தேசிய அளவில் 42%: ஜவுளி முதல் கார் உற்பத்தி வரை தமிழ்நாட்டுப் பெண்கள் நுழைந்து சாதித்தது எப்படி?

உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுப் பெண்கள்
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

பன்னிரண்டாம் வகுப்பு படித்து விட்டு மாதம் ரூ.450 சம்பளத்துக்கு தனியார் கை கடிகார தயாரிப்பு நிறுவனத்தில் சேர்ந்த எஸ்.எம். பிரபாவதி இன்று ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த அவர், 38 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஓசூர் நகரில் உள்ள நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். கை கடிகாரத்தின் மீச்சிறு பாகங்களை கைகளாலேயே எடுத்து ஒவ்வொன்றாக அடுக்கி வைத்த காலம் அது.

தான் பணியில் சேர்ந்த முதல் நான்கு ஆண்டுகளில் 10 லட்சம் கை கடிகாரங்களை அடுக்கியுள்ளதாக கூறுகிறார். “ஒரு நாளுக்கு 600 கடிகாரங்கள் தான் இலக்கு, ஆனால் நான் 1000 செய்வேன். அனைவரும் போட்டி போட்டு வேலை செய்வோம்” என்கிறார் அவர்.

இதுபோன்ற பல லட்சம் பெண்களை கொண்டது தமிழ்நாட்டின் உற்பத்தித்துறை. இந்தியாவில் உள்ள உற்பத்தித் துறையில் பணி செய்யும் பெண்களில் அதிகமானோர் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். மத்திய அரசின் வருடாந்திர தொழில்துறை ஆய்வு 2021-22 தரவுகள் படி, இந்தியாவில் உற்பத்தித் துறையில் உள்ள சுமார் 15 லட்சம் பெண்களில், 42% அதாவது சுமார் 6 லட்சம் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

இது எப்படி சாத்தியமானது, இதில் பணிபுரியும் பெண்களின் நிலை என்பது குறித்து அறிந்துகொள்ள, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கொண்ட தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள உற்பத்தி நகரமான ஓசூருக்கு சென்றிருந்தது பிபிசி தமிழ்.

“என் கணவர் வீட்டில் பண கஷ்டம் இருந்தது. நான் இந்த வேலைக்கு வந்ததால் தான், என் நாத்தனாருக்கு கல்யாணம் செய்ய முடிந்தது. வயதானவர்கள் மூன்று பேருக்கு மருத்துவம் பார்க்க முடிந்தது. அது மட்டுமில்லை, இங்கு வந்து இத்தனை பெண்களுடன் பழகும் போது, அவர்கள் எப்படி பல்வேறு சவால்களை சமாளிக்கிறார்கள் என்பதை பார்த்துக் கற்றுக் கொள்கிறேன்” என்கிறார், 35 ஆண்டுகளாக கை கடிகார நிறுவனத்தில் பணியாற்றும் தனலஷ்மி பாண்டுரங்கன்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த போது, பள்ளிக்கே வந்து ஆள் எடுத்த போது அந்த நிறுவனத்துக்கு தேர்வானார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த அவர், தற்போது ஓசூரையே சொந்த ஊராக மாற்றிக் கொண்டுவிட்டார்.

உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுப் பெண்கள்

நவீனமாக்கப்படும் தொழிற்சாலைகள்

தமிழ்நாட்டில் 39,512 தொழிற்சாலைகள் உள்ளன. மத்திய அரசின் வருடாந்திர தொழில்துறை ஆய்வு 2021-22 தரவுகள் படி, நாட்டில் இதுவே அதிக எண்ணிக்கையாகும். தமிழ்நாட்டில் பெண் உழைப்பாளர் பங்கேற்பு 36.2% ஆகும். இது தேசிய சராசரியை விட அதிகமாகும். சமீப காலத்தில் கார், இருசக்கர வாகன உற்பத்தியில் பெண்கள் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

25 வயது நிவேதனா, “தொழிற்சாலைகள் என்றால் மிகவும் கடினமான வேலையா இருக்கும் என்று நினைக்கிறார்கள். நிறைய எடையை தூக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அப்படி இல்லை. நான் பணியில் சேரும் போது இங்கு எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்று விரல் விட்டு எண்ணிவிட முடியும். ஆனால் இப்போது பெண்கள் மட்டுமே பணிபுரியும் உற்பத்தி அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன” என்கிறார்.

உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுப் பெண்கள்

ஓசூரில் அசோக் லேலண்ட் நிறுவனம் இலகு ரக வாகனங்களின் என்ஜின்களை தயாரிக்க பெண்கள் மட்டுமே பணிபுரியும் அலகை உருவாக்கியுள்ளது. இதில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு என்ஜினை பெண்கள் தயார் செய்து வருகின்றனர்.

