கடலுக்கடியில் கரையும் டைட்டானிக் கப்பல் - 52,000 டன் இரும்பை இந்த நுண்ணுயிர்கள் உண்பது எப்படி?

டைட்டானிக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீருக்கடியில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகள்
    • எழுதியவர், ரிச்சர்ட் கிரே
    • பதவி, பிபிசி ஃப்யூச்சர்

ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பல் 112 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்கடலின் இருள் படர்ந்த பகுதிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. 883 அடி (269 மீ.,) நீளம் கொண்ட டைட்டானிக் கப்பல், 1912-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு குளிர்ந்த இரவில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. அதன் பெருமளவிலான பாகங்கள், கடல் மட்டத்தில் இருந்து 12,500 அடிக்கு (3.8 கிமீ) கீழே சேறும் சகதியும் நிறைந்த இடத்தில் குவிந்துள்ளன.

டைட்டானிக் கப்பலில் இருந்த 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இறந்தனர்.

ஆழ்கடலில் இருக்கும் அதன் பாகங்கள், கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து வருகின்றன. அவ்வப்போது ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல்கள் அந்தப் பகுதியில் பயணிக்கும். கப்பலின் இடிபாடுகளில் இருக்கும் சிறிய தொல்பொருட்களை மேற்பரப்பிற்கு எடுத்து வரும் மீட்புப் பணிகளும் எப்போதாவது மேற்கொள்ளப்படும். இவற்றைத் தவிர உடைந்த டைட்டானிக் கப்பலுக்கு வேறு எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை.

டைட்டானிக் கப்பலின் இடிபாடுகள் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரைக்குத் தென்கிழக்கே கிட்டத்தட்ட 400 மைல் (640 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் கிடக்கின்றன. அங்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டன. அவை டைட்டானிக் கப்பலின் பாகங்கள் சிதைந்து வருவதை வெளிப்படுத்தின.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1985-ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதன் கூர்மையான முன் பகுதி மற்றும் அதன் தனித்துவமான ரெயிலிங் அமைப்பு அற்புதமான சின்னங்களாக மாறிவிட்டன. 2022-ஆம் ஆண்டில் வெளியான புகைப்படங்கள், அக்கப்பலின் முன்புறத்தில் இருக்கும் சிறப்பு வாய்ந்த ரெயிலிங் அமைப்பு சிதைந்து கொண்டிருப்பதைக் காட்டின.

2024-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, முன் பகுதியின் குறிப்பிடத்தக்க பகுதி சேதமடைந்து விழுந்துவிட்டதை காட்டியது.

கடலின் ஆழத்தில் நிலவும் தீவிரமான சூழல் டைட்டானிக் கப்பலில் எஞ்சியிருக்கும் பாகங்களை எவ்வாறு சிதைக்கிறது என்பதை, சமீபத்திய ஆய்வுப்படம் பிரதிபலிக்கிறது.

கடல் நீரின் அதீத அழுத்தம், கடலின் அடிப்பகுதியில் உள்ள நீரோட்டங்கள் மற்றும் இரும்பை சிதைக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவை மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பகுதிகளைத் தகர்க்கின்றன.

இந்தச் சிதைவின் போது, டைட்டானிக் கப்பலின் பாகங்கள் அவற்றைச் சுற்றியுள்ள கடலின் நிலப்பரப்பில் ஆச்சரியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

டைட்டானிக் எதிர்கொள்ளும் அழுத்தம்

டைட்டானிக் விபத்துக்குள்ளாகி மூழ்கிய போது, போவ் மற்றும் ஸ்டெர்ன் (bow and the stern) என இரண்டு பாகங்களாக உடைந்தது. இவை அந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 2,000 அடி (600 மீ.) தொலைவிற்கு சென்றன. கடினமான ’stern’ பாகம் நேரே கீழே ஆழ் கடலுக்குள் மூழ்கியது, ‘bow’ படிப்படியாக மூழ்கியது. ஸ்டெர்ன் பாகம் தொடங்கி போவ் வரை இடிபாடுகள் கடலுக்கடியில் சிதறிக் கிடக்கின்றன.

