சென்னையில் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் - புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமா?

பட மூலாதாரம், Wilfred Thomas/BBC Tamil
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
'அரசு நிலத்தில் யாராவது குடிசை போட்டிருந்தால் அதை நீதிமன்றம் கேள்வி கேட்கிறது. சில தனி நபர்கள் 160 ஏக்கர் அரசு நிலத்தைக் கையில் வைத்துக் கொண்டு பல நூறு கோடி ரூபாய் குத்தகையை நிலுவையில் வைத்துள்ளனர். இதைப் பற்றி நீதிமன்றம் கேள்வி எழுப்புமா?'
மெட்ராஸ் ரேஸ் கிளப் தொடர்பான வழக்கில், அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுப்பிய கேள்வி இது.
அரசுக்கு வரவேண்டிய குத்தகைத் தொகையை செலுத்தத் தவறியதாக, கடந்த செவ்வாய் (செப். 9) அன்று மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டது.
'ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் முழு குத்தகைப் பணமும் செலுத்தப்பட்டுவிட்டது. சட்டரீதியாக இதை எதிர்கொள்வோம்' என்கிறது ரேஸ் கிளப் தரப்பு.
எம்.ஆர்.சி எனப்படும் மெட்ராஸ் ரேஸ் கிளப் எப்படி உருவானது? 160 ஏக்கர் நிலத்தை வைத்து மோசடிகள் நடந்ததா? அரசின் நடவடிக்கை சரியா?

எம்.ஆர்.சி உருவான கதை
சென்னையின் மையப்பகுதியாக கிண்டி இருந்தாலும், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.
"கடந்த 1777ஆம் ஆண்டில் குதிரைப் பந்தயம் நடத்துவதற்கு இந்த இடத்தை ஆங்கிலேயர்கள் தேர்வு செய்தனர். 1825ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டத்தின் அன்றைய கலெக்டர் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், குதிரைப் பந்தய மைதானம் அமைப்பதற்கு வேளச்சேரி, வெங்கடாபுரம் கிராமங்களில் இருந்து 81 காணி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அடையாறு ஆறு, கிண்டி காடு ஆகியவற்றுக்கு நடுவே பந்தய மைதானம் அமைக்கப்பட்டது" என்கிறார், வரலாற்று ஆய்வாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.
"தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் மட்டும் குதிரைப் பந்தயங்களில் கலந்து கொள்ளலாம் என்ற விதி இருந்தது. மாலை நேரங்களில் பாடல்களும் நடனமும் களைகட்டியுள்ளது. தற்போது கிண்டி ரயில் நிலையத்தின் அருகே பந்தய கிளப் உள்ளது. ஆனால், தொடக்கத்தில் ரயில் சத்தத்தால் குதிரைகள் பயப்படும் எனக் கூறி அங்கே ரயில் பாதைத் திட்டத்தையே ஆங்கிலேய அரசு கைவிட்டது" என்கிறார் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.
"கடந்த 1875ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரும் விக்டோரியா ராணியின் மகனுமான ஏழாம் எட்வர்ட், இங்கு வருகை தந்து குதிரைகள் ஓடுவதைப் பார்வையிட்டுள்ளார். பின்னர், இந்தியர்களும் குதிரைப் பந்தய மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்."
"சென்னையில் முதல் சினிமா நிகழ்ச்சி என்பது ஸ்டீவன்சன் நடத்திய குறும்படக் காட்சிதான். விக்டோரியா அரங்கில் நடந்த இந்தக் காட்சியில் கிண்டியில் ஓடும் குதிரைகள் காட்டப்பட்டன. அந்த வகையில் மெட்ராஸில் படமாக்கப்பட்ட முதல் இடமாக கிண்டி இருந்தது."
"மைதானத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 1920ஆம் ஆண்டில், பொப்பிலி மற்றும் வெங்கடகிரி ஜமீன்தார்களால் பார்வையாளர் அரங்குகள் கட்டப்பட்டன. இதன் பின்னர், 1946ஆம் ஆண்டில் 99 ஆண்டு குத்தகைக்கு இந்த நிலம் தனியாருக்குக் கொடுக்கப்பட்டது" என்கிறார் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.
இந்த ரேஸ் க்ளப் குத்தகைக்கு விடப்பட்ட காலத்தில் இருந்தே ராஜா அண்ணாமலை செட்டியாரின் வாரிசுகளே இந்த க்ளபை நிர்வாகம் செய்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
160 ஏக்கர்... ஆண்டு வாடகை 614 ரூபாய்
கிண்டியில் 160 ஏக்கர் 86 சென்ட் நிலப்பரப்பில் குதிரைப் பந்தய மைதானம் அமைந்துள்ளது. ஆண்டுக்கு 614 ரூபாய் என குத்தகைத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. குத்தகைக் காலம் முடிவடைவதற்கு 2044ஆம் ஆண்டு வரையில் அவகாசம் உள்ள நிலையில், கடந்த செப்டெம்பர் 9ஆம் தேதியன்று அரசாணை வெளியிட்டு அரசு கையகப்படுத்தியுள்ளது.
குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தான போது முடிவெடுக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதல் கட்டணம் செலுத்துவதற்கு கிளப் நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.
கடந்த 1970ஆம் ஆண்டில் குத்தகைத் தொகையை உயர்த்துவது தொடர்பாக மாம்பலம்-கிண்டி தாசில்தார், ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், 'தொகையை அதிகரிப்பது குறித்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை' என ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்தது.

