சூரத் நகரை 2 முறை சிவாஜி கொள்ளையடித்தார் என்பது உண்மையா? ஒரு வரலாற்றுப் பார்வை

சத்ரபதி சிவாஜி, சூரத் கொள்ளை

பட மூலாதாரம், RANJIT DESAI

    • எழுதியவர், ஸ்ரீரங் கெய்க்வாட்
    • பதவி, பிபிசி மராத்திக்காக

'சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடிக்கவில்லை, இந்தப் பொய் வரலாற்றை காங்கிரஸ் கற்பித்துள்ளது' என மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து சத்ரபதி சிவாஜி உண்மையிலேயே சூரத்தை கொள்ளையடித்தாரா என்பது பற்றி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் சமீபத்தில் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து விழுந்தது குறித்துப் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், 'சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடிக்கவில்லை. சுயராஜ்ஜியத்தின் கருவூலத்தை உரியவர்களிடம் இருந்துதான் அவர் எடுத்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சியான காங்கிரஸை விமர்சித்த ஃபட்னாவிஸ், 'சத்ரபதி சிவாஜி சாமானியர்களைக் கொள்ளையடிக்க சூரத் சென்றதாக ஒரு வரலாற்றை காங்கிரஸ் பல ஆண்டுகளாக நமக்குக் கற்பித்தது,' என்று கூறினார்.

இந்தக் கருத்து பரபரப்பாகப் பேசப்பட்டு வருவதால், சத்ரபதி சிவாஜியின் சூரத் கொள்ளை வரலாறு பற்றிய விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முகலாயர்களின் நிதி மையமாக இருந்த சூரத்

சத்ரபதி சிவாஜி குஜராத்தில் உள்ள சூரத் நகரை இரண்டு முறை கொள்ளையடித்துள்ளார் என்று வரலாறு கூறுகிறது.

வரலாற்று ஆசிரியர் சி.பெந்த்ரே எழுதிய 'சத்ரபதி சிவாஜி மகராஜ்' என்ற சரித்திர நூலிலும், 1906இல் 'சத்ரபதி சிவாஜி மகராஜ்' என்ற பெயரில் கிருஷ்ணராவ் அர்ஜுன் கெலுஸ்கர் எழுதிய சரித்திர நூலிலும், ஜதுநாத் சர்க்கார் 1919 முதல் 1952 வரை எழுதிய சிவாஜியின் சரித்திரத்திலும், சூரத் கொள்ளை பற்றிய விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றின் சுருக்கம் இதுதான்.

கடந்த 1664ஆம் ஆண்டு ஜனவரி மாதம், புனேவில் ஷாஹிஸ்டே கானின் கொள்ளை மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக, சத்ரபதி சிவாஜி சூரத் நகரைச் சூறையாடினார். முகலாய தலைவரும் ஔரங்கசீப்பின் மாமாவுமான ஷாஹிஸ்டே கான், மகாராஷ்டிராவில் மூன்று ஆண்டுகள் முகாமிட்டிருந்தார். அவரால் மராட்டியப் பேரரசின் பொருளாதார நிலை சீர்குலைந்தது.

லால் மஹாலில் இருந்த ஷாஹிஸ்தே கானின் விரல்களை வெட்டி, சத்ரபதி சிவாஜி அவரை புனேவிலிருந்து வெளியேற்றினார். அதன்பிறகு, மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த சிவாஜி உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தலைநகர் ராஜ்காட்டில் இருந்து 5,300 கி.மீ., தொலைவில் உள்ள தெற்கு குஜராத்தின் சூரத் நகர், முகலாயர்களின் நிதி மையமாகவும் முக்கிய வர்த்தகத் துறைமுகமாகவும் இருந்தது. அந்நகரைக் கொள்ளையடிக்க சிவாஜி முடிவு செய்தார்.

