இந்தியா ஒலிம்பிக்கை விட பாராலிம்பிக்கில் 4 மடங்கு அதிக பதக்கங்களை வென்றது எப்படி?

ப்ரீத்தி பால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாரா ஒலிம்பிக்கில் ப்ரீத்தி பால் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்
    • எழுதியவர், ஜான்வி மூலே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

செப்டம்பர் 6, 2024 அன்று, பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது 27வது பதக்கத்தை வென்றது. பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த செயல்திறன் இதுவாகும்.

இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை இது ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், பலரையும் இந்த வெற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏனென்றால், பாராலிம்பிக் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லவில்லை.

ஒலிம்பிக் போட்டிக்கு 110 வீரர்கள் கொண்ட குழுவை இந்தியா அனுப்பியிருந்தது. இருந்த போதிலும், இந்தியா அணியால் ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்கள் அதாவது மொத்தம் 6 பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இது தவிர, ஆறு வீரர்கள் நான்காவது இடத்தைப் பெற்றிருந்தனர்.

பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஒலிம்பிக்கைவிட நான்கு மடங்கு அதிக பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்தியா மட்டுமல்ல, பிரிட்டன், யுக்ரேன், நைஜீரியா போன்ற நாடுகளும் ஒலிம்பிக்கைவிட பாராலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இத்தகைய சூழ்நிலையில், ஒலிம்பிக்குடன் ஒப்பிடுகையில், பாராலிம்பிக் போட்டிகளில் சில நாடுகள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட்டன என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.

ஆனால், இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்பதை நாம் அறிய வேண்டும். ஏனெனில் இரண்டு நிகழ்வுகளிலும் போட்டிகளின் நிலை என்பது வேறு. தவிர, இதில் பங்கேற்கும் வீரர்களின் மன மற்றும் உடல் திறன்களும் வேறுபடுகின்றன.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது ஒரு வீரரின் உடல் நிலை அல்லது உடலின் திறனுக்கான சோதனை என்றும், மறுபுறம் பாராலிம்பிக் போட்டிகள் என்பது ஒரு நபரின் மன உறுதியையும் தைரியத்தையும் சோதிப்பதற்கானவை என்றும் கூறப்படுகிறது.

இப்போது ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்க வெற்றிகளில் இவ்வளவு வித்தியாசம் ஏன்? இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அதோடு புள்ளிவிவரங்களும் ஒரு கதையைச் சொல்கின்றன.

அதிக பதக்கங்கள், குறைவான போட்டிகள்

பாராலிம்பிக்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாராலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய துப்பாக்கிச் சுடுதல் குழு

முதல் விஷயம் என்னவென்றால், ஒலிம்பிக்குடன் ஒப்பிடும்போது பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வழங்கப்படுகின்றன மற்றும் குறைந்த நாடுகளே இதில் பங்கேற்கின்றன.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 204 அணிகள் பங்கேற்று மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 தங்கப் பதக்கங்களை வென்றனர். அதேநேரம் பாராலிம்பிக்கில் 22 விளையாட்டுகளில் 549 தங்கப் பதக்கங்களுக்காக 170 அணிகள் பங்கேற்கின்றன.

இவ்வாறு இருக்க, இயற்கையாகவே பாராலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பாராலிம்பிக் மற்றும் ஒலிம்பிக் என இரண்டிலும் பங்கேற்கும் நாடுகளுக்கு, பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உதாரணமாக சீனாவை எடுத்துக்கொண்டால், டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா 89 பதக்கங்களையும், டோக்கியோ பாராலிம்பிக்கில் சீனா 207 பதக்கங்களையும் வென்றது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 64 பதக்கங்களையும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடைபெற்ற பாராலிம்பிக்கில் 124 பதக்கங்களையும் பிரிட்டன் வென்றிருந்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களையும், பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களையும் இந்தியா வென்றது. இதேபோன்ற உதாரணங்களைத்தான் பாரிஸ் பதக்க அட்டவணையிலும் காண முடிகிறது.

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முன்னணியில் இருந்த சில நாடுகள், பாராலிம்பிக்கில் பின்தங்கி இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளும் அடங்கும்.

