மோதி, இந்தியா, சீனா, வேலையில்லா திண்டாட்டம் - அமெரிக்காவில் ராகுல்காந்தி பேசியது என்ன?

அமெரிக்கா, ராகுல் காந்தி, மோதி, இந்தியா

பட மூலாதாரம், INC

படக்குறிப்பு, ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பிறகு ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இது.

இந்திய நேரப்படி செப்டம்பர் 9ஆம் தேதி காலை, டெக்சாஸில் இரண்டு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்றார். டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்களை ராகுல் சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்வுகளில் ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றி விமர்சித்தார்.

''தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே பா.ஜ.க மீதும், இந்திய பிரதமர் மோதி மீதும் மக்கள் கொண்டிருந்த அச்சம் விலகிவிட்டது'’ என்று ராகுல் காந்தி கூறினார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் உதவியுடன், நரேந்திர மோதி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். இந்தத் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவுகளைத் தங்களின் மாபெரும் வெற்றியாகக் காட்டி வருகிறது.

வாஷிங்டன் டிசியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்கா, ராகுல் காந்தி, மோதி, இந்தியா

பட மூலாதாரம், Congress/X

படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமெரிக்கவாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்

ராகுல் காந்தி வேறு என்ன சொன்னார்?

இந்தியப் பிரதமர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றவில்லை என்பதை தேர்தல்களின் போது கோடிக்கணக்கான மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மொழி, மதம், பாரம்பரியம், சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது என்று ராகுல் காந்தி கூறினார். "நவீன இந்தியாவின் அடித்தளம் அரசியலமைப்புச் சட்டம். நமது பாரம்பரியம், மொழி, மாநிலம், வரலாறு போன்றவற்றை பாஜக தாக்குகிறது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டதைத் தேர்தலின் போது பார்த்தேன்." என்றார் அவர்.

கடந்த மக்களவைத் தேர்தலில், 'அரசியலமைப்புக்கு அச்சுறுத்தல்' என, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி’ கட்சிகள் பேசின. பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றிவிடும் என எதிர்க்கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டன.

ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக நிராகரித்து வருகிறது.

அரசியல் சாசனத்தில் நலிந்த பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை நிறுத்த பாஜக விரும்புவதாகவும் `இந்தியா’ கூட்டணி குற்றம் சாட்டியது.

“பாஜக பற்றிய அச்சம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான எந்தத் தாக்குதலையும் ஏற்க மாட்டோம் என்று கூறிய இந்திய மக்களின் சாதனை இது." என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்திய சமூகம் தொடர்பான நிகழ்வில், "நீங்கள் மிகுந்த மரியாதை உணர்வுடன் இங்கு வந்துள்ளீர்கள், உங்கள் மனதில் வெறுப்புணர்வு இல்லை. நீங்கள் இங்கு இந்தியாவை முன்னிறுத்தும் எங்களின் தூதுவர். எனவே உங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்காவும் அமெரிக்காவுக்கு இந்தியாவும் தேவை. உங்கள் பாரம்பரிய வீட்டிற்கும் உங்கள் புதிய இல்லமான அமெரிக்காவிற்கும் இடையிலான பாலம் நீங்கள்." என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

அமெரிக்கா, ராகுல் காந்தி, மோதி, இந்தியா

பட மூலாதாரம், Congress/X

படக்குறிப்பு, ராகுல் காந்தி

வேலையில்லா திண்டாட்டம் குறித்து ராகுல் காந்தி பேசியது என்ன?

டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களிடம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள இதர பிரச்னைகள் குறித்து ராகுல் பேசினார்.

இன்று இந்தியாவில் செல்போன்கள், பர்னிச்சர்கள், உடைகள் என எல்லாவற்றின் பின்புறத்திலும் சீனாவில் தயாரிக்கப்பட்டது என எழுதப்பட்டுள்ளது என்று மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தி தனது 4 ஆயிரம் கிலோமீட்டர் 'பாரத் ஜோடோ யாத்திரை' குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

"நீங்கள் கேட்ட முதல் கேள்வி, நான் ஏன் நான்காயிரம் கிலோமீட்டர் நடந்தேன் என்றும், நாங்கள் ஏன் இதை செய்ய வேண்டும் என்பதும் தான்”

“இந்தியாவில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடக்கப்பட்டதே இதற்குக் காரணம். நாங்கள் நாடாளுமன்றத்தில் பேசினோம். ஆனால் அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. நாங்கள் ஊடகங்களுக்குச் சென்றோம், ஆனால் அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. நாங்கள் சட்ட அமலாக்க அமைப்புகளின் முன் ஆவணங்களையும் சமர்ப்பித்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எல்லா வாயில்களும் மூடப்பட்டன, நீண்ட காலமாக எங்களால் மக்களிடம் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது புரியவில்லை.”

