பெண்களுக்கு மாதம் ரூ.1,000 - பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்ற வாக்குறுதியை 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சி வழங்கியது.
பாட்டியாலாவின் ரோர்கர் சாஹிப் கிராமத்தைச் சேர்ந்தவர் அமன்தீப் சிங் கௌர். இவர் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். மாதம் ஆயிரம் ரூபாய் என்ற வாக்குறுதியை அரசு விரைவில் நிறைவேற்றினால், தன் கல்வியை பாதியில் கைவிட வேண்டிய நிலை வராது என அமன்தீப் கருதுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், “நான் பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் எம்.காம் படிக்கிறேன். கல்லூரி கட்டணம் ஸ்காலர்ஷிப்பில் கிடைக்கிறது. இதைத் தவிர்த்து கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கிறேன்.
என் குடும்பத்தில் அம்மா, மூத்த அண்ணன், தங்கச்சி இருக்கிறார்கள். என் அப்பா இறந்து விட்டார்.
என் அம்மா ஒரு நர்சரியில் வேலை பார்த்து மாதம் 9000 ரூபாய் சம்பாதிக்கிறார். அது மட்டும் தான் எங்கள் வருமானம்.
அரசு கொடுக்கிற இலவச கோதுமையை வாங்குவோம். மற்ற மளிகை பொருட்களை நாங்களே பார்த்துக் கொள்வோம்.
அம்மாவின் சம்பளத்தில் பாதி பணம் எங்கள் பயணச் செலவுக்கே செல்கிறது. இதனால் எனது படிப்பை நிறுத்தலாம் என அம்மா யோசிக்கிறார்.
அரசு வாக்குறுதியை நிறைவேற்றினால், எங்களுக்கு மாதம் மூவாயிரம் கூடுதல் வருமானம் இருக்கும். ஏனென்றால், எங்கள் குடும்பத்தில் எனக்கு, அம்மாவிற்கு, தங்கச்சி என மூன்று பேருக்குமே அது கிடைக்கும்” என்கிறார் அமன்தீப்.
இந்த வாக்குறுதிக்காக பஞ்சாப் பெண்கள் இன்னும் காத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி பஞ்சாபில் 1 கோடியே 77 லட்சத்து 543 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் திட்டத்தால் ஒரு கோடி பெண்கள் பயனடைவார்கள் என ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது.
மேலும் விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



