பெண் சிசுக்கொலை செய்வதை நிறுத்திவிட்டு, அவர்களை காப்பாற்றத் தொடங்கிய மருத்துவச்சிகள்

- எழுதியவர், அமிதாப் பராசர்
- பதவி, பிபிசி ஐ புலனாய்வுகள்
மருத்துவச்சியான சீரோ தேவி, மோனிகா தாட்டேவை கட்டிப்பிடித்து அழுகிறார். 20களில் இருக்கும் மோனிகா, தான் பிறந்த இடத்திற்குத் திரும்பியிருக்கிறார். இந்த இந்திய நகரத்தில்தான் சீரோ நூற்றுக்கணக்கான குழந்தைகளை பிரசவிக்க உதவியிருக்கிறார்.
சீரோ அழுததற்குக் காரணம், பிரசவிக்க தான் உதவிய குழந்தையை மீண்டும் சந்தித்தது அல்ல. மோனிகா பிறப்பதற்கு சில காலத்திற்கு முன்புவரை, புதிதாகப் பிறந்த பெண் சிசுக்களைக் கொல்ல நிர்பந்திக்கப்படும் நூற்றுக்கணக்கான இந்திய மருத்துவச்சிகளில் சீரோவும் ஒருவராகத்தான் இருந்தார்.
ஆவணங்களின்படி பார்த்தால், இவர்களால் காப்பாற்றப்பட்ட ஒரு பெண் குழந்தைதான் மோனிகா.
சீரோவையும் இன்னும் நான்கு மருத்துவச்சிகளையும் பேட்டியெடுக்க 1996ல் இந்தியாவின் ஏழ்மையான பிஹார் மாநிலத்திற்குச் சென்றேன். அப்போதிலிருந்து நான் சீரோவின் கதையை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
கத்தியார் மாவட்டத்தில், பெற்றோரின் வற்புறுத்தலில் பெண் சிசுக்கள் கொல்லப்படுவதன் பின்னணியில் இவர்கள்தான் இருக்கிறார்கள் என ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் கண்டறிந்தது. ரசாயனங்களைக் கொடுத்தோ, கழுத்தை நெரித்தோ அந்தக் குழந்தைகளை இவர்கள் கொன்றனர்.
நான் பேட்டியெடுத்த மருத்துவச்சிகளிலேயே மூத்தவர், ஹகியா தேவி. அப்போதுவரை 12 அல்லது 13 சிசுக்களைக் கொன்றிருப்பதாக அவர் என்னிடம் சொன்னார்.
மற்றொரு மருத்துவச்சியான தர்மி தேவி, கூடுதலான குழந்தைகளைக் கொன்றிருந்தார். குறைந்தது 15 - 20 குழந்தைகளாவது இருக்கும்.
புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படும் முறையை வைத்துப் பார்த்தால், இவர்கள் எத்தனை சிசுக்களைக் கொன்றிருக்கக்கூடும் என்பதை சரியாகச் சொல்வது கடினம்.
இந்த மருத்துவச்சிகளிடமும் வேறு 30 மருத்துவச்சிகளிடமும் எடுக்கப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் 1995ல் வெளியிட்ட அறிக்கையில் சில புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த அறிக்கையில் தரப்பட்ட விவரங்கள் சரியானவை என்றால், ஒரு மாவட்டத்தில் மட்டும் 35 மருத்துவச்சிகளால் 1,000க்கும் மேற்பட்ட பெண் சிசுக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையின்படி அந்தத் தருணத்தில் பிஹாரில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவச்சிகள் இருந்தனர்.
கட்டளைகளை மறுப்பது என்பது ஒரு மருத்துவச்சியால் இயலாத காரியம் என்கிறார் ஹகியா.
“குடும்பத்தினர் அறையைப் பூட்டிவிட்டு, எங்கள் பின்னாலேயே குச்சிகளோடு நிற்பார்கள்" என்கிறார் ஹகியா தேவி.