ஜதுநாத் சர்க்கார் சிவாஜி குறித்த தனது 'சத்ரபதி சிவாஜியின் காலமும் சாதனைகளும்', எனும் நூலில், 'சூரத்தை அடைந்த பிறகு, சிவாஜி ஆங்கிலேயர்களுக்கோ மற்ற வணிகர்களுக்கோ தீங்கு விளைவிக்க அங்கு வரவில்லை என்பதை அறிவித்தார்.

'தங்கள் நாட்டைச் சூறையாடியதற்காகவும், தங்கள் உறவினர்கள் சிலரைக் கொன்றதற்காகவும் ஔரங்கசீப்பை பழிவாங்க அவர்கள் அங்கு வந்திருந்தனர். ஆனால் பணம் பெறுவதும் அவரது நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அந்த நான்கு நாட்களில் முடிந்தவரை கொள்ளையடிக்க அவர்கள் விரும்பினர். அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு சீக்கிரம் வெளியேறவும் விரும்பினர்,' என்று குறிப்பிடுகிறார்.

உலக வர்த்தகத்தின் மையமாக இருந்த சூரத் நகரம்

சத்ரபதி சிவாஜி, சூரத் கொள்ளை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்கால சூரத் துறைமுகத்தின் ஓவியம்

அந்தக் காலத்தில் சூரத் இந்தியாவுடன் மட்டுமல்லாமல், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் வர்த்தகம் செய்து வந்தது. முகலாயர்களுக்கு வணிக வரி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கிடைத்தது. அந்நகரம் 5,000 வீரர்கள், அரண்கள் ஆகியவற்றால் பாதுகாக்கப்பட்டது.

சிவாஜி முதலில் தனது உளவுத் தலைவர் பஹிர்ஜி நாயக் மூலம் சூரத்தை சுமார் மூன்று மாதங்கள் உன்னிப்பாகக் கவனித்தார்.

சூரத்தில் இருந்த 5,000 முகலாயர்களில், 1,000 பேர் மட்டுமே போரிடக் கூடியவர்கள். விரைவாகச் செயல்பட வேண்டும் என பஹிர்ஜி பரிந்துரைத்தார். அதன்படி, மராட்டியர்களின் 8,000 பேர் கொண்ட குதிரைப் படை, மிக வேகமாக நகர்ந்து, 20 நாட்களில், 1664ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி சூரத் அருகேயுள்ள கன்தேவி கிராமத்தை அடைந்தது.

அங்கிருந்து முகலாய சூரத்தின் சுபேதாரான இனாயத் கானிடம் ஒரு வழக்கறிஞரை அனுப்பினார் சிவாஜி. அவர் மூலம், 'இனாயத் கானும், சூரத்தின் முக்கிய வணிகர்களும், சிவாஜி கேட்கும் அளவுக்குக் கப்பம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி நடக்கவில்லை எனில் அவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல' என, செய்தி அனுப்பினார். இனாயத் கான் இந்தச் செய்தியால் பயந்து சூரத் கோட்டையில் ஒளிந்துகொண்டார். அவரது படையின் எதிர்ப்பை மராட்டியர்கள் எளிதில் முறியடித்தனர்.

சூரத் நகருக்குள் நுழைந்ததும் மராட்டிய வீரர்கள் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்தனர். முகலாய கப்பல்கள், சூரத் துறைமுகத்தைத் தாக்கி, கடலில் இருந்து எதிரிகள் வருவதைத் தவிர்ப்பதற்காக அதன் கோட்டைக்குத் தீ வைத்தன. இருப்பினும், மராட்டியர்கள் அங்குள்ள ஐரோப்பிய கோட்டைகளையோ, கவசங்களையோ தாக்கவில்லை. சூரத்தை கொள்ளையடிப்பதே அவர்களது முக்கிய நோக்கமாக இருந்ததால், தேவையில்லாமல் சண்டையிட மராட்டியர்கள் விரும்பவில்லை. அங்கிருந்த தேவாலயங்களைக்கூட மராட்டியர்கள் கவனிக்கவில்லை.

