பழைய, புதிய மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் - எந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு கிடைக்கும்?

பழைய, புதிய, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்திகள்

ஓய்வூதியம் என்பது வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முதுமையில் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கான ஆதரவு.

2003இல் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) முடிவுக்கு வந்ததில் இருந்து அரசு ஊழியர்களுக்கு இது ஒரு முக்கியமான பிரச்னையாக இருந்து வருகிறது.

2004 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) அரசு ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன.

இப்போது அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) கொண்டு வந்துள்ளது. பல ஊழியர் அமைப்புகளுக்கு இதிலும் திருப்தி இல்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பொதுவாக ஊழியர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இது தவிர பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் ஓய்வூதிய நிதிக்கு பங்களிக்க வேண்டும். இதில் ஒரு பகுதி பணியாளரிடமிருந்தும் ஒரு பகுதி அந்த ஊழியர் பணியாற்றும் நிறுவனத்திடமிருந்தும் வருகிறது. ஓய்வு பெற்ற பிறகு பெறப்படும் ஓய்வூதியம் இந்த நிதியின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

இப்போது 2024 இல் கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழும் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், ஓய்வூதிய நிதிக்கு நிலையான பங்களிப்புகளைச் செய்ய வேண்டும். இந்த நிதியில் இருந்து ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை கணக்கிடுவதில் சேவைக் காலமும் முக்கிய பங்கு வகிக்கும்.

பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் ஓய்வூதியம் எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பதை ஒரு எளிய கணக்கிடல் மூலம் புரிந்துகொள்வோம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பட மூலாதாரம், BBC

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பழைய ஓய்வூதியத் திட்டம்

பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்டங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடு என்ன?

  • ஓய்வூதியத்தை கணக்கிடும் முறையில் வேறுபாடு
  • பழைய திட்டத்தில், கடைசி சம்பளத்தின்( அடிப்படை மற்றும் அகவிலை படி) 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
  • புதிய திட்டத்தில் கடைசி 12 மாத சம்பளத்தின் (அடிப்படை மட்டும்) 50 சதவிகிதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
  • பழைய திட்டத்தில் ஊழியர் பங்களிப்பு இல்லை. புதியதில் 10 சதவிகித பங்களிப்பு உள்ளது.
  • புதிய திட்டத்தில் பொதுவாக ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி திருத்தப்படும்.
  • ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில்வ பணவீக்க சமாளிப்பு, நுகர்வோர் விலைக்குறியீட்டுடன் (consumer price index) இணைக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பொதுவாக சம்பளத்தில் 50% ஆகும். மேலும் அகவிலைப் படியும் (DA) இதில் அடங்கும்.

உதாரணமாக ஒருவரின் ஆண்டுச் சம்பளம் 15 லட்சம் ரூபாயாக இருந்தால், அவர்களின் மாத ஓய்வூதியம் சுமார் 62,500 ரூபாயாக இருக்கும். (ஆண்டுக்கு 15 லட்சத்தில் 50% = 7.5 லட்சம் ரூபாய் அதாவது மாதம் 62,500 ரூபாய்) ஆகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகையைப் பெறுகிறார். இதுமட்டுமின்றி அக விலைப் படிக்கு ஏற்ப இந்த தொகை அவ்வப்போது அதிகரிக்கிறது.

பழைய, புதிய, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழும் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், ஓய்வூதிய நிதிக்கு நிலையான பங்களிப்புகளைச் செய்ய வேண்டும்

புதிய ஓய்வூதியத் திட்டம்

புதிய மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டங்களுக்கு இடையே என்ன வேறுபாடு?

  • புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ஓய்வூதியம் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
  • ஊழியர்கள் மற்றும் அரசின் பங்களிப்பில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் நிதி மேலாளர்கள் அதாவது ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு (PFRDA), ஓய்வூதியத்தை நிர்ணயிக்கிறது.
  • நிதிய மேலாளர்கள், பங்குகள் மற்றும் அரசு பத்திரங்களில் இந்த நிதியை முதலீடு செய்கின்றனர்.
  • புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் பண வீக்கத்துடன் இணைக்கப்படவில்லை.
  • முதலீட்டில் இருந்து வரும் வருமானத்திற்கு வருமான வரிவிலக்கு கிடைக்கிறது.
  • மொத்த நிதியின் 60 சதவிகிதம் வரை ஓய்வு பெறும்போது ரொக்கமாக எடுத்துக்கொள்ளலாம். அதற்கு எந்த வருமான வரியும் கிடையாது.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு ஊழியர் ஓய்வூதிய நிதிக்கு பங்களிக்க வேண்டும். அதில் ஒரு பகுதி பணியாளராலும், ஒரு பகுதி பணியமர்த்தியுள்ள நிறுவனத்தாலும் வழங்கப்படுகிறது.

பொதுவாக பணியாளர் மொத்த சம்பளத்தில் 10% பங்களிப்பையும், நிறுவனம் 14% பங்களிப்பையும் அளிக்கிறார்கள். உதாரணமாக 15 லட்ச ரூபாய் ஆண்டு சம்பளத்தில் 10% பங்களிப்பை கணக்கிட்டால் வருடாந்திர பங்களிப்பு: 1.5 லட்சம் ருபாய் (பணியாளர்) + 14 சதவிகிதம் அதாவது 2.1 லட்சம் ரூபாய் (நிறுவனம்) = 3.6 லட்சம் ரூபாய்.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலீட்டுத் திட்டம் மற்றும் அதில் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் ஊழியர் ஓய்வூதியத்தைப் பெறுகிறார். மேலும் இந்த ஓய்வூதியமானது எதிர்காலத்தில் பணியாளர் தேர்ந்தெடுக்கும் முதலீட்டுத் திட்டத்தின் வருமானத்தைப் பொருத்து இருக்கும்.

எனவே புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சரியான தொகையை கணிப்பது கடினம். ஆனால் இது பொதுவாக பழைய ஓய்வூதிய திட்டத்தை விட குறைவாகவே உள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அகவிலைப் படியின் படி உயர்வு இருக்காது. அதாவது இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகை ஓரளவு அப்படியே இருக்கும்.

பழைய, புதிய, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பணியாளர் மொத்த சம்பளத்தில் 10% பங்களிப்பையும், நிறுவனம் 14% பங்களிப்பையும் அளிக்க வேண்டும்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கணக்கீடு, ஓய்வூதியத் தொகையை நிர்ணயிக்கும் சில முக்கிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. அதாவது சேவை காலம், சராசரி கடைசி ஊதியம் மற்றும் ஓய்வூதிய சதவிகிதம்.

சேவை காலம் என்பது ஒரு ஊழியர் மொத்தமாக பணியாற்றிய கால அளவு, பொதுவாக ஆண்டுகளில் கணக்கிடப்படுகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதிய தொகையை கணக்கிடுவதில் சேவை காலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது தவிர, கடைசி சம்பளம் அல்லது சராசரி சம்பளம் மூலமும் ஓய்வூதியத் தொகை தீர்மானிக்கப்படும். பணியாளரின் ஓய்வூதியத் தொகை பொதுவாக கடைசிச் சம்பளம் அல்லது சேவைக் காலத்தின் சராசரி சம்பளத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதிய சதவிகிதமும் முக்கியமானது. ஓய்வூதியத் தொகையைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் சதவிகிதம், சேவை காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தக் கூறுகளை மனதில் வைத்து பொதுவான முறையில் கணக்கிட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சூத்திரத்தைப் பயன்படுத்தி ஓய்வூதியத் தொகையைக் கணக்கிடலாம்.

ஓய்வூதிய தொகை = (கடைசி ஊதியம்/சராசரி ஊதியம்) × ஓய்வூதிய சதவிகிதம் × சேவை காலம்.

எடுத்துக்காட்டாக, சேவை காலம் 30 ஆண்டுகள், கடைசி சம்பளம் 50,000 ரூபாய் மற்றும் ஓய்வூதிய சதவிகிதம் 50% என்றால், கணக்கீடு பின்வருமாறு இருக்கும்.

ஓய்வூதியத் தொகை = ரூ 50,000 × 50% × (30/30) = மாதம் ரூ 25,000

அதாவது கடைசி சம்பளம் ஐம்பதாயிரம் ரூபாய் என்றால் மாதம் ரூ 25 ஆயிரம் பென்ஷன் கிடைக்கும்.

