பா.ஜ.கவுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டணி: தி.மு.கவின் பங்கு என்ன?

பட மூலாதாரம், M.K.STALIN/TWITTER
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் வியாழக்கிழமையன்று மாலை சந்தித்துள்ளனர். ஜூன் 12ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பா.ஜ.கவுக்கு எதிராக உருவாக்கப்படும் மாபெரும் கூட்டணியில் தி.மு.கவின் பங்கு என்ன?
வியாழக்கிழமையன்று மாலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவருடன் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சரான பகவந்த் மானும் இருந்தார்.
தில்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தில்லி அரசுக்கே உள்ளதாக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அந்தத் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில்தான் இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஆதரவுகோரி வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். அதன் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு முதலமைச்சரை அரவிந்த் கேஜ்ரிவாலும் பகவந்த் மானும் சந்தித்தனர்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "ஜனநாயகத்தைக் காப்பதற்கு இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. இது தொடர வேண்டும். இது நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இது தொடர வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
பா.ஜ.கவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்வதும், 2024ஆம் ஆண்டு தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிடுவதற்குமான முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் - மு.க. ஸ்டாலின் சந்திப்பைப் பார்க்க முடியும்.
2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியபோது, சென்னையில் நடந்த பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகக் குறிப்பிட்டார் மு.க. ஸ்டாலின். ஆனால், அந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காங்கிரசிற்கு சரியான கூட்டணி அமையவில்லை. இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை காங்கிரஸ் தழுவியது.
இதற்குப் பிறகு, பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் ஆர்வம் காட்டாத நிலையில், தேசிய அளவில் காங்கிரசை முன்னிறுத்திக் கூட்டணி என்ற தன் நிலைப்பாட்டில் தி.மு.க. உறுதியாக இருந்துவந்தது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஏற்படுத்திய தாக்கமும் கர்நாடக மாநிலத் தேர்தலில் காங்கிரசிற்குக் கிடைத்த வெற்றியும் காங்கிரஸ் குறித்த பல்வேறு மாநிலக் கட்சிகளின் பார்வையை தற்போது மாற்றியிருக்கிறது.
அதேபோல, பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் மாநிலக் கட்சிகளுக்கு ஆளுநர் மூலம் மத்திய அரசு கொடுக்கும் நெருக்கடியும் அந்தக் கட்சிகளை காங்கிரசை நோக்கி தள்ளியிருக்கிறது.

பட மூலாதாரம், M.K.STALIN/TWITTER
இந்த நிலையில்தான் பிஹார் முதலமைச்சர் நிதீஷ்குமார் பா.ஜ.கவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்றை வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்தக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நடக்கவிருக்கிறது. இந்த முயற்சியின் மூலம், பா.ஜ.கவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் முன்னிலை எடுத்திருக்கிறார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாக ஏப்ரல் 24ஆம் தேதியன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நிதீஷ் குமாரும் தேஜஸ்வி யாதவும் சந்தித்தனர். அப்போது முதல் முறையாக பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவது குறித்துப் பேசப்பட்டது. அதனை நிதீஷ்குமாரே முன்னெடுக்க வேண்டுமென மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, கடந்த மே 22ஆம் தேதியன்று ராகுல் காந்தியையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்தித்தார் நிதீஷ்குமார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, விரைவிலேயே பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் நடத்தப்படும் என காங்கிரசும் தெரிவித்தது.

பட மூலாதாரம், M.K.STALIN/TWITTER
இந்த நிலையில்தான் இந்தக் கூட்டம் ஜூன் 12ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ராகுல் காந்தி அன்று இந்தியாவில் இருக்க மாட்டார் என்பதால், கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்ற வேண்டுமென காங்கிரஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதேபோல, அன்று மேட்டூர் அணையைத் திறக்கும் நிகழ்வு இருப்பதால், வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் கேட்டுக்கொண்டிருக்கிறார். தேதி மாற்றம் குறித்து இதுவரை அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றாலும் வேறொரு தேதியிலேயே இந்தக் கூட்டம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
ஆகவே, தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமாரே முன்னணியில் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் தொடர்ந்து காங்கிரசின் கூட்டணிக் கட்சியாகவும் உள்ள தி.மு.கவுக்கு பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியில் ஒரு முக்கிய இடம் எப்போதும் இருக்கும்.
"வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில் தி.மு.க.வின் பாத்திரம் மிக முக்கியமானது. பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று சொல்லிவருகிறது. பா.ஜ.கவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளில் சிலவும், காங்கிரஸ் இல்லாத கூட்டணியை மூன்றாவது அணியாக அமைக்க வேண்டுமெனக் கூறிவருகின்றன. ஆனால், காங்கிரஸ் இல்லாத கூட்டணி சரியாக இருக்காது என்ற பார்வையை தொடர்ந்து முன்வைத்து வருவது தி.மு.கதான்.
பா.ஜ.வை எதிர்க்க வேண்டும் என்றால், அதன் அடிப்படைக் கொள்கைகளை எதிர்க்க வேண்டும். ஆகவே, காங்கிரஸ் முக்த் பாரத் என்ற அதன் கொள்கையை எதிர்க்க வேண்டும். இதனால்தான் காங்கிரஸ் தேவை என்கிறார் மு.க. ஸ்டாலின். இந்தக் காரணங்களால்தான் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரயை மு.க. ஸ்டாலின் துவக்கிவைத்தார்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் பல தருணங்களில் ஒரு கட்சிக்கு எதிராக, பல கட்சிகள் ஒன்று திரள்வது நடந்திருக்கிறது. முதலாவதாக, 1970களின் பிற்பகுதியில் காங்கிரசிற்கு எதிராக எதிர்க் கட்சிகள் ஒன்று திரண்டன. அதில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஜெயப் பிரகாஷ் நாராயண் முன்னிலை வகித்தார்.
அதற்குப் பிறகு, 1989ல் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரசிற்கு எதிராக எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்தன. அப்போது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் வி.பி. சிங் முன்னிலை வகித்தார். அதில் தி.மு.கவின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும்கூட, வி.பி. சிங்தான் நாடு முழுவதும் பயணம் செய்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தார்.
இதற்குப் பிறகு, 1996ல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய பிரதமரைத் தேர்வுசெய்யும் முயற்சியில் தி.மு.க. முன்னிலை வகித்தது. வி.பி. சிங், ஜோதிபாசு ஆகியோர் பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், தேவேகவுடா பிரதமராக்கப்பட்டார். இந்தத் தருணத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தி.மு.கவின் முயற்சிகள் குறிப்பிட்டுப் பேசப்பட்டன.
"இப்போது அதே போன்ற ஒரு பாத்திரத்தை மு.க. ஸ்டாலின் மேற்கொண்டிருக்கிறார். ஏனென்றால் தி.மு.கவின் பார்வை தெளிவானது. காங்கிரசை அரவணைத்துச் செல்லும் அதே நேரத்தில், அந்தக் கூட்டணியில் எல்லாக் கட்சிகளுக்குமான இடம் இருக்க வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. மாநில உரிமைகள் குறித்து தொடர்ந்து பேசுவதன் மூலம், மத்தியில் அதிகாரம் குவிக்கப்படுவதை எதிர்ப்பதற்கான ஆயுதங்களை தி.மு.கதான் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இதனால்தான் இடதுசாரி முதல்வரான பிணராயி விஜயன், காங்கிரஸ் முதல்வர் சித்தராமைய்யா, திருணமூல காங்கிரஸ் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார் ஸ்டாலின்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை, தேசியவாத ஜனநாயகக் கட்சியுடன் காங்கிரசிற்கு கூட்டணி நீடிக்கிறது. பிஹாரில் ஜனதா தளம், ராஜ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி உருவாகியிருக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் காங்கிரசுடன் கூட்டணி உருவாவதில் சிக்கல் நீடிக்கிறது. "இந்த இடத்தில்தான் காங்கிரஸ் கூட்டணி ஏன் முக்கியம் என்பது குறித்து மற்ற மாநிலக் கட்சிகளுக்கு ஒரு பார்வையை அளிக்கிறது தி.மு.க." என்கிறார் பன்னீர்செல்வன்.

