"பாஜகவுக்கு பதிலடி கொடுக்க திமுக தவறிவிட்டது" - தமிழக அரசியல் சூழல் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளதா?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்த வாரம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய செங்கோல் விவகாரம், கள்ளச்சாராய சாவுகள், டாஸ்மாக் விவகாரம், செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையோர் வீட்டில் நடந்த ரெய்டு ஆகியவை குறித்தும் திமுக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். அந்தப் பேட்டியிலிருந்து...
கேள்வி: புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செங்கோலை முன்னிறுத்தி பல விஷயங்களை இந்த வாரம் பாஜக செய்துள்ளது. இது தமிழக அரசியலில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா?
பதில்: இந்த செங்கோல் விவகாரம் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த அங்கீகாரம், கௌரவம் என என்னென்னவோ நிறங்கள் பூசப்படுகின்றன. ஆனால், அதிகப்படியான விளம்பரம், போலி பக்தி போன்றவையெல்லாம் மக்கள் மனதில் ஒட்டவே ஒட்டாது. மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் முன்னெடுக்க வேண்டும்.
முதலில் சோழர் காலத்து செங்கோல் என்றார்கள். பிறகு பார்த்தால், சென்னை உம்மிடி பங்காரு ஜுவல்லர்சில் செய்தது எனத் தெரிய வந்தது. பிறகு, அந்த செங்கோலை பிரதமர் எடுத்துக்கொண்டு நெற்றியில் வைத்தபடி நடந்துவரும் காட்சி, அது போலி பக்தி. மனதில் ஒட்டவே ஒட்டாது.
பா.ஜ.க. எப்படியாவது இங்கே காலூன்ற வேண்டுமெனப் பார்க்கிறது. அதற்காக, இங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் சிலர் பல திட்டங்களைப் போட்டுக் கொடுக்கிறார்கள்.
ஆனால், அந்த முயற்சியில் வெற்றியேதும் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் ராகுல் காந்தி.
'நீங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது. அந்த மக்களின் மனதை ஆட்சி செய்ய முடியாது' என்று அவர் சொன்னார். அது பாஜகவின் மத்தியத் தலைமையின் மனதைத் தைக்கவில்லை. இங்கிருக்கும் ஒவ்வொரு பாஜக தலைவர்களின் மனதையும் தைத்திருக்கிறது.
ஆனால், இம்மாதிரி விஷயங்களைச் செய்தால் தமிழ்நாட்டில் பாஜகவால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.
"திமுக அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்"
கேள்வி: இந்த செங்கோல் விவகாரத்தை, பா.ஜ.கவுக்கு எதிரான ஒரு சித்தாந்தத்தைக் கொண்ட கட்சியாக திமுக எதிர்கொண்ட விதம் எப்படியிருந்தது?
பதில்: தி.மு.க. அதில் சற்றுப் பின்தங்கிவிட்டது. செங்கோல் விவகாரத்தில் உண்மை என்ன என்பதை, தி.மு.கதான் முன்னின்று சொல்லியிருக்க வேண்டும்.
வரலாற்றாசிரியர்களை வைத்து இதைச் செய்திருக்கலாம். அந்த காலத்தில் வெளியான ஹிந்து நாளிதழில் இதுபோன்ற செய்தி வரவில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வரவில்லை. இந்தத் தகவல்களை எல்லாம் சேகரித்து தி.மு.க. அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.

பட மூலாதாரம், ANI
தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய பெருமையை தி.மு.க. தடுத்துவிட்டது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார். இதற்கு பதிலடி கொடுக்க வேண்டியது யார் பொறுப்பு?
அவர்கள் வெளியிட்ட செய்தியை நம்பி எல்லோரும், செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். இது ஆழமாக மக்கள் மனதில் பதிந்துவிட்டது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். என்ன செய்ய நினைத்தார்களோ, அது மக்கள் மனதில் பதிந்துவிட்டது.
இப்போது வீர சாவர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் பதிய வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
திமுக பதிலடி கொடுக்கத் தவறிவிட்டது என்றாலும், இப்போதும் வாய்ப்பிருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை, பொய்ச் செய்திகளைப் பரப்புவதை விட்டுவிட்டு, மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யலாம்.

பட மூலாதாரம், Getty Images
செந்தில் பாலாஜிக்கு தனிப்பட்ட எதிரிகள்
கேள்வி: கள்ளச்சாரய சாவுகள், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையோர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் இவையெல்லாம் திமுக அரசுக்கு நெருக்கடியாக மாறியிருக்கிறதா?
பதில். கண்டிப்பாக. கள்ளச்சாராய விஷயத்தில் திமுக கோட்டைவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது என்று தான் சட்டப்பேரவையில் பேசும்போது நேரலையைத் துண்டித்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி புகார் சொன்னார். அவர் குற்றம்சாட்டி, மூன்று - நான்கு வாரங்களில் இதுபோல நடந்துவிட்டது. அப்படியானால் கோட்டை விட்டுவிட்டதாகத்தானே அர்த்தம்!