மராட்டியர்கள் பலத்த பாதுகாப்புடன் நகரத்தில் ஊடுருவத் துவங்கினர். முகலாய நிர்வாக மற்றும் வருவாய் அலுவலகங்களின் கஜானாக்கள் காலியாகின. போர்ச்சுகீசியர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள போதுமான படைகள் இல்லாமல் இருப்பதைக் கண்டு அவர்களிடமிருந்தும் செல்வத்தை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மூன்று நாட்கள் மராட்டிய வீரர்கள் சூரத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் பணம் கடனளிக்கும் வணிகர்களின் மாளிகைகளில் இருந்து பெருமளவிலான செல்வத்தைச் சேகரித்தனர்.

இவர்களில், விர்ஜி வோரா, ஹாஜி ஜாஹித் பேக், ஹாஜி கசம் போன்ற முக்கிய வணிகர்களும் அடங்குவர். அப்போது மோகன்தாஸ் பரேக், சூரத்தில் உள்ள கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அவர் மக்களுக்கு உதவிகள் செய்தார். எனவே அவரது கோட்டையை மராட்டியர்கள் தாக்கவில்லை. மற்ற மத மிஷனரிகளின் சொத்துகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

‘ஆட்சி நடத்த சூரத்தின் பொக்கிஷம்’

சத்ரபதி சிவாஜி, சூரத் கொள்ளை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாமஸ் ரோ, ஆக்ரா நீதிமன்றத்தில் பேரரசர் ஜஹாங்கீரிடம் சூரத்தின் வகாரி பகுதியைப் பாதுகாக்கக் கோரி ஒரு கடிதத்தை சமர்ப்பிக்கிறார்

மராட்டியர்கள், பாதிரியார் ஆம்ப்ரோஸின் கட்டடங்களை மதித்தார்கள்.

பிரான்ஸ் நாட்டுப் பயணியான பிரான்சுவா பெர்னியர் தனது நூலில் 'பிராங்கிஷ் பாதிரியார்கள் நல்லவர்கள் என்றும் அவர்களைத் தாக்க வேண்டாம் என்றும் சிவாஜி உத்தரவிட்டதாக' எழுதியுள்ளார்.

இதற்கிடையில், இனாயத் கான் ஒரு வழக்கறிஞரை மராட்டியரிடம் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார். பார்வையிட வந்த இந்த வழக்கறிஞர் சத்ரபதி சிவாஜியை நேரடியாகத் தாக்கினார். சிவாஜியின் பாதுகாவலர்கள் அந்த வழக்கறிஞரைக் கொன்றனர்.

அப்போது ஆத்திரமடைந்த மராட்டியர்கள் நான்கு கைதிகளைக் கொன்று 24 கைதிகளின் கைகளை வெட்டினர். பின்னர் மராட்டியர்கள் சூரத்தை விட்டு வேகமாகப் புறப்பட்டு ராஜ்காட்டை அடைந்தனர். இந்த சூரத்தின் பொக்கிஷத்தை சிவாஜி தனது ஆட்சி நிர்வாகத்துக்காகப் பயன்படுத்தியதாக சி.பெந்த்ரே தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இரண்டாம் முறை கொள்ளையடிக்கப்பட சூரத்

சிவாஜி ஆக்ராவில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு இரண்டாவது முறை சூரத்தை கொள்ளையடித்தார். முதல் கொள்ளை சம்பம் நடந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1670ஆம் ஆண்டு, அக்டோபர் 3 அன்று இது நடந்தது.

அவர், மராட்டிய ராஜ்ஜியத்தின் நிதி நிலையை மீட்டெடுக்க, சூரத்தில் இருந்து பெரும் செல்வத்தைக் கொண்டு வந்தார். ஆக்ராவிலிருந்த முகலாய சிறையிலிருந்து சிவாஜி எப்படித் தப்பினார் என்பதே இந்தக் காலகட்டத்தின் முக்கிய வரலாறு. முதல் கொள்ளைக்குப் பிறகு ஔரங்கசீப் கோபமடைந்தார். மராட்டிய ராஜ்ஜியத்தை தாக்க மிர்சராஜே ஜெய்சிங்கை அனுப்பினார்.

