பூச்சிகள் உலகின் பிரதான உணவாக மாறுமா? அவற்றை சுவையாக சமைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி நியூஸ்
"இதை மீன் கேக் போல, கிரிக்கெட் (சில்வண்டு பூச்சி) கேக் என்று நினைத்துக் கொள்ளுங்கள்," என்று அந்த சமையல்காரர், பஃபே வரிசையில் நின்றுகொண்டிருந்த நபரிடம் ஒரு புதிய உணவு வகையை முயற்சி செய்து பார்க்குமாறு வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
அந்த புதிய உணவானது சூடான, காரமான ‘லக்சா’ ஆகும். அது ‘கிரிக்கெட் பூச்சியின் புரதங்கள்’ நிறைந்த ஒரு வகையான ‘தேங்காய்- நூடுல்ஸ் சூப்’.
அதற்கு அடுத்ததாக ஒரு தட்டில் வறுத்த ‘சில்லி கிரிகெட் பூச்சிகள்’ இருந்தன. இது ஒரு பிரபல சிங்கப்பூர் உணவை ஒத்தது. அதில் நன்கு வறுத்த நண்டுகளின் மீது சில்லி சாஸ் ஊற்றி பரிமாறப்படும். இதில் நண்டுகளுக்குப் பதிலாக ‘கிரிக்கெட் பூச்சிகள்’ உள்ளன.
இது பார்ப்பதற்கு ஒரு வழக்கமான பஃபே போல இருந்தது, ஒரே ஒரு வித்தியாசம் அனைத்து உணவுகளிலும் முக்கிய மூலப்பொருள் கிரிக்கெட் பூச்சிகள் தான்.
பஃபே வரிசையில் இருந்த ஒரு பெண்ணும், வறுத்த கொரிய நூடுல்ஸை ருசித்துக் கொண்டிருந்தார். அந்த நூடுல்ஸ் மீது பொடிப்பொடியாக வெட்டப்பட்ட கிரிக்கெட் பூச்சிகள் தூவப்பட்டிருந்தன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பூச்சிகளை சுவையான உணவுப்பொருளாக மாற்றும் திட்டம்
‘உணவு விரும்பிகள்’ இந்த விருந்துக்கு ஆர்வத்துடன் வருவார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். ‘பூச்சிகளை சுவையான ஒரு உணவுப்பொருளாக மாற்றும் திட்டத்தின்’ ஒரு பகுதியாக, சிங்கப்பூருக்கு வந்திருந்த 600க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், தொழில்முனைவோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடங்கிய உலகளாவிய பிரதிநிதிகள் குழுவில் அவர்களும் இருந்தனர்.
மாநாட்டின் பெயரே அந்தத் திட்டம் குறித்து தெளிவாக எடுத்துரைத்தது, ‘பூச்சிகள்- உலகிற்கு உணவளிக்க’ (Insects to Feed the World).
அவர்களில் பலர் பூச்சிகள் நிறைந்த பஃபேக்கு பக்கத்தில் இருந்த மற்றொரு பஃபே பக்கம் சென்றனர். பூச்சிகள் விருந்துடன் ஒப்பிடுகையில் இது வழக்கமான உணவுகள்தான் என சிலர் வாதிட்டிருப்பார்கள். அங்கே மீன்கள், இறைச்சி உணவுகள், தேங்காய்-காய்கறிகள் கொண்டு செய்யப்பட்ட உணவுகள் போன்றவை இருந்தன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சுமார் இரண்டு பில்லியன் மக்கள், அதாவது உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர், தங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக பூச்சிகளை உண்கின்றனர்.
பூச்சிகளை ஆரோக்கியமான மற்றும் பசுமையான தேர்வாகக் கருதும் ‘பூச்சி உணவு ஆர்வலர்களின்’ கூற்றுப்படி, “அதிகமான மக்கள் தங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக பூச்சிகளை உண்ண வேண்டும்.”