இந்த ஓய்வூதியத் திட்டத்தில் அகவிலைப்படியும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே பணவீக்கம் அதிகரிக்கும் போது அதுவும் அதிகரிக்கும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?

  • குறைந்தபட்சம் 50 சதவிகித ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம்
  • 10 ஆண்டுகளுக்கும் அதிகமான சேவை காலத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் உத்தரவாத ஓய்வூதியம்.
  • ஓய்வு பெற்ற ஊழியரின் மரணத்திற்கு பிறகு வாழ்க்கைத்துணைக்கு 60 சதவிகித ஓய்வூதியம் கிடைக்கும்.
  • ஊழியர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்படும்.
  • வேலையை விட்டுச்சென்றால் பணிக்கொடையுடன் கூடவே ஒரு குறிப்பிட்ட ரொக்கத்தொகை அளிக்கப்படும்.

நிபுணர்கள் கூறுவது என்ன?

பொதுவாக பழைய ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு நன்மை அளிப்பதாக இருந்தது. ஆனால் அது இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று நிதி விவகார நிபுணர் பங்கஜ் குமார் சிங் குறிப்பிட்டார்.

“2003 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது. அந்தத் திட்டம் அரசு மீது அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தியது. இதைக் குறைக்க புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பொதுவான முறையில் கணக்கிட்டால் பழைய ஓய்வூதியத் திட்டத்துடன் ஒப்பிடும்போது புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெயரளவுக்குத் தான் உள்ளது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இருப்பினும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கக் கூடும் என்று பங்கஜ் குமார் சிங் கருதுகிறார்.

புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பெயரளவு ஓய்வூதியம் மட்டுமே பெறுகின்றனர் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கான நிதித் திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் மக்கள் நிதிச் சிக்கல்களைச் சந்திக்காமல் இருக்க தனிப்பட்ட முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் பங்கஜ் அறிவுறுத்துகிறார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஊழியர்களின் முதலீட்டிற்கு வரி விலக்கு உள்ளது. ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கு இல்லை.

புதிய ஓய்வூதியத் திட்டம் ஒரு முதலீட்டுத் திட்டம் போன்றது. அதில் செய்யப்படும் முதலீடு சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தை எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் அதில் ஒரு நிச்சயமற்ற தன்மை கண்டிப்பாக உள்ளது என்று குறிப்பிடுகிறார் பங்கஜ் குமார் சிங்.

பழைய ஓய்வூதிய திட்டம் அரசுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதிய பலன்கள் முன்பே நிர்ணயம் செய்யப்பட்டவை. மேலும் அதில் பணியாளர் எந்த பங்களிப்பும் செய்ய வேண்டியதில்லை. அதே நேரத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்கள் நிலையான பங்களிப்பை செலுத்த வேண்டும். இது அரசின் சுமையை குறைக்கிறது. அதேசமயம், முன்மொழியப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் மூலம் இரண்டு திட்டங்களின் கூறுகளையும் சேர்த்து சமநிலையை உருவாக்க அரசு முயற்சித்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. அதே நேரம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. கூடவே கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்பையும் கொண்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலை படி மூலம் நேரடியாக விலைவாசி உயர்விலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால் இந்த ஏற்பாடு புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை. அதேசமயம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் பணவீக்கத்தை சமாளிக்கும் செயல்முறையும் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் மூலம் பழைய ஓய்வூதிய திட்டத்தின் நிதிச்சுமைக்கும், புதிய ஓய்வூதிய திட்டத்தின் நிச்சயமற்ற தன்மைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த அரசு முயற்சித்துள்ளது என்று பங்கஜ் குமார் சிங் கூறினார்.

இருப்பினும், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் மற்றும் அதன் உண்மையான தாக்கம் என்ன என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இதற்கிடையில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படவேண்டும் என்று கோரும் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக ஊழியர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அரசு பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்புவது நடைமுறையில் சாத்தியமாக இருக்காது. இதுபோன்ற சூழ்நிலையில் ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யும் வாய்ப்பையே பெறுவார்கள் என்று பங்கஜ் குமார் சிங் குறிப்பிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)