பெரும்பாலான இடிபாடுகள் ஸ்டெர்ன் பகுதியைச் சுற்றிக் குவியலாகக் காணப்படுகின்றன. ஸ்டெர்ன் என்பது இரும்புக் கம்பிகளின் சிக்கலான அமைப்பை கொண்டிருக்கும். அதே சமயம் ‘bow’ பாகம் பெரும்பாலும் அப்படியே உள்ளது. டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதிய போது, முன்புறமான போவ் பகுதிக்குள் 43,000 டன் அளவிலான தண்ணீர் புகுந்தது. அந்த பகுதி பெரியளவில் சேதமடையவில்லை.

கப்பலின் பின்பகுதி (ஸ்டெர்ன்) உடைந்த போது அதன் பாகங்களில் காற்று நிறைந்திருந்தது. இந்தக் காற்றுப் பைகளைச் (air pockets) சுற்றியுள்ள அமைப்பு, கடலின் அடிப்பகுதியை நோக்கிச் சுழலும் போது ஒரு வெடிப்பை ஏற்படுத்தியது. பின்னர், நீரின் அழுத்தம் காரணமாகக் கப்பலில் இருந்த உலோகம், சிற்பங்கள், ஷாம்பெயின் பாட்டில்கள் மற்றும் பயணிகளின் உடமைகள் சிதறடிக்கப்பட்டன. எனவே ஸ்டெர்ன் பாகம், கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.

கடலடி நிலப்பரப்பில், டைட்டானிக்கின் பாகங்கள் மேற்பரப்பைக் காட்டிலும் 390 மடங்கு அதிக அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. டைட்டானிக் கப்பலில் ஏர் பாக்கெட்டுகள் இல்லாததால் இதற்கு மேல் சிதைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.

ஆனால், டைட்டானிக் கப்பலின் அதிக எடை அதன் அழிவுக்கு வழிவகுத்து வருகிறது. 52,000 டன் இரும்பு, ஆழ்கடலில் உள்ளது. இந்த அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டு அது கப்பலைச் சேதப்படுத்துகிறது.

அடுத்தடுத்து நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கப்பலின் மேலோட்டத்தின் இரும்புத் தகடுகளில் பெரிய விரிசல்கள் மற்றும் பிளவுகள் தோன்றியிருப்பது தெரிய வந்துள்ளது. கப்பலின் தளங்கள் உள்நோக்கிச் சரிந்து வருகின்றன.

“டைட்டானிக் சிதைவுகளின் நிழற்படம் ஆண்டுக்கு ஆண்டு படிப்படியாக மாற்றங்களை பதிவு செய்கிறது,” என்று ஆழ்கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜெர்ஹார்ட் சீஃபர்ட் கூறுகிறார். அவர் 2022-ஆம் ஆண்டில் ஆழ்கடல் மேப்பிங் நிறுவனமான மெகல்லனுடன் இணைந்து டைட்டானிக் பாகங்களின் உயர் தெளிவுத்திறன் படங்களை பதிவு செய்யும் பயணத்தை வழிநடத்தினார்.

சிதைவின் விளிம்பில் இருக்கும் டைட்டானிக் : பாக்டீரியாக்களை வளர்த்தெடுப்பது எப்படி?

பட மூலாதாரம், Charles Pellegrino

படக்குறிப்பு, நீருக்கடியில் டைட்டானிக் கப்பல்

"2022-இல் நான் மெகல்லனுடன் ஆய்வு மேற்கொண்ட போது கப்பலின் கூர்மையான முன்புறம் அப்படியே இருந்தது. ஆனால் தற்போது ரெயிலிங் அமைப்புகள் சிதைந்துவிட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு கேப்டனின் குளியலறையில் மேற்கூரை இருந்தது, ஆனால் இம்முறை ஆய்வில் அந்த கூரை சரிந்திருப்பதை கவனித்தோம். டைட்டானிக் கப்பலின் பாகங்கள் சிதைந்து வருவதற்கு இதுவே உதாரணம்,” என்று அவர் கூறுகிறார்.

