தேவர்மகன் முதல் மாமன்னன் வரை நடிகர் வடிவேலுக்கு திருப்பத்தை ஏற்படுத்திய கதாபாத்திரங்கள்

பட மூலாதாரம், Facebook
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
(இன்று (செப். 12) நடிகர் வடிவேலு தன் 64-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.)
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்திய வடிவேலு இன்று தன் 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தென்மாவட்டமான மதுரையை சேர்ந்த வடிவேலு, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த கதை சுவாரஸ்யமானது.
வறுமையான குடும்பத்தை சேர்ந்த வடிவேலுவிற்கு, தன் தந்தை இறப்புக்கு பின்னர் குடும்ப பொறுப்புகளை கவனிக்கும் நிலை ஏற்படுகிறது.
மதுரையில் புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம் போடும் சிறிய கடையொன்றில் வேலை பார்த்துவந்த வடிவேலுக்கு அப்போது அங்கு எதிர்பாராவிதமாக சென்ற நடிகர் ராஜ்கிரணின் அறிமுகம், கிடைக்கிறது.
பின்னர், ராஜ்கிரணின் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த வடிவேலுவை, 1988-ம் ஆண்டில் வெளியான ‘என் தங்கை கல்யாணி’ திரைப்படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் பயன்படுத்துகிறார் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர்.
எனினும், 1991-ஆம் ஆண்டில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில்தான் வடிவேலு முறையாக நடிகனாக அறிமுகமானார். படம் வெற்றிபெறவே ராஜ்கிரணும் வடிவேலுவும் இணைந்து, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பொன்னு விளையுற பூமி’ என பல படங்களில் நடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் விஜயின் ‘காவலன்’ திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.

1992-ம் ஆண்டில் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்தின் ‘சின்ன கவுண்டர்’ திரைப்படத்தில், செந்தில்-கவுண்டமணி இணையுடன் படம் நெடுகவே நடிக்கும் வாய்ப்பு வடிவேலுவிற்கு கிடைத்தது.
அதன்பின், ‘சிங்காரவேலன்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் நண்பர்கள் பட்டாளத்தில் ஒருவராக நடித்தார் வடிவேலு. வித்தியாசமான உடல்மொழி, ஆடை, அலங்காரம் என, பார்த்தாலே சிரிக்கும்படியான கதாபாத்திரத்தில் அப்படத்தில் வடிவேலு நடித்திருப்பார்.
‘எல்லாமே என் ராசாதான்’ திரைப்படத்தில் ‘எட்டணா இருந்தா எட்டூரும் என் பாட்ட கேக்கும்’ பாடலை பாடிய வடிவேலு, பல பாடல்களை பாடியுள்ளார். கடைசியாக அவர் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படத்தில் ‘ராசா கண்ணு’ பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது.
திருப்புமுனையாக அமைந்த படம்
நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த வடிவேலுவிற்கு அதே ஆண்டில் வெளியான ‘தேவர் மகன்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
தான் பேசும் பெரும்பாலான மேடைகளில் ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து வடிவேலு குறிப்பிடுவார். குறிப்பாக, கமல்ஹாசன் தனக்கு அத்திரைப்படத்தில் அளித்த வாய்ப்பு குறித்தும் நடிகர் சிவாஜி கணேசன் படப்பிடிப்பின் போது பாராட்டியது குறித்தும் நிறையவே பகிர்ந்துள்ளார்.
அந்த திரைப்படத்தில் சிவாஜி இறக்கும் காட்சியில், தான் அந்த காட்சியை பயன்படுத்தி நடித்துவிட வேண்டும் என்பதற்காக மிகையாக அழுததாகவும், அதனால் சிவாஜி கணேசன் தன்னை அழைத்து, “கமல்தானே எனக்கு இந்த படத்தில் மகன். நீ ஏன் இப்படி நடிக்கிறாய்?” எனக்கூறி, நடிப்பை குறைத்துக் கொள்ளுமாறு கூறியதாகவும் நிகழ்ச்சியொன்றில் நகைச்சுவையாக தெரிவித்தார் வடிவேலு.

