மதுவிலக்கு மாநாடு புதிய கூட்டணிக்கான அச்சாரமா? திமுக - விசிக இடையே என்ன நடக்கிறது?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டுவர வலியுறுத்தி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) அறிவித்துள்ளது. இது தி.மு.க.வுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி அளிக்கும் முயற்சியா?
தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ ஒன்றை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 10) சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற போது, அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், "மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்," என்றார். இந்த மாநாட்டில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, அ.தி.மு.க-வும் இந்த மாநாட்டில் பங்கேற்கலாமா எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, "மது ஒழிப்பில் அ.தி.மு.க-வும் தயங்குகிறது. வேண்டுமானால் அவர்கள் மாநாட்டுக்கு வரட்டும். எந்தக் கட்சியும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது. இதைத் தேர்தலோடு பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை," என்று தெரிவித்தார்.
மதுவிலக்கு மாநாட்டில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் அரசியலுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் சொன்னாலும், தி.மு.க.வுக்கு நெருக்கடி அளிப்பதற்காகவே மதுவிலக்கை வலியுறுத்தி மாநாட்டை நடத்துகிறாரா என்றும் அ.தி.மு.க-வை அழைக்கிறாரா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
செவ்வாய்க்கிழமையன்று தி.மு.க., தலைவர்களிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்கள் இதனைச் சாதாரணமாகக் கடந்து சென்றனர்.
இது தொடர்பாக சென்னையில் பதிலளித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "விடுதலைச் சிறுத்தைகளின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க-வை அழைத்து, அதற்கு அவர்கள் சென்றால் நல்லதுதானே. நல்ல விஷயத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்," என்றார்.
சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, "அ.தி.மு.க-வை அழைத்திருப்பது அவர்களுடைய விருப்பம்," என்று தெரிவித்தார்.


‘கூட்டணி மாற்றத்திற்கான அச்சாரம்’
ஆனால், இதனை கூட்டணி மாற்றத்திற்கான அச்சாரமாகவே பார்க்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.
"தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படும் இதுபோன்ற மாநாடுகள் எதுவும் ஆளும் அரசுக்குத் தரப்படும் அழுத்தமாகத்தான் கருதப்படும். தி.மு.க., கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுமே, 2026-இல் கூட்டணி ஆட்சி என்பதை வலியுறுத்த நினைக்கின்றன. அந்த நிலைப்பாட்டில்தான் வி.சி.க-வும் செல்கிறது'' என்றார்
மேலும் அவர், ''முதலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிலர் கைதுசெய்யப்பட்டபோது, கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என திருமாவளவன் கூறினார். பின்னர், கள்ளச்சாராய சாவுகளுக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்தது தவறு என்றார். இப்போது மதுவிலக்கை வலியுறுத்துகிறார். இது சாத்தியமல்ல என்பது அவருக்கும் தெரியும். ஆகவே, இது கூட்டணி முறிவை நோக்கித்தான் செல்லும். இது தி.மு.க-வுக்கும் தெரியும்," என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.
1970-களில் மதுவிலக்கு தொடர்பாக நடந்த நிகழ்வுகளையும் அதற்குப் பிறகு தமிழ்நாடு அரசியலில் நடந்த மாற்றங்களையும் இதற்கு உதாரணமாக நினைவுகூர்கிறார் ஷ்யாம்.
''1971-இல் தி.மு.க., ஆட்சி நடந்துவந்தபோது, அந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் மதுவிலக்கு ஒத்திவைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டத்தில் தி.மு.க-விற்குள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கும் பொருளாளர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்திருந்தன.
இந்தத் தருணத்தில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி மதுவிலக்குப் பிரசாரத்தைத் துவங்கப்போவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர்.
‘மது கூடாது’ என்ற லட்சியம் உடையவர்கள், அண்ணா சமாதிக்குச் சென்று மதுவுக்கு எதிராக மூன்று வாக்குறுதிகளை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார். ஆனால், இந்தப் பிரசார நிகழ்ச்சிகள் குறித்து தி.மு.க-விற்குள்ளிருந்தே விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பிறகு முரண்பாடுகள் முற்றி, எம்.ஜி.ஆர்., கட்சியை விட்டே வெளியேறினார். எம்.ஜி.ஆர்., கட்சியைவிட்டு வெளியேறுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் இது ஒரு காரணமாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. அதுபோலவே இப்போதும் நடக்கலாம்'' என்கிறார் ஷ்யாம்.

‘கூட்டணியோடு தொடர்புபடுத்த வேண்டியதில்லை’
ஆனால், இது முழுக்க முழுக்க மதுவிலக்கை மட்டுமே வலியுறுத்தி நடத்தப்படும் மாநாடு, இதனை கூட்டணியோடு தொடர்புபடுத்த வேண்டியதில்லை என்கிறார் திருமாவளவன்.
புதன்கிழமையன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், 2016-இல் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியையே தாங்கள் நிறைவேற்ற வேண்டுமெனக் கோருவதாகக் குறிப்பிட்டார்.
"ஒரு தூய நோக்கத்திற்காக எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்கிறோம். இதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது. தேர்தல் அரசியலோடு இணைத்துப் பார்ப்பது, கூட்டணிக் கணக்குகளோடு இணைத்துப் பார்ப்பது, என இந்த விவகாரத்தை அணுகுகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலை தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பார்ப்போம். மற்ற நேரங்களில் அதைக் கருப்பொருளாக வைத்து எந்த முடிவையும் எடுப்பதில்லை," என்று குறிப்பிட்டார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அப்போதும் தி.மு.க. மதுவிலக்குக் கொள்கையை நிறைவேற்ற முன்வராவிட்டால், வி.சி.க-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, "இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நிறைவேற்றவில்லையென்றால் என்ன நடக்கும் என்பது போன்ற யூகங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை," என்று முடித்துக்கொண்டார்.