இரும்புத் தகடுகள், விட்டங்கள் மற்றும் பிற சுமை தாங்கும் அமைப்புகள் தளர்ந்து வருவதால் துருப்பிடித்து, கப்பலின் கட்டமைப்பை படிப்படியாக பலவீனப்படுத்துகின்றன என்று சீஃபர்ட் விளக்கினார்.

பாக்டீரியாவுக்கு உணவாகும் டைட்டானிக்

பொதுவாக, இரும்பு அல்லது ஸ்டீல் கட்டமைப்புகளைப் போலவே, டைட்டானிக் கட்டுமானமும் துருப்பிடிக்கிறது. நிலத்தில் துருப்பிடிக்கும் செயல்முறையில் ஆக்ஸிஜன் மற்றும் நீர், அயர்ன் ஆக்சைடை (iron oxide) உற்பத்தி செய்ய ஒரு ரசாயன எதிர்வினையைத் தூண்டும். ஆனால் 2.4 மைல் (3.8 கிமீ) கடல்நீரின் கீழ் இருக்கும் டைட்டானிக் ஸ்டீல் அமைப்பு இதில் இருந்து வேறுப்பட்டது.

டைட்டானிக் கப்பலில் பாக்டீரியாக்களால் அரிப்பு ஏற்படுகிறது.

கப்பலின் இடிபாடுகளை சுற்றி ஒரு ‘உயிரிப் படலம்’ (biofilm) உருவாகியுள்ளது. பாக்டீரியா, கடல் பூஞ்சை, மற்றும் பிற நுண்ணுயிரிகளின் உயிருள்ள போர்வை இது. இந்த நுண்ணுயிரிகள் டைட்டானிக் பாகங்களை உண்டு வருகின்றன.

ஆரம்பத்தில் நுண்ணுயிரிகள் கப்பலில் இருந்து கரிமப் பொருட்களான தலையணைகள், மெத்தைகள், மற்றும் மரச்சாமான்களை உட்கொண்டன.

காலப்போக்கில், மற்ற தீவிர நுண்ணுயிரிகள் இடிபாடுகளை சூழ்ந்துவிட்டன. இவை அட்லாண்டிக் பெருங்கடலின் நடுப்பகுதியில் இருந்து வந்திருக்கலாம்.

கப்பலில் உள்ள இரும்பை ஆக்சிஜனேற்றம் செய்யும் பாக்டீரியாக்கள், அமிலத்தை உற்பத்தி செய்யும் மற்ற நுண்ணுயிரிகளுடன் சேர்ந்து உலோகப் பரப்புகளை வேட்டையாடுகின்றன. இவை உற்பத்தி செய்யும் துருவை உட்கொள்ளும் மற்ற நுண்ணுயிரிகளும் சிதைவில் செழித்து வளர்வது கண்டறியப்பட்டுள்ளது.

இடிபாடுகளை ஆய்வு செய்தவர்கள், அங்கிருந்த பொருட்களில் ‘ரஸ்டில்ஸ்’ மூடியிருப்பதை கவனித்தனர். இவை ஆக்ஸிஜனேற்றப்பட்ட உலோகப் பொருட்களில் காணப்பட்ட ‘தொங்கும் பனிக்கட்டி’ போன்ற வடிவங்கள்.

இந்த வடிவமைப்புகளுக்குள் இருப்பது நுண்ணுயிரிகளின் தொகுப்பு.

சிதைவின் விளிம்பில் இருக்கும் டைட்டானிக் : பாக்டீரியாக்களை வளர்த்தெடுப்பது எப்படி?

