சீதாராம் யெச்சூரி: இடதுசாரி கட்சிகளின் புகழ்பெற்ற ஆளுமை- அவரது அரசியல் பயணம் எப்படிப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நீரஜா சௌதரி
- பதவி, பிபிசி இந்திக்காக
அன்பான, அணுகக்கூடிய சீதாராம் யெச்சூரி அரை நூற்றாண்டு காலமாக கம்யூனிஸ்டாக இருந்தபோதும், அவரிடம் வறட்டுக் கோட்பாட்டுப் பிடிவாதம் இருந்ததேயில்லை.
அவர் 1975-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தற்செயலாக, அது இந்திரா காந்தி அவசரநிலையை விதித்தவுடன் அவர் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டும் கூட. அதிலிருந்து 2015-இல் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஆனார்.
1992 முதல் கட்சியின் உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தாலும், அவர் மத்தியவாதத் தலைவர்களின் வார்ப்பில் உருவானவர், நடுநிலைப் போக்குடையவராகக் கருதப்பட்டவர்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 12), தனது 72 வயதில் பிரியாவிடை பெற்றார்.
சீதாராம் யெச்சூரியைப் பற்றி நினைக்கும் போது பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன – புலமை மிக்கவர், சிந்தனைமிக்கவர், நன்றாகப் படித்தவர், ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியவர், புத்தகங்களை எழுதியவர், தொடர்ந்து கருத்துக்களுடன் விவாதித்து மற்றவரையும் விவாதிக்கத் தூண்டியவர். மேலும் அவரை அறிந்த பலர், "அனைவராலும் விரும்பப்படுபவர், நேசிக்கப்படுபவர்," என்று கூறுகிறார்கள்.


பட மூலாதாரம், Getty Images
சிறந்த பேச்சாளர், பிளவுகளை இணைத்தவர்
1977-இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்றார். அங்கு அவர் பொதுக்குழுக் கூட்டங்களை நடத்துவார், அவை இரவு வெகுநேரம் வரை செல்லும்.
ஒரு திறமையான பேச்சாளராக, அவரால் பார்வையாளர்களின் மனநிலையை உணர முடிந்தது. மேலும் "பார்வையாளர்களை நம்பவைக்கும் வகையில் அவர் சொல்வதை தொடர்ந்து கட்டமைப்பார்." என்கிறார் ராஜா மோகன்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக யெச்சூரி இருந்தபோது அதன் பொதுச் செயலாளராக இருந்த இருந்த சி ராஜா மோகன், "சிக்கலான பிரச்னைகளைச் சமாளிக்கும் திறன் அவருக்கு இருந்தது. அவர் ஒரு நல்ல அமைப்பாளர். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களை வெல்லும் திறன் அவருக்கு இருந்தது," என்கிறார்.
இந்தியா போன்ற ஏழ்மையான மற்றும் வளரும் நாடுகளில் ஒரு முக்கிய சக்தியாக மாறியிருக்கக்கூடிய ஒரு கட்சியில் அவர் இருந்தார். ஆனால் கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களைத் தவிர அக்கட்சி ஏன் அப்படி ஒரு தேசியச் சக்தியாக மாறவில்லை என்பது ஒரு விவாதப்பொருளாகவே உள்ளது.
யெச்சூரி இந்தியாவில் இடதுசாரிகளின் ஒரு முக்கியத் தலைவராக மட்டும் நினைவுகூரப்படமாட்டார், ‘இந்தியா என்ற கருத்துக்கு’ தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவராகப் பார்க்கப்படுவார்.
அவர் தேசிய அரசியலில், குறிப்பாக 1989-2014 வரையிலான கூட்டணி ஆட்சியின் கால் நூற்றாண்டு காலத்தில், பா.ஜ.க-வுக்கு ஒரு மாற்றினை உருவாக்க முற்பட்ட ஒரு தலைவராகவும் அங்கீகரிக்கப்பட்டவர்.
யெச்சூரி பிளவுகளை இணைத்தவர். மற்ற கட்சிகள், தலைவர்கள் என அனைவரிடமும் அவர் பழகினார். அவர் சில நேரங்களில் ‘மற்றொரு ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்’ என்று அழைக்கப்படுகிறார்.
பஞ்சாபின் புகழ்பெற்ற சிர்ஜீத், 1992 முதல் 2005 வரை, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர். அவரது அரசியல் திறமை மூலம் 1989-இல் அப்போதைய ஆதிக்க காங்கிரஸுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு மாற்றினை உருவாக்க வி.பி.சிங்குக்கு உதவியவர். மீண்டும் 1996-இல் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வரவும், 2004-இல் பி.ஜே.பி-யை ஆட்சிக்கு வராமல் செய்யவும் உதவியவர்.

பட மூலாதாரம், Getty Images
அனைவரும் விரும்பிய ‘சீதா’
நண்பர்களும் சகாக்களும் ‘சீதா’ என்றழைத்த யெச்சூரி, சுர்ஜீத்தைப் போலவே, 1996-இல் ஐக்கிய முன்னணியை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.
2004-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியையும், 2023-இல் உருவாகி 2024 பொதுத்தேர்தலில் களமிறங்கிய ‘இந்தியா’ கூட்டணியையும் ஒன்றாக இணைக்க உதவினார். இந்தக் கூட்டணி, பா.ஜ.க-வுக்குக் கடினமான போட்டியை வழங்கி அக்கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் செய்தது.