ஆனால் நைஜீரியா, யுக்ரேன், இந்தியா போன்ற நாடுகள் பாராலிம்பிக்கில் சிறப்பாகச் செயல்பட்டன. இதன் பின்னணியில் உள்ள காரணங்களைப் பார்க்கலாம்.

மருத்துவ வசதிகள்

 ஹர்விந்தர் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங்

ஒலிம்பிக் செயல்திறன் ஒரு நாட்டின் மக்கள் தொகை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் நேரடியாகத் தொடர்புடையது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாறான நிலையில் பணக்கார நாடுகள் அதிக பதக்கங்களைப் பெறுகின்றன என்று கூற முடியாது ஆனால் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ள நாடுகள் ஒப்பீட்டளவில் பணக்கார நாடுகள் என்பதையும் மறுக்க முடியாது.

பாராலிம்பிக்கை பொறுத்தவரை, பணத்தைவிட முக்கியமான இரண்டு விஷயங்கள் நாட்டின் மருத்துவ வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீதான அதன் அணுகுமுறை.

பாராலிம்பிக்கில் அமெரிக்காவைவிட பிரிட்டனின் ஆட்டம் சிறப்பாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

இந்தியாவில் மருத்துவ வசதிகளில் ஏற்றத்தாழ்வு உள்ளது. ஆனால் இது இருந்தபோதிலும், உலகின் பல நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மருத்துவ வசதிகள் ஒப்பீட்டளவில் மலிவானவை.

அதாவது, பாரா-தடகள வீரர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எந்தவொரு மாற்றுத்திறனாளி நபரும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற அதிக வசதி வாய்ப்புகள் உள்ளளன.

பாரா விளையாட்டு கலாச்சாரம்

மாரியப்பன் தங்கவேலு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்

சீனா மற்றும் பிரேசிலை போலவே, இந்தியாவும் அதிக மக்கள் தொகை ஒரு கொண்ட நாடு, அதாவது வெவ்வேறு பாரா-விளையாட்டுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் உள்ளனர். ஆனால் அதிக எண்ணிக்கையில் வீரர்கள் இருந்தாலும், செயல்திறன் சிறப்பாக இருப்பது என்பது எப்போதும் நடக்காது.

இது நாட்டின் கலாசாரம் மற்றும் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் மீதான அணுகுமுறை என்ன என்பதைப் பொறுத்தது. இதற்கு இந்தியா சிறந்த உதாரணம்.

பல நாடுகளில், மாற்றுத்திறன் உடையவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் அல்லது பரிதாபமாக நடத்தப்படுகிறார்கள். அங்கு மாற்றுத் திறனாளிகள் வீரர்களாகக் கருதப்படுவதில்லை.

இந்த விஷயத்தில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஆனால் சமீப காலமாக, சமூகத்திலும் விளையாட்டுக் கண்ணோட்டத்திலும் பெரிய மாற்றம் காணப்படுகிறது. இந்த மனப்பான்மை பாராலிம்பிக்கில் இந்தியாவின் ஆட்டத்தில் பிரதிபலித்தது என்று சொல்லலாம்.

கடந்த 20 ஆண்டுகளில் பாரா-விளையாட்டுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால், மத்திய, மாநில அளவில் வீரர்களுக்கு வழங்கப்படும் நிதியும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில், 2010இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர், சர்வதேச பதக்கங்களை வெல்லும் வீரர்கள் மற்றும் பாரா வீரர்கள் என இரு தரப்புக்கும் ஒரே மாதிரியான ரொக்கப் பரிசுகளை வழங்கத் தொடங்கியது விளையாட்டு அமைச்சகம்.

இந்த விஷயத்தில் ஹரியாணா மிகவும் முன்னிலையில் உள்ளது. பாரா விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க ஹரியாணா அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இம்முறை பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்ற 84 வீரர்கள் கொண்ட இந்திய அணியில், 23 வீரர்கள் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

பாரா விளையாட்டு வீரர்களுக்கு மிகப் பெரிய விருதுகள், அரசு வேலைகள் மற்றும் கௌரவங்களை வழங்குவதன் மூலம் ஹரியாணா இந்த விளையாட்டுகளை ஊக்குவித்துள்ளது மற்றும் இது பொது மக்களிடையே பாரா-விளையாட்டுகளுக்கு ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசி பஞ்சாபியில் வெளியான ஒரு கட்டுரையில், பாரா விளையாட்டுத் துறையில், ஹரியாணாவின் அடிச்சுவடுகளை எவ்வாறு பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன என மூத்த பத்திரிக்கையாளர் சௌரப் துக்கல் கூறியிருந்தார்.