பட மூலாதாரம், Anthony El-Khouri

படக்குறிப்பு, கப்பலின் இடிபாடுகள் சுற்றி ஒரு 'உயிரிப் படலம்’ (biofilm) உருவாகியுள்ளது

1991-ஆம் ஆண்டு அகாடமிக் எம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ் (Akademic Mstislav Keldysh) தலைமையிலான ஆய்வுப் பயணத்தின் போது, விஞ்ஞானிகள் இந்த பனிக்கட்டி அமைப்பில் ஒன்றை உடைத்து, சீல் செய்யப்பட்ட கொள்கலனில் பாதுகாப்பாக மேற்பரப்புக்கு கொண்டு வந்தனர்.

அந்த அமைப்பிற்குள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நுண்ணுயிரிகளில் ஒரு வித்தியாசமான பாக்டீரியா இருந்தது. டைட்டானிக் சிதைவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த பாக்டீரியா அறிவியலுக்கு முற்றிலும் புதியது. அதற்கு ‘ஹாலோமோனாஸ் டைட்டானிகே’ என்று பெயரிடப்பட்டது. அது இரும்பை உடைக்கவல்ல மரபணுக்களைக் கொண்டிருந்தது.

டைட்டானிக் கப்பலின் பின்புறம் (Stern) அதிக அளவில் சிதைந்திருப்பதாக்க் கூறப்படுகிறது. முன்புற போ பகுதியை விட, இது 40 ஆண்டுகள் வேகமாகச் சிதைவடைவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

டைட்டானிக்கின் சிதைவுகளை நுண்ணுயிரிகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்காக, கிழக்கு ஃபுளோரிடா மாகாண கல்லூரி நுண்ணுயிரியலாளர் ஆண்டனி எல்-கௌரி, கனடா திரைப்படத் தயாரிப்பாளரும் ஆழ்கடல் ஆய்வாளருமான ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

அவரது கூற்றுப்படி, "டைட்டானிக்கின் Bow பாகம் பின் முனையில் இருந்து சிதைந்து வருகிறது. பின்புறமான Stern பாகத்தை ஒப்பிடுகையில் இது அப்படியே உள்ளது," என்கிறார்.

"கப்பலின் பின்புறப் பகுதி உடைந்து கடலுக்குள் விழுகிறது. இதில் இருக்கும் இயந்திரங்கள், பின்புறப் பகுதியான ஃபேன் டெய்ல் உள்ளிட்ட சில பகுதிகள் மட்டும் சேதமடையாமல் ஓரளவு அடையாளம் காணும் அளவுக்கு இருக்கின்றன," என்கிறார் எல்-கௌரி.

திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜேம்ஸ் கேமரூன், தனது 2005 ஆய்வுப் பயணத்தின் போது, டைட்டானிக்கின் உயர்தர துருக்கிய குளியலறையில் ஒரு விசித்திரமான அம்சத்தைக் கண்டார்.

அந்த அறையில் இருந்த பொருட்களில் வித்தியாசமான துருப்பிடிக்கும் தன்மையைக் கவனித்தார். அதற்கு ‘ரஸ்ட்ஃப்ளவர்ஸ்’ எனப் பெயரிட்டார். ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனத்தைப் பயன்படுத்தி, அந்த அறையில் உள்ள தேக்கு மற்றும் மஹோகனி மரவேலைகளை ஆய்வு செய்த அவர், வழக்கத்திற்கு மாறாக, அவை சேதமடையாமல் இருப்பதைக் கண்டார். ஏனெனில் குளியலறைகள் கப்பலின் உள்ளே ஆழமாக இருந்ததால் அங்கு ஆக்ஸிஜன் இல்லாமல் இருந்தது. இந்த சூழல் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகள் அங்கு வாழ்வதைத் தடுக்கிறது.