1996 மற்றும் 2004-இல் ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கங்களுக்கான பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை இயற்ற உதவினார்.
பிந்தைய ஆண்டுகளில், 1996-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்த ‘வரலாற்றுத் தவறை’ பற்றிச் சொன்னார். 1996-இல் இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சியில் ஒருவர் பிரதமராகும் வாய்ப்பை அக்கட்சி ஏன், எப்படி கைவிட்டது என்பதை நினைவு கூர்ந்தார்.
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க பெரும்பான்மையைத் திரட்ட முடியாமல் போய், ஆட்சி அமைக்கத் தயாராக இருந்த ஐக்கிய முன்னணியின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவை பிரதமராகி கூட்டணியை வழிநடத்த அழைத்தனர்.
கட்சியின் உச்ச மத்தியக் குழு இந்த வாய்ப்பை நிராகரித்தது. பின்னர் பாசு இதனை ‘வரலாற்றுத் தவறு’ என்று விவரித்தார். யெச்சூரி இந்த நடவடிக்கையை எதிர்த்த 3 அல்லது 4 உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். அடுத்த ஆண்டுகளில் அவர் தனது கருத்தைத் மாற்றிக்கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், அவர் சுர்ஜித் மற்றும் ஜோதிபாசுவுடன் கர்நாடகா பவனுக்குச் சென்றார். அங்கு அவர்களது கருத்தை அறிந்துகொள்ள ஐக்கிய முன்னணியின் தலைவர்களான தேவகவுடா, சந்திரபாபு நாயுடு, லாலு யாதவ் ஆகியோர் ஆவலுடன் காத்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்றத்தில் முத்திரை பதித்தவர்
சீதாராம் யெச்சூரி நாடாளுமன்றத்தில் தனது முத்திரையைப் பதித்தார். மக்களவையில் 12 ஆண்டுகளாக அவர் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததோடு மட்டுமல்லாமல், தனது தெளிவான உரைகளுக்காக நினைவுகூரப்படுவார்.
பா.ஜ.க-வை எதிர்க்கும் கட்சிகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைப்பை உருவாக்க உதவினார். அவர் ஓய்வு பெற்றபோது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு எம்.பி-க்களும் யெச்சூரி அவரது கட்சியால் மறுபடியும் பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
கட்சியின் ஒழுக்கமான உறுப்பினர் என்ற முறையில், கட்சி முடிவுகளுடன் தனிப்பட்ட முறையில் முரண்பட்டாலும், இறுதியில் கட்சி முடிவுகளுக்கு இணங்கச் சென்றார். உதாரணமாக, இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில் மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதை அவர் எதிர்த்தார்.
அவரது சகாவும் மார்க்சிஸ்ட் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளருமான பிரகாஷ் காரத்துடன் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடுகள் அனைவரும் அறிந்ததே.
காரத் மற்றும் யெச்சூரி, போட்டியாளர்களாக இருப்பினும் ஒத்துழைப்பவர்கள். சுதந்திரத்திற்குப் பிறகான நவீன இந்தியாவை வடிவமைக்க உதவிய பல அரசியல் ஜோடிகளில் இவர்களும் அடங்குவர். (நேரு-படேல், வாஜ்பாய்-அத்வானி, மோடி-ஷா போன்றவர்கள்.)
‘நண்பர், தத்துவஞானி, வழிகாட்டி’ -- அதுதான் காந்தி குடும்பத்துடனான அவரது உறவு. சோனியா காந்தியும், பின்னர் ராகுல் காந்தியும், இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியமான பல விஷயங்களில் யெச்சூரியுடன் பல மணிநேர உரையாடல்களை நடத்தியுள்ளனர். ராகுல் இதனை நினைவு கூர்ந்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மதவாதத்தை எதிர்க்க உதவியவர்
மோதி அரசு துவக்க ஆண்டுகளில், வலதுசாரி இந்துக் கட்சி என்ற அடையாளத்துடன் ஒரு பிரதமர் நாட்டை ஆட்சி செய்ய வந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரியைத் தேர்ந்தெடுத்தது.
தேசிய அரசியலோடு தொடர்புடன் இருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் மிக விரைவாகவும், கடினமாகவும், தனது ஒப்பற்ற செயல்பாடுக்காக அறியப்பட்ட சீதாராம் யெச்சூரி, அரசியல் சக்திகள் அனைத்தையும் ஒரு பொது மேடையில் (இந்தியா கூட்டணி) ஒன்றிணைத்து, பா.ஜ.க தலைமையிலான சக்திகளுக்கு எதிராக ஒரு சவாலை ஏற்படுத்தினார்.
இந்தியாவின் மிக முக்கியமான தருணங்களில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க உதவினார், கேமரா முன் இருந்ததைவிட திரைக்குப் பின்னால் அதிகமாக. இதில் தனது பங்கிற்காக யெச்சூரி என்றும் நினைவுகூரப்படுவார்.
எனவே, அவரது கட்சியின் தோழர்கள் தங்கள் நீண்ட வருட சகத் தோழருக்கு விடைகொடுக்கும்போது, நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற மரபுகளை நிலைநிறுத்தவும், அதன் ஏழைகளுக்கு ஒரு புதிய நாளைக் கொண்டுவரவும் பாடுபட்ட தனதொரு மகனுக்கு இந்த நாடும் விடைகொடுக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