அடுத்த நாளே கள்ளச்சாராயம் விற்றதாக 2,000 பேர் கைது செய்யப்படுகிறார்கள். அப்படியானால், அத்தனை நாட்களாக கள்ளச்சாராயம் விற்றதாகத்தானே அர்த்தம்?
அதிமுக ஆட்சியில் தங்கமணி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை வைத்திருந்தார். மின்சாரத் துறையும் அவரிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஒருபோதும் டாஸ்மாக் அமைச்சராக அறியப்பட்டதில்லை. மின்சாரத் துறை அமைச்சராகத்தான் அறியப்பட்டார்.
ஆனால், செந்தில் பாலாஜியை டாஸ்மாக் துறை அமைச்சர் என விமர்சிக்கிறார்கள். காரணம், அவருடைய வேகம், கட்சிக்குள் உள்ள எதிர்ப்பு, பிற கட்சியினரின் எதிர்ப்பு, இவற்றை மீறி அவருக்கு கட்சித் தலைமையுடன் உள்ள நெருக்கம் ஆகியவைதான் காரணம்.
சட்டவிரோத பார்கள், கூடுதல் விலைக்கு விற்பது ஆகியவை எல்லா காலகட்டத்திலும் நடப்பதுதான். ஆனால், தனக்குத் தனிப்பட்ட எதிரிகள் உருவாகி வருகிறார்கள் என்பதை செந்தில் பாலாஜி உணர மறுப்பது அவருக்கு சிக்கலாகிவிட்டது.

தவிர, அதிமுகவும் பாஜகவும் அவரைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அண்ணாமலை குறிவைத்து எதிர்க்கிறார். கொங்கு மண்டலத்தில் இவர்தான் திமுகவின் தளபதி, இவரை அழித்துவிட்டால், அங்கு திமுக அழிந்துவிடும் என்ற மனப்பான்மையோடு பாஜக செயல்படுகிறது.
செந்தில் பாலாஜி மீதான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கான விலையை திமுகதான் தர வேண்டியிருக்கும். முதலமைச்சர் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் நிச்சயமாக மாற்றம் இருக்கும் என நம்புகிறேன். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செந்தில் பாலாஜியைவிட்டுப் போய்விடும்.
கேள்வி: செந்தில் பாலாஜி அரசியல் எதிர்காலத்தை முடக்கும் வகையில் நிகழ்வுகள் நடக்கலாம் என எதிர்பார்க்கலாமா?
பதில்: அவர் அமலாக்கத்துறை வழக்கு, வருமான வரித் துறை வழக்கு ஆகியவற்றில் சிக்கியிருக்கிறார். கரூர், கோவை ஆகிய மாவட்டங்கள் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் ஒப்பந்தங்களை ஏற்கெனவே உள்ள ஒப்பந்ததாரர்களுக்குத் தராமல், இவராக சிலரை உருவாக்குகிறார்.
வேறு சில அமைச்சர்களும் இதே வேலையைத்தான் செய்கிறார்கள். இது பிரச்னையாகிவிடும் என்பதை திமுக உணர வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளாக உணராதவர்கள், இனிமேலா உணரப் போகிறார்கள்!
இதை பத்திரிகையாளர்கள் சொன்னால், பத்திரிகையாளர்கள் மீது பாய்கிறார்கள். திமுகவின் ஐடி விங் மற்றும் ஐடி விங் போர்வையில் பலரும் தாக்குதல் நடத்துகிறார்கள்.
எந்த ஊழலைப் பற்றியும் பேசக்கூடாது என்கிறார்கள். பத்திரிகையாளர்கள் சொல்லாமல் வேறு யார் சொல்வது?
உங்களுடைய ஆட்சி வர வேண்டுமெனச் சொல்லும் பத்திரிகையாளர்களையே தாக்கினால், தி.மு.கவின் ஐடி விங் எவ்வளவு மோசமாகப் போகிறது எனப் பாருங்கள்.
சட்டம் ஒழுங்கு சரியில்லையா?
கேள்வி: கடந்த சில மாதங்களாக, அதிகாரிகளால்தான் எல்லாப் பிரச்னைகளும் என்று சொல்லி, அதிகாரிகள் மாற்றம் பெரிய அளவில் நடந்திருக்கிறது. அது பலனளித்துள்ளதா?
பதில்: தமிழ்நாடு மக்கள்தான் வாக்களித்து ஆட்சியைத் தேர்வு செய்தார்கள். அதிகார்கள் அல்ல. முதலமைச்சர் அலுவலகமும் உளவுத் துறையும் முதல்வருக்கு என்ன தகவலைச் சொல்கிறார்கள்?
