகும் அபோஃபிஸ் சிறுகோள்

அபோஃபிஸ் சிறுகோள்: பூமிக்கு 32,000கி.மீ. நெருக்கமாக வரும்போது என்ன நடக்கும்? இதனால் ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், க.சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

அபோஃபிஸ் 99942. ‘பெருங்குழப்பத்தின் கடவுள் (God of Chaos)’ என்றழைக்கப்படும் இந்தச் சிறுகோள் இப்போது பேசுபொருளாகி வருகிறது.

இந்தச் சிறுகோள் வரும் 2029ஆம் ஆண்டில், பூமிக்கு மிக நெருக்கமாக, அதாவது சுமார் 32,000கி.மீ. தொலைவு வரைக்கும் அருகே வரும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பண்டைய எகிப்திய புராணங்களில் தீமை மற்றும் குழப்பத்தை விளைவிக்கக்கூடிய பேய்ப்பாம்புதான் அபோஃபிஸ். அதன் பெயரைக் கொண்ட இந்தச் சிறுகோளும் பூமியில் கடந்த ஆண்டுகளில் சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சுமார் 335 மீட்டர் அகலம் கொண்ட அபோஃபிஸ் சிறுகோள் பொதுவெளியில் பேசுபொருளாவது இது முதல்முறையல்ல. இது கண்டுபிடிக்கப்பட்ட 2004ஆம் ஆண்டு முதலே, பூமிக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய சிறுகோளாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பூமி மீது மோதக்கூடிய சிறுகோள்களில் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒன்றாக இது இருக்கும் என்று குறிப்பிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் இந்தச் சிறுகோளை தொடர்ச்சியாகக் கண்காணித்தவாறு உள்ளனர்.

ஆனால், சமீபத்திய தரவுகளின்படி, இதனால் தற்போதைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற முடிவுக்கு நாசா விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

நாசாவின் சமீபத்திய தரவுகள்படி, அபோஃபிஸ் 99942 எனப்படும் இந்தச் சிறுகோள், 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பூமிக்கு அருகில் துல்லியமாக 31,860கி.மீ. நெருக்கமாக வரப் போகிறது.

அபோஃபிஸ் மூலம் பூமிக்கு ஆபத்தா?

அபோஃபிஸ் சிறுகோள்: பூமிக்கு 32,000கி.மீ. நெருக்கமாக வரும்போது என்ன நடக்கும்? இதனால் ஆபத்தா?

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, கடந்த 2021ஆம் ஆண்டில், அபோஃபிஸ் சிறுகோளின் சுற்றுப்பாதை துல்லியமாகக் கண்டறியப்பட்டது.

இந்தச் சிறுகோள் பூமியை நெருங்கி வரும்போது, புவியின் கிழக்கு அரைக்கோளத்தில், தொலைநோக்கியின் உதவியின்றியே, அதை அனைவராலும் பார்க்க முடியும். இதன்மூலம், சூரிய குடும்பத்தின் ஆதிகாலச் சிறுகோள் ஒன்றை மிக நெருக்கமாகப் பார்க்கும் அரிய வாய்ப்பு வானியலாளர்களுக்குக் கிடைக்கும்.

இந்தச் சிறுகோள் மூலம் பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த மூத்த விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், “பூமியில் இருந்து சுமார் 32,000கி.மீ. தொலைவில் இதன் சுற்றுவட்டப்பாதை இருக்கும் என்பதால், பூமி மீது எந்தவித நேரடித் தாக்கமும் இருக்கப் போவதில்லை,” என்று கூறினார்.

இது முதன்முதலாக 2004இல் கண்டுபிடிக்கப்பட்டபோது, இது பூமி மீது மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டது. அதுகுறித்த அச்சுறுத்தலும் எழுந்தது.

ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டில், அபோஃபிஸின் சுற்றுப்பாதை துல்லியமாகக் கண்டறியப்பட்டது. அதோடு வானியலாளர்களின் அவதானிப்புகளை உள்ளடக்கிப் பகுப்பாய்ந்த பிறகு, அதனால் பூமிக்குக் குறைந்தபட்சம் அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற முடிவுக்கு நாசா விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

அபோஃபிஸ் சிறுகோள்: பூமிக்கு 32,000கி.மீ. நெருக்கமாக வரும்போது என்ன நடக்கும்? இதனால் ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதற்கு முன்பு அபோஃபிஸ் பூமிக்கு நெருக்கமாக வந்தபோது அதற்கும் பூமிக்கும் இடையே 1.7 கோடி கிலோமீட்டர் தொலைவு இருந்தது.

