ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழந்த நபர், தந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம்- நடந்தது என்ன?

லக்பீர் சிங்
படக்குறிப்பு, ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை பியர்ஜித் சிங் இழந்தபிறகு, ​​அவரது தந்தை லக்பீர் சிங் (புகைப்படத்தில் இருப்பவர்) கணக்கு கேட்கத் தொடங்கியுள்ளார்
    • எழுதியவர், சுரீந்தர் சிங்
    • பதவி, பிபிசி பஞ்சாபிக்காக

பஞ்சாப் மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழந்த ஒருவர், அதைத் தொடர்ந்து அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார். அந்த நபரே தனது தந்தையைக் கொன்றுவிட்டு, கொள்ளையர்களால் அந்தக் கொலை நடந்ததாக எல்லோரையும் நம்பவைக்க ஒரு சதித்திட்டத்தையும் தீட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தெற்கு பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மாரா கலான் எனும் கிராமத்தில் நடந்துள்ளது.

காவல்துறையின் தகவலின்படி, பியார்ஜித் சிங் என்ற நபர் ஆன்லைன் விளையாட்டில் ரூ.25 லட்சத்தை இழந்த பிறகு, தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவரைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, ஸ்ரீ முக்தர் சாஹிப் மாவட்டத்திற்கு உட்பட்ட பாரிவாலா காவல் நிலையப் பகுதியில் அரங்கேறியுள்ளது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது, தனது தந்தையைக் கொன்றுவிட்டு அவர் நடத்திய நாடகம் அம்பலமானது.

“சந்தேகத்தின் பேரில் பியர்ஜித் சிங்கை கைது செய்து விசாரித்தபோது, ​லக்பீர் சிங் வழக்கின் (கொலை செய்யப்பட்டவர்) மர்மம் வெளிப்பட்டது” என்று ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்ட எஸ்எஸ்பி துஷார் குப்தா கூறினார்.

சம்பவம் நடந்த ஒருநாள் கழித்து, செப்டம்பர் 7 அன்று, பியர்ஜித் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘ஆன்லைன் விளையாட்டில் 25 லட்சத்தை இழந்த மகன்’

காவல்துறை
படக்குறிப்பு, செப்டம்பர் 7 அன்று, பியர்ஜித் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

“ஆன்லைன் கேம்களை விளையாடி சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை பியர்ஜித் சிங் இழந்தபிறகு, ​​அவரது தந்தை லக்பீர் சிங் அவரிடம் கணக்கு கேட்கத் தொடங்கியுள்ளார்” என்று காவல்துறை கூறுகிறது.

“செப்டம்பர் 6-ஆம் தேதி பியர்ஜித் சிங் தனது தந்தையை சிகிச்சைக்காக சண்டிகருக்கு காரில் அழைத்துச் செல்லும்போது, மாரா கலான் கிராமத்திற்கு அருகே வைத்து கத்தியால் குத்தி கொன்றுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என காவல்துறை எஸ்எஸ்பி கூறினார்.

அதன் பிறகு, ​​நான்கு-ஐந்து கொள்ளையர்கள் தனது காரை சுற்றி வளைத்து தந்தையைத் தாக்கியதாக அவர் கூச்சலிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது அவர் தனது காரையும் கத்தியால் சேதப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எஸ்எஸ்பியின் கூற்றுப்படி, இது தொடர்பாக பாரிவாலா காவல் நிலையத்தில், ஆயுதச்சட்டத்தின் பிரிவு 103 (1), 304, 62, 324 (3), 191 (3), 190 பிஎன்எஸ் மற்றும் பிரிவு 25, 27, 54, 59 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பியர்ஜித் சிங்கை காவலில் எடுத்து விசாரித்தபோது, ​​கொள்ளையர்கள் பற்றிய அவரது கதை புனையப்பட்டது என்பது தெரிய வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

பியார்ஜித் சிங் ஆன்லைன் கேம் விளையாடி 25 லட்சம் ரூபாயை இழந்த பிறகு, ​​​​அவரது தந்தை பணம் குறித்து பலமுறை அவரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படி, “பியார்ஜித் சிங் இந்த பணத்தைப் பற்றி தனது தந்தையிடம் பல பொய்களைக் கூறி சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து கணக்கு கேட்டுள்ளார். கடைசியாக சண்டிகரில் ஒரு தொழிலுக்காக இந்தப் பணத்தை முதலீடு செய்திருப்பதாக அவர் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.”

“இருந்தபோதிலும், லக்பீர் சிங் தனது மகனிடம் பணத்தை திரும்பக் கேட்டதைத் தொடர்ந்து, இந்த துரதிர்ஷ்டவசமான கொலை சம்பவம் நடந்துள்ளது.”

‘ஆன்லைன் விளையாட்டில் 25 லட்சத்தை இழந்த மகன்’
படக்குறிப்பு, பியர்ஜித் சிங்கை காவலில் எடுத்து விசாரித்தபோது, ​​கொள்ளையர்கள் பற்றிய அவரது கதை புனையப்பட்டது என்பது தெரிய வந்ததாக போலீசார் கூறுகின்றனர்

ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டம்

உலகின் பெரும்பாலான பகுதிகளில் பல்வேறு வகையான ஆன்லைன் கேம்கள் விளையாடப்படுகின்றன.

