பணம் கொழிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏன் வரி கட்டுவதில்லை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு அல்ல. மதமாகப் பார்க்கப்படுகிறது; கொண்டாடப்படுகிறது. பல சமுதாயக் குழுக்களை, மதங்களை, பிரிவுகளைக் கொண்ட ரசிகர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் விளையாட்டாகத் திகழ்கிறது.
கிரிக்கெட் உருவான இங்கிலாந்திலும், பரவியிருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கநாடுகளிலும் கிரிக்கெட் விளையாட்டு மீதான மோகம் இருந்தாலும் அணுகும் முறை காலந்தோறும் மாறி வருகிறது.
ஆனால், இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான ஆதரவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. ஐபிஎல் போட்டிகள் அதை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. கிரிக்கெட் மீதான மோகம், புகழ், இந்திய ரசிகர்களிடம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
இப்படிப்பட்ட கிரிக்கெட் விளையாட்டை, நிர்வகிக்கும் அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒருபுறம் கிரிக்கெட்டை வளர்ப்பதாக, ஊக்கப்படுத்துவதாகத் தெரிவித்து சுயாட்சி அமைப்பாகவே செயல்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
"பணக்கார கிரிக்கெட் வாரியம்"
உலகளவில் கிரிக்கெட்டில் மிகவும் பணக்கார, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை(ஐசிசி) ஆதிக்கம் செய்யும் சர்வ வல்லமை படைத்த அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மாறியுள்ளது.
உலகக் கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்புக்கு அதிகமான வருமானப் பங்களிப்பை அளித்து, அதை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் அமைப்பாக பிசிசிஐ உருமாறியுள்ளது.
ஐசிசிக்கு கிடைக்கும் ஆண்டு வருவாயில் 30 சதவீதப் பங்கு பிசிசிஐ மூலம் கிடைக்கிறது, கிரிக்கெட்டை உருவாக்கிய இங்கிலாந்தில் இருந்துகூட இந்த அளவு வருமானம் கிடைக்கவில்லை. 2023-முதல் 2027ம் ஆண்டுவரை ஐசிசிக்கு கிடைக்கும் ஆண்டுவருவாயில் பிசிசிஐ பங்கு மட்டும் 38.5% இருக்கிறது என்றால் புரிந்திருக்கும்.
பிசிசிஐ எப்படி, எப்போது உருவாக்கப்பட்டது?
பிசிசிஐ அமைப்பு பற்றியும், அது எப்போது உருவாக்கப்பட்டது, மத்திய அரசின் கீழ் ஏன் வரவில்லை என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தியாவில் முதல்முறையாக கிரிக்கெட் விளையாட்டு என்பது கடந்த 1751ம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவத்துக்கும், இந்தியாவில் தங்கியிருந்த ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் 1792ம் ஆண்டு கொல்கத்தாவில் கொல்கத்தா கிரிக்கெட் கிளப் உருவாக்கப்பட்டது. உலகளவில் 2வது பழமையான கிரிக்கெட் கிளப் இதுவாகும்.
1912ம் ஆண்டு லண்டனில் நடந்த இம்பீரியல் கிரிக்கெட் கான்பிரன்ஸ் (இன்று ஐசிசி) கூட்டத்துக்கு அனைத்து இந்திய கிரிக்கெட் குழு கொல்கத்தா கிரிக்கெட் குழு சார்பில் சென்றது. ஆனால், இந்த குழுவை இம்பீரியல் கிரிக்கெட் கான்பிரன்ஸ் ஏற்க மறுத்து, அனைத்து மாநிலங்கள் சார்பில் ஒருங்கிணைந்த அமைப்பாக வரவேண்டும் எனத் தெரிவித்தது.
