திருப்பதி லட்டு வாங்க ஆதார் கட்டாயமா? எத்தனை லட்டுகள் வாங்கலாம்?

பட மூலாதாரம், Rajesh
- எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா
- பதவி, பிபிசி தெலுங்குக்காக
சமீப காலமாக, திருப்பதியில் லட்டு விற்பனைக்கான விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சாமி தரிசனம் செய்பவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் தனித்தனி விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் லட்டு விற்பனைக்கு ஆதார் அட்டை தேவை என தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே லட்டு வழங்கப்படுமா? அப்படியானால், எத்தனை லட்டுகள் வழங்கப்படும்?
லட்டு விற்பனை விதிகளில் உள்ள மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடம் பேசிய தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ், "சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு வேண்டுமானால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தரிசன டோக்கனைக் காட்ட வேண்டும். இவர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும். மேலும் வேண்டுமானால், லட்டு ஒன்றுக்கு 50 ரூபாய் செலுத்தி தேவைக்கேற்ப அவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.
சாமி தரிசனம் செய்யாதவர்கள் லட்டு வாங்கவேண்டுமானால், அவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவை. அதுவும் ஒரு ஆதார் அட்டைக்கு இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படும். ஒரு மாதத்தில் எத்தனை ஆதார் அட்டைகளுக்கு லட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து கண்காணிக்கப்படும்" என்றார்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆதார் அட்டை இல்லாவிட்டால் லட்டு வழங்கப்படாதா?
சாமி தரிசனம் செய்பவர் ஆதார் அட்டை இல்லாமல் லட்டு வாங்கலாம். தரிசனத்திற்காக வழங்கப்படும் டோக்கனை மட்டுமே காட்டினால் போதும். அதுவே சாமி தரிசனம் செய்யாதவர்கள் லட்டு வாங்குவதற்கு ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு லட்டு வழங்கப்பட மாட்டாது.
"ஆதார் அட்டை இல்லாததால் தற்போது உள்ள செயல்முறையில் சிக்கல்கள் உள்ளன. முதலில் ஒரு லட்டு வழங்கப்படும் கவுன்டருக்கு சென்று ஒருவர் இரண்டு லட்டுகள் வாங்கலாம். பின்பு அடுத்த கவுன்டருக்கும் சென்று இன்னும் இரண்டு பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்வார்கள். இதற்கு வரம்பு என்று ஏதும் இல்லை. இவ்வாறு நடக்காமல் இருக்க செயல்முறையில் மாற்றங்களைச் செய்து ஆதார் அட்டையுடன் கட்டாயமாக்கி உள்ளோம்" என்று ஷியாமளா ராவ் கூறினார்.

பட மூலாதாரம், Rajesh
முன்பு லட்டு எவ்வாறு விநியோகிக்கப்பட்டது?
சாமி தரிசனம் செய்யும் ஒவ்வொருவருக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கப்பட்டதாகவும், அது இன்று வரை நடைமுறையில் இருப்பதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம் பிபிசியிடம் தெரிவித்தார்.
"தரிசனம் செய்யும் பக்தருக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படும். அவர்களுக்கு மேலும் வேண்டுமானால் லட்டு ஒன்றுக்கு 50 ரூபாய் செலுத்தி எத்தனை சிறிய லட்டுகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். தற்போது சாமி தரிசனம் செய்யாதவர்கள் ஆதார் அட்டை இல்லை என்றாலும் அவர்களும் பணம் செலுத்தி இரண்டு சிறிய லட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
இதர தவிர மக்கள் பெரிய லட்டு மற்றும் வடை ஆகியவற்றை கவுன்டர்களில் காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வாங்கிக்கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 7,500 பெரிய லட்டுகள் மற்றும் 3,500 வடைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை கையிருப்பில் உள்ள வரை மக்கள் கவுன்டர்களில் பணம் செலுத்தி பெறலாம்", என்று லோகநாதம் கூறினார்.
"எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற அதிகாரிகளுக்கு தனி வழிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் கவுன்டர் எண் 45-ல் பணம் செலுத்தி பெரிய லட்டு, வடை, சின்ன லட்டுகள் என அனைத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்." என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்கப்பட்டதுடன் அவர்கள் லட்டு ஒன்றுக்கு 25 ரூபாய் செலுத்தி இரண்டு லட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். 2008 ஆம் ஆண்டு, இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டது. லட்டின் விலை 25 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இடைத்தரகர் முறையை ஒழிக்க லட்டுகளின் விலை உயர்த்தப்பட்டு, லட்டு தயாரிப்பின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக அப்போதைய திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அதிகாரியான கருணாகர் ரெட்டி தெரிவித்தார்.
"திருப்பதியில் தினமும் 3.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. லட்டு விற்பனை கவுன்டர்கள் மூலம் தரிசன டோக்கன் இல்லாதவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் லட்டுகள் வழங்கப்படுகிறது", என்று லோகநாதம் கூறினார்.