மிகப்பெரிய இரும்புகளின் குவியல்

கடலுக்கு அடியில் இருக்கும் டைட்டானிக் அதன் கட்டமைப்பில் இருக்கும் இரும்பு நிறைந்த உலோக அமைப்பால், ஒரு அசாதாரணச் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது. அது அரிக்கும் போது, இரும்புத் துகள்கள் சுற்றியுள்ள நீரில் கரைந்து, முக்கியமான ஊட்டச்சத்துடன் அதை வளப்படுத்துகிறது.

"இரும்பு, பூமியில் காணப்படும் பொதுவான உலோகம் என்றாலும், கடலில் மிகக் குறைவாக உள்ள ஒரு உலோகம். இது கடல் சுற்றுச்சூழல் அமைப்பை வளப்படுத்துகிறது,” என்கிறார் எல்-கௌரி.

பெரும்பாலும், எரிமலை நீர்வெப்பத் துவாரங்கள், ஆழ்கடலில் இரும்புக்கு முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. பலதரப்பட்ட கடல்வாழ் உயிர்களுக்கு ஆதாரமாக இவை விளங்குகின்றன. இங்கு, இரும்பை பிற உயிரினங்களுக்கு உணவாக்குவதில் பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

"டைட்டானிக்கின் பாகங்கள் கடலுக்கடியில் ஒரு பெரிய இரும்புச் சோலையைப் போலச் செயல்படுகின்றன. இந்த மிகப்பெரிய டைட்டானிக் கப்பலில் இருந்து இரும்பு கரைந்து கடலில் கலக்கிறது,” என்று எல்-கௌரி கூறுகிறார்.

"இந்த இரும்புச் சோலையானது நட்சத்திர மீன்கள், அனிமோன்கள், கண்ணாடி கடற்பாசிகள், பெந்திக் பவளப்பாறைகள் வசிக்கும் ஆழமான கடல் பாறைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. நிச்சயமாக, இரும்புடன் தொடர்புடைய பாக்டீரியாக்களும் அதற்குத் துணை புரிகின்றன," என்று அவர் கூறுகிறார்.

இந்த இரும்புடன் தொடர்புடைய பாக்டீரியாக்கள் டைட்டானிக் கப்பலில் உள்ள இரும்பைச் சாப்பிடுவது மட்டுமல்லாமல், ஆக்ஸிஜனுக்குப் பதிலாக ‘இரும்பைச் சுவாசிக்கும் திறன் கொண்டவை’ என்று எல்-கௌரியும் அவரது சக ஆய்வாளர்களும் கண்டறிந்தனர்.

"இது சூரியனில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் அமைப்பு. பூமிக்கு அப்பால் உள்ள பிற காஸ்மிக் பெருங்கடல்களுக்குள் நாம் கண்டுபிடிக்கக் கூடிய எக்ஸ்ட்ரீமோபில்களின் (extremophiles) தாக்கங்கள் உள்ளன," என்று அவர் கூறுகிறார்.

டைட்டானிக்கின் இரும்பு அமைப்புகள் கடலின் அடிப்பகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வருடத்திற்கு சுமார் 10செ.மீ., வீதத்தில் சிதைவுகளில் இருந்து துரு (rust) நீரில் கலக்கிறது. அது ஆழ்கடலின் வண்டலுக்குள் 15 செ.மீ., வரை பரவுகிறது. இந்த இரும்பின் ஓட்டங்கள் பெரும்பாலும் கப்பலின் பின்புற ஸ்டெர்ன் பாகங்களை சுற்றி குவிந்துள்ளன.