இதையடுத்து, டெல்லி, போபால், ஆக்ரா, குவாலியர், கத்தியவார், பஞ்சாப், சிந்து, மத்திய மாகாணங்களின் பிரதிநிதிகளும் சேர்ந்து நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்க 1927, டிசம்பர் 10ம் தேதி முடிவு எடுக்கப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்து அமைப்பு
இதையடுத்து, கடந்த 1928-ம் ஆண்டு பிசிசிஐ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு முதல் தலைவராக ஆங்கிலேய தொழிலதிபர் ரேமண்ட் எரண்ட் கோவன் நியமிக்கப்பட்டார். அது முதல் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக பிசிசிஐ இருந்து வருகிறது. இதன் தலைமை அலுவலகம் மும்பை வான்ஹடே மைதானத்தில் அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு மாநில கிரிக்கெட் அமைப்பின் சார்பில் தலைவர், செயலாளர் தேர்வு செய்யப்பட்டு அந்த பிரதிநிதிகள் மூலம் பிசிசிஐ தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், 19வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர், மற்றும் மகளிர் கிரிக்கெட் ஆகிய 4 பிரிவுகளை மட்டும் பிசிசிஐ கட்டுப்படுத்தி வருகிறது.
கொழிக்கும் வருமானம்
ஐபிஎல் டி20 லீக் போட்டித் தொடரை கடந்த 2007ம் ஆண்டு இந்தியாவில் பிசிசிஐ தொடங்கிபின் அதன் வருமானம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டு நிலவரப்படி ஐபிஎல் பிராண்ட் மதிப்பு ரூ.90,038 கோடியாகும்.
அதிலும் 2023-27வரை டிஜிட்டல் மீடியா உரிமைகளை வயாகாம் நிறுவனம் ரூ.23,758 கோடிக்கு வாங்கியுள்ளது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை 5 ஆண்டுகளுக்கு ரூ.23,575 கோடிக்கு வாங்கியுள்ளது.இவை தவிர வெளிநாட்டுகளில் ஒளிவரப்பு உரிமையாக ரூ.1,234 கோடி என அனைத்தின் மூலம் பிசிசிஐ அமைப்புக்கு 620 கோடி டாலர் வருமானம் கிடைக்கிறது.
இது தவிர ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைக்கும் வருமானமும் இருக்கிறது. டாடா நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர் உரிமையை ரூ.670 கோடிக்கு வாங்கியுள்ளது. அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்களாக ரூ.210 கோடிக்கு 6 நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளது. நடுவர்களுக்கு ஸ்பான்சர்களாக ரூ.28 கோடி, டைம்அவுட் ஸ்பான்சருக்கு ரூ.30 கோடி என வருமானம் கிடைக்கிறது.
கடந்த ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய இரு புதிய அணிகள் அனுமதிக்கப்பட்டன, இரு அணிகளை அனுமதித்ததன் மூலம் ரூ.12,500 கோடி பிசிசிஐக்கு கிடைத்தது. ஏறக்குறை ஐபிஎல் மதிப்பு ரூ.90ஆயிரம் கோடியாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
வரிசெலுத்துகிறதா பிசிசிஐ?
பிசிசிஐ அமைப்புக்கு ஐபிஎல் மூலம் கிடைக்கும் வருவாய் ஏறக்குறைய 60 சதவீதமாகும். ஆனால், ஐபிஎல் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானத்துக்கு பிசிசிஐ வரி செலுத்துகிறதா என்றால். பதில் இல்லை என்பதுதான்.
இது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பும் இல்லை.
பிசிசிஐ என்பது ஒரு தனியார் நிறுவனம். மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இளைஞர் நலன் துறை அல்லது வேறு எந்தப் பிரிவிடம் இருந்தும் எந்தவிதமான உதவிகளையும், நிதிசார்ந்த பலன்களையும் பிசிசிஐ பெறாமல் செயல்படுகிறது.
ஆனால், பிசிசிஐ அமைப்பின் தேசிய அளவிலான பதவிகள், மாநில அளவிலான பதவிகளில் பெரும்பாலும் முந்தைய காலங்களில் இருந்தும் சரி, தற்போதும் சரி அரசியல் தலைவர்கள், அரசியல் சார்புடையவர்கள்தான் கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் மறைந்த மாதவராவ் சிந்தியா, பாஜகவின் அனுராக் தாக்கூர், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சுக்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா என அரசியல் தலைவர்கள், அவர்களுக்குத் தொடர்புடையவர்கள்தான் பிசிசிஐ பதவிகளில் உள்ளனர்.