சூழ்நிலை காரணமாக, பெரும் படையுடன் வந்த ஜெய்சிங்குடன் சிவாஜி ஒப்பந்தம் செய்ய வேண்டியதாயிற்று. அந்தப் புகழ்பெற்ற புரந்தர் ஒப்பந்தத்தில், சிவாஜி 23 கோட்டைகளையும் நான்கு லட்ச ரூபாயையும் கப்பமாகச் செலுத்த வேண்டியிருந்தது. அதன் பிறகு, அவர் ஆக்ராவில் இருந்த ஔரங்கசீப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

நீதிமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்ட பிறகு, அவர் வீட்டுக் காவலில் இருக்க வேண்டியிருந்தது. அந்தச் சிறையிலிருந்து சிவாஜி தப்பியது வரலாற்றில் நன்கு அறியப்பட்ட நிகழ்வாகும். இதற்கிடையில், சிவாஜி உருவாக்கிய ராஜ்ஜியம் பெரும் இழப்பைச் சந்தித்தது. அதை ஈடுசெய்ய அவர் மீண்டும் சூரத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தார்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்கவும், மாநிலத்தின் நிதி நிலைமையைச் சரிசெய்யவும் போதுமான முன் தயாரிப்புகளைச் செய்தபின் அவர் சூரத் நகரத்தை இரண்டாவது முறையாகக் கொள்ளையடிக்க, ஒரு தாக்குதலை நடத்தினார். இந்தத் தாக்குதல் பற்றிய செய்தி சூரத்தின் சுபேதாருக்கு ஏற்கெனவே வந்துவிட்டது. ஆனால் வலுவிழந்த மராட்டியர்கள் இரண்டாவது முறை தாக்குவார்கள் என்று அவர் நினைக்கவில்லை.

முன்பே அனுப்பப்பட்ட செய்தி

சத்ரபதி சிவாஜி, சூரத் கொள்ளை

அங்குள்ள பிரிட்டிஷ் அதிகாரி ஜிரால்ட் ஆஞ்சியர், ஆற்றின் குறுக்கே உள்ள ஸ்வாலி துறைமுகத்திற்குத் தனது படைகளை அனுப்பினார். முகலாய சுபேதார், 300 வீரர்கள் கொண்ட படையுடன் பயமின்றிக் காத்துக் கொண்டிருந்தார். 1670ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, 15,000 மராட்டியர்கள் சூரத்தின் எல்லையைத் தாக்கினர்.

சிவாஜி முகலாய சுபேதாருக்கு தூது அனுப்பினார். 'உங்கள் ஆட்சியாளர்களின் நடத்தைதான் என்னை ஒரு பெரிய படையைத் திரட்ட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியது. இந்தப் படைக்கு உணவளிக்கப் பணம் தேவை. எனவே முகலாயர்கள் தங்களின் செல்வத்தில் கால் பங்கை எனக்குக் கொடுக்க வேண்டும்' என்றார்.

அந்த நேரத்தில் சிவாஜி குறிப்பிட்ட கால் பங்கு அவரது ராஜ்ஜியத்தின் கீழ் இல்லாத, அவரால் படையெடுப்பில் இருந்து பாதுகாக்கப்பட்ட பிரதேசத்திற்கு வழங்கப்பட்டது.

ஆனால், இதற்கு எந்தப் பதிலும் வராததால் மராட்டியர்கள் அக்டோபர் 3ஆம் தேதி சூரத்திற்குள் நுழைந்தனர். மூன்று நாட்கள் மராட்டியப் படை சூரத்தைச் சூறையாடியது. பணம், தங்கம், வைரம், நகைகள், ஆகியவை பெரிய வியாபாரிகள், பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டன. இதனால் சாமானியர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.