பட மூலாதாரம், Wilfred Thomas/BBC Tamil
310 கோடி ரூபாய் அபராதம்
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டில், 'ஜூலை 1, 1974 முதல் ஜூன் 30, 2004 வரையிலான காலகட்டத்துக்கு வாடகையாக 310.7 கோடி செலுத்த வேண்டும்' என்று மாம்பலம்-கிண்டி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த கிளப் நிர்வாகம், பட்டா கொடுக்கும் அதிகாரம் மட்டுமே தாசில்தாருக்கு உள்ளதாகவும் தொகையை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த வழக்கில், சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகையை உயர்த்துவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக, கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அரசின் கொள்கை முடிவு சட்டவிரோதம் அல்ல எனவும் ஒரே மாதத்துக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்தாவிட்டால் 160 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகத்தின் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 9ஆம் தேதி குத்தகையை ரத்து செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்தார். அதே தேதியில் ரேஸ் கிளப் நுழைவாயிலில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். எம்.ஆர்.சி-யின் வாயில் கதவுகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன.
இந்த திடீர் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் முறையிட்டது. அப்போது நீதிபதிகள், "வழக்கு நிலுவையில் இருக்கும்போது சட்டமீறல்களுக்கு நாங்கள் துணை போக மாட்டோம். இடத்தைக் காலி செய்வதற்கு அவகாசம் வழங்க வேண்டாமா?" என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
'தி.மு.க அரசின் சாதனை'

பட மூலாதாரம், Wilfred Thomas/BBC Tamil
"செப்டம்பர் 9ஆம் தேதி காலை 8 மணிக்கு அரசின் கட்டுப்பாட்டுக்குள் எம்.ஆர்.சி வந்துவிட்டது. அங்கு வளாகத்தில் உள்ள கல்யாண மண்டபம், கிளப் ஆகியவற்றை 15 நாள்களில் காலி செய்யுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக மூன்று வாயில் கதவுகளை மட்டும் திறந்து வைத்துள்ளோம். இரண்டு வாரங்களில் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன்.
"கடந்த 1970ஆம் ஆண்டில் இருந்து குத்தகைத் தொகையை அதிகரிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. 160 ஏக்கருக்கும் ஆண்டுக்கு 614 ரூபாய்க்கு மேல் வாடகையை உயர்த்தக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளனர். நகரின் மையப்பகுதியில் இவ்வளவு பெரிய இடத்தைத் தங்களின் கட்டுப்பாட்டில் சிலர் வைத்திருந்தனர். அதை மீட்டு அரசு மிகப் பெரிய சாதனையைச் செய்துள்ளது" என்கிறார் வில்சன்.
ரேஸ் கிளப் சார்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் வைபவ் வெங்கடேஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, "நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தற்போதைய நிலையில் கருத்து சொல்வதற்கு வாய்ப்பில்லை" என்றார்.
அதேநேரம், "அரசின் நடவடிக்கையை விமர்சிக்க விரும்பவில்லை" எனக் கூறும் ரேஸ் கிளப்பின் நிர்வாகி ஒருவர், பெயர் அடையாளத்தைத் தவிர்த்துவிட்டு, சில தகவல்களைத் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Special Arrangement
"கடந்த 1946ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 614 ரூபாய் என 99 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டது. இதனுடன் சொத்து வரி, பராமரிப்பு என 115 ரூபாய் கூடுதலாகச் சேர்த்து ஆண்டுக்கு 730 ரூபாய் செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அன்றைக்கு அரசின் கொள்கை முடிவின்படி, நிலங்களை விற்காமல் குத்தகை அடிப்படையில் கொடுக்க முடிவு செய்தனர். அதற்கான மொத்தத் தொகையை அப்போதே வசூலித்துவிட்டனர். அந்த வகையில், 1946ஆம் ஆண்டில் மொத்தத் தொகையான 73,000 ரூபாயை அரசுக்கு செலுத்திவிட்டோம்," பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த நிர்வாகி.
"அன்று 1 ரூபாய் கொடுக்கப்பட்டாலும் இன்றைய மதிப்பில் அதன் மதிப்பு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். குத்தகைத் தொகையை மாற்றி அமைக்க முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது. அதையும் மீறி ஒப்பந்தக் காலம் முடிவதற்குள் அரசு கையகப்படுத்திவிட்டது" என்கிறார்.
இந்தக் கூற்றை மறுக்கும் மூத்த வழக்கறிஞர் வில்சன், "இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பின்னர், அரசின் வருவாய்த்துறையில் பல்வேறு காலகட்டங்களில் விதிகள் மாற்றப்பட்டுவிட்டன. கிளப் வளாகத்தில் குதிரைப் பந்தயம் நடத்தப்படுவதோடு, திருமண மண்டபம், மதுபான விடுதி ஆகியவையும் இயங்கி வருகின்றன. இதன் வருவாய் அரசுக்கு வருவதில்லை" என்கிறார்.
புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமா?
"அரசின் கட்டுப்பாட்டுக்குள் நிலம் வந்த பிறகு புதிய தலைமைச் செயலகம் கட்டப்படலாம் எனக் கூறப்படுகிறதே?" என்ற கேள்விக்கு, "அங்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழக முதல்வர் முடிவு செய்வார்" என்றார்.
"எம்.ஆர்.சி-யை நடத்துவதற்கு தனியாக கமிட்டி உள்ளது. லாப நோக்கற்ற கிளப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கமிட்டியில் அரசின் வருவாய்த்துறை, நிதித்துறை உள்பட நான்கு துறைகளின் செயலர்களும் உள்ளனர். இங்கு 8,000 உறுப்பினர்கள் உள்ளனர். விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறுவது சரியல்ல" என்கிறார், ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஒருவர்.