“அதனால்தான் பிசிசிஐ மீது வரி ஏய்ப்பு குற்றாச்சாட்டுகள் பல்வேறு காலகட்டங்களில் எழுந்தபோதும் அது பெரிதாகப் பேசப்படவில்லை, அதன் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு பிசிசிஐ அமைப்பும் சட்டரீதியான காரணங்களைக் கூறி வரிச் செலுகையையும் பெற்று வருகிறது.” என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பிசிசிஐ வரி செலுத்தாவிட்டாலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் மட்டும் தாங்கள் ஈட்டும் வருமானத்துக்கு வரி செலுத்துகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
ஏன் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது?
தமிழ்நாட்டில் 1975, தமிழக சொசைட்டி பதிவுச் சட்டத்தின் கீழ் தங்களை தொண்டு நிறுவனமாகப் பிசிசிஐ அமைப்பு தன்னைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, பிசிசிஐ ஈட்டும் வருமானத்துக்கு வருமானவரிச்சட்டம் பிரிவு 12-ஏ கீழ் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்குப் பெற்று வருகிறது.
பிசிசிஐ அமைப்பு கடந்த 2006ம் ஆண்டு, பல்வேறு சங்கங்களின் பதிவுக் குறிப்பில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து அதற்கு வருமானவரித்துறையிடம் ஒப்புதல் கோரியது. ஆனால், வருமானவரித்துறை இதை ஆய்வு செய்து, “மெமோரன்டம் ஆப் அசோசியேஷன்” பிரிவில் திருத்தம் செய்ய அனுமதிக்க முடியாது என்றது.
அவ்வாறு திருத்தம் செய்தால், ஐபிஎல் மூலம் ஈட்டும் வருமானத்துக்கு ஏன் வரிச்சலுகை பெறுவது ரத்து செய்யப்படும், வணிக நோக்கத்தில் நடத்தப்படும் போட்டி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஏன் வரிவிதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக கடந்த 2016-17ம் ஆண்டில், மும்பை வருமான வரித் துறையின் 3 முறை பிசிசிஐ அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்த நோட்டீஸை எதிர்த்து பிசிசிஐ சார்பில், மும்பையில் உள்ள வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் பிசிசிஐ சார்பில் “ தாங்கள் ஏன் வருமானவரிச்சட்டம் பிரிவு 12-ஏ கீழ் வருமானவரி விலக்கு பெறுகிறோம், ஐபிஎல் மூலம் கிடைக்கும் வருமானத்தை தடை செய்யக்கூடாது ” என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கடந்த 2021, நவம்பர் 2ம் தேதி வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதிபதிகள் ரவிஷ் சூத், பிரமோத் குமார் ஆகியோர் பிசிசிஐக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.
அதில் “ பிசிசிஐ கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தவும், அதை வளர்க்கவும் முயற்சி எடுக்கிறது. அதற்காகவே அதிகமான ஸ்பான்ஸர்ஷிப் மற்றும் வளங்களைத் திரட்டுகிறது. கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படை தாத்பரியத்தை பிசிசிஐ இழக்கவில்லை. ஆதலால் வருமானவரிச்சட்டம் 1961 பிரிவு 12-ஏ கீழ் வருமானவிலக்கு சலுகையை தொடர்ந்து பெறலாம். பிசிசிஐ ஈட்டும் வருமான வருமானவரிச் சலுகைக்கு உட்பட்டது” எனத் தீர்ப்பளித்தது.

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றம் கேள்வி
பிசிசிஐ வரி செலுத்தாதது குறித்து கடந்த 2016ம் ஆண்டு கேள்வி எழுப்பி இருந்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐ அமைப்பை ஏன் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது என மத்திய சட்ட ஆணையத்திடம் கேட்டிருந்தது.
இதையடுத்து, மத்திய சட்ட ஆணையமும், பிசிசிஐ அமைப்பை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது.
