மாலத்தீவு மீண்டும் இந்தியா பக்கம் திரும்புமா? அடுத்தடுத்த நகர்வுகளால் புதிய திருப்பம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹிமான்ஷு தூபே
- பதவி, பிபிசி நிருபர்
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு விரைவில் இந்தியா வரவுள்ளார். இந்த தகவலை மாலத்தீவு அதிபர் அலுவலகத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் ஹீனா வலீத் தெரிவித்துள்ளார்.
முகமது முய்சுவின் இந்தியப் பயணம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக மாலத்தீவு அரசாங்கத்தின் இரண்டு இணை அமைச்சர்களான மரியம் ஷியூனா மற்றும் மல்ஷா ஷெரீப் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்கள் இருவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைப் பற்றி கடுமையாக விமர்சித்து கருத்துகளை வெளியிட்டவர்கள். அதற்காக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
முன்னதாக அதிபர் முகமது முய்சு தனது தேர்தல் பிரசாரத்தின் போது மாலத்தீவில், 'இந்தியாவே வெளியேறு' என்ற கோஷத்தை முன்வைத்தார். இதனால் முய்சு சீனாவின் பக்கம் சாயும் தலைவராகக் கருதப்பட்டார்.

இந்தியா - மாலத்தீவு உறவு
முய்சு மாலத்தீவில் ஆட்சி அமைத்தவுடன், இந்தியாவுடனான மாலத்தீவின் ராஜதந்திர உறவுகளில் பதற்றமான சூழல் உருவானது.
இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட லட்சத்தீவு பயணம் இரு நாட்டு உறவில் சலசலப்பை ஏற்படுத்தியது. மோதி லட்சத்தீவில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, அங்கு சுற்றுலா செல்லுமாறு இந்திய மக்களை கேட்டு கொண்டார்.
இதன் காரணமாக மாலத்தீவுக்கு எதிராக இந்தியர்களிடையே லட்சத்தீவு சுற்றுலா ஊக்குவிக்கப்படுகிறது என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வேகமெடுத்தது.
முய்சு ஆட்சியில் அமைச்சராக இருந்த மரியம் ஷியுனா, பிரதமர் மோதியின் புகைப்படங்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை எக்ஸ் தளத்தில் (முன்பு டிவிட்டர்) பதிவிட்டார். பிரதமர் மோதியை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தி அவர் விமர்சித்தார். வேறு சிலரும் பிரதமர் மோதியை விமர்சித்தனர். இதனையடுத்து இரண்டு அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மோதி மீது மாலத்தீவு அமைச்சர்கள் முன்வைத்த விமர்சனத்தால் அதன் சுற்றுலாத்துறை சரிவை சந்தித்தது. மாலத்தீவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் சுற்றுலாத் துறையில் மந்தநிலை ஏற்பட்டது.
மாலத்தீவு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. மாலத்தீவு சுற்றுலாத் துறையின் தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் சுமார் 13 ஆயிரம் இந்தியர்களே மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இந்த எண்ணிக்கை 2023 ஜனவரியில் 17 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவ வீரர்களை படிப்படியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் முகமது முய்சு முடிவு செய்தார். ஆனால் இந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற போது, முகமது முய்சு புதுடெல்லிக்கு வருகை தந்தார்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் குறித்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சர்வதேச விவகாரங்களின் பேராசிரியர் ஹேப்பிமோன் ஜேக்கப், “நேபாளம் மற்றும் பூடானைப் போலவே, இந்தியா உடனான மாலத்தீவின் உறவுகள் கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் சிக்கலானதாக மாறியது. ஏனெனில், சீனா தெற்காசியாவில் தனது செல்வாக்கை அதிகரித்துள்ளது. சமீபத்திய சூழலை வைத்து பார்க்கும் போது, வங்கதேசமும் இந்தியாவிற்கு சாதகமாக இல்லை."
"அண்டை நாடுகளில் சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வருவதால், இந்தியா யோசித்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், வல்லரசாக மாற விரும்பும் ஒரு நாடு, தனது சிறிய அண்டை நாடுகளுடன் வலுவான கூட்டாண்மை வைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்” என்று விளக்கினார்.
அதிபர் முய்சுவின் 'இந்தியாவே வெளியேறு' பிரசாரம்
மாலத்தீவில் ஆட்சிக்கு வந்த பிறகு, அதிபர் முகமது முய்சு இந்தியாவிடம் இருந்து விலகி நிற்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தினார்.
உதாரணமாக, இதற்கு முன்புவரை, மாலத்தீவு அதிபராக பதவி ஏற்பவர்கள், முதல் பயணமாக இந்தியா வருவது வழக்கம். ஆனால், அதிபர் முகமது முய்சு முதல் வெளிநாட்டுப் பயணமாக துருக்கி சென்றார்.
மாலத்தீவில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முகமது முய்சு `இந்தியாவே வெளியேறு’ என்ற பிரசாரத்தை முன்வைத்தார்.
தான் ஆட்சிக்கு வந்தால், மாலத்தீவு மண்ணில் இருந்து இந்திய படைகளை அகற்றுவதாகவும், இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை கட்டுப்படுத்துவதாகவும் முய்சு உறுதியளித்திருந்தார்.