என்ன தகவல்கள் சென்று சேர்கின்றன? கள்ளச்சாராய சாவு, ஜி ஸ்கொயர், உதயநிதி அறக்கட்டளை விவகாரம் இதெல்லாம் எப்படி முதல்வரைச் சென்று சேர்ந்தூல்லாது? ஏன் இம்மாதிரித் தவறுகள் நடக்கின்றன?

கல்லல் குழுமம் ஐந்தாண்டுகளாக அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையின் பார்வையில் இருக்கின்றன. அந்தக் குழுமத்திலிருந்து தேர்தலுக்குப் பிறகு ஒரு கோடி ரூபாய் நிதியை உதயநிதி ஃபவுண்டேஷன் பெறுகிறது. யாருக்குச் சிக்கல் வரும்? இதையெல்லாம் யார் எடுத்துச் சொல்வது?
இதையெல்லாம் யாராவது முதல்வரிடம் சொல்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. குடும்பத்தினர் உட்பட அனைவரும் முதல்வரை தவறாக வழிநடத்துகிறார்கள். ஜி ஸ்கொயர் விவகாரம் அவரது மருமகனைச் சுற்றி நடந்ததாகச் சொல்கிறார்கள்.
திமுகவை வீழ்த்துவதில் அண்ணாமலையுடன் ஆளுநர் ரவியும் இணைந்திருக்கிறார். திமுக அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
கேள்வி: சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் சொல்லும் அளவுக்கு மோசமடைந்திருக்கிறதா?
பதில்: சட்டம் - ஒழுங்கு சரியில்லை எனச் சொல்வதில் தவறே கிடையாது. தூத்துக்குடியில் ஒரு கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்தே கொலை செய்கிறார்கள். சேலத்தில் ஒரு விஏஓவை மிரட்டுகிறார்கள்.
அடுத்ததாக, துறையூரில் துணை தாசில்தாரை கல்லால் அடிக்கிறார்கள். திமுகவின் ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு குற்றத்தில் மாட்டியபோது, அவர் கட்சியைவிட்டு மட்டும் நீக்கப்படுகிறார்.
இதுபோன்ற தவறுகளைச் செய்வோர் மீது குண்டர் சட்டம் போட வேண்டும். குற்றம் செய்யாத அளவுக்குப் பயம் வர வேண்டும். தங்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வேண்டுமென விஏஓக்கள் கோரும் அளவுக்குத்தான் நிலைமை இருக்கிறது. திருமாவளவன் சொன்னது சரிதான். இல்லாவிட்டால், அவருக்கு நெருக்கடியாகிவிடும்.

பட மூலாதாரம், @ANNAMALAI_K TWITTER
அதிமுக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமா?
கேள்வி: இவ்வளவு பிரச்னைகளில் திமுக ஆட்சி இருக்கும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில், அதிமுக இருக்கிறதா?
பதில்: ஆளும்கட்சி செய்யும் தவறுகளை எதிர்க்கட்சி பயன்படுத்திக்கொள்ளும். அதனால்தான் ஆட்சி மாற்றம் நடக்கிறது. ஆனால், எடப்பாடி அதிமுகவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதால் மட்டுமே, அடுத்து ஆட்சிக்கு வந்துவிடுவார் எனச் சொல்ல முடியாது. ஆட்சியைப் பிடித்தால்தான் அவர் பெரிய தலைவர்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ்நாட்டில் 2 + 2 = 4 என்ற கணக்குதான் சரியாக வரும். கூட்டணி இல்லாவிட்டால் எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. 33 சதவீதம் என்ற அளவுக்கு வாக்குகளைப் பெற கூட்டணி தேவை.
திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இது பொருந்தும். 2024இல் அனைத்துத் தொகுதிகளையும் திமுக வெல்ல வேண்டும். இல்லாவிட்டால், 2026இல் மீண்டும் வெற்றி பெறுவது கடினம்தான்.
கேள்வி: இந்தச் சூழலை பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் அதிமுக உள்ளதா?
பதில்: அதிமுக அரசியல் செய்கிறது. ஆனால், கூட்டணி கணக்குதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்தால், வெல்வதற்கு வாய்ப்பு குறைவு. திமுக மீது இருக்கும் அதிருப்தியால் ஓரிரு இடங்களைக் கொடுத்தால், அந்த மன நிலை 2026இல் எதிரொலிக்கும். ஆனால், திமுகவுக்கு இதையெல்லாம் சரிசெய்ய வாய்ப்பு இருக்கிறது.
முதல்வர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன், டாஸ்மாக் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்ற அவமானத்தை நிறுத்த வேண்டும். 360 டிகிரி பணியாற்ற வேண்டும்.
ஆனால், பாஜக - அதிமுக கூட்டணி ஒரேயோர் இடத்தை பிடித்தாலும் சிக்கல்தான்.