ஆனால் பூமியைக் காப்பாற்ற உதவும் என்ற ஒரு காரணமே, உலக மக்கள் பலரையும் ‘பூச்சி உணவுகளை’ நோக்கி இழுப்பதற்கு போதுமானதா?

பட மூலாதாரம், Insects to Feed the World
சிங்கப்பூர் சமையற்கலை நிபுணர் நிக்கோலஸ் லோவுடன் இணைந்து, மாநாட்டிற்கான மெனுவை வடிவமைத்த நியூயார்க்கைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர் ஜோசப் யூன், “அவற்றை (பூச்சிகளை) சுவையாகச் சமைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.” என்று கூறினார்.
இந்த நிகழ்வில் உணவுக்காக கிரிக்கெட் பூச்சிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
"பூச்சிகள் நிலையானவை, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, உணவுப் பாதுகாப்பை நிவர்த்தி செய்யக்கூடியவை என பல காரணங்கள் இருந்தாலும், அவற்றை ருசியான உணவுகளாக மாற்றுவதற்கு அவை போதுமானதாக இல்லை” என்றும் அவர் கூறினார்.
கிரிக்கெட் பூச்சிகளில் அதிக புரதம் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. கால்நடைகளுடன் ஒப்பிடுகையில், அவற்றை வளர்ப்பதற்கு குறைவான நீர் மற்றும் நிலம் தேவைப்படும்.
சில நாடுகள் பூச்சி உணவுகளை ஊக்குவிக்கின்றன. சமீபத்தில் சிங்கப்பூர், கிரிக்கெட்டுகள், பட்டுப்புழுக்கள், வெட்டுக்கிளிகள் மற்றும் தேனீக்கள் உள்ளிட்ட 16 வகையான பூச்சிகளை உணவாக அங்கீகரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகள், பூச்சி உணவு வணிகத்தை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
நிக்கோலஸ் லோ போன்ற சமையற்கலை நிபுணர்கள், பூச்சிகளை உணவுகளில் திறம்பட சேர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் மக்கள் அவற்றை "அதன் அசல் வடிவத்தில்" உண்ண ஒருபோதும் தயாராக இல்லை.

பட மூலாதாரம், BBC/Kelly Ng
'பூச்சிகளின் இயற்கையான வாசத்தை மறைக்க உக்திகள் தேவை'
மாநாட்டிற்காக, செஃப் லோ பிரபல உணவான ‘லக்சாவை’ ஒரு புதிய முறையில் உருவாக்கினார். வழக்கமான மீன் கேக்கிற்கு பதிலாக துண்டு துண்தாக வெட்டப்பட்ட கிரிக்கெட் பூச்சிகளைச் சேர்த்தார்.
பூச்சிகளின் இயற்கையான வாசத்தை (சிலருக்கு நாற்றமாக இருக்கலாம்) மறைக்க சில உக்திகள் தேவைப்பட்டன என்கிறார் அவர்.
லக்சா போன்ற ‘வலுவான மணம், சுவை’ கொண்ட உணவுகள் இதற்கு சிறந்ததாக இருந்தன, ஏனெனில் அதன் அசல் சுவையானது அதில் பூச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து மக்களை திசைத் திருப்பிவிடும்.
அதே சமயத்தில், தினமும் கிரிக்கெட் பூச்சிகள் கொண்டு சமைப்பதை அவரால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, "பெரிய மெனுவின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு சிறப்பு உணவாக மட்டுமே நான் அதை சமைப்பேன்." என்கிறார் அவர்.
பூச்சிகள் கொண்டு சமைப்பதற்கு சிங்கப்பூர் ஒப்புதல் அளித்ததால், அந்நாட்டின் சில உணவகங்கள் அதை முயற்சி செய்கின்றன. கடல் உணவுகளுக்கு பெயர்போன ஒரு உணவகம், அதன் உணவு வகைகளில் கிரிக்கெட் பூச்சிகளைத் தூவி பரிமாறுகிறது.