பெரும்பாலான ஆன்லைன் விளையாட்டுகள் அல்லது செயலிகள் இலவசமாகவே கிடைக்கின்றன. மறுபுறம், ஆன்லைன் சூதாட்டம் என்று வரும்போது, ​​​​இந்தியாவின் பல இடங்களில் இது தடைசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் எந்த வகையான சூதாட்டங்களும் சட்டவிரோதமானவைதான்.

ஆன்லைன் சூதாட்டம் என்பது பணப்பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது. அதாவது இணையத்தில் பணத்தைக் கட்டி பந்தயத்தில் ஈடுபடுவது.

இந்தியாவின் சில மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கு முழுமையான தடை உள்ளது.

ஆன்லைன் கேமிங் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஆன்லைன் கேமிங் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

டாக்டர் இந்தர்வீர் சிங் கில், பஞ்சாப் சுகாதாரத் துறையின் மூத்த மருத்துவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் மற்றும் அவர் ஒரு மனநல நிபுணரும் கூட.

"ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது சூதாட்டம் என்பது ஒரு நபரின் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று அவர் கூறுகிறார்.

"அத்தகைய விளையாட்டுகள் அல்லது செயலிகளின் டெவலப்பர்கள் (Developers) பயனர்களின் மனநிலைக் குறித்து விளையாட்டின் ஆரம்பக் கட்டங்களில் ஆராய்கிறார்கள். பயனர்களுக்கு இதில் ஆர்வத்தை ஏற்படுத்த, முதல் சுற்றில் அவர்களை வெல்லவைத்து கொஞ்சம் பணத்தை பரிசாக கொடுக்கிறார்கள்." என்கிறார் டாக்டர் கில்.

"குழந்தைகள் விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் கூட சில சமயங்களில் அத்தகைய நபர்களால் ஊடுருவப்படுகின்றன என்பது தான் மிகப்பெரிய கவலை" என்கிறார் அவர்.

"ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் ஒருவரின் மனவுறுதியைக் குலைக்கும். இதில் ஈடுபடும் பல நபர்கள் அந்தப் பழக்கத்திலிருந்து வெளியேவருவது கடினம்." என்றும் கில் கூறுகிறார்.

ஆன்லைன் இணைப்புகள் (Online Links), இணையதளங்கள் அல்லது மொபைல் செயலிகள் மூலம்தான் பெரும்பாலான மக்கள் பந்தயம் அல்லது சூதாட்டம் போன்ற சட்டவிரோத வணிகங்களில் சேர்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய பயனர்களை இதற்குள் இழுக்க இலவச சேவைகளையும் வழங்குவதாக டாக்டர் கில் கூறுகிறார்.

"பின்னர் பயனர்களை ஏமாற்றி பணத்தைப் பறித்து, இந்த விளையாட்டில் அவர்கள் அடிமையாகக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். பண விரயம் இங்குதான் தொடங்குகிறது. இதுபோன்ற சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் தற்கொலை செய்துகொள்வது அல்லது கொலை செய்வது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு இதுவே காரணம்." என்று டாக்டர் கில் கூறுகிறார்.

இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?

இது தொடர்பான இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் உத்தரவுகள் மிகவும் கண்டிப்பானவையாக உள்ளன.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019இன் கீழ் பந்தயம் அல்லது சூதாட்டம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைக்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத் துறை சமீபத்தில் ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது.

“நாட்டில் பந்தயம் அல்லது சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை இருந்தாலும், அதில் ஈடுபடும் மக்களின் மனநிலை பணத்துடன் தொடர்புடையதாக உள்ளது இந்தப் பிரச்னைக்கான காரணம்” என்று டாக்டர் இந்தர்வீர் சிங் கில் கூறுகிறார்.

"முன்பெல்லாம் தீபாவளி நாட்களில் மக்கள் குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அப்படிப்பட்டவர்கள் மீது சட்டத்தை அமல்படுத்துவது காவல்துறைக்கு மிகவும் எளிதாக இருந்தது." என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆனால் இப்போது இந்த இணைய யுகத்தில் நிலைமைகள் மாறிவிட்டன. ஒவ்வொருவரின் கையிலும் ஒரு ஸ்மார்ட் போன் உள்ளது. விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்கள் ஆன்லைன் சூதாட்ட கேம்கள், செயலிகள் அல்லது பிற வலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.”

"இரண்டாவது விஷயம் என்னவென்றால், ஆன்லைன் பரிவர்த்தனைகள் உட்பட சைபர் குற்றங்களைத் தடுக்க தனிச் சட்டம் இருந்தாலும், இணையம் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், இந்த குற்றத்தைத் தடுக்க இன்னும் அதிகமான முயற்சிகள் தேவை." என்கிறார் டாக்டர் இந்தர்வீர் சிங் கில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)