தமிழ் சினிமா: பாலியல் குற்றங்களை தடுக்க நடிகர் சங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் & நித்யா பாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
மலையாள சினிமாவை உலுக்கிய நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்கிறது. தமிழ் திரைத் துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை நடப்பதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8ஆம் தேதி) நடந்த தமிழ் சினிமா நடிகர்களின் கூட்டமைப்பான தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் 68வது பேரவைக் கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற்கான குழு பற்றி அறிவிக்கப்பட்டது.
இந்தக் குழு தமிழ் திரைத்துறையில், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வருமா?
சங்கத்தின் உறுப்பினர்கள், மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

நடிகர் சங்கம் என்ன செய்துள்ளது?

பட மூலாதாரம், nadigar-sangam.org
நடிகர் சங்கத்தில் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதாகவும், தற்போது அந்தக் குழுவில் வழக்கறிஞர்கள், பெண்களுக்கான தன்னார்வ அமைப்புகள், ஆகியோரை இணைக்க முடிவு செய்து, அக்குழுவுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரியையும் உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் நடிகர் சங்க நிர்வாகிகள்.
மேலும் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அக்குழுவின் தலைவரான நடிகர் ரோகிணி விசாகா கமிட்டியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி S. முருகன், கடந்த 2019ஆம் ஆண்டே தென்னிந்திய நடிகர் சங்கத்தில், பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதாகவும், செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“நடிகர் சங்கத்தில் ஏற்கெனவே இருந்த குழுவில் 5 பேர் இருந்தனர். தற்போது அக்குழுவில், ஒரு பெண் வழக்கறிஞர், பெண்களுக்கான ஒரு தன்னார்வ அமைப்பு ஆகியோரை இணைத்து அக்குழு புதுப்பிக்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும், இந்தக் குழுவில் புகாரளிக்க ஏற்கெனவே ஒரு தொலைபேசி எண் இருந்ததாகவும், தற்போது அந்த எண்ணோடு சேர்த்து, புகாரளிக்க ஒரு புதிய மினனஞ்சல் முகவரியையும் சங்கம் உருவாக்கி இருப்பதாகவும் பூச்சி முருகன் தெரிவித்தார்.
புகார்கள் வரும் பட்சத்தில், அதை இந்தக் குழு விசாரித்து, அது உண்மையெனில் அதற்கு நடவடிக்கை எடுக்கும், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையிடமும் அக்குழு புகார் அளிக்கும் என்றார் அவர்.
பேரவைக் கூட்டத்திற்கு முன்னர் ஒரு வாரமாக சங்கத்தில் ஆலோசிக்கப்பட்டு, விசாகா குழுவில் இந்தப் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், புத்துயிர் கொடுக்கப்பட்டிருக்கும் விசாகா கமிட்டி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களான பெண் நடிகர்கள் கொடுக்கும் புகார்களை மட்டும் விசாரித்தாலும், உறுப்பினர்கள் அல்லாத பெண் நடிகர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அவர்களுக்கும் வழிகாட்டுதலும் தார்மீக ஆதரவும் கொடுக்கும் என்றார் பூச்சி முருகன்.
இதோடு, நடிகர் சங்கத்தின் பேரவைக் கூட்டத் தீர்மானத்தில், பெண் நடிகர்களுக்கு ‘படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் தரமான உடை மாற்றும் அறை வசதி, கழிவறை வசதி மற்றும் உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய, தயாரிப்பாளர்களோடு பேசி ஆவன செய்யத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகா கமிட்டியினர் சொல்வது என்ன?

பட மூலாதாரம், nadigar-sangam.org
செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த நடிகர் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில், விசாகா குழுவின் தலைவரான நடிகை ரோகிணி, அக்குழுவைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசினார்.
அப்போது அவர், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண் நடிகர்கள் விசாகா குழுவை அணுகிப் புகார் கொடுக்க வேண்டும் என்றும், அப்படிக் கொடுக்கப்படும் புகார் உறுதியானால், அதில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் நடிக்கத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டியை பற்றி மேலும் அறிந்துகொள்ள பிபிசி தமிழ் ரோகிணியைத் தொடர்பு கொண்டது. அப்போது அவர், இந்தக் குழுவில், வழக்கறிஞர்கள், தன்னார்வ அமைப்புகள், பாலினம் சார்ந்த மனநல ஆலோசகர்கள் ஆகியோரை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததோடு, அதற்கு மேல் அதுபற்றி எதுவும் பேச மறுத்துவிட்டார்.
இதுகுறித்து நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், மூத்த நடிகையுமான லதா சேதுபதியிடம் பிபிசி தமிழ் பேசியது.
நடிகர் சங்கத்தில், 2019லேயே விசாகா கமிட்டி இருந்தபோதும், அது அதிகமாகச் செயல்பாடில்லாமல் இருந்ததாகத் தெரிவித்தார். தற்போது “புகார்களை விசாரிக்க ஏதுவாக, கமிட்டியில் ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியை இணைப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது,” என்றார் அவர்.
“இந்தக் குழுவின் நோக்கமே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண் நடிகர்கள், உடனடியாக, துணிவாக முன்வந்து புகாரளிக்க வேண்டும் என்பதுதான்,” என்றார் லதா.
‘வரவேற்கத்தக்க மாற்றம்தான், ஆனால்…’

