பிசியோதெரபி சிகிச்சை என்றால் என்ன? யாருக்கெல்லாம் தேவைப்படுகிறது?

பிசியோதெரபி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? அதன் வகைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பிசியோதெரபி. இந்த வார்த்தையைக் கேட்டவுடன், உடற்பயிற்சி, உடல் அசைவுகள், மசாஜ், ஆகியவற்றுடன் கூடிய ஒரு குழப்பமான பிம்பம்தான் பலரது மனங்களில் தோன்றும்.

ஆனால், பல ஆண்டுகளாக, உடல் இயக்கம் சார்ந்த குறைபாடுகளைச் சரி செய்வதற்காக அடிப்படை மருத்துவத்துடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் பிசியோதெரபி என்றால் என்ன? அது எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

இதுகுறித்து அறிந்துகொள்ள, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பிசியோதெரபி நிபுணரான எழில்வாணனிடம் பிபிசி தமிழ் பேசியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிசியோதெரபி என்றால் என்ன?

பிசியோதெரபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விபத்தினாலோ, பக்கவாதம் போன்ற நோய்த் தாக்குதலினாலோ பாதிக்கப்பட்ட நபர்கள் பல நாட்கள் படுக்கையிலேயே இருந்தால், அவர்களது தசைகள் பலவீனாமாகியிருக்கும்

இதற்கு எளிமையாகப் பதிலளிக்க வெண்டுமெனில், ‘பிசியோதெரபி புனர்வாழ்வு மற்றும் வலி நிவாரணத்துக்கான ஒரு வழிமுறை’ என்கிறார், எழில்வாணன்.

அதாவது, விபத்தினாலோ, வேறு நோய்த் தாக்குதலினாலோ உடல் இயக்கம் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, சில முறைகள் மூலம் மீண்டும் அந்த உடலியக்கங்களைச் சரிசெய்வதுதான் பிசியோதெரபி. அதேபோல உடலில் சில பகுதிகளில் இருக்கும் வலிக்கு நிவாரணம் அளிக்கும் சிகிச்சைகளும் பிசியோதெரபியில் உள்ளன.

“விபத்தினாலோ, அடிபட்டோ, உடல் இயக்கம் பாதிக்கப்பட்டவர்களை மருந்துகளால் மட்டும் முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதற்கான ஒரு துணை சிகிச்சை முறையாகத்தான் பிசியோதெரபி இருக்கிறது,” என்கிறார் எழில்வாணன்.

மேலும், இந்தப் பிரச்னைகளுக்காக நாட்பட்ட அளவில் மருந்துகளை உட்கொண்டால், சிறுநீரகப் பிரச்னை, இரைப்பை அழற்சி (gastritis), குடல் மற்றும் வயிற்றுப் புண் (ulcer) ஆகியவை ஏற்படக்கூடும் என்பதால், ஒரு கட்டத்திற்கு மேல், மருத்துவர்களே மருந்துகளைக் குறைத்துவிட்டோ அல்லது நிறுத்திவிட்டோ, பிசியோதெரபி செய்யப் பரிந்துரைப்பதாக எழில்வாணன் கூறுகிறார்.

பிசியோதெரபியில் என்னென்ன முறைகள் உள்ளன?

பிசியோதெரபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘ரெசிஸ்டன்ஸ்’ உடன் கூடிய உடற்பயிற்சி முறை, நோயாளிகளின் கைகளிலோ, கால்களிலோ எடைகள், ஸ்பிரிங்க் ஆகியவற்றைப் பொருத்தி, அவற்றோடு சேர்த்து கை-கால்களைத் தூக்கவோ அசைக்க வைப்பது

பிசியோதெரபி சிகிச்சை முறைகளுக்கு இரண்டு முக்கியமான நோக்கங்கள் உள்ளன என்கிறார் எழில்வாணன்.

  • புனர்வாழ்வு: விபத்திலோ, வேறு நோயாலோ உடலியக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வியக்கங்களைச் சரிசெய்வது
  • வலி நிவாரணம்: உடலில் நாட்பட்ட முறையில் இருக்கும் வலியைப் போக்குவது

இவற்றுக்கு பிசியோதெரபியில் இரண்டு சிகிச்சை முறைகள் உள்ளன.

1) உடற்பயிற்சி சிகிச்சை: இது கை-கால் அசைக்க முடியாமல், நடக்க முடியாமல் இருப்பவர்களுக்கு, உடற்பயிற்சி முறைகள் மூலம் மீண்டும் கை-கால் அசைவுகளைச் சீராக்குவது.

இதில் மூன்று வகைகள் உள்ளன என்கிறார் எழில்வாணன்.

  • நேரடி உடற்பயிற்சி: பிசியோதெரபிஸ்ட் கற்றுத் தரும் உடற்பயிற்சிகளை நோயாளிகள் அவர்களாகவே செய்வது
  • உதவியுடன் கூடிய உடற்பயிற்சி: தாமாகவே உடற்பயிற்சி செய்ய முடியாத நோயாளிகளுக்கு, அதைச் செய்ய பிசியோதெரபிஸ்ட் உதவி செய்வது
  • ‘ரெசிஸ்டன்ஸ்’ உடன் கூடிய உடற்பயிற்சி: இந்த முறையில், நோயாளிகளின் கைகளிலோ, கால்களிலோ எடைகள், ஸ்பிரிங்க் ஆகியவற்றைப் பொருத்தி, அவற்றோடு சேர்த்து கை-கால்களைத் தூக்கவோ அசைக்கவோ வைப்பது. இதில், ஒரு சுவற்றிலோ, அசைக்க முடியாத இடத்திலோ ‘தெராபேண்ட்’ (theraband) என்ற பட்டையான, கடினமான ரப்பர் பேண்டை பொருத்தி அதை கை-கால்களில் மாட்டி, அதனோடு சேர்த்து அவற்றை அசைக்க வைப்பது.