டோக்கியோவை தளமாகக் கொண்ட டேக்கோ கஃபே கடந்த 10 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு பூச்சி கொண்டு சமைத்த உணவுகளை வழங்கி வருகிறது.
அதன் மெனுவில், ‘இரண்டு மடகாஸ்கர் கரப்பான் பூச்சிகள் மற்றும் செர்ரி தக்காளிகள் கொண்ட ஒரு சாலட், மூன்று சிறிய வெட்டுக்கிளிகள் கலந்த ஐஸ்கிரீம் மற்றும் பட்டுப்புழுவின் கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு காக்டெய்ல்’ ஆகியவை அடங்கும்.
"மிக முக்கியமானது என்னவென்றால் (வாடிக்கையாளரின்) ஆர்வம்" என்று டேக்கோவின் தலைமை அதிகாரி சேகி ஷின்ஜிரோ கூறினார்.
“ஆனால் சுற்றுச்சூழல் பற்றி வாடிக்கையாளர்கள் அதிகம் கவலைப்படுவதில்லை” என்கிறார் அவர்.
அதே சமயத்தில் பிற வாடிக்கையாளர்களுக்காக, பூச்சிகள் இல்லாத ஒரு மெனுவும் டேக்கோ கஃபேயில் உள்ளது.
"மெனுவை வடிவமைக்கும் போது, பூச்சிகளை உண்ணாதவர்களிடம் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதை நாங்கள் நினைவில் கொள்கிறோம். இங்கு சில வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்களுடன் ஒரு துணையாக மட்டுமே வருகிறார்கள்" என்று ஷின்ஜிரோ கூறினார்.
"அப்படிப்பட்டவர்கள் அசௌகரியமாக உணர்வதை நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் பூச்சிகளை வலுக்கட்டாயமாக சாப்பிட வேண்டிய அவசியமில்லை." என்கிறார்.

பட மூலாதாரம், Insects to Feed the World
‘பூச்சிகளை உண்பது குறித்த அவமான உணர்வு’
ஆனால் பல நூற்றாண்டுகளாக, பூச்சிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் மதிப்புமிக்க உணவு ஆதாரமாக உள்ளன.
ஜப்பானில் பாரம்பரியமாக வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் மற்றும் குளவிகள் ஆகியவை, இறைச்சி மற்றும் மீன் குறைவாக கிடைக்கும் பகுதிகளில் உண்ணப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரின்போது உணவுப் பற்றாக்குறையின் போது இந்த நடைமுறை மீண்டும் தோன்றியது என்று டேக்கோவின் மேலாளர் மிச்சிகோ மியுரா கூறினார்.
இன்று, கிரிக்கெட் மற்றும் பட்டுப் புழுக்கள் பொதுவாக தாய்லாந்தின் இரவுச் சந்தைகளில் சிற்றுண்டிகளாக விற்கப்படுகின்றன, அதே நேரத்தில் மெக்ஸிகோ நகரத்தில் உணவருந்துபவர்கள் ‘எறும்பு முட்டைகளுக்கு’ (Ant larvae) நூற்றுக்கணக்கான டாலர்களை செலுத்துகிறார்கள்.
14 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை மெக்ஸிகோவை ஆட்சி செய்த அஸ்டெக் (Aztec) மக்கள் இதை விரும்பி உண்டார்கள் எனக் கூறப்படுகிறது.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற ‘பூச்சி நுகர்வு’ தொடர்பான நெடுங்கால வரலாற்றைக் கொண்ட பகுதிகளில் கூட, ‘ஒருவித அவமான உணர்வு மக்களிடையே வளர்ந்துவருகிறது’ என்று நியூயார்க்கைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர் ஜோசப் யூன் கூறினார்.
"அவர்கள் இப்போது இணையத்தில் வெளிநாட்டு கலாசாரங்கள், உணவுகளைப் பார்த்துவிட்டு, பூச்சிகளை சாப்பிட வெட்கப்படுகிறார்கள். அது வேறு எங்கும் நடைமுறையில் இல்லை என நினைத்துக் கொள்கிறார்கள்" என்கிறார் ஜோசப்.