பட மூலாதாரம், MAAMANNAN MOVIE
‘மாமன்னன்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், “நானும் இளையராஜாவும் வடிவேலுவை ஆரம்ப காலங்களில் ரசித்தவர்கள். ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் இசக்கி கதாபாத்திரம் சீரியஸாக இருக்கிறதே, இவரா செய்யப் போகிறார், ஒல்லியாக இருக்கிறாரே என்றெல்லாம் வடிவேலுவை சந்தேகமாக கேட்டார்கள். ஆனால், படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் என்னுடைய நடிப்பையும் வடிவேலுதான் தாங்கிப் பிடித்தார் என்றால் அது மிகையல்ல. கடைசி காட்சியில் அவர் அப்படி அழுததால்தான் , ‘போய், புள்ளை குட்டிங்கள படிக்க வைங்க’ என்ற வசனத்தை என்னால் பேச முடிந்தது” என கூறினார்.
மறக்க முடியாத கதாபாத்திரங்கள்
பல திரைப்படங்களில் கோவை சரளாவுடன் இணைந்து நடித்த வடிவேலு, அவரிடம் அடி வாங்கும் காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை எனலாம்.
குறிப்பாக, இயக்குநர் வி.சேகரின் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ போன்ற திரைப்படங்களை கூறலாம். தமிழ் சினிமா நகைச்சுவை வரலாற்றில் வடிவேலு - கோவை சரளா இணைக்கு என எப்போதும் தனி இடம் உண்டு. அதேபோன்று, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘குண்டக்க மண்டக்க’ படங்களில் வடிவேலு - பார்த்திபன் ஜோடியும் வெற்றிபெற்றது.
2000-களில் அவர் நடித்த பல திரைப்படங்களில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயரை வைத்தே அந்த திரைப்படம் தெரியும் அளவுக்கு தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியால் எல்லா தரப்பு மக்களையும் வயது வித்தியாசமின்றி ரசிக்க வைத்தார்.

பட மூலாதாரம், MAAMANNAN MOVIE
வடிவேலுவின் ஒற்றை வரி வசனங்களை, மக்கள் தங்கள் தினசரி வேலைகளில் பயன்படுத்துவதை சாதாரணமாக நாம் கேட்க முடியும்.
வீரபாகு, பாடிசோடா, சூனா பானா, படித்துறை பாண்டி, கைப்புள்ள, 23-ம் புலிகேசி, ‘சந்திரமுகி’ முருகேசன், ‘ஏட்டு’ ஏகாம்பரம், ‘நாய்’ சேகர் என அவருடைய பிரபலமான கதாபாத்திரங்களின் பட்டியல் நீள்கிறது.
சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம்
வடிவேலு நகைச்சுவையின் தனித்துவம் என்ன என்பது குறித்து இயக்குநர் அஜயன் பாலா பிபிசி தமிழிடம் பேசினார்.
“நகைச்சுவைக்கு என எப்போதும் ஒரு ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. கூத்து, நாடக பாரம்பரியத்தால் இது ஏற்பட்டிருக்கலாம். 1940களில் என்.எஸ். கிருஷ்ணன், 50களில் சந்திரபாபு, 60களில் நாகேஷ், 70களில் சுருளிராஜன் என தொடர்ந்து, 80களில் செந்தில்-கவுண்டமணி என ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒருவர் கோலோச்சியுள்ளார். என்.எஸ்.கேவுக்கு சமூக கருத்துகள், சந்திரபாபுவுக்கு நடனம், நாகேஷுக்கு உடல்மொழி என, எல்லோரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்தான். ஆனால், தன் நகைச்சுவையால் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தியது வடிவேலுதான்” என்றார்.
தமிழ் பண்பாட்டு தளத்தில் வடிவேலுவிற்கு மிகப்பெரும் பங்கு இருப்பதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டு மக்களின் மொழி, தென்மாவட்டத்தின் உடல்மொழி, தமிழரின் பண்பாட்டு சொலவடைகள் ஆகியவற்றை தன் நகைச்சுவையில் வடிவேலு பயன்படுத்தி உள்ளார் எனவும் கூறினார்.
“வடிவேலுவுக்கு 360 டிகிரியில் நடிப்பது கைகூடியிருக்கிறது. ஒருவரை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் அந்த கதாபாத்திரமாக அவர் நடிப்பதை பார்க்க முடியும்” என்கிறார் அஜயன் பாலா.
“தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கலைஞன் வடிவேலு, அவரை நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்ற மனக்குறை எனக்கு இருக்கிறது” என, ஒருமுறை மறைந்த இயக்குநர் மகேந்திரன் கூறியதை அவர் நினைவுகூர்கிறார்.
நோய்வாய்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு வடிவேலுவின் நகைச்சுவை மருந்தாக இருப்பதாக அஜயன் பாலா கூறுகிறார்.