எலெக்ட்ரோ தெரபி

பிசியோதெரபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எலெக்ட்ரோ தெரபி முறையில், வெப்பம், ஒளி, மின்காந்த அலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்படுகிறது

2) எலெக்ட்ரோ தெரபி: இது நாட்பட்ட உடல் வலி, அல்லது உடலின் சில பகுதிகளில் இருக்கும் வலியைப் போக்கப் பயன்படுத்தப்படுகிறது.

நாட்பட்ட அளவில் முதுகு, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றில் இருக்கும் வலி, அல்லது ஆர்த்ரைடிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.

இந்த முறையில், மின்சாரம் மூலம் இயங்கும் சாதனங்களைப் பயன்படுத்தி வலியைப் போக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறுகிறார் எழில்வாணன்.

இம்முறையில், வெப்பம், ஒளி, மின்காந்த அலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்படுகிறது. இதற்கு, அல்ட்ராசௌண்ட், லேசர், ஷார்ட் வேவ் டயாதெர்மி, அல்ட்ராவயலட் ஆகிய இயற்பியல் விளைவுகளை உருவாக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தசைகளில் வெப்பத்தை உருவாக்கி, வலியைச் சரி செய்கின்றன.

பொதுவாக, கழுத்து வலி, முதுகு வலி ஆகிய பிரச்னைகளுக்காக பிசியோதெரபி சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, அவுட் பேஷண்ட்களாக வலி நிவாரண சிகிச்சையளிக்கப்படுக்கிறது. அதுவே எலும்புமுறிவு, அல்லது பெரியளவிலான உடல் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள், பொதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவார்கள், அவர்களுக்கு புனர்வாழ்வு சிகிச்சையான உடற்பயிற்சி சிகிச்சையளிக்கப்படுகிறது, என்கிறார் எழில்வாணன்.

பிசியோதெரபி சிகிச்சையின் பலன்கள் என்ன?

பிசியோதெரபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாமாகவே உடற்பயிற்சி செய்ய முடியாத நோயாளிகளுக்கு, அதைச் செய்ய பிசியோதெரபிஸ்ட் உதவி செய்வது ஒருமுறை

மிக மோசமான விபத்தினாலோ, பக்கவாதம் போன்ற நோய்த் தாக்குதலினாலோ உடல் அசைவுகளை இழந்து, கழிவறைக்குச் செல்வது போன்ற அன்றாடச் செயல்களுக்குக்கூட பிறரைச் சார்ந்து இருப்பவர்களை பிசியோதெரபி முடிந்த அளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுகிறது, என்கிறார் எழில்வாணன்.

இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் பல நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால், அவர்களது தசைகள் பலவீனாமாகியிருக்கும். பிசியோதெரபி அவர்களது தசைகளை மீண்டும் வலுவாக்க உதவுகிறது, என்கிறார் அவர்.

“இதுபோன்ற நோயாளிகளை பிசியோதெரபி மூலம் 90% இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும்,” என்கிறார் அவர்.

பிசியோதெரபி செயல்படும் வேகம் பற்றிப் பேசிய எழில்வாணன், எலும்பு முறிவு ஏற்பட்டு கை-கால்களை நீட்ட-மடக்க முடியாமல் இருக்கும் பிரச்னைகளில், தொடர்ந்து பிசியோதெரபி உடற்பயிற்சிகள் செய்து வந்தால், 1-2 மாதங்களில் கை-கால்களைச் சுலபமாக அசைக்க முடியும் என்கிறார் அவர்.

அதுவே, தலையில் அடிபட்டு, மூளையில் பாதிப்பு ஏற்பட்டோ, தண்டுவடத்தில் அடிபட்டோ, கை-கால்களைச் சரிவர அசைக்க முடியாமல் போனால், தொடர் பிசியோதெரபி உடற்பயிற்சிகள் மூலம் அதைச் சரிசெய்ய 3 மாதங்கள் வரை பிடிக்கும் என்கிறார் எழில்வானன்.

ஆனால், இவையனைத்தும் நோயாளிகள், தொடர்ந்து முறையாக உடற்பயிற்சிகளைச் செய்வதில்தான் இருக்கிறது என்கிறார் அவர். “சில சந்தபர்ப்பங்களில், நோயாளிகள், பிசியோதெரபி உடற்பயிற்சிகளைச் செய்யப் பொறுமை இல்லாமல், வேறு மருந்துகள், வேறு சிகிச்சை முறைகள் ஆகியவற்றுக்கு மாறிவிடுவார்கள். அப்போது பிசியோதெரபி பலனளிக்காமல் போகலாம்,” என்கிறார் அவர்.

பொதுவாக, இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க அறுவை சிகிச்சை முடிந்தவுடன் பிசியோதெரபி பரிந்துரைக்கப்படுவதாகக் கூறுகிறார் அவர்.

மேலும், கடந்த 20 ஆண்டுகளாக, அமர்ந்தபடியே வேலை செய்யும் ஐ.டி நிறுவன வேலை போன்றவை அதிகரித்துள்ளதால், கழுத்து வலி, முதுகு வலி ஆகியவற்றுக்காக பிசியோதெரபிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருப்பதாக அவர் கூறுகிறார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)