பட மூலாதாரம், Getty Images
2019ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்தது, காங்கிரசுடனான கூட்டணியை உறுதியாக எடுத்துச் சென்றது என தி.மு.க. முன்னிலையில் நின்றதுய. ஆனால், தற்போது நிதீஷ் குமார் போன்ற தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதன் மூலம் முன்னிலை வகிக்கிறாரா? "தற்போதைய சூழலில் முயற்சி எல்லா மட்டங்களிலும் நடக்க வேண்டும்.
அதன் ஒரு பகுதியாகத்தான் நிதீஷ்குமாரின் நடவடிக்கையைப் பார்க்க வேண்டும். யார் எங்கு பலமாக இருக்கிறார்களோ, அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். பா.ஜ.க. ஒரு ஒற்றைத் தன்மையை முன்வைக்கிறது. அதற்கு மாற்று என்றால் நாம் ஒரு பரவலான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். நடக்கவிருப்பது இந்தியா முழுவதற்குமான ஒரே தேர்தல் அல்ல. 543 தொகுதிகளிலும் தனித்தனியாக நடக்கும் தேர்தல். அப்படி இந்தத் தேர்தலை அணுகினால், இந்த அணுகுமுறையின் அர்த்தம் புரியும்" என்கிறார் பன்னீர்செல்வன்
தற்போதைய சூழலில் அரவிந்த் கேஜ்ரிவால், நிதீஷ்குமார் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கலாம். ஆனால், காங்கிரஸ் குறித்தும் பிரதமர் வேட்பாளர் குறித்தும் எதிர்க்கட்சிகள் என்ன கருதுகின்றன என்பதில் ஒரு தெளிவு இன்னமும். மம்தா பானர்ஜி, பாரத் ராஷ்ட்ர சமிதியின் சந்திர சேகர ராவ் ஆகியோர் இன்னமும் பிரதமர் பதவிக்கான போட்டியாளர்களாக உள்ளார்களா என்பதிலும் ஒரு உறுதியான பதில் தேவைப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான், கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியை மட்டுமே வலியுறுத்தும் தி.மு.கவின் நிலைப்பாடு, முக்கியமானதாக மாறியிருக்கிறது.
தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்குவதில் தி.மு.க. முன்னின்ற தருணங்கள்
இதற்கு முன்பாக பல தருணங்களில் தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்குவதில் தி.மு.க. முக்கிய இடத்தில் இருந்திருக்கிறது. 1996ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தபோது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஐக்கிய முன்னணி அரசு ஒன்றை உருவாக்குவதில் இடதுசாரிகள், ஜனதா தளம், தி.மு.க. ஆகியவை இணைந்து செயல்பட்டன. இந்த அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தர முன்வந்தது.
முதலில் இந்த முன்னணியின் சார்பில் பிரதமராக இருக்கும்படி வி.பி. சிங்கைக் கேட்டபோது அவர் முந்தைய கசப்பான அனுபவங்களாலும் உடல்நலம் சார்ந்த கராணங்களாலும் மறுத்துவிட்டார். ஜோதிபாசுவைக் கேட்டபோது, அவரைப் பிரதமராக்க அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழு மறுத்துவிட்டது. இந்த நிலையில்தான் ஜி.கே. மூப்பனார், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், தேவே கவுடா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவே கவுடா பிரதமரானார். இந்த அமைச்சரவையில் தி.மு.கவில் முரசொலி மாறன், என்.வி.என். சோமு, டி.ஆர். பாலு ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.
இதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், 2018 டிசம்பரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தி.மு.கவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்கப்பட்டது, இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை முன் மொழிந்தார்.
பிற எதிர்க்கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் மு.க. ஸ்டாலின் இப்படி அறிவித்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது. உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசின் தலைமையை ஏற்க பிரதான கட்சிகள் முன்வரவில்லை என்பதால் கூட்டணி பின்னடைவைச் சந்தித்தது. தமிழ்நாட்டில் இந்தக் கூட்டணி பெரும் வெற்றிபெற்றாலும் தேசிய அளவில் தோல்வியடைந்ததால் அதற்குப் பிறகு, தி.மு.கவின் பங்கு குறித்து எந்தப் பேச்சும் எழவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












