"சுமங்கலி திட்டத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்"

சுமங்கலி இளம் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் திருப்பூரின் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் சேர்க்கப்பட்ட பெண்கள் அடிமை போல நடத்தப்படுகிறார்கள் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பில் அவ்வாணையம் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.
மனித உரிமை ஆர்வலரும் உச்சநீதிமன்ற சட்டத்தரணியுமான ராதாகாந்தா திரிபாதி ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் செயல்பட்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், மோசமாக நடத்தப்படும் பெண்கள் விடுவிக்கப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
ஏழைப் பெண்கள் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்றாலாவது அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கக்கூடிய வருமானம் கிடைக்கும் என நினைத்து பெற்றோர் அவர்களை வேலைக்கு அனுப்புகிறார்கள்.
ஆனால் இந்தப் பெண்கள் அபாயகரமான சூழ்நிலையில் சிக்கி துஷ்பிரயோகத்துக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகிறர்கள் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமங்கலி திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பெண்களுக்கு அவர்களுடைய வேலை ஒப்பந்தக் காலம் முடியும்போது சம்பளம் கொடுத்தால் போதும் என்ற நிலை உள்ளது.
இந்த ஒப்பந்தக் காலம் என்பது ஒரு வருடமாகவும் இருக்கலாம் ஐந்து வருட காலமாகவும் இருக்கலாம். இவ்வாறு வேலைக்கு சேர்ந்த பெண்கள் ஏதாவது காரணத்துக்காக ஒப்பந்தக்காலத்துக்கு முன்பே வேலையை விட்டு விலக நேர்ந்தால் அவர்களுக்கு சம்பளம் எதுவுமே கொடுக்கப்படாத ஒரு நிலை இருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் வேலைக்கு அமர்த்தப்படும் பெண்கள் மிகவும் சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் வேலை செய்யவும் வாழவும் நேருவதால், இரத்தச்சோகை, காசநோய், சுவாசப் பிரச்சினைகள், மாதவிடாய்க் கோளாறுகள் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ராதாகாந்தா திரிபாதி புகார் தெரிவித்துள்ளார்.
விசேட கண்காணிப்புக் குழுவொன்றை அனுப்பி சுரண்டல்களுக்கு ஆளாகும் பெண்களை மாநில அரசு விடுவிக்க வேண்டும் என்றும், உரிமை மீறல்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளும், குற்றவாளிகளை தண்டிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.