பட மூலாதாரம், Wilfred Thomas/BBC Tamil
எம்.ஆர்.சி-யில் என்ன நிலவரம்?
இதையடுத்து, மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய, பிபிசி தமிழ் சார்பில் அங்கு சென்றோம். அங்குள்ள பிரதான வாயிலைத் தவிர மற்றவை சீல் வைக்கப்பட்டிருந்தன.
எந்தவித பரபரப்பும் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு நுழைவாயிலிலும் இரண்டு காவலர்களும் போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. பந்தயம் நடக்கும் நுழைவாயிலின் அருகே இருந்த மேஜையில், 'எப்போது எந்த அணியின் பந்தயம் நடக்கும்?' என்ற விவரங்கள் கையால் எழுதப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்தன.
சென்னை அணி, கொல்கத்தா அணி, புனே அணி எனக் குறிப்பிட்டு, ஒவ்வொரு போட்டிக்கும் தேதிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் பேசினோம்.
"நான் 27 வருடங்களாக இங்கு வேலை பார்க்கிறேன். திடீரென சீல் வைத்ததை எதிர்பார்க்கவில்லை. தற்போது 450க்கும் மேற்பட்ட குதிரைகள் உள்ளன. இவற்றைப் பராமரிக்க குதிரைக்கு 2 பேர் என சுமார் 800 பேர் வரை வேலை பார்க்கின்றனர்.
இந்த கிளப்பை நம்பி குதிரைக்குத் தீனி போடுவது முதல் டிக்கெட் கொடுப்பது வரை ஐந்தாயிரம் பேர் உள்ளனர். மாதத்தில் நான்கு நாட்களாவது பந்தயம் நடக்கும். இனி பந்தயம் நடக்குமா எனத் தெரியவில்லை. எங்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை" என்றார்.
இரண்டு சம்பவங்கள்
குதிரைப் பந்தயத்தை 1974ஆம் ஆண்டில் சூதாட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து தி.மு.க. அரசு தடை செய்தது. அதன் நினைவாக அண்ணா மேம்பாலத்தின் கீழ் குதிரை சிலை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிமன்றங்களில் முறையிட்டு தடை நீக்கப்பட்டது.
ஆனால், 1985ஆம் ஆண்டில் கிளப் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக குதிரைப் பந்தயம் மீண்டும் தடை செய்யப்பட்டது. பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் 1995ஆம் ஆண்டில் அந்தத் தடை நீக்கப்பட்டது.
"ரேஸ் கிளப் தொடங்கப்பட்டு 247 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒப்பந்தம் போடப்பட்ட பின்னர், மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் எம்.ஆர்.சி வருவதற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.
ராஜா அண்ணாமலை செட்டியாரின் வாரிசுகளின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து எம்.ஆர்.சி இருந்து வந்தது. குதிரைகளை வளர்ப்பதிலும் பந்தயத்திலும் அவர்கள் ஆர்வம் காட்டினர்" எனக் குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.
"சென்னையின் பழைய வரைபடத்தைக் கவனித்தால் அடையாறுக்கு தெற்கில் மிக வளமையான பகுதியாக இருந்துள்ளதைப் பார்க்கலாம். தற்போது அங்கு தலைமைச் செயலகம் கட்டப் போவதாகச் சொல்கின்றனர். அரசு அங்கு என்ன திட்டங்களைச் செயல்படுத்தினாலும் அதன் பசுமையை அப்படியே காப்பாற்ற வேண்டும். இப்படியொரு நுரையீரல் (Lungs) பகுதியை சென்னையில் வேறு எங்கும் பார்க்க முடியாது" என்கிறார் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