பட மூலாதாரம், Getty Images
தமிழ்த் திரைத்துறையில் இதுபோன்ற ஒரு மாற்றம் வந்திருப்பது குறித்து, மூத்த சினிமா பத்திரிகையாளரான அனுபமா சுப்ரமணியனிடம் பிபிசி தமிழ் பேசியது.
இதுவொரு வரவேற்கத்தக்க விஷயம் என்று கூறும் அனுபமா, ஆனால் இது ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடாது என்றார்.
“இதற்கு முன்னரே நடிகர் சங்கத்தில் 2019ஆம் ஆண்டு விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் அது செயலிழந்துவிட்டது. அதன் பிறகு, கோவிட் பொதுமுடக்கம் வந்ததால் அது பேச்சற்றுப் போய்விட்டது. ஆனால் இப்போது இந்த விஷயம் பற்றி மிகப் பரவலாகப் பேசப்படுவதால் இத்தகைய மாற்றம் வந்திருக்கிறது,” என்கிறார் அவர்.
இது நன்கு திட்டமிடப்பட்ட முடிவு என்று கூறும் அவர், ஆனால் மாற்றம் மிக மெதுவாகவே வரும் என்றார்.
மேற்கொண்டு பேசியபோது “இந்த கமிட்டியின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பது, யார்மீது புகார் கொடுக்கப்படுகிறது, அது எத்தகைய புகார் என்பதைப் பொறுத்தது. இந்தப் புகார்களின் தகவல்கள் சட்டப்படி ரகசியமாகக் காப்பாற்றப்பட வேண்டும். அதனால், ஒருவேளை ஒரு பெரிய நடிகரின் மீது கொடுக்கப்படும் புகார் நிரூபிக்கப்பட்டு அவர் நடிப்பதில் இருந்து 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டால்தான் இந்த கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து வெளியில் தெரிய வரும்,” என்கிறார்.
தமிழ் சினிமா துறையில் நடிகைகள் பல காலமாகவே சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்துப் பேசிய அனுபமா, தமிழ் சினிமாவில் துணை நடிகைகள் மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் உண்டு என்றும் கூறுகிறார்.
“படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் உடை மாற்றுவதற்கான அறைகூட இருக்காது. அவர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகள் இருக்காது. இப்போது நடிகர் சங்கத்தின் தீர்மானத்தில் அது பற்றியும் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது,” என்கிறார்.
மேலும் பேசிய அனுபமா, சினிமா துறை ஒரு முறையான கட்டமைப்புடன் கூடிய துறை இல்லை, அதனால் பெண்களுக்கு எதிரான இத்தகைய விஷயங்களுக்கு இத்தனை நாளாகத் தீர்வு காண்பதில் சிக்கல் இருந்தது என்கிறார்.
“அதனால், விசாகா குழு இப்போது புதுப்பிக்கப்பட்டிருப்பதே ஒரு நல்ல மாற்றம்தான். புகார் கொடுக்கும் பெண்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படும் என்ற தைரியத்தோடு அவர்கள் புகார் தெரிவிக்க முன்வரலாம். இல்லையெனில், அவமானப்படுத்தப்படுவோம், வேலை கிடைக்காது என்பன போன்ற அச்சத்தால், அவர்கள் இதுபற்றிப் பேச முன்வரமாட்டார்கள்,” என்கிறார் அனுபமா.
‘இது வெற்று அறிவிப்பு’

ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இந்தச் சமீபத்திய அறிவிப்பு, ஏற்கெனவே பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகைகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது.
படப்பிடிப்பின் போது மிக மோசமான முறையில் நடத்தப்பட்டதாகவும், பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு உள்ளானதாகவும் கூறும் குணச்சித்திர நடிகை ஒருவர், இது வெறும் அறிவிப்பாகத்தான் இருக்கும் என்கிறார்.
தமிழ் திரைத்துறையில் இருக்கும் பெண்கள் புகார் தெரிவிப்பதற்கென அவசர உதவி மையம் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவை அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்துப் பேசிய அவர், "ஏற்கெனவே விசாகா கமிட்டி இருக்கிறது. ஆனால் பெண் கலைஞர்கள் என்ன மாற்றங்களையும், மேம்பாட்டையும் கண்டார்கள்? விசாகா கமிட்டி அவர்களுக்கு எந்த வகையில் உதவியது?" என்ற கேள்வியை எழுப்புகிறார்.
"இங்கே இருக்கும் விசாகா கமிட்டியும், நடிகர் சங்கமும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை. இத்தகைய சூழலில், இதுபோன்ற புதிய அறிவிப்புகள் வெறும் அறிவிப்பாகவேதான் இருக்குமே அன்றி, அதனால் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படாது. ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும் புகார்களுக்கு முதலில் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறகு புதிய பிரச்னைகள் பற்றிக் கவலைப்படலாம்," என்றும் அவர் கூறுகிறார்.
முன்னர் கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து பிபிசியிடம் பேசிய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பூச்சி முருகன், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நடிகர் சங்கத்தின் விசாகா குழுவிடம் இரண்டு புகார்கள் வந்ததாகவும், அவை அக்குழுவால் விசாரிக்கப்பட்டு, தீர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