பட மூலாதாரம், VCK
மதுவிலக்கு கோரிக்கைகள்
2024-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்திய நிலையில்தான், தற்போது மதுவிலக்கு குறித்த கோரிக்கைகள் முன்னணிக்கு வந்திருக்கின்றன.
இதற்கு முன்பாக, 2014-2015-ஆம் ஆண்டுகளிலும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு தொடர்பான போராட்டங்கள் நடந்தன. மது ஒழிப்பு போராளியான சசி பெருமாள் 2015-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடையில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியபோது உயிரிழந்தார். இது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசி பெருமாளின் குடும்பத்தினர் அவரது சடலத்தை வாங்க மறுத்தனர்.
அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி சேலத்தில் ஒரு மதுபானக் கடை தீ வைத்து கொளுத்தப்பட்டது.
அதில் டாஸ்மாக் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என அறிவித்தது அக்கட்சி.
2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது தி.மு.க. பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நலக் கூட்டணி ஆகியவையும் தாங்கள் வெற்றிபெற்றால் மதுவிலக்கைக் கொண்டுவரப்போவதாக அறிவித்தன. ஆனால், மீண்டும் அ.தி.மு.க-வே ஆட்சியைப் பிடித்தது. இதற்குப் பிறகு மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியலில் முன்னணிக்கு வரவில்லை. 2021-ஆம் ஆண்டு தேர்தலில் மதுவிலக்கு குறித்து தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை.
இப்போது கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்களையடுத்து மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன.

பட மூலாதாரம், RAVIKUMAR
வி.சி.க என்ன சொல்கிறது?
ஆனால், இதனை அரசுக்குத் தரும் நெருக்கடியாக பார்க்க வேண்டியதில்லை என்கிறார் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார்.
"கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்ட பிறகு, அங்கு சென்ற திருமாவளவன் சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார். இரண்டு நாட்கள் அங்கே தங்கியிருந்தார். இதற்கு பிறகு இது தொடர்பாக ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது மாநாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அரசுக்கு அளிக்கும் நெருக்கடியாக பார்க்க வேண்டியதில்லை. மதுவிலக்கு என்பது அரசின் கொள்கைதான். அதனால்தான் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை என்று இருக்கிறது. மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் அந்தத் துறையின் வேலை,” என்கிறார் அவர்.
“மதுவிலக்கால் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பைப் பற்றிப் பேசுகிறார்கள். நம்மைவிட வருவாய் குறைந்த பிஹாரில் துணிச்சலாக மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கிறார்கள். மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை அறிவிக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசே இழப்பீடு தர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை," என்கிறார் அவர்.
அதேபோல, அ.தி.மு.க-வுக்கான அழைப்பையும் தனித்துப் பார்க்க வேண்டியதில்லை என்கிறார் அவர். "எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க., பா.ம.க., தவிர வேறு எந்தக் கட்சி வேண்டுமானாலும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளலாம். அ.தி.மு.க., ஒரு பெரிய கட்சி. அக்கட்சி கலந்துகொண்டு ஒரு வாக்குறுதியை அளித்தால் அதற்கு நல்ல விளைவு ஏற்படுமல்லவா. அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும். இதனைத் தேர்தல் கூட்டணியோடு முடிச்சுப்போட வேண்டியதில்லை," என்கிறார் அவர்.
தி.மு.க என்ன சொல்கிறது?
தி.மு.க-வும் இதனை ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை என்கிறது. இது குறித்து பிபிசி-யிடம் பேசிய தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டீன், ஜனநாயகத்தில் இதுபோன்ற நடைமுறைகள் ஏற்கத்தக்கவைதான் என்றார்.
"மதுவிலக்கு போன்ற பெரிய கொள்கை மாற்றங்கள், கோரிக்கை எழுந்தவுடன் நிறைவேற்றப்படப் போவதில்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்த பிறகு, அங்கு சென்ற திருமாவளவனிடம் மதுவிலக்குக் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது மதுவிலக்கு வரவேண்டும் என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டை நடத்துகிறார்கள். மதுவிலக்கு தொடர்பான மாநாடு என்பதால் யார் வேண்டுமானாலும் வரலாம், இது அரசியல் மேடையல்ல என்றுதான் சொல்லியிருக்கிறார். தேர்தல் அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் சொல்லியிருக்கிறார். ஜனநாயகத்தில் இதுபோன்ற நடைமுறைகளை ஏற்க வேண்டியதுதான்," என்கிறார் கான்ஸ்டைன்டீன்.
வி.சி.க-வின் மதுவிலக்குக் கோரிக்கை குறித்து கேட்டபோது, இதில் முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
"மதுவைப் படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதனால்தான் சமீபத்தில்கூட 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், இவ்வளவு கடைகள் திறந்திருக்கும்போதே பெரிய அளவில் கள்ளச்சாராயம் பிடிபடுகிறது. ஆகவே இதில் உடனடியாக முடிவெடுப்பது கடினம். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும். இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுப்பார்," என்கிறார் கான்ஸ்டைன்டீன்.
தமிழகத்தின் சொந்த வரி வருவாயில் டாஸ்மாக் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் மிக முக்கியமானதாக இருக்கிறது. 2023- 24-ஆம் ஆண்டில் இந்த வருவாய் சுமார் 45,800 கோடி ரூபாயாக இருந்தது.
2019-ஆம் ஆண்டிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க., கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இரு இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் இதே கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்டு 4-இல் வெற்றிபெற்றது. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றது.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