வீரர்கள் மத்தியில் விழிப்புணர்வு

இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாரிஸ் பாராலிம்பிக் 2024 தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி

நாட்டில் பாரா விளையாட்டு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதில் வீரர்களுக்கு முக்கியப் பங்குள்ளது என்று கூறுகிறார் சக்கர நாற்காலி- கிரிக்கெட் வீரர் ராகுல் ராம்குடே.

"உடல் குறைபாடுகளை எதிர்கொள்ளும் ஒரு நபர் அதிலிருந்து வெளியே வந்து தனது சொந்த அடையாளத்தை உருவாக்க விரும்புகிறார். அவர் ஏதாவது செய்ய விரும்புகிறார். விளையாட வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் முழு உழைப்பையும் கொடுக்கத் தயாராக உள்ளனர். அதுமட்டுமின்றி, தற்போது பல பாரா விளையாட்டு வீரர்கள் மற்றவர்களுக்கு உதவவும் வழிகாட்டவும் தாங்களாகவே முன்வருகின்றனர்” என்று கூறுகிறார் அவர்.

ராகுலும் அவரது சகாக்களும் இந்தியாவில் சக்கர நாற்காலி கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடையாளப் பிரச்னையும் இங்கே முக்கியமானது. உண்மையில், ஒலிம்பிக் வீரர்களுடன் ஒப்பிடுகையில் பாராலிம்பிக் வீரர்களுக்குக் குறைவான மீடியா வெளிச்சமும், சமூகத்தின் கவனமும் கிடைக்கிறது. இதன் பொருள், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்படும் அழுத்தமும் குறைவாகவே உள்ளது.

ஆனால் பாரா-தடகள வீரர்களுக்கு வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும், பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ளது. அதுதான் அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்

அவனி லெகரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அவனி லெகரா டோக்கியோ மற்றும் பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்

இருப்பினும், இந்தியாவில் பாரா-விளையாட்டுகள் மீதான அணுகுமுறை மாறிவிட்டது. ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது, அவை எல்லாம் அவ்வளவு எளிதானது அல்ல. மேலும் பாரா வீரர்களும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான அவனி லெகரா டோக்கியோ மற்றும் பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆனால் அவர் பயிற்சி எடுத்த தளத்தில், நீண்ட காலமாக சக்கர நாற்காலிகளுக்கான பாதை அமைக்கப்படவில்லை.

பின்னர், அவனியின் முயற்சியால், இங்கு சாய்வுதளம் கட்டப்பட்டது.

இது ஒரு இடத்தின் கதையல்ல, நாட்டில் உள்ள பல மைதானங்கள், பயிற்சி மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கழிவறைகள் போன்றவற்றின் நிலையும் இப்படித்தான் இருப்பதாகக் கூறுகிறார் ராகுல் ராம்குடே.

அவ்னியின் சாதனைகளை விவரித்த இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் சுமா ஷிரூரும் இதையே கூறியிருந்தார்.

“பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்குப் பிறகு, அவனியுடைய பயணத்தின் அடுத்த கட்டம் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக, தற்சார்பாக வாழ்வதுதான். ஆனால் நம் நாட்டில் அது எளிதானது அல்ல. ஏனெனில் நமது அமைப்பில் உள்ள விஷயங்கள் பாரா வீரர்களுக்கு ஆதரவாக இல்லை அல்லது சக்கர நாற்காலிகள் பயன்படுத்த ஏற்ற பொது இடங்கள் இல்லை. ஆனாலும் அவனி சுதந்திரமாக வாழ விரும்புகிறாள்,” என்று சுமா கூறுகிறார்.

பாராலிம்பிக்கில் இந்தியா பெற்ற வெற்றியின் மிக முக்கியமான பாடம் இது. இந்தியா தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், இந்தத் திசையில் தொடர்ந்து உழைத்து, பாரா விளையாட்டுக்கான அணுகலை இன்னும் எளிதாக்க வேண்டும்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)