“அப்போது, ஊடகங்கள் சாமானியர்களைச் சென்றடையவில்லை என்றால், அரசாங்கம் நம்மை மக்களுடன் இணைக்கவில்லை என்றால், நாம் அவர்களிடம் நேரடியாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு வந்தது.” என்றார் அவர்.

ராகுல் காந்தி மேலும் கூறுகையில், ​​“இந்தப் பயணம் எனது பணிகளைப் பற்றிய எனது எண்ணத்தையே மாற்றிவிட்டது. அந்தப் பயணத்தில், எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இயல்பாக நடந்த சிறந்த விஷயம், அன்பை அரசியலில் புகுத்தியதே. இது வித்தியாசமானது. ஏனென்றால் பெரும்பாலான நாடுகளில் நீங்கள் அரசியல் சொற்பொழிவில் அன்பு என்ற வார்த்தையைக் காண முடியாது. வெறுப்பு, கோபம், அநீதி, ஊழல் - இந்த வார்த்தைகளை தான் கேட்க முடியும்." என்றார்.

'உலக உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கம்'

உலகின் எல்லா இடங்களிலும் வேலை வாய்ப்பு பிரச்னை இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அவர் பேசுகையில், "மேற்கத்திய நாடுகளில், இந்தியாவில் வேலை வாய்ப்பு பிரச்னை உள்ளது. ஆனால் சீனா மற்றும் வியட்நாமில் வேலைவாய்ப்பு பிரச்னை இல்லை. 1940, 50, 60 ஆகிய ஆண்டுகளில் உலக உற்பத்தியின் மையமாக அமெரிக்கா இருந்ததாக ராகுல் காந்தி கூறியுள்ளார். கார்கள், வாஷிங் மிஷின்கள், டிவிக்கள் எல்லாம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டன. ஆனால் படிப்படியாக இந்த தயாரிப்பு தென் கொரியா, ஜப்பான் மற்றும் இப்போது சீனாவின் கைகளுக்கு மாறிவிட்டது." என்று கூறினார்.

ராகுல் மேலும் கூறுகையில் “இன்று உலக உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவில் போன்கள், பர்னிச்சர்கள், உடைகள் என அனைத்தின் பின்புறத்திலும் "சீனாவில் தயாரிக்கப்பட்டது" என்று எழுதப்பட்டிருக்கும். அது தான் உண்மை. அப்படியானால் என்ன நடந்தது? மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உற்பத்தி யோசனையை கைவிட்டு சீனாவிடம் ஒப்படைத்துள்ளனவா" என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.

வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேசிய ராகுல் காந்தி, "உற்பத்தி துறையே வேலைவாய்ப்பை உருவாக்குகிறது" என்றார்.

ராகுல் காந்தியின் கூற்றுப்படி, உற்பத்திப் பணிகள் மற்றும் உற்பத்தியை ஒழுங்கமைப்பது பற்றி இந்தியா சிந்திக்க வேண்டும்.

“வங்கதேசம் இப்போது பிரச்னைகளை எதிர்கொள்கிறது, இருந்த போதிலும் ஆடை உற்பத்தியில் இந்தியாவுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தியது. ஆடைத் தொழிலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டனர். " என்று கூறினார்.

இருப்பினும், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோதி பல சந்தர்ப்பங்களில் கூறி வருகிறார்.

புதிய சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மெட்ரோ பாதைகள் அமைப்பது நரேந்திர மோதியின் பொருளாதாரக் கொள்கையின் மையமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அவரது அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்களை (மூலதனச் செலவு) செலவழித்து வருகிறது.