“எங்களுக்கு ஏற்கனவே நான்கைந்து மகள்கள் இருக்கிறார்கள். இது எங்கள் செல்வத்தையெல்லாம் அழித்துவிடும். எங்கள் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்த பிறகு, நாங்கள் பட்டினி கிடந்துதான் சாக வேண்டும். இப்போது இன்னொரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. அவளைக் கொன்றுவிடு.. என்பார்கள்"
“நாங்கள் யாரிடம் புகார் சொல்ல முடியும்? நாங்கள் பயந்து போயிருந்தோம். நாங்கள் காவல்துறைக்குப் போனால், எங்களுக்கு பிரச்னை வந்திருக்கும். நாங்கள் வெளியில் சொன்னால், எங்களை அச்சுறுத்துவார்கள்” என்று என்னிடம் சொன்னார் அவர்.

கிராமப்புற இந்தியாவில் மருத்துவச்சியின் பங்கு என்பது, பாரம்பரியம், ஏழ்மை மற்றும் ஜாதியியின் கடுமையான நிதர்சனங்களால் ஆனது. நான் நேர்காணல் செய்த மருத்துவச்சிகள் இந்தியாவின் ஜாதிக் கட்டமைப்பில் கீழே இருக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்கள். மருத்துவச்சித் தொழில் அவர்களுடைய பாட்டிகளாலும் தாய்மார்களாலும் அவர்களுக்கு வந்து சேர்ந்தது. சக்திவாய்ந்த, உயர் ஜாதிக் குடும்பங்களின் கட்டளைகளை மறுப்பதை நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு உலகத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.
ஒரு சிசுவைக் கொல்வதற்காக சிறிய அளவு பணம் கொடுப்பதாகவோ சேலை அல்லது சிறிதளவு தானியம் கொடுப்பதாகவோ மருத்துவச்சிக்கு வாக்குறுதி அளிக்கப்படும். சில சமயங்களில் அதுவும் கிடைக்காது. ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். பெண் குழந்தை பிறந்தால் அதில் பாதிதான் கிடைக்கும்.
இந்தியாவின் பாரம்பரியத்தில் ஊறியுள்ள வரதட்சணை பழக்கமே இந்த ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் என்றார்கள் அவர்கள். வரதட்சணை என்பது 1961-இல் சட்டவிரோதமாக்கப்பட்டாலும்கூட, 90களிலும் இந்த வழக்கம் தீவிரமாகவே இருந்தது. இப்போதும்கூட தொடர்கிறது.
வரதட்சணை என்பது பணம், நகை, பாத்திரங்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏழையோ, பணக்காரரோ - பெரும்பாலான குடும்பங்களில் இது திருமணத்திற்கான நிபந்தனையாக இருக்கும். இதுதான் மகன் பிறப்பதைக் கொண்டாட்டமாகவும் மகள் பிறப்பதை நிதிச் சுமையாகவும் மாற்றுகிறது. பலருக்கு இன்னமும் அப்படித்தான் இருக்கிறது.
நான் நேர்காணல் செய்தவர்களிலேயே இப்போதும் உயிரோடு இருப்பவரான சீரோ தேவி, ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் இடையே அந்தஸ்தில் உள்ள ஏற்றத்தாழ்வை விளக்குவதற்கு ஒரு தெளிவான சித்திரத்தை அளிக்கிறார்.

“ஒரு மகன் என்பது எப்போதுமே மேலேதான். மகள் என்பது கீழே. ஒரு மகன் உணவளிக்கிறாரா, தாய், தந்தையரைப் பார்த்துக்கொள்கிறாரா என்பது ஒருபுறமிருந்தாலும், அவர்களுக்கு மகன்தான் தேவை.”
மகன்களை விரும்பும் இந்தப் போக்கு இந்தியாவின் தேசிய அளவிலான புள்ளிவிவரங்களிலேயே புலப்படுகிறது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,000 ஆண்களுக்கு 943 பெண்களே இருந்தனர். ஆனால், 1990-களைவிட நிலைமை மேம்பட்டிருக்கிறது. 1991 கணக்கெடுப்பின்போது 1,000 ஆண்களுக்கு 926 பெண்கள்தான் இருந்தார்கள். 2021-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் நிலைமை இன்னும் மேம்பட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பணியாற்றிவருபவர்கள், அந்த எண்கள் நம்பத்தக்கவையல்ல என்கிறார்கள்.