பட மூலாதாரம், Getty Images
‘Edible Insects and Human Evolution’ என்ற தனது புத்தகத்தில், மானுடவியலாளர் ஜூலி லெஸ்னிக், “காலனித்துவம், பூச்சிகளை உண்பது தொடர்பான அவமான உணர்வை அதிகப்படுத்தியது” என்று கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் கொலம்பஸ் மற்றும் அவரது குழுவின் உறுப்பினர்கள், பூர்வீக அமெரிக்கர்கள் பூச்சிகளை உட்கொள்வதை "இது மிருகத்தனம்... பூமியின் உள்ள வேறு எந்த மிருகமும் செய்யக்கூடியதை விட மோசமான ஒரு செயல்" என்று விவரித்ததாக ஜூலி கூறியுள்ளார்.
நிச்சயமாக, மக்களின் அணுகுமுறை மாறலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, சுஷி மற்றும் சிங்க இறால் போன்ற பிரபல உணவுகளைச் சாப்பிடுவது ஒரு காலத்தில் பெரும்பாலான மக்களுக்கு அன்னியமான ஒன்றாக இருந்தது.
“ஒருகாலத்தில் சூஷி என்பது ‘தொழிலாளி வர்க்க’ உணவாக கருதப்பட்டது. ‘ஏழைகளின் சிக்கன்’ என்று அழைக்கப்படும் இறால்கள், ஒரு காலத்தில் வடகிழக்கு அமெரிக்காவில் கைதிகள் மற்றும் அடிமைகளுக்கு உணவாக வழங்கப்பட்டன, ஏனெனில் அவை அப்போது தாராளமாக கிடைத்தன” என்று கூறுகிறார் சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உணவு ஆராய்ச்சியாளர் கெரி மேட்டிவ்க்.
ஆனால் போக்குவரத்து அமைப்புகள் பயணத்தை எளிதாக்கியது மற்றும் உணவு சேமிப்பு மேம்படுத்தப்பட்டது, எனவே அதிகமான மக்கள் இந்த உணவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். தேவை அதிகரித்ததால், அவற்றின் விலையும் மதிப்பும் அதிகரித்தது.
சுவையான அல்லது உணவாகக் கூட கருதப்படாத சில உணவு வகைகள் கூட படிப்படியாக பிரபலமடையும் என டாக்டர் மேட்விக் கூறினார்.
“கலாசார நம்பிக்கைகள் மாற நேரம் எடுக்கும். பூச்சிகள் அருவருப்பானவை மற்றும் அழுக்கானவை என்ற எண்ணங்களை மாற்ற சிறிது காலம் தேவைப்படும்” என்கிறார்.
“எதிர்கால சந்ததியினர் காலநிலை நெருக்கடியின் முழு விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்பதைக் கருத்தில் கொண்டு, தங்கள் குழந்தைகள் பூச்சிகள் உள்ளிட்ட அசாதாரண உணவுகளை உண்ணும் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்” என சில வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பூச்சிகள் எதிர்காலத்தில் மக்கள் விரும்பக்கூடிய உணவுகளாக மாறலாம்.
“குறிப்பாக பணக்கார நாடுகளில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு உணவு வகையும் உடனே கிடைத்துவிடும் என்ற நிலை இருக்கும்போது, மக்கள் தங்கள் உணவுமுறைகளில் உடனடி மாற்றங்களை ஏற்பார்கள் என தற்போதைக்கு சொல்ல முடியாது” என்கிறார் செஃப் நிக்கோலஸ் லோ.
“இளைஞர்கள் ஆர்வத்துடன் அவற்றை சுவைக்க தயாராக இருக்கலாம், ஆனால் ‘புதுமையான உணவு’ என்ற அந்தக் கவர்ச்சி சில நாட்களில் மறைந்துவிடும்” என்று அவர் கூறுகிறார்.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