“இப்போது உற்பத்தி அலகுகள் எந்த பாலினத்தை சேர்ந்தவரும் பணி செய்யும் வகையில் அமைக்கப்படுகின்றன. பெண்களின் சராசரி உயரம், அவர்கள் நின்று பணிபுரியும் இடம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இயந்திரங்களை கைகளில் தூக்காமல், இழுவை இயந்திரம் மூலமே கையாண்டுக் கொள்ளலாம். பெண்கள் உற்பத்தி செய்யும் போது, அதில் தவறுகள் குறைவாக இருக்கின்றன. உற்பத்தி வேகம் அதிகமாக உள்ளது. பெண்கள் மட்டுமே உள்ள உற்பத்தி அலகில் தான் இது வரை எங்கள் நிறுவனத்தின் அதிகபட்ச உற்பத்தி நடைபெற்றுள்ளது” என்கிறார் மஞ்சுநாத், நிறுவனத்தின் மேலாளர்.

உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுப் பெண்கள்
படக்குறிப்பு, "பெண்கள் உற்பத்தி செய்யும் போது, அதில் தவறுகள் குறைவாக இருக்கின்றன" என்கிறார் மஞ்சுநாத்

தனியார் கல்லூரியில் பொறியியல் படித்துவிட்டு, 12 ஆண்டுகளுக்கு முன் கை கடிகார நிறுவனத்தில் பணியில் சேர்ந்த ஹரிணி, தற்போது ஆட்டோமேஷன் பிரிவின் மேலாளராக உள்ளார். “மனிதர்கள் செய்யும் வேலையில் எவற்றை எல்லாம் ஆட்டோமேட் (இயந்திரத்தால் செய்ய முடிந்தவை) செய்யலாம் என்று ஆராய்வது எனது வேலையாகும். ஐ.டி. துறை போல வீட்டிலிருந்து வேலை பார்க்க முடியாது. ஆனால் இரவு நேரத்தில் வேலை பார்க்க வேண்டாம்” என்றார்.

“ஓசூர், பந்த்நகர், ரூர்கி ஆகிய இடங்களில் உள்ள உற்பத்தி அலகுகளில் அசெம்பிளி லைனில் 95% பெண்கள் பணிபுரிகிறார்கள். அசெம்பிளி லைன் என்பது ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும், அதற்கு ஏற்ற பொறுமையும் கவனமும் பெண்களிடம் அதிகம் உள்ளன. ஒரு மணி நேரத்துக்கு 6 ஆயிரம் கடிகாரங்கள் செய்ய வேண்டும். இந்த இலக்கை பெண்கள் இருப்பதால் தான் எங்களால் அடைய முடிகிறது.” என்கிறார் டைட்டன் கை கடிகார பிரிவின் உதவி துணைத் தலைவர் சுப்பையா.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மாறிவரும் தொழிலாளர் பிரச்னைகள்

சமீப காலமாக, மொபைல் உற்பத்தி உட்பட பல நவீன தொழிற்சாலைகளில் அதிகமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். எப்படி தொழிற்சாலைகள் மாறி வருகின்றனவோ, அதே போன்று தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் மாறிவருகின்றன.

“ஒரு நபருக்கு எட்டு மெஷின்களை லோட் செய்ய வேண்டும். ஒவ்வொரு மெஷினிலும் பொருட்களை லோட் செய்ய 1.30 நிமிடங்கள் கிடைக்கும். ஒவ்வொரு மெஷினாக நடந்து சென்று லோட் செய்ய வேண்டும். எட்டாவது மெஷின் லோட் செய்வதற்குள் மீண்டும், முதல் மெஷினுக்கு அருகில் வர வேண்டும். காலை மற்றும் மாலையில் ஏழு நிமிட தேநீர் இடைவேளை வழங்கப்படும். அந்த இடைவேளையில், கழிவறைக்கு சென்று வர நேரம் ஆகிவிடும். எனவே பணியில் இருக்கும் போது, கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டு, மற்றொரு நபர் என்னிடத்துக்கு வந்த பிறகே, நான் கழிவறைக்கு செல்ல முடியும்” என்கிறார் *சந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

பொறியியல் படித்து விட்டு ரூ.14 ஆயிரம் சம்பளத்துக்கு தற்காலிக ஊழியராக வேலை பார்க்கிறார் சந்திரா. கணவருக்கும் அவருக்கும் வெவேறு ஷிப்டுகளில் பணி செய்ய வேண்டும் என்பதால், மாதத்தில் ஒரு முறை மட்டுமே அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட முடிகிறது.

உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுப் பெண்கள்

“எனது மகள் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். வேலைக்கு ஆள் எடுக்க கல்லூரிக்கே வந்திருந்தனர். படிப்பை நிறுத்தியதாக சான்றிதழ் கொடுத்தால் பணி உறுதி என்றனர். நல்ல நிறுவனம் என்பதால் அவளை வேலைக்கு செல்லுமாறு கூறினேன்.” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஓசூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.

பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவு வழங்கப்படுகின்றன. “இரவில் வீட்டு வரை வந்து செக்யூரிட்டி அழைத்து செல்வார். அதேபோல் அதிகாலை வீட்டுக்கு திரும்பும் போது. உணவை பற்றி குறை சொல்லவே முடியாது” என்கிறார் சந்திரா.

நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது 30% மட்டுமே இருக்கும் என்கிறார் இந்திய தொழிற்சங்க மையத்தின் ஓசூர் மாவட்டச் செயலாளர் ஶ்ரீதர். “தற்காலிக பணியாளர்களுக்கு யூனிஃபார்ம், போக்குவரத்து வசதி எல்லாம் வழங்கப்படும். ஆனால் பணி பாதுகாப்பு கிடையாது. இளம் வயது பெண்கள் பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளில் திருமணம், அல்லது மகப்பேறு காரணமாக பணியிலிருந்து நின்று விடுவார்கள். மீண்டும் அதே வயதிலான பெண்கள் அந்த இடத்தில் வேலைக்கு வருவார்கள். எனவே ஊதிய உயர்வு என்ற பேச்சுக்கே பல இடங்களில் இடம் இல்லை” என்கிறார்.

உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுப் பெண்கள்
படக்குறிப்பு, ஶ்ரீதர், ஓசூர் மாவட்டச் செயலாளர், இந்திய தொழிற்சங்க மையம்

45 வயதான ஈஸ்வரி, 18 ஆண்டுகளாக சிறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார். பெரிய நிறுவனங்களுக்கு தேவைப்படும் வாகன உற்பத்தி பாகங்கள் தயாரிப்பு மையத்தில் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தார். பணியில் சேர்ந்து நான்கு மாதங்களில் இயந்திரத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தனது விரல் ஒன்றை இழந்து விட்டார். அடிக்கடி பழுதாகும் இயந்திரம் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக ஈஸ்வரி கூறும் நிலையில், முறையாக இயந்திரத்தை கையாளவில்லை என்று நிறுவனம் கூறுகிறது.

கணவன் துணையில்லாமல் வாழும் அவர் 250 சதுர அடி அறையில் தனது வாழ்வை நடத்தி வருகிறார். “எனது மருத்துவ செலவுக்கு சிறிது பணம் வழங்கினார்கள். சிகிச்சைக்கான விடுப்பு காலத்தில், மாத சம்பளம் ரூ.14 ஆயிரம் முழுவதுமாக தரப்படும் என்று காவல் நிலையத்தில் கூறிவிட்டு, தற்போது ரூ.3 ஆயிரம் மட்டுமே வழங்குகிறார்கள். எனவே விரைவில் வேலைக்கு செல்லவுள்ளேன்” என்கிறார்.

உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுப் பெண்கள்
படக்குறிப்பு, ஈஸ்வரி, இயந்திர விபத்தில் ஒரு விரலை இழந்தவர்
உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுப் பெண்கள்

“கஷ்டமா தான் இருக்கு மேடம், பொறியியல் படிச்சிட்டு, பன்னிரண்டாம் வகுப்புத் தகுதிக்கான வேலையை பார்ப்பது. மொபைல் ஃபோனுக்கான மேல் பட்டையை மட்டுமே உற்பத்தி அலகு முழுவதும் தயார் செய்கிறது. அதில் மிகச் சிறிய வேலை என்னுடையது. ஒரு வருடம் இடைவிடாமல் வேலை பார்த்தால் பணிநிரந்தரம் செய்வதாக கூறியிருக்கிறார்கள்.வேறு என்ன செய்வது, ஓடி தானே ஆக வேண்டும்?” என்கிறார் சந்திரா.

தான் வேலை செய்த நிறுவனத்திலேயே தனது கணவரை சந்தித்து காதல் திருமணம் செய்துக் கொண்டார் கீதா. கொரோனா தொற்றுக்கு கணவரை இழந்த அவர், பிள்ளைகள் ஓய்வு எடுத்துக்கொள்ள கூறியும் போதும் தொடர்ந்து பணிக்கு வருகிறார். “இந்த வளாகத்துக்குள் வந்தாலே ஒரு தன்னம்பிக்கை கிடைக்கிறது. இங்குள்ள பெண்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் போல, எனது கணவரை இழந்த துயரம் தெரியாமல் என்னை தேற்றிக் கொண்டு வந்தது, அவர்கள் தான்” என்கிறார் பிரதமர் நரேந்திர மோதி, சவுதி எமிரேட்ஸ் ஆகியோருக்கு சிறப்பு கடிகாரங்கள் செய்துக் கொடுத்த கீதா.

பெண்கள் தைரியமாக பணிபுரிய வேண்டும் என்று தனது தந்தை எப்போதும் விரும்பியதாக கூறுகிறார் மகாலெட்சுமி. பொறியியல் படித்து விட்டு கடந்த ஒன்பது ஆண்டுகளாக வாகன உற்பத்தித் துறையில் பணியாற்றி வரும் அவர், “நான் வேலையில் சேரும் போது, உற்பத்தி பிரிவில் பெண்களே கிடையாது. ஒன்பது ஆண்டுகளில், 80க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே வேலை செய்யும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சி என்று கருதுகிறேன்” என்கிறார்.

வேலைக்கு செல்ல வெவ்வேறு பெண்களுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும், அவர்களின் உழைப்பு நாட்டுக்கும் வீட்டுக்கும் வளம் சேர்த்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)