கடந்த 1996-இல் நான் மருத்துவச்சிகளின் வாக்குமூலத்தைப் படமாக எடுத்து முடித்தபோது ஒரு சிறிய, அமைதியான மாற்றம் உருவாக ஆரம்பித்திருந்தது. இந்த ஆணைகளை முன்பு நிறைவேற்றிய மருத்துவச்சிகள், இப்போது எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்திருந்தார்கள். இந்த மாற்றத்தைத் தூண்டியவர் அனிலா குமாரி. இந்த சிசுக் கொலைகளின் அடிப்படையான காரணத்தை நீக்கப் போராடிவந்த அனிலா குமாரி, கத்தியார் மாவட்டதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெண்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவந்தார்.
அனிலாவின் அணுகுமுறை எளிமையானது. "உங்கள் சொந்த மகளுக்கு இதை நீங்கள் செய்வீர்களா?" என்று மருத்துவச்சிகளிடம் கேட்பார்.
அவருடைய கேள்வி, பகுத்தறிவையும் எதிர்ப்பையும் ஊட்டியது. சமூகக் குழுக்களின் மூலமாக மருத்துவச்சிகளுக்கு சில நிதியுதவிகள் கிடைத்தன. மெல்லமெல்ல வன்முறையின் சுழற்சியில் ஒரு தடை ஏற்பட்டது.
2007-இல் என்னிடம் பேசிய சீரோ, இந்த மாற்றத்தைப் பற்றி விளக்கினார்.
"இப்போது யார் என்னிடம் சிசுவைக் கொல்லச் சொன்னாலும், 'இங்கே பாருங்கள், குழந்தையை என்னிடம் கொடுங்கள். நான் அனிலா மேடத்திடம் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன்' என்று சொல்வேன்’"
தங்களுடைய சிசுக்களைக் கொல்ல விரும்பிய அல்லது தூக்கியெறிய விரும்பிய குடும்பங்களிடமிருந்து இந்த மருத்துவச்சிகள் 1995க்கும் 1996க்கும் இடையில் குறைந்தது ஐந்து சிசுக்களையாவது காப்பாற்றியிருக்கின்றனர்.
இதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்ற நான்கு குழந்தைகளை பிஹாரின் தலைநகர் பாட்னாவில் இயங்கிவந்த, தத்தெடுப்பிற்கு உதவக்கூடிய ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் அனுப்பிவைத்தார் அனிலா.
இந்தக் கதை இங்கேயே முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், காப்பாற்றப்பட்டு, தத்தெடுக்கப்பட்ட இந்த குழந்தைகளின் வாழ்க்கை எங்கே சென்றது என்பதை நான் அறிய விரும்பினேன்.

அனிலாவின் ஆவணங்கள் மிக துல்லியமாக இருந்தன. ஆனால், தத்துக் கொடுக்கப்பட்டதற்குப் பிந்தைய தகவல்கள் ஏதும் அவரிடம் இல்லை.
பிறகு நான், மேதா சேகர் என்ற பெண்ணைத் தொடர்புகொண்டேன். அவர் 1990களில் மருத்துவச்சிகள் அனிலாவின் என்.ஜி.ஓவுக்கு வர ஆரம்பித்து சிசுக்கள் காப்பாற்றப்பட ஆரம்பித்த தருணத்தில், பிஹாரில் சிசுக் கொலை குறித்து ஆய்வுசெய்துவந்தார். குறிப்பிடத்தக்கவிதமாக, காப்பாற்றப்பட்ட குழந்தைகளில் ஒன்று என நம்பப்படும் இளம் பெண்ணுடன் மேதா தொடர்பில் இருந்தார்.
மருத்துவச்சிகளால் காப்பாற்றப்பட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் பிஹாரில் ஓடும் கோசி ஆற்றின் பெயரை, அந்தக் குழந்தைகளது பெயரின் முன்னொட்டாக சேர்த்திருந்தார் அவர். தத்தெடுப்பதற்கு முன்பாக 'கோசி' என்பது மோனிகாவின் பெயரின் முன்னொட்டாக இருந்ததை மேதா நினைவுகூர்ந்தார்.
