அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி முதல்வர் பதவி ராஜினாமா முடிவுக்கு என்ன காரணம்? அடுத்த முதல்வர் யார்?

பட மூலாதாரம், Getty Images
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
சிறையில் இருந்து பிணையில் வெளிவந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர் இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
கட்சித் தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் அமைந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
"மக்கள் ஒரு முடிவெடுக்கும் வரை இனி நான் முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன்," என்று கட்சித் தொண்டர்களிடம் அவர் பேசியுள்ளார்.
"நான் மக்களிடம் செல்கிறேன். ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான மனிதர் என்று மக்கள் தீர்ப்பு வழங்கும் வரை நான் முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன்," என்று அவர் கூறியுள்ளார்.

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது. திகார் திறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலை பின்னர் சிபிஐயும் கைது செய்தது.
அமலாக்கத்துறை வழக்கில் ஜூலை மாதமே ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவந்தார். இதற்கிடையே தேர்தல் பிரசாரத்திற்காகவும் இடைக்கால ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 40 நபர்களில் அமன்தீப் சிங் தால் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடம் பேசிய கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
துணை நிலை ஆளுநர் மீது பகிரங்க குற்றச்சாட்டு

பட மூலாதாரம், LG DELHI/X
கட்சித் தொண்டர்களிடம் பேச ஆரம்பித்தபோது, அரவிந்த் கேஜ்ரிவால் "நான் சிறையில் இருந்தபோது எனக்காக பிரார்த்தனை செய்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கு சிறையில் படிக்க நிறைய நேரம் கிடைத்தது. இந்த நேரத்தில் நான் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதையை படித்தேன். பகத் சிங்கின் சிறை அனுபவம் குறித்த புத்தகங்களையும் படித்தேன்," என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் டெல்லியின் துணைநிலை ஆளுநர் தன்னை மிரட்டியதாகக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். வினய் குமார் சக்ஷேனா பற்றிப் பேசுகையில், "நான் இல்லாத நேரத்தில் அதிஷி என்னுடைய இடத்தில் இருந்து கொடியேற்ற வேண்டும் என்று நான் துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுதினேன். அதற்குக் கிடைத்த பதிலில், இனி ஒருமுறை நீ எனக்கு கடிதம் எழுதினால் உன்னுடைய குடும்பத்தை உன்னால் பார்க்கவே முடியாது என்று கூறப்பட்டிருந்தது," என்று தெரிவித்தார் அரவிந்த்.
அதிஷி மர்லேனா ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினர் ஆவார். அவர் தற்போது டெல்லி அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
மேலும் தனது உரையின்போது, "என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை உடைத்து என்னைப் பயமுறுத்தலாம் என்பதே என் கைதுக்குப் பின்னால் இருக்கும் நோக்கம்" என்று மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.
"நான் சிறையில் இருந்து என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை. எனக்கு இந்த நாட்டின் ஜனநாயத்தின் பலம் தேவைப்பட்டது. சிறையில் இருந்தும் ஆட்சி நடத்த முடியும் என்பதை நான் நிரூபித்துவிட்டேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாஜகவின் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Pradeep Bhandari/X