மொத்தத்தில், டைட்டானிக் கப்பலானது ஒவ்வொரு நாளும் 0.13 முதல் 0.2 டன் இரும்பை இழப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். கப்பலின் முன்புறத்தில் உள்ள இரும்பு 280-420 ஆண்டுகளில் முற்றிலும் கரைந்துவிடும் என்று சில ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கடற்தரையில் இருக்கும் உலோகத்திற்கு அருகே துருப்பிடித்திருக்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடலுக்கடியில் கிடக்கும் உலோகம் துருப்பிடித்திருக்கும் காட்சி

கடலடி நீரோட்டம்

டைட்டானிக் பாகங்கள் சிதைவதை வேறு சில காரணிகளும் விரைவுபடுத்துகின்றன. படகுகள் மற்றும் நீச்சல் வீரர்களை கடல் மேற்பரப்பின் வலுவான நீரோட்டங்கள் அதன் போக்கில் கொண்டு செல்வது போல், ஆழ்கடலும் நீரோட்டங்களால் அலைக்கழிக்கப் படுகிறது.

நீரோட்டம் கடலின் மேற்பரப்பில் உள்ளதைப் போலச் சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், ஆழ்கடல் நீரோட்டங்கள் அதிக அளவு தண்ணீரை உள்ளடக்கியவை. ஆழ்கடலில் ‘தெர்மோஹலைன்’ நீரோட்டங்கள் (thermohaline) எனப்படும் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மையால் ஆழமான நீர் அலைகள் ஏற்படுகின்றன.

அரிதாக, பெந்திக் புயல்களும் (benthic storm) நீரோட்டங்களை ஏற்படுத்தலாம். இவை பொதுவாக மேற்பரப்பில் ஏற்படும் சூழல்களுடன் தொடர்புடையவை. இந்தப் புயல்கள், கடலுக்கு அடியில் உள்ள பொருட்களை அடித்து செல்லும் அளவுக்குச் சக்தி வாய்ந்தவை.

டைட்டானிக்கைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் இருக்கும் வண்டல் குவியல், ஆழ்கடல் நீரோட்டங்களால் கப்பல் எவ்வாறு சேதமடைகிறது என்பதைப் பற்றிய நுண்ணறிவை வழங்கியுள்ளது.

டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளின் ஒரு பகுதி, மேற்கு எல்லை அண்டர்கரண்ட் (Under current) எனப்படும் கடற்பரப்பின் ஒரு பகுதிக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தக் கடற்பரப்பு குளிர்ந்த, தெற்கு நோக்கிப் பாயும் நீரோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் நீரோட்டங்கள் வலுவானவையாகக் கருதப்படவில்லை என்றாலும், அவை குறிப்பிட்ட அளவுக்கு இடையூறுகளை உருவாக்கலாம். அவை டைட்டானிக் எச்சங்களின் சிதைவுக்கு வழிவகுக்கும்.

"நீர்மூழ்கிக் கப்பல்களால் உருவாகும் நீரோட்டங்கள் கூட பலவீனமான கட்டமைப்புகள் இடிந்து விழ வழிவகுக்கும்," என்கிறார் சீஃபர்ட்.

டைட்டானிக், தானாகச் சிதையும் என்று நம்பப்படும் செயல்முறை இந்த நீரோட்டங்களால் மாற வாய்ப்பிருக்கிறது. அதாவது தொடர்ச்சியான நீரோட்டங்களால் டைட்டானிக் பாகங்கள் வண்டல் மண்ணில் புதைந்து விடும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால், அதற்கு முன், சிறப்பு வாய்ந்த சின்னமாகக் கருதப்படும் பாகங்கள் மறைந்து போகலாம். உதாரணமாக, கேமரூன் தனது 1997-ஆம் ஆண்டு டைட்டானிக் திரைப்படத்தில் ஒரு பிரபலமான காட்சியில் ஜாக் மற்றும் ரோஸ் கதாபாத்திரங்களை கப்பலின் முன்புற ரெயிலிங் அமைப்பில் நிற்க வைத்திருப்பார். இந்த அமைப்பு தற்போது சரிந்துவிட்டது. அதேபோன்று சில ஆண்டுகளில் கப்பலின் மேலும் சில முக்கிய சின்னங்கள் சிதைவடையும்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)