அதில் “ இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், மாநிலங்களில் செயல்படும் கிரிக்கெட் சங்கங்களின் செயல்பாடும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்தியாவில் ஒரு அங்கமாக இருக்கும் பிசிசிஐ அமைப்பு, அரசிடம் இருந்து வரிச்சலுகை, நில ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பெற்று வருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் கடந்த 1997 முதல் 2007ம் ஆண்டுவரை, ஏறக்குறைய ரூ.2,168.50 கோடி வரிச்சலுகைகளை மத்திய அரசிடம் இருந்து பிசிசிஐ பெற்றுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிப்பது, தரத்தை உயர்த்துவது, கொள்கைகளை வகுப்பது, சர்வதேச போட்டிகளுக்கு வீரர்களைத் தேர்வு செய்து இந்தியாவின் சார்பில் அனுப்புவது என ஒரு விளையாட்டு சம்மேளனம் போலவே பிசிசிஐ செயல்படுகிறது.
ஆதலால் இந்திய அ ரசியலமைப்புச் சட்டம் பிரிவு 12ன்படி, பிசிசிஐ அமைப்பு இந்திய அரசு சார்பான அமைப்பாகவே கருத வேண்டும். மற்ற விளையாட்டு சம்மேளனங்களை தகவல் உரிமைச் சட்டத்தில் கொண்டுவந்ததைப் போல் பிசிசிஐ அமைப்பையும் கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
தகவல் உரிமைச் சட்டத்தில் கேள்வி
மேலும், கீதா ராணி என்பவர், மத்திய தகவல் உரிமை ஆணையத்துக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பிசிசிஐ குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதில் “ பிசிசிஐ சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் இந்தியா சார்பில் விளையாடுகிறார்களா அல்லது பிசிசிஐ சார்பில் விளையாடுகிறார்கள், எதன் அடிப்படையில் விளையாடுகிறார்கள்? சர்வதேச அளவில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களை தனியார் அமைப்பு எவ்வாறு தேர்ந்தெடுக்கிறது? இந்த அதிகாரத்தை பிசிசிஐக்கு வழங்கியதால் அரசுக்கு கிடைக்கும் பலன் என்ன?” என 12 கேள்விகளை எழுப்பிஇருந்தார்.
இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கோரி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம், அனுப்பியது. ஆனால், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகமோ, “ பிசிசிஐ அரசு அமைப்பும் அல்ல, அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதால் எந்தத்தகவலும் தங்களிடம் இல்லை” எனத் தெரிவித்தது.
அதுமட்டுமல்லாமல் தகவல் ஆணையத்தின் ஆணையராக இருந்த ஸ்ரீதர் ஆச்சார்யலுவும் பிசிசிஐ பயன்படுத்தும் இலச்சினை(லோகோ) குறித்து கேள்வி எழுப்பிஇருந்தார். அதில் “ பிசிசிஐ பயன்படுத்தும் லோகோ 1928ல் பிரிட்டிஷ் அரசில் வடிவமைக்கப்பட்டது, 90 சதவீதம் இந்திய அ ரசு பயன்படுத்தும் நட்சத்திரம் போன்றுள்ளது.
பிரிட்டிஷ் அரசில் பயன்படுத்தப்பட்ட லோகோவை அரசின் முன்அனுமதியின்றி பிசிசிஐ பயன்படுத்துகிறது. இது இலச்சினை மற்றும் பெயர்கள் சட்டத்தின் கீழ் குற்றமாகும்” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பிசிசிஐ என்ன சொல்கிறது?
ஆனால், பிசிசிஐ தங்களை ஒரு சுயாட்சித்தன்மைகொண்ட நிறுவனம் என்பதை உச்ச நீதிமன்றத்தில் தெளிவாகக் கூறியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ சார்பில் அதன் வழக்கறிஞர்கள் பதிவு செய்த அறிக்கையில் “ பிசிசிஐ ஒரு சுயாட்சித்தன்மை கொண்ட நிறுவனம். இந்தியக் கிரிக்கெட் பிசிசிஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ அணிதானேத் தவிர, இந்தியாவின் அதிகாரப்பூர்வ அணிஅல்ல. பிசிசிஐ அமைப்பு இந்திய தேசியக் கொடியைக்கூட பயன்படுத்தியது இல்லை, இந்தியாவின் எந்த இலச்சினையையும் ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை” எனத் தெரிவித்துள்ளது.
அரசின் கீழ் வராத, கட்டுப்படாத அமைப்பு என்றும், தேசிய விளையாட்டு சம்மேளனம் இல்லை என பிசிசிஐ அமைப்பு தெரிவித்துவிட்டது.