மதம், ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைபிடிப்பவர்களும் இந்தக் கொள்ளையில் இருந்து விலக்கப்பட்டனர். முதல் கொள்ளையில் சூரத்தில் இருந்து மராட்டியர்கள் 80 லட்ச ரூபாய் பெற்ற நிலையில், இரண்டாவது கொள்ளையில் 66 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

'கொள்ளை' என்று முதலில் குறிப்பிடப்பட்டது எப்போது?

வரலாற்று அறிஞர் சஞ்சய் சோன்வானி சூரத் கொள்ளையைப் பற்றி 650 பக்க நாவலை எழுதியுள்ளார். இது நாவல் என்றாலும் சரித்திர உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் வரலாற்றைச் சிதைக்காதவாறு பார்த்துக் கொண்டதாக சோன்வானி கூறுகிறார்.

சிவாஜி குறித்து 'கொள்ளை’ என்று பிரபலப்படுத்தியது காங்கிரஸ் என மராட்டிய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் சோன்வானி பிபிசி மராட்டியிடம் கூறுகையில், 'அந்தக் கால கடிதங்களிலும், சிவாஜி காலத்து நீதிமன்ற ஆவணங்களிலும் ‘கொள்ளை’ என்ற வார்த்தை உள்ளதாக,’ கூறுகிறார்.

வெளிநாட்டு வரலாற்றாசிரியர்களும் இந்தச் சம்பவத்தை 'கொள்ளை' என்றே குறிப்பிடுகின்றனர்.

ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரே எழுதிய 'ராஜா ஷிவ்சத்ரபதி' நூலின் இரண்டு தொகுதிகளிலும் சூரத் கொள்ளை பற்றிய விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், முதல் கொள்ளைக்குப் பிறகு, சிவாஜி, 'எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட பகை இல்லை, எப்போதும் இருந்ததில்லை. சூரத்தை ஔரங்கசீப்பை பழிவாங்கக் கொள்ளையடித்தோம். ஔரங்கசீப் மூன்று வருடங்கள் தொடர்ந்து நமது நிலத்தைப் பாழாக்கினார். பழிவாங்கும் விதமாக சூரத்தை கொள்ளையடித்தோம். பல நாட்களாக எங்களது ஆலோசனையில் இது நிறைவு பெற்றது,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'சிவாஜி ஒழுக்க நெறியைப் பின்பற்றினார்'

சத்ரபதி சிவாஜி, சூரத் கொள்ளை
படக்குறிப்பு, சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழா

வரலாற்று அறிஞர் இந்திரஜித் சாவந்த் கூறுகையில், “சூரத் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, அங்குள்ள ஆங்கிலேயர்கள் மூலம் பிரிட்டனுக்கு கடிதப் பரிமாற்றம் நடந்தது. இதில் ‘கொள்ளை’ என்ற வார்த்தை தெளிவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேய அதிகாரியான எஸ்கலேட், சத்ரபதி சிவாஜியின் கூடாரத்தில் தனக்கு முன் வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற செல்வக் குவியல்களைப் பற்றி விவரிக்கிறார்,” என்கிறார்.

மெம்பர் பக்கர், வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்க்கார், கஜானன் மெஹந்தலே, பாபாசாகேப் புரந்தரே, போன்றோர் இந்தச் சம்பவத்தைப் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். அன்றைய காலத்தில் எதிரியின் எல்லைக்குள் புகுந்து கொள்ளையடிப்பதும், கப்பம் வசூலிப்பதும் சகஜம். எல்லா அரசர்களும் மற்ற அரசர்களின் பிரதேசங்களில் இதைச் செய்து வந்தனர். நிச்சயமாக, சிவாஜி இந்த விஷயத்தில் நெறிமுறைகளைப் பின்பற்றினார்.