சமீபத்தில் 2029ஆம் ஆண்டில் அது பூமியை நெருங்கி வரும் என்று வானியலாளர்கள் கணித்தபோது, கூடவே அதனால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களும் விவாதப் பொருளாயின.

ஆனால் நாசா அவதானிப்புகளின்படி, அதன்மூலம் 2029ஆம் ஆண்டில் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

இதற்கு முன்பு, “2004, 2013 ஆகிய ஆண்டுகளில் பூமிக்குச் சற்று நெருக்கமாக அது வந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் இருந்த தூரத்தைவிட இது மிகவும் குறைவாக இருப்பதால்தான் அச்சம் எழுகிறது. இருப்பினும், அதன் தொலைவு குறித்த இப்போதைய கணிப்புகளின் துல்லியத்தன்மை, அந்த அச்சுறுத்தலைத் தேவையற்றது எனப் புறக்கணிக்க உதவியுள்ளதாக” கூறுகிறார் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்.

இதற்கு முன்பு அபோஃபிஸ் பூமிக்கு நெருக்கமாக வந்தபோது அதற்கும் பூமிக்கும் இடையே 1.7 கோடி கிலோமீட்டர் தொலைவு இருந்தது. ஆனால், இம்முறை புவி ஒத்திசைவு செயற்கைக்கோள்கள் இருக்கும் தூரத்தைவிட மிக நெருக்கமாக இந்தச் சிறுகோள் வரப் போகிறது.

அபோஃபிஸ் சிறுகோள்: பூமிக்கு 32,000கி.மீ. நெருக்கமாக வரும்போது என்ன நடக்கும்? இதனால் ஆபத்தா?

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, அபோஃபிஸ் சிறுகோள் 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று பூமிக்கு நெருக்கமாக வரவுள்ளது.

இந்நிலையில், அது பூமியை நெருங்கும்போது அந்தப் பகுதியில் இருக்கும் செயற்கைக்கோள்களின் இயக்கத்தை அது பாதிக்குமா என்று கேட்டபோது, “நாம் முன்கூட்டியே அபோஃபிஸின் பாதையைக் கணித்துவிட்டதால், அது பூமியை நெருங்கும் முன்பாகவே செயற்கைக் கோள்களை அந்தக் குறிப்பிட்ட பாதையில் இருந்து நகர்த்திவிட முடியும்,” என்று முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கினார்.

முந்தைய ஆய்வுகளில் அது 2036இல் மீண்டுமொரு முறை பூமியை நெருங்கி வரும். அப்போது அதனோடு தாக்கம் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக முன்னர் கூறப்பட்டது.

ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், அபோஃபிஸை அவதானித்தபோது, சூரியனைச் சுற்றியுள்ள அதன் சுற்றுவட்டப் பாதையின் மதிப்பீட்டைத் துல்லியமாகக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, 2036, 2068 ஆகிய அபாயங்களை முழு நம்பிக்கையுடன் விஞ்ஞானிகள் புறக்கணித்துள்ளனர்.

“அபோஃபிஸ் சிறுகோளால், 2068 மட்டுமில்லை, எங்கள் கணக்கீடுகளின்படி, குறைந்தபட்சம் அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு அது பூமி மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது,” என்று நாசா விஞ்ஞானி டேவிட் ஃபர்னோச்சியா கூறியுள்ளார்.

அபோஃபிஸ்-ஐ ஆய்வு செய்யப்போகும் நாசா விண்கலம்

அபோஃபிஸ் சிறுகோள்: பூமிக்கு 32,000கி.மீ. நெருக்கமாக வரும்போது என்ன நடக்கும்? இதனால் ஆபத்தா?

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, ஒசைரிஸ் அபெக்ஸ் விண்கலம் ஏப்ரல் 29, 2029 அன்று அபோஃபிஸ் சிறுகோளுக்கு நெருக்கமாக, 4,000கி.மீ. தொலைவில் பறந்து சென்று ஆய்வு செய்யும்.

