தாவரம் மூலம் சுய மருத்துவம் செய்யும் கொரில்லா- புதிய மருந்து கண்டுபிடிப்புக்கு இந்த குரங்குகள் உதவுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
- பதவி, பிபிசி சுற்றுச்சூழல் நிருபர்
கொரில்லா இனங்களிடம் காணப்படும் சுய மருத்துவம் செய்துகொள்ளும் போக்கு, எதிர்கால மருந்துவக் கண்டுபிடிப்புகளுக்கு உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
கபோன் (Gabon) நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், காட்டு கொரில்லா இனம் உட்கொள்ளும் வெப்பமண்டல தாவரங்களை ஆய்வு செய்தனர். இந்தத் தாவரங்கள் உள்ளூர் மூலிகை மருத்துவர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வு முடிவில், அவற்றில் நான்கு தாவரங்களில் மருத்துவ குணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த தாவரங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidants) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதாக ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஒரு தாவரம், சூப்பர்பக்ஸை (உடல்நல பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு வகை பாக்டீரியா. ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் இந்த பாதிப்பை குணப்படுத்த முடியாது) எதிர்த்துப் போராடும் திறன் பெற்றிருந்தது.

பெரிய குரங்கு இனங்கள், குணப்படுத்தும் பண்புகளைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் சுய மருத்துவம் செய்துக்கொள்கின்றன.
சமீபத்தில், காயம்பட்ட ஒராங்குட்டான் குரங்கு ஒன்று தன் காயத்தை குணப்படுத்த, தாவரத்தை பயன்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.

பட மூலாதாரம், Getty Images
சமீபத்திய ஆய்வில், கபோன் நாட்டில் உள்ள முகாலாபா டூடூ (Moukalaba-Doudou) தேசியப் பூங்காவில் 'வெஸ்டர்ன் லோலேண்ட்' (western lowland) கொரில்லாக்கள் உட்கொள்ளும் தாவரங்களை தாவரவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.
உள்ளூர் மூலிகை மருத்துவர்கள் உடனான நேர்காணல்களின் அடிப்படையில் மருத்துவ குணமுள்ள நான்கு தாவரங்களை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். கபோக் மரம் (Kapok tree), ராட்சத மஞ்சள் மல்பெரி (giant yellow mulberry), ஆப்ரிக்கத் தேக்கு, மற்றும் அத்தி மரங்கள் ஆகியவை அந்தத் தாரவங்களாகும்.
பாரம்பரிய மருத்துவத்தில் வயிற்றுப் பிரச்னைகள் முதல் கருவுறுதல் தொடர்பான பிரச்னைகள் வரை அனைத்திற்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் இந்த தாவரங்களின் மரப்பட்டையில், பீனால்கள் முதல் ஃபிளாவனாய்டுகள் வரையிலான ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை.
ஆய்வு செய்யப்பட்ட நான்கு தாவரங்களும் ஒரு வகை 'ஈ. கோலி' பாக்டீரியாவுக்கு எதிராக பாக்டீரியா எதிர்ப்புச் செயல்பாட்டைக் கொண்டிருந்தன.

பட மூலாதாரம், Getty Images
"இந்த ஆய்வு மத்திய ஆப்பிரிக்க மழைக்காடுகள் பற்றிய நமது அறிவில் உள்ள மிகப்பெரிய இடைவெளிகளை அம்பலப்படுத்துகிறது. மேலும் கொரில்லாக்கள் தங்களுக்கு நன்மை செய்யும் தாவரங்களை உண்ணும் வகையில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளதை காட்டுகிறது" என்று கபோன் விஞ்ஞானிகளுடன் இந்த ஆய்வில் பங்கேற்ற பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் அறிஞர் ஜோனா செட்செல் கூறினார்.
கபோன் மிகப்பெரிய, ஆராயப்படாத காடுகளை கொண்டுள்ளது. இது வன யானைகள், சிம்பன்சிகள், கொரில்லாக்கள் மற்றும் அறிவியலுக்கு புலப்படாத பல தாவரங்களின் தாயகமாகும்.
வேட்டையாடுதல் மற்றும் நோய் தொற்றுகளால் அதிக எண்ணிக்கையிலான வெஸ்டர்ன் லோலேண்ட் கொரில்லாக்கள் காடுகளில் இருந்து காணாமல் போயுள்ளன.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் (IUCN Red List) கொரில்லா இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி 'PLOS ONE’ என்னும் அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