உதாரணமாக, சூரத் கொள்ளையில், பெண்களைத் துன்புறுத்தக்கூடாது, ஏழைகளிடம் கொள்ளையடிக்கக்கூடாது என்று சிவாஜி தனது படைக்கு அறிவுறுத்தினார். சுவாரஸ்யமாக, இந்தக் கொள்ளைச் சம்பவத்தின்போது ஒரு பிரிட்டிஷ் பெண்ணின் வீட்டை அவர் பாதுகாத்தார். மேலும், கொள்ளையடித்த பிறகு, ஏழைகளுக்கு ஏராளமான செல்வங்களைப் பகிர்ந்தளித்தார்.

'இது ஒரு மூலோபாய நடவடிக்கை'

சத்ரபதி சிவாஜி, சூரத் கொள்ளை
படக்குறிப்பு, சூரத்தின் இரண்டாவது கொள்ளைச் செய்தி பிரிட்டிஷ் அரசின் 'லண்டன் கெசட்' நாளிதழில் பிரசுரமானது

மராட்டிய ராஜ்யத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதுடன், முகலாயர்களின் கோட்டையாக மாறிய சூரத் துறைமுகத்தை வீழ்த்துவது சிவாஜியின் மூலோபாய நடவடிக்கையாகும். பின்னர் அவர் மேற்குக் கடற்கரையில் வணிகர்களை ஆதரித்தார்.

சூரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவாஜியின் சிலை சமீப காலத்தைச் சேர்ந்தது. இடைக்காலத்தில், குஜராத் மராட்டியர்களால் ஆளப்பட்டது. சர்தார் தாமாஜி கெய்க்வாட், தாமாஜி தோரட் போன்றவர்கள் குஜராத்தில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் மூலம் சிவாஜியின் பாரம்பரியம் குஜராத்தில் தொடர்ந்தது.

சிவாஜியின் செயல்பாடுகளை ஆங்கிலேயர்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். அதனால்தான், சூரத்தின் இரண்டாவது கொள்ளைச் செய்தி பிரிட்டிஷ் அரசின் 'லண்டன் கெசட்' நாளிதழில் பிரசுரமானது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முகலாயர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களும் பயந்ததாக அது குறிப்பிடுகிறது. இந்தச் செய்தியில், ‘புரட்சியாளர் சத்ரபதி சிவாஜி கிட்டத்தட்ட நாட்டின் தலைவனாக மாறிவிட்டார்’ என்று பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

சூரத் கொள்ளையால் என்ன பலன் கிடைத்தது?

வரலாற்று ஆசிரியர் டபிள்யூ.சி.பெந்த்ரே, தனது சிவாஜி வாழ்க்கை வரலாற்றில் உறுப்பினர் பக்ரியை குறிப்பிடுகிறார்.

‘சூரத்தின் கொள்ளையால், சத்ரபதி சிவாஜியின் சக்தி மற்றும் பலத்தின் புகழ் வெகுதூரம் பரவியது. மேலும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக இரண்டு பெரிய மோதல்களை எதிர்கொண்டதில் அவர் எதிர்கொள்ள வேண்டிய நிதி இழப்பு ஈடுசெய்யப்பட்டது.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களால், சிவாஜியின் ராஜ்ஜியம் அமைக்கும் முயற்சியில் எந்தத் தளர்வும் ஏற்படவில்லை. மாறாக, ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்கு இந்தச் சம்பவம் சாதகமாக அமைந்தது. மேலும், முகலாய ராணுவம் வெகுதூரம் அணிவகுத்துச் செல்வதற்கு முன், தாயகத்தின் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய ராணுவத்தை வைத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் இந்த வீரர்களின் பலம் குறைந்தது.

ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கும், மராட்டிய அரசை விரிவாக்கவும் சூரத்தின் கொள்ளையால் சிவாஜிக்கு பெரும் பலன் கிடைத்தது என்பதே பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)