பட மூலாதாரம், Facebook/Mari Selvaraj
“அவருடைய பெரும்பாலான நகைச்சுவைகளில் தன்னை தாழ்த்திக்கொண்டுதான் மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்துவார். சுயபகடிதான் அவர் நகைச்சுவைகளின் அடிப்படை” என்கிறார் அவர்.
வடிவேலு நடிக்காத காலகட்டத்திலும் மீம்கள் வாயிலாக இளம் தலைமுறையினரை அவர் சென்று சேர்ந்துள்ளதாக குறிப்பிடும் அஜயன் பாலா, “அதனால்தான் வடிவேலு ‘பண்பாட்டு நாயகன்” என்கிறார்.
இயக்குநர் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் மாமன்னனாக வடிவேலு நடித்தபோது, அவ்வளவு கனமான கதாபாத்திரத்தை ஏற்று அவரால் நடிக்க முடியுமா என சந்தேகம் எழுப்பினாலும், மிக திறமையாக அக்கதாபாத்திரத்திற்கு அவர் நியாயம் சேர்த்திருப்பார் என்கிறார் அஜயன்பாலா.
'பார்த்தாலே சிரிப்பு வரும்'
வடிவேலுவுக்கு நகைச்சுவை திறன் அவருடைய இயல்பிலேயே இருப்பதாக கூறுகிறார், ‘ரசிகை பார்வை’ புத்தகம் உட்பட தமிழ் சினிமா குறித்து தொடர்ச்சியாக எழுதிவரும் ஜீவசுந்தரி பாலன்.
பிபிசி தமிழிடம் பேசிய ஜீவசுந்தரி பாலன், “அநாயாசமான உடல்மொழி, வசனங்களை பேசும் விதம் இரண்டும்தான் வடிவேலுவின் வெற்றிக்குக் காரணம். வடிவேலுவை பார்த்தாலே சிரிப்பு வரும். சினிமா தவிர்த்த இடங்களில் பேசும்போதும் அவருக்கு நகைச்சுவை உணர்வு அபாரமாக இருக்கிறது. இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக்கொள்வார்” என்றார்.
அவருடைய திரைப்படங்கள் சிலவற்றுக்கு நகைச்சுவை பகுதிகளை உருவாக்கிய இயக்குநர்கள் தம்பி ராமையா, சுராஜ் பங்கையும் ஜீவசுந்தரி பாலன் சுட்டிக்காட்டுகிறார்.
வடிவேலு மீதான விமர்சனங்கள்
தனிப்பட்ட முறையில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சிங்கமுத்து உள்ளிட்டோருடன் வடிவேலுவுக்கு பிரச்னைகள் உள்ளன.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு இம்சை அரசன் 23-ம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே பிரச்னை நிலவியது. மேலும், இதற்கு காரணமாக நடிகர் வடிவேலு மீது இயக்குநர் ஷங்கர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அதனடிப்படையில் வடிவேலு நடிக்கக் கூடாது என ‘ரெட் கார்டு’ தடை உத்தரவு இருந்தது. அந்த தடை நீக்கப்பட்டு 2021-ம் ஆண்டில்தான் வடிவேலு மறுபிரவேசம் செய்தார். இதையடுத்து வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வெற்றி பெறவில்லை. எனினும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. தற்போது சுந்தர். சி இயக்கத்தில் ‘கேங்கர்ஸ்’ எனும் திரைப்படத்தில் வடிவேலு நடித்துவருகிறார்.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