அபோஃபிஸ் சிறுகோள் முதன்முதலாக ஜூன் 19, 2004 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை முதன்முதலாகக் கண்டுபிடித்த வானியலாளர்கள் ராய் டக்கர், டேவிட் தோலன், ஃபேப்ரிசியோ பெர்னார்டி ஆகியோரால், தொழில்நுட்பம் மற்றும் வானிலை சிக்கல்கள் காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே இந்தச் சிறுகோளை அவதானிக்க முடிந்தது.

பிறகு, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குழுவினர் அதே ஆண்டின் பிற்பகுதியில் இந்தச் சிறுகோளை மீண்டும் கண்டுபிடித்தனர்.

அப்போதிருந்து, ஆப்டிகல் மற்றும் ரேடார் தொலைநோக்கிகள் அபோஃபிஸ் சூரியனைச் சுற்றி வரும்போது, அதைக் கண்காணித்து வருகின்றன. அந்தச் சிறுகோளைத் தொடர்ந்து அவதானிப்பதன் மூலம், விஞ்ஞானிகள் அதன் எதிர்காலச் சுற்றுப்பாதையையும் கணித்துள்ளனர்.

மேலும், செப்டம்பர் 2023இல் பென்னு சிறுகோளின் மாதிரியைச் சேகரித்து முடித்த ஒசைரிஸ்-ரெக்ஸ் (OSIRIS-Rex) விண்கலத்தை, ஒசைரிஸ்-அபெக்ஸ் (OSIRIS-APEX) எனப் பெயர் மாற்றம் செய்து அபோஃபிஸை நோக்கி நாசா விஞ்ஞானிகள் திருப்பி அனுப்பினர்.

அபோஃபிஸ் சிறுகோள்: பூமிக்கு 32,000கி.மீ. நெருக்கமாக வரும்போது என்ன நடக்கும்? இதனால் ஆபத்தா?

பட மூலாதாரம், NASA

இந்தச் சிறுகோள் பூமிக்கு நெருக்கமாக 2029இல் வரும்போது, அந்த விண்கலம் அதை ஆய்வு செய்யும். ஏப்ரல் 29, 2029 அன்று அபோஃபிஸ் சிறுகோளுக்கு நெருக்கமாக, 4,000கி.மீ. தொலைவில் பறந்து சென்று ஆய்வு செய்யும். பிறகு ஜூன் மாதத்தில் அபோஃபிஸில் தரையிறங்கி, அதன் நிலப்பரப்பை வரைபடமாக்குவதோடு, சிறுகோளின் வேதிமக் கலவையைப் பகுப்பாய்வு செய்யும்.

ஒசைரிஸ் அபெக்ஸ் விண்கலம் அதை நெருங்கும்போது, விண்கலத்தில் உள்ள கேமராக்கள் சிறுகோளின் படங்களை எடுக்கும். அந்த நேரத்தில் பூமியிலுள்ள தொலைநோக்கிகள் அபோஃபிஸை கண்காணிக்கும். பூமிக்கு மிக நெருக்கமாக அது வரும்போது, சிறுகோளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஒசைரிஸ் அபெக்ஸ் விண்கலத்தால் துல்லியமாகக் கண்டறியப்படும்.

அதேவேளையில், பென்னு சிறுகோளில் அந்த விண்கலம் செய்த ஆய்வுகளை இதிலும் மேற்கொள்ளும். அதிலுள்ள இமேஜர்கள், அலைமாலை அளவிகள், லேசர் அல்டிமீட்டர் ஆகியவை சிறுகோளின் மேற்பரப்பை மிக நெருக்கமாகப் பகுப்பாய்வு செய்யும்.

மேலும், பென்னு சிறுகோளில் செய்ததைப் போலவே, அபோஃபிஸின் மேற்பரப்பில் இருந்து 16 ஆடி ஆழம் வரை துளையிட்டு, ஆழத்தில் இருக்கும் தூசு, பாறைகளைக் கிளறி, சிறுகோளின் தரைப்பரப்புக்குக் கீழே என்ன பொருட்கள் இருக்கின்றன என்பதைக் கண்டறியும். ஆனால், பென்னுவில் செய்ததைப் போல் இந்த விண்கலம், அபோஃபிஸில் இருந்து மாதிரிகளைச் சேகரிக்காது.

அபோஃபிஸ் சிறுகோளை ஆய்வு செய்வதால் என்ன பயன்?