பட மூலாதாரம், Rajesh
இப்போது ஏன் ஆதார் அட்டை இணைப்பு செயல்முறை கொண்டுவரப்பட்டது?
திருமண விழாக்களில் சிலர் திருப்பதி லட்டுகளை விநியோகம் செய்து வருகின்றனர். அது போன்றவற்றை தடுப்பதற்கே லட்டு விற்பனையை ஆதார் அட்டையுடன் இணைக்கிறோம் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் கூறினார்.
"பெரிய இடத்து திருமணங்களில் திருப்பதி லட்டு அந்தஸ்த்தின் ஒரு சின்னமாக வழங்கப்படுவதை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். திருப்பதி லட்டு ஒரு பிரசாதம், இனிப்பு பண்டம் அல்ல.
அதை அந்தஸ்த்தை குறிக்க பயன்படுத்துவது சரியல்ல. இது போன்ற நிகழ்ச்சிகளுக்காக நூற்றுக்கணக்கான லட்டுகளை பணம் செலுத்தி வாங்குவது போன்றவற்றை தடுப்பதற்கே இந்த செயல்முறை கொண்டுவரப்பட்டது" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "சாதாரண பக்தர்கள் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இப்போது அவர்கள் கேட்கும் அளவிற்கு லட்டு விற்பனை செய்யப்படாது. வெளியூர்களில் இருந்து தரிசன டிக்கெட் இல்லாமல் வந்து, லட்டு விற்பனை கவுன்டரில் மட்டும் பணம் செலுத்தி எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக்கொண்டு செல்கின்றனர்."
"லட்டு விற்பனையில் சில இடைத்தரகர்களும் இருந்தனர். அவர்கள் அதிக அளவில் லட்டுகளை கவுன்டருக்கு வெளியே சென்று விற்பனை செய்கின்றனர். இந்த இடைத்தரகர் முறையை ஒழிக்கவே ஆதார் அட்டை தேவை என்று கூறியுள்ளோம்" என்று ஷியாமளா ராவ் தெரிவித்தார்.
இது தொடர்பாக தேவஸ்தானத்தின் கண்காணிப்பு துறை நடவடிக்கை எடுக்காத வரை இடைத்தரகர் முறையை ஒழிக்க முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
"லட்டு வாங்க ஆதார் அட்டை ஆதார் அட்டை தேவை என்று கூறுவதால் மட்டுமே இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க முடியாது. தேவஸ்தான ஊழியர்கள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் மற்றும் லட்டு கவுன்டரில் உள்ள பணியாளர்கள் என்று அனைவரும் சேர்ந்து பணியாற்றினால் தான் இதனை சரி செய்ய முடியும்." என்கிறார்.
"இவ்வாறு விதிகள் கடுமையானல், கள்ளச் சந்தையில் விற்கப்படும் லட்டுகளின் விலை மட்டுமே உயரும். கள்ளச் சந்தையை மொத்தமாக ஒழிக்க முடியாது. திருமண நிகழ்ச்சி ஒன்றில் திருப்பதி லட்டை பார்த்ததால் மட்டுமே, தேவஸ்தான அதிகாரிகள் வேக வேகமாக இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் பயன் இல்லை" என்று ரவி குமார் பிபிசியிடம் கூறினார்.
லட்டு விற்பனையில் ஆதார் அட்டையை இணைப்பது குறித்து எழும் விமர்சனங்கள் சரியல்ல என்று ஷியாமளா ராவ் கூறினார்.
இடைத்தரகர் முறையைக் கட்டுப்படுத்த மட்டுமே லட்டு விற்பனை கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை பழைய முறைப்படியே இயங்கும் என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