தத்துக்கொடுத்த நிறுவனம், அந்த ஆவணங்களைப் பார்க்க எங்களை அனுமதிக்காது என்பதால், எங்களால் அதனை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அவரது பாட்னா பின்புலம், அவருடைய தோராயமான பிறந்த தேதி, 'கோசி' என்ற முன்னொட்டு ஆகியவை எல்லாம் ஒரு முடிவுக்கு எங்களை இட்டுச்சென்றன: எப்படிப் பார்த்தாலும், அனிலாவாலும் மருத்துவச்சிகளாலும் மீட்கப்பட்ட ஐந்து குழந்தைகளில் மோனிகாவும் ஒருவர்.
புனேவிலிருந்து சுமார் 2,000 கி.மீ. (1,242 மைல்கள்) தூரத்தில் இருந்த அவரது பெற்றோரின் வீட்டில் மோனிகாவை நான் சந்திக்கச் சென்றபோது அவரது குழந்தைப் பருவத்தில் சௌகர்யமாகவும் வசதியாகவும் இருந்ததைப்போலவே பேசினார்.

“நல்ல குடும்பம் கிடைத்ததில், நான் அதிர்ஷ்டக்காரி. இந்த வாழ்க்கைதான் இயல்பான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான என் வரையறை. அதை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்," என்றார் அவர்.
தான் தத்தெடுக்கப்பட்டவர் என்பதும் பிஹாரைச் சேர்ந்தவர் என்பதும் மோனிகாவுக்குத் தெரியும். அவர் தத்தெடுக்கப்பட்டதற்குப் பின்னணியில் இருந்த சூழல் குறித்து எங்களால் கூடுதல் தகவல்களை அளிக்க முடிந்தது.
அனிலாவையும் சீரோவையும் சந்திக்க இந்த ஆண்டின் துவக்கத்தில் மோனிகா பிஹாருக்கு வந்தார். அனிலா மற்றும் மருத்துவச்சிகளைப் போன்றவர்களின் பல ஆண்டுகால கடுமையான உழைப்பின் உச்சகட்டமாக மோனிகா தன்னைப் பார்த்தார்.
“தேர்வை சிறப்பாக எழுத பெரிய அளவில் முயற்சிகளைச் செய்வார்கள். அதைப்போல நான் உணர்ந்தேன். அவர்கள் கடுமையாக பணியாற்றினார்கள். ஆகவே அதன் பலனைப் பார்க்க அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். ஆகவே, நானும் (அவர்களை) பார்க்க விரும்பினேன்."

மோனிகாவைச் சந்தித்தபோது மகிழ்ச்சியினால் அனிலா கண்ணீர்விட்டு அழுதார். சீரோ சற்று வேறு மாதிரி நடந்துகொண்டார். அவர் தேம்பித்தேம்பி அழுததோடு, மோனிகாவை நெருக்கமாகப் பிடித்துக் கொண்டு, அவரது முடியைக் கோதினார்.
“உன் உயிரைக் காப்பாற்ற நான் உன்னை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொண்டு சென்றேன். என் ஆன்மா இப்போது அமைதியாக இருக்கிறது” என்று மோனிகாவிடம் சொன்னார் அவர்.
சில நாட்களுக்குப் பிறகு, சீரோ நடந்துகொண்டவிதத்திற்கான காரணத்தை வலியுறுத்திக்கேட்க நினைத்தேன். ஆனால், மேலும் மேலும் கேள்விகள் கேட்கப்படுவதை அவர் விரும்பவில்லை.
“கடந்த காலத்தில் நடந்தது, நடந்துவிட்டது” என்றார் அவர்.
ஆனால், பெண் குழந்தைகளுக்கு எதிராக சிலரிடமிருக்கும் உணர்வு இன்னும் மாறவில்லை.