2014 மற்றும் 2024 க்கு இடையில், இந்தியாவில் சுமார் 54 ஆயிரம் கிலோமீட்டர் (33,553 மைல்) தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் அளவைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் பார்த்தால், 2020-21ல் தனியார் முதலீடு 19.6 சதவீதம் மட்டுமே. அதேசமயம் 2007-08ல், தனியார் முதலீடு ஜிடிபியில் 27.5 சதவீதத்துடன் உச்சத்தில் இருந்தது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, 2000 ஆம் ஆண்டில் நாட்டில் வேலையில்லாதவர்களில் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை 54.2 சதவீதமாக இருந்தது. அது 2022 இல் 65.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஜனநாயக சூழலில் இந்தியா உற்பத்தி செய்யும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இது நடக்கும் வரை பெரிய வேலை இல்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்து பா.ஜ.க கருத்து

ராகுல் காந்தி இதற்கு முன்பும் அமெரிக்கா சென்றுள்ளார். ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களை பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

ராகுல் காந்தியின் இந்த அமெரிக்க பயணத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன.

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, “ராகுல் காந்தியை `பப்பு அல்ல’ என்று ஒருவர் அறிமுகப்படுத்துவதை கற்பனை செய்து பாருங்கள். சாம் பிட்ரோடா அதை தான் செய்திருக்கிறார்” என்று சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, டெக்சாஸில் ராகுல் காந்தியை அறிமுகப்படுத்திய காங்கிரசில் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா, “ராகுல் காந்திக்கு ஒரு தொலைநோக்கு பார்வை உள்ளது. இது பாஜக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்ததற்கு முரணான ஒன்று. அவர் பப்பு அல்ல. அவர் நிறைய படித்தவர். புத்தகங்கள் படிப்பவர். எந்தவொரு பிரச்னையிலும் ஆழமான கருத்துகளைக் கொண்ட ஓர் உத்திசார் செயல்பட்டாளர்." என்று கூறினார்.

இந்த உரையின் ஒரு பகுதியைப் பகிர்ந்து அமித் மாளவியா டிவிட்டரில் பகடி செய்துள்ளார்.

அமெரிக்கா, ராகுல் காந்தி, மோதி, இந்தியா
படக்குறிப்பு, அரசியல் விவாதங்களில் ‘அன்புக்கு’ பதிலாக வெறுப்பு, கோபம், அநீதி, ஊழல் பற்றியே பேசப்படுகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் போது சாம் பிட்ரோடா சொன்ன ஒரு கருத்து விவாதத்தை ஏற்படுத்தியது. அதன் மூலம் அவர் வெளிச்சத்திற்கு வந்தார். சாம் பிட்ரோடா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இருப்பினும், தேர்தல் முடிந்தவுடன் அவர் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டார்.

மே 2024-இல் சாம் பிட்ரோடா ஒரு நேர்காணலில், "இந்தியா போன்ற பன்முகத்தன்மை நிறைந்த நாட்டை நாம் ஒன்றாக வைத்திருக்க முடியும், நம் நாட்டில் கிழக்கில் வாழ்பவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் வசிப்பவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் வசிப்பவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் வசிப்பவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறோம், எப்படி இருப்பினும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்.” என்று கூறினார்.

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இந்திய அரசியல் சாசனத்தை பாஜக தாக்கி வருவதாகக் கூறினார்.

"இந்தியாவை ‘ஒரே கருத்தியல் கொண்ட நாடு’ என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறது, அதேசமயம் இந்தியா ‘பல கருத்தியல்களால்’ ஆனது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று ராகுல் காந்தி கூறினார். "அமெரிக்காவைப் போலவே, அனைவருக்கும் கனவு காண உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம், அனைவருக்கும் பங்கேற்க வாய்ப்பு இருக்க வேண்டும்” என்றார் அவர்.

ராகுலின் கருத்துக்கு பதிலளித்த பாஜக எம்.பி., கிரிராஜ் சிங், "ஆர்எஸ்எஸ்ஸை பற்றி அறிய, ராகுல் காந்தி பல பிறவிகள் எடுக்க வேண்டும். எந்த துரோகியும் ஆர்எஸ்எஸ்ஸை அறிய முடியாது. வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை விமர்சிப்பவருக்கு ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரிய வாய்ப்பில்லை. இந்தியாவை இழிவுபடுத்துவதற்காகவே ராகுல் காந்தி வெளிநாடுசெல்கிறார் என்பது போல் தெரிகிறது.

இந்திய மதிப்புகள் மற்றும் கலாசாரத்தில் இருந்து உருவான அமைப்பு என்பதால், ஆர்எஸ்எஸ்ஸை இந்த ஜென்மத்தில் ராகுல் காந்தியால் புரிந்து கொள்ள முடியாது என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன்.” என்று விமர்சித்துள்ளார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)