அதே நேரத்தில், “இந்தியாவில் உள்ள விளையாட்டு ஆணையங்களிலேயே பிசிசிஐதான் சிறப்பாகச் செயல்படுகிறது. மத்திய அரசின் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்படும் விளையாட்டு அமைப்புகளின் செயல்பாடு பிசிசிஐ அமைப்போடு ஒப்பிடுகையில் மோசமாக இருக்கிறது. இதை அரசின் கீழ் கொண்டுவந்தால் மோசமாகிவிடும், கொண்டுவராவிட்டாலும் நம்பகத்தன்மையை அதிகப்படுத்துவது பற்றி முயற்சிக்கலாம். பிசிசிஐயில் சீர்திருத்தம் கொண்டுவருவது குறி்த்து லோதா கமிட்டி தனது பரிந்துரைகளை வழங்கியது. ஆனால், அதை 2 ஆண்டுகளுக்குப்பின், நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள்.” என்கிறார் விளையாட்டு விமர்சகர் சுமந்த் சி ராமன்.

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் வருமானத்துக்கு பிசிசிஐ ஏன் வரி செலுத்துவதில்லை?
“ கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் அமைப்பு என்ற அடிப்படையில் பிசிசிஐ வருமானவரி விலக்கு பெற்றுள்ளார்கள். வருமானவரி விலக்கு அளித்தது அரசுதான், அரசாங்கத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் பிசிசிஐயில் இருப்பதால் யாரும் ஏதும் கேட்க முடியாது” என்கிறார் சுமந்த் சி ராமன்.
“பிசிசிஐ என்ற தனியார் அமைப்பின் சார்பில் ஒருவர் எப்படி வீரர்கள் இந்தியாவின் பெயரில் போட்டியில் பங்கேற்க முடியும்? இது நீண்டகாலமாக கேட்கப்படும் கேள்விதான். ஆனால் மாற்று யாரும் இல்லையே. பிசிசிஐக்கு போட்டியாக ஒரு தனியார் அமைப்பு உருவாகினால், அதே அளவுக்கு பணபலம், அதிகார பலம் படைத்து, கிரிக்கெட் வீரர்கள் அதில் சேர்ந்தால் போட்டிகளை நடத்தினால், நீதிமன்றத்துக்கு சென்றால் இதெல்லாம் சாத்தியம். ஆனால், இதுபோன்று மாநிலந்தோறும் கிரிக்கெட் சங்களுக்குள் போட்டி இருந்து வருகிறது. ஆனால், தேசிய அளவில் இதுபோன்ற போட்டி வருவதற்கு, பிசிசிஐ அமைப்பை எதிர்க்க அதிக பணம் தேவை. பிசிசிஐ அமைப்பில் ஏற்கெனவே பல அரசியல் தலைவர்கள் பல்வேறு பதவிகளில் இருக்கும்போது புதிதாக வருபவர்களும் அதே அமைப்புக்குத்தான் செல்ல முயல்வார்கள்.” என்கிறார் அவர்.
இதே போல கிரிக்கெட் வீரர்கள் ஏன் வாரியங்களின் முக்கியப் பதவிக்கு வருவதில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“கிரிக்கெட் வீரர்களும் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், அதிகாரமில்லாதவர்களாக மாற்றப்படுகிறார்கள். கங்குலி, ரோஜர் பின்னி போன்றவர்கள் பிசிசிஐ தலைவராக இருந்தாலும் அவர்களால் முடிவு எடுக்க முடிந்ததா.கங்குலி தலைவராக இருந்தபோது, அதிகாரம் யாரிடம் இருந்தது, ஜெய் ஷாவிடம் அதிகாரம் இருந்தது அனைவருக்கும் தெரியும். இன்றுகூட ஜெய் ஷாவிடம்தான் அதிகாரம் இருக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் யார் பதவியில் இருக்கிறார்கள், திமுக அமைச்சர் பொன்முடி மகன்தானே இருக்கிறார். அனைத்து கிரிக்கெட் சங்கத்திலும் அரசியல் தலைவர்கள் வாரிசுகள் வருவது இயல்புதான்” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