டெல்லி மக்கள் மத்தியில் தன்னுடைய பிம்பம் ஒரு நேர்மையான தலைவர் என்பதற்குப் பதிலாக ஊழல் தலைவராக மாறியிருக்கிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் என்றும் இது வெறும் 'விளம்பர உத்தி (பி.ஆர். ஸ்டண்ட்)' என்றும் விமர்சனம் செய்துள்ளது பாஜக.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த நேர்காணலின்போது, "இன்று ஆம் ஆத்மி கட்சி ஒரு ஊழல் கட்சியாக நாடு முழுவதும் அறியப்பட்டுள்ளது. இந்த பி.ஆர். ஸ்டண்ட் மூலம் தாங்கள் இழந்திருக்கும் பிம்பத்தைக் கட்டியெழுப்ப முயல்கிறார்கள்," என்று தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசியவர், "டெல்லி மக்களுக்கு இன்று மூன்று விஷயங்கள் மிகவும் தெளிவாகியிருக்கும். ஒன்று, அரவிந்தின் வங்கிக் கணக்கில் பணமே இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால் அவரால் பிறகு எப்படி ஒரு மாளிகை போன்ற வீட்டைக் கட்ட இயலும்?" என்று கேள்வி எழுப்பினார்.
"இரண்டாவதாக அவர் டெல்லி மக்களைச் சந்திப்பேன். அவர்கள் மீண்டும் அவரை முதல்வராக்கும் வரை வேறொரு நபர் முதல்வராகச் செயல்படுவார் என்று கூறியிருக்கிறார். இது சோனியா காந்தியின் செயலைப் பின்பற்றும் முறை.
மூன்றாவது, ஆம் ஆத்மி டெல்லி தேர்தலில் தோற்கப் போவதை அவர் உணர்ந்திருக்கிறார். அவரது பெயரை வைத்து இனி டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லை. அதனால் மற்றொரு நபரை பலியாகத் தரப் போகிறார்," என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார்.
அடுத்த முதல்வர் யார்?
பதவி ராஜினாமா குறித்துப் பேசிய கேஜ்ரிவால், "துணை முதல்வரான மனிஷ் சிசோடியாவும் அவருடைய பதவியைத் தொடரமாட்டார். மக்கள் எங்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கும் போதுதான் அவரும் துணை முதல்வர் பொறுப்பை ஏற்பார்" பேசியுள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தலை இந்த ஆண்டு நவம்பரிலேயே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைத்தார்.
மேலும், டெல்லியில் தேர்தல் நடக்கும் வரை மற்றொரு தலைவர் முதல்வர் பொறுப்பு வகிப்பார் என்றும் அவர் யார் என்பதைத் தீர்மானிக்க ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு இரண்டு நாட்களில் ஆலோசனை செய்து புதிய முதல்வரைத் தேர்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளார் நீரஜ் குமார் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "உச்சநீதிமன்றம் உங்களை நிர்பந்தித்தது. முதல்வர் அலுவலத்திற்குச் செல்ல உங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த முடிவை கட்டாயத்தின் பெயரில்தான் எடுத்தீர்களே தவிர உங்கள் மனதில் இருந்து இந்த முடிவை எடுக்கவில்லை" என்று விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சந்தீப் தீக்ஷித், கேஜ்ரிவால் 'நாடகமாடுகிறார்' என்று விமர்சித்துள்ளார். மேலும் கேஜ்ரிவால் நீண்ட நாட்களுக்கு முன்பே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.
ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "அவர் மீண்டும் முதல்வராவது அல்லது ஆகாமல் போவது இப்போதைய பிரச்னை இல்லை. ஆனால் அவர் வெகு நாட்களுக்கு முன்பே அந்தப் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். நீங்கள் எந்தக் காரணத்திற்காக சிறை சென்றிருந்தாலும் அப்போதே அந்தப் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும். இப்போது நடப்பதெல்லாம் வெறும் நாடகம்தான்," என்று அவர் கூறினார்.
"வரலாற்றிலேயே முதல் முறையாக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் சிறை சென்று பிணையில் வரும்போது, உச்சநீதிமன்றம், 'எந்தவொரு கோப்புகளையும் தொடுவது அல்லது முதலமைச்சர் இருக்கையில் அமர்வது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளது. ஹேமந்த் சோரனும்கூட சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அவர் மீது இத்தகைய தடை எதையும் நீதிமன்றம் விதிக்கவில்லை," என்றும் மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டார் சந்தீப்.
"இவர் மீண்டும் முதல்வராக வரும் பட்சத்தில் ஆதாரங்களை அழிக்கவும், சாட்சியாளர்களை மிரட்டவும் இயலும் என்று உச்சநீதிமன்றம் நினைத்துள்ளது. அவரை ஒரு குற்றவாளி போலத்தான் நீதிமன்றம் நடத்துகிறது. அந்தப் பதவியில் நீடிக்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
*இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