மாலத்தீவில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் வேட்பாளர் முகமது முய்சு வெற்றி பெற்றார். இவர் அதிபராவதற்கு முன், மாலத்தீவு தலைநகர் மாலேயின் மேயராக இருந்தார்.
அவர் நவம்பர் 2023 ஆம் ஆண்டு மாலத்தீவின் எட்டாவது அதிபராக பதவியேற்றார்.

பட மூலாதாரம், ANI
மாலத்தீவு - இந்தியா உறவுகளில் மாற்றம்
ஜிண்டால் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் அஃபயர்ஸின் மூலோபாய மற்றும் சர்வதேச முயற்சிகள் துறையின் டீன் பேராசிரியர் (முனைவர்) மோகன் குமார் இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகளின் மறுபக்கத்தைச் சொல்கிறார்.
அவர் கூறுகையில், "ஒரு வருடத்திற்கு முன்பு மாலத்தீவு உடனான உறவுகள் தொடர்பாக இந்தியா எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையில் இப்போது ஒரு பெரிய மாற்றம் காணப்படுகிறது. மீண்டும் இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் சரியான பாதையில் இருப்பதாகத் தெரிகிறது. இது இரு நாடுகளுக்கும் பலனளிக்கும்" என்கிறார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அணுகுமுறை மாறியது குறித்து பேராசிரியர் மோகன் குமார் கூறுகையில், "இந்தியா உடனான உறவு மோசமடைந்தால், மாலத்தீவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மாலத்தீவு புரிந்துகொண்டது" என்றார்.
"இந்த காரணத்திற்காக தான் மாலத்தீவு இப்போது தனது அணுகுமுறையை மாற்றியுள்ளது. அதன் நலன்களைப் பாதுகாப்பதற்காக, சீனா மற்றும் இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளுடனும் சமநிலையை ஏற்படுத்தி முன்னேற முயற்சிக்கிறது. இந்தியா உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பது எந்த வகையிலும் தங்களுக்கு பயனளிக்காது என்பதை மாலத்தீவு காலப்போக்கில் உணர்ந்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியப் பெருங்கடலுக்கு என்ன தொடர்பு?
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான சலசலப்புக்கு மத்தியில் இந்தியப் பெருங்கடல் மீதான சீனாவின் ஆர்வம் அதிகரித்து வருவதாக பேராசிரியர் குமார் கூறுகிறார். "இந்தியப் பெருங்கடல் மீது சீனா காட்டும் ஆர்வம் வர்த்தகம் செய்வதற்கு மட்டும் அல்ல, உண்மையில் அது சீனாவின் மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதி", என்பது அவரது கருத்து.
இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு இந்தியாவின் முக்கியமான அண்டை நாடாகும். இந்தியாவின் பார்வையில் மாலத்தீவின் புவியியல் இருப்பிடம் மிகவும் முக்கியமானது.
மாலத்தீவு இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல் வழிகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த வழித்தடம் வழியாக பெருமளவு சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த வழியாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது.
இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, இந்தியாவின் 50 சதவீத வர்த்தகம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ளது. இந்தியாவின் 90 சதவீத வர்த்தகம் இந்தியப் பெருங்கடல் வழியே நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் மாலத்தீவை தவிர, இந்தியப் பெருங்கடல் மீது சீனாவின் ஆர்வம் அதிகரித்து வருவது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் அகிலேஷ் புரோஹித் கூறுகையில், "சீனா எப்போதுமே இந்தியாவை ஆசியாவில் பெரிய சவாலாகவே பார்க்கிறது. இதுவே சீனா- இந்தியா சார்ந்த விஷயங்களில் அடிக்கடி ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டே இருக்கிறது."
"இந்தியப் பெருங்கடல் மீதான அதிகரித்து வரும் ஆர்வம் சீனாவின் புவிசார் அரசியல் உத்தியின் ஒரு பகுதி. உண்மையில், இதன் கீழ், இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்க சீனா விரும்புகிறது. இதனால் நேரம் வரும் போது, அவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியும்" என்று விளக்கினார்.
மாலத்தீவு இந்தியா பக்கம் மீண்டும் திரும்புமா?
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வருவதற்கு முன்னதாக, மாலத்தீவு அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்திருப்பது குறித்து, அகிலேஷ் புரோகித் கூறுகையில், "பிரதமர் மோதி மீது சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்த இரண்டு மாலத்தீவு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதன் பிறகு தான் அதிபர் முகமது முய்சு இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது உறுதி செய்யப்பட்டது. இது தற்செயல் நிகழ்வு அல்ல, மாலத்தீவு இந்தியாவுடனான உறவை சரி செய்ய விரும்புகிறது என்பது தெளிவாகிறது” என்றார்.
அவரது வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா?
இதற்கு பதிலளித்த புரோஹித், "மாலத்தீவின் வருமானத்தில் பெரும்பகுதி சுற்றுலாவில் இருந்தே கிடைக்கிறது. மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால், சமூக வலைதளங்களில் மாலத்தீவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. இது மாலத்தீவுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியது "
"மாலத்தீவு மீண்டும் அதே நிலையை எதிர்கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் இந்தியாவுடனான உறவை சீராக்க நடவடிக்கை எடுத்து வருகிறது." என்றார்.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