தேசத்தின் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற இந்திய அரசு போராடினாலும் தற்போது ஆண் - பெண் விகிதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு கருக்கலைப்புதான் பெரிதும் காரணமாக அமைகிறது. இருந்தாலும் சிசுக் கொலைகள் இன்னும் பதிவாகின்றன.
1994ல் குழந்தைகளின் பாலினத்தைத் தேர்வுசெய்து கருக்கலைப்பு செய்வது சட்டரீதியாக தடைசெய்யப்பட்டது. இருந்தாலும், பாலினத்தைத் தேர்வுசெய்து நடக்கும் கருக்கலைப்புகள் சட்டவிரோதமாக நடப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வட இந்தியாவின் சில பகுதிகளில் குழந்தை பிறப்பின்போது 'சோஹர்' என்ற பாரம்பரிய பாடல் பாடப்படுகிறது. ஆண் குழந்தையின் பிறப்பிற்காக மகிழ்வதாகவே அந்தப் பாடல் இருக்கும். 2024லும் பெண் குழந்தையின் பிறப்பிற்காக மகிழ்ச்சியடைவதைப் போலவும் பாடல்களை மாற்றிப் பாடும்படி உள்ளூர் பாடர்களிடம் வலியுறுத்த வேண்டியிருக்கிறது.
நாங்கள் எங்கள் ஆவணப் படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோது, கத்தியாரில் பிறந்து சில மணி நேரமே ஆன இரண்டு பெண் குழந்தைகள் தூக்கியெறியப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குழந்தை புதரிலும் ஒரு குழந்தை சாலையோரமாகவும் கிடந்தது. இதில் ஒரு குழந்தை பிறகு இறந்துவிட்டது. மற்றொரு குழந்தை தத்தெடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மோனிகா பிஹாரைவிட்டுப் புறப்படும் முன்பாக, கத்தியாரில் உள்ள சிறப்பு தத்தெடுப்பு மையத்திற்குச் சென்று அந்தக் குழந்தையை பார்த்தார்.
பெண் சிசுக்கள் கொல்லப்படுவது குறைந்திருக்கலாம். ஆனால், பெண் குழந்தைகளை கைவிட்டுச் செல்வது தொடர்கிறது என்ற நிதர்சனம் தன்னை பெரும் தொந்தரவுக்குள்ளாக்குவதாகச் சொன்னார்.
“இது ஒரு சுழற்சி. சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் அந்த இடத்தில் இருந்தேன். இப்போது என்னைப் போலவே இன்னொரு பெண் இருக்கிறாள்"
ஆனால், மகிழ்ச்சிகரமான சில ஒற்றுமைகளும் இருந்தன.
அந்தக் குழந்தை வடகிழக்கு மாகாணமான அசாமைச் சேர்ந்த ஒரு தம்பதியால் தத்தெடுக்கப்பட்டது. அவர்கள் அந்தக் குழந்தைக்கு எதா என பெயரிட்டனர். எதா என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தம்.

"நாங்கள் அவளது புகைப்படத்தைப் பார்த்தோம். ஒரு முறை கைவிடப்பட்ட குழந்தை, இன்னொரு முறை கைவிடப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்" என்கிறார் அவளைத் தத்தெடுத்த தந்தையான கௌரவ். அவர் இந்திய விமானப் படையின் அதிகாரி.
சில வாரங்களுக்கு ஒரு முறை, அவள் செய்யும் சேட்டைகளை படம் பிடித்து கௌரவ் எனக்கு அனுப்புகிறார். நான் சில நேரம் அவற்றை மோனிகாவுக்கு அனுப்புவேன்.
திரும்பிப் பார்க்கும்போது, இந்த விவகாரத்திற்காக செலவிட்ட 30 ஆண்டுகள் என்பது, வெறும் கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்ல. அது அசௌகர்யமான உண்மைகளை எதிர்கொள்வது. கடந்த காலத்தில் நடந்தது, நடந்ததுதான். ஆனால், அதனை மாற்றியமைக்க முடியும்.
அந்த மாற்றத்தில்தான் நம்பிக்கை இருக்கிறது.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)