அபோஃபிஸ் சிறுகோள்: பூமிக்கு 32,000கி.மீ. நெருக்கமாக வரும்போது என்ன நடக்கும்? இதனால் ஆபத்தா?

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, பென்னு சிறுகோளில் மாதிரிகளைச் சேகரித்து வந்த ஒசைரிஸ் ரெக்ஸ், அடுத்ததாக ஒசைரிஸ் அபெக்ஸ் என்ற பெயரில் அபோஃபிஸை ஆய்வு செய்யப் போகிறது.

அடிப்படையில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பாறைகளின் தன்மையைப் புரிந்துகொள்ள அபோஃபிஸ் மீது நடத்தப்படும் ஆய்வுகள் உதவும் என்கிறார் முனைவர்.வெங்கடேஸ்வரன்.

அவரது கூற்றுப்படி, விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் பாறைகள், சிறுகோள்களின் மீதும் மோதுகின்றன. அப்படிப்பட்ட மோதல்கள் அபோஃபிஸ் மீதும் நிகழ்ந்திருக்கும். அப்போது அதன் தரைப்பரப்பில், அந்த விண்கற்களின் துகள்களும் விழுந்திருக்கும்.

ஆகவே, “இந்தச் சிறுகோளின் மேற்பரப்ப்பை ஆய்வு செய்வதன் மூலம் நம்மால் விண்கற்களை இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.”

அதோடு, சூரிய குடும்பத்தின் ஆதிகால மிச்சங்களில் ஒன்றாகச் சிறுகோள்கள் இருப்பதால், மொத்த சூரிய குடும்பத்திற்குமான அடிப்படை இயக்கவியலைப் புரிந்துகொள்ள இதிலிருந்து கிடைக்கும் தரவுகள் நமக்கு உதவக்கூடும் என்றும் விளக்குகிறார் அவர்.

பூமி உருவான காலகட்டத்தில் இருந்த கற்கள் அதில் இருப்பதால், ஆதிகாலம் குறித்துப் புரிந்துகொள்வதில் நமக்கு இது உதவலாம் என்கிறார் அவர்.

அபோஃபிஸ் சிறுகோள்: பூமிக்கு 32,000கி.மீ. நெருக்கமாக வரும்போது என்ன நடக்கும்? இதனால் ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

இப்படியாக தோற்றத்தின் ஆதியைப் புரிந்துகொள்ளும் அதேவேளையில், எதிர்காலத்திற்குப் பயனளிக்கும் அம்சங்களும் இதை ஆய்வு செய்வதன் மூலம் கிடைக்கும் என்கிறார் முனைவர் வெங்கடேஸ்வரன்.

“அபோஃபிஸ் போன்ற சிறுகோள்களை விரிவாக ஆய்வு செய்து புரிந்துகொள்வதன் மூலம், எதிர்காலத்தில் ஒருவேளை ஏதேனும் சிறுகோள் பூமியைத் தாக்கும் அளவுக்கு நெருக்கமாக வந்தால், அதற்கு எப்படி எதிர்செயலாற்றுவது என்ற திட்டத்தைத் தீட்டுவதற்கு இந்த ஆய்வு உதவும்,” என்கிறார் அவர்.

ஆதிகால சூரிய குடும்பத்தின் எச்சம்

அனைத்து சிறுகோள்களையும் போலவே, அபோஃபிஸும் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சூரிய குடும்பத்தின் ஆரம்பக்கால மிச்சம்தான். இந்தச் சிறுகோள், செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே உருவானது.

பிறகு, பல லட்சக்கணக்கான ஆண்டுகளில், அதன் சுற்றுவட்டப்பாதை, வியாழன் போன்ற பெரும் கோள்களின் ஈர்ப்புவிசையால் மாற்றியமைக்கப்பட்டது. இதனால், அது தற்போது சூரியனை பூமிக்கு அருகிலிருந்து சுற்றி வருகிறது.

அபோஃபிஸின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான உயர்திறன் மிக்கத் தெளிவான புகைப்படங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

தற்போது அது பூமிக்கு அருகில் வரும்போது, அதை ஆய்வு செய்யப்போகும் ஒசைரிஸ்-அபெக்ஸ் விண்கலத்தின் மூலம் அதுகுறித்த விரிவான புரிதலை ஏற்படுத்தக்கூடிய தரவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)