பாஜகவுக்கு சாதகமா?
கேள்வி: திமுக மீது ஆயிரம் குற்றச்சாட்டுகளைச் சொன்னாலும், நிர்வாகம் சரியாக இருக்கும் என ஒரு பெயர் இருக்கும். ஆனால், டாஸ்மாக் விவகாரம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், ஆவின் குளறுபடிகள் ஆகியவை திமுக நிர்வாகத்தில் பின்தங்குவதைக் காட்டுவதாகச் சொல்லலாமா?
பதில்: கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கட்சி நிர்வாகி சிபாரிசில் ஓர் இடமாறுதல் பெற முடியவில்லை. வேலை வாய்ப்பில் கட்சி நிர்வாகிக்கு வாய்ப்பில்லை. தேர்தல் வந்தால் மட்டும் வேலை பார்க்க வேண்டுமென நினைக்கிறார்கள்.
கேள்வி: அப்படியானால், கட்சிக்காரர்களுக்குக்கூட சலுகை காட்டாமல் நிர்வாகம் நேர்மையாக நடப்பதாகச் சொல்லலாமா?
பதில்: அது முக்கியமல்ல. லஞ்சம் வாங்கிக்கொண்டு இடமாறுதல் செய்ய வேண்டியதில்லை. ஒருவர் உண்மையான நிலைமையில் இடமாறுதல் கேட்டால் அதைத் தருவதில் என்ன தவறு?
ஓர் எடுத்துககாட்டைச் சொல்கிறேன். அண்ணா ஆட்சியமைத்த தருணத்தில், துரைமுருகனின் தம்பி துரை சிங்காரத்திற்கு ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. கல்வி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியனிடம் சென்று இடம் தருமாறு துரைமுருகன் கேட்டார்.
மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இடம் என அவர் மறுத்துவிட்டார். இதை கருணாநிதியிடம் சொல்கிறார் துரை முருகன். அவர், துரை முருகனை அண்ணாவிடம் அழைத்துச் சென்றார். அண்ணா, துரை சிங்காரத்திற்கு இடம் கொடுக்கச் சொன்னார். காமராஜரும் இதுபோல செய்திருக்கிறார்.
திமுக தொண்டர்கள் ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. டாஸ்மாக் பார்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. கரூர் கம்பனி எனப்படும் செந்தில் பாலாஜி நிர்வகிக்கும் ஒரு கூட்டத்திற்குத்தான் அது கிடைக்கிறது. இதையெல்லாம் முதல்வரிடம் சொல்வதற்கு ஆளே கிடையாது.
கட்சிக்காரனை கசக்கிவிட்டு, ரோட்டில் அலையவிட்டால், அவர்கள் திரும்ப வரமாட்டார்கள். தேர்தல் நேரத்தில் வரும் பணம் மட்டும்தான் தொண்டர்களுக்கு என்று ஆகிவிட்டால், அதற்குப் பிறகு தொண்டர்கள் வேலை பார்க்க மாட்டார்கள்.

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
கேள்வி: ஆளும் கட்சி இவ்வளவு பிரச்னைகளைச் சந்திப்பது பாஜகவுக்கு சாதகமாக இருக்குமா?
பதில்: பாஜக வளர்ந்துவிட்டதாக ஒரு பரபரப்பு இருக்கிறது. ஆனால், அதற்கான புள்ளிவிவரம் கிடைக்கவில்லையே! அண்ணாமலையை அவர்களது கட்சிக்காரர்களே முழுமையாக மதிக்கவில்லையே. எதை எதையோ பேசுகிறார்கள். செய்தியாளர் சந்திப்பில் முக்கால் மணி நேரம் பேசுகிறார். ஒரு தலைவனுக்கான தகுதியை அவர் பெறவில்லை.
தன்னால்தான் தமிழ்நாட்டில் கட்சி வளர்ந்திருப்பதாக அவர் நினைக்கிறார். அவரால் கட்சியை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. வளரவில்லை.
சமீபத்தில் ஒரு விஷயத்தைச் சொல்கிறார். அதாவது, பாஜக தொண்டரால்தான் சென்னை கோப்பையை வென்றது என்கிறார். இதுபோன்ற விஷயங்களை எல்லாம் எப்படி ஏற்க முடியும்?
தெர்மகோலை வைத்து அணையை மூடிய செல்லூர் ராஜுவைவிட மோசமாக இருக்கிறார். இதைப் படிக்கும் பாஜகவினர் மனதில் என்ன இருக்கும்?
இவர் சொல்வதை வைத்து பாஜக வளர்ந்ததாகச் சொல்ல முடியுமா? ஒரு தேர்தலில் தனியாக நின்று, வாக்கு வங்கியை வளர்த்ததாகக் காட்ட வேண்டும். அப்போதுதான் ஏற்க முடியும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












