ஜடேஜா: சோதனைகளை சாதனைகளாக மாற்றும் 'தோனியின் தளபதி'

பட மூலாதாரம், TWITTER/RAVINDRASINH JADEJA
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
“ஜடேஜாவின் பந்துவீச்சையும், பேட்டிங்கையும் எளிதாக எண்ணிவிடதீர்கள். இந்திய அணிக்காக மிகவும் முக்கியத் தருணங்களில் ரன் சேர்த்து தருபவர், கிரிக்கெட் அறிவு கூர்மையாக உள்ளவர். ஜடேஜாவின் பேட்டிங் திறமை, பந்துவீச்சு திறன் கடந்த சில ஆண்டுகளாக மெருகேறியுள்ளது. ஏற்கெனவே ஜடேஜா சிறந்த பீல்டர், தற்போது சிறந்த பேட்ஸ்மேனாக, பந்துவீச்சாளராக உயர்ந்துள்ளார்”
இந்த பெருமைக்குரிய கருத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் சமீபத்தில் கூறியது. இயான் சேப்பலின் வார்த்தைகள் உண்மையானவை என்று ஜடேஜா இந்திய அணிக்கு ஆடிய பல்வேறு போட்டிகளில் நிரூபித்துள்ளார்.
தோனியின் தளபதி
ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை கடந்த 2012ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்குள் வந்ததில் இருந்து, கேப்டன் தோனிக்கான தளபதியாகவே ஜடேஜா இருந்து வருகிறார். சிஎஸ்கே அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்திக் கொடுப்பது, இக்கட்டான நேரத்தில் பேட்டிங்கில் அசத்துவது, முக்கியத் தருணத்தில் அருமையான கேமியோ ஆடி அணியை வெல்ல வைப்பது என அனைத்திலும் சிஎஸ்கே அணியின், தோனியின் தளபதியாக ஜடேஜா இருந்து வருகிறார்.
2023-ஐபிஎல் சீசனின் நேற்றைய இறுதி ஆட்டத்தில் கூட கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த ஜடேஜா, மோகித் சர்மா பந்தில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி சிஎஸ்கே கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார். சிஎஸ்கே கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நினைப்புடன் டக்அவுட்டில் கண்ணைமூடி மவுனம் காத்த தோனியின் எண்ணத்தை ஜடேஜா நனவாக்கி அந்த வெற்றியையும் தோனிக்கே அர்ப்பணித்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
அதுமட்டுல்ல நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மிரட்டலான ஃபார்மில் சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அப்போது கில்லை ஆட்டமிழக்கச் செய்யும் நோக்கில் ஜடேஜாவுக்கு பந்துவீச தோனி வாய்ப்பளி்த்தார். ஜடேஜா பந்துவீனால் இக்கட்டான நேரத்தில் விக்கெட் வீழ்த்துவார் என்பதை அறிந்த தோனி அவருக்கு வாய்ப்பளித்தார்.
தோனியின் திட்டப்படி பந்துவீசிய ஜடேஜா, அருமையான லெக் ஸ்பின்னை வீசி, கில்லை மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து தோனி வெளியேற்றினார். அப்போது தோனியைப் பார்த்து ஜடேஜா பெருவிரலை காட்ட, தோனியும் சிறிய புன்னகையுடன் “நான் சொன்னது நடந்திருச்சா” என்ற ரீதியில் ஜடேஜாவின் கரங்களைப் பற்றினார். தோனி எனும் கேப்டன் எண்ணத்தை நினவாக்கும் தளபதியாகவே சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளங்கி வருகிறார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஜடேஜாவைக் கைவிடாத தோனி
சிஎஸ்கே அணிக்குள் ஜடேஜா வந்தபின் தவிர்க்க முடியாத வீரராக மாறிவிட்டார். காயம் காரணமாக ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்படுமேத் தவிர பெரும்பாலான போட்டிகளில் ஜடேஜா இல்லாமல் சிஎஸ்கே அணி களம் காண்பதில்லை, தோனியும் ஜடேஜா இல்லாமல் களத்துக்கும் வருவதில்லை.
இதற்கு ஜடேஜாவின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் மீதான நம்பிக்கையும், எந்த நேரத்திலும் ஆட்டத்தை திசைதிருப்பும் திறமைசாலி என்பதை தோனி நன்கு உணர்ந்தவர். அது மட்டுமல்லாமல் ஜடேஜா பீல்டிங்கில் நிற்கும் பகுதியில் பெரும்பாலும் கேட்ச் கோட்டைவிடுவதோ, பீல்டிங்கில் கோட்டைவிடுவதோ இருக்காது.
களத்தில் மிகச்சிறந்த பீல்டராக ஜடேஜா தன்னை எப்போதும் நிரூபிப்பவர். அதுமட்டுமல்லாமல் நடுப்பகுதி ஓவர்களில் நிதானமாக பேட் செய்யவும், டெத்ஓவர்களில் ஃபினிஷிங் செய்யவும் ஜடேஜாவுக்கு நிகர் அவர்தான். எந்த நேரத்திலும் தனது பேட்டிங் கியரை மாற்றக்கூடிய வல்லமை ஜடேஜாவுக்கு உண்டு.
மேலும், ஜடேஜா பந்துவீச வந்தால், மின்னல் வேகத்தில் தனது ஓவரை வீசி முடித்துவிடுவார், இது கேப்டனுக்கு பெரிய சுமையைக் குறைத்துவிடும். டி20 போட்டியில் தனது ஓவர்களை சில நிமிடங்களில் ஜடேஜா வீசி முடித்துக் கொடுத்து கேப்டன் தோனிக்கு உதவி செய்யக்கூடியவர்.
சிஎஸ்கே அணியில் நடுப்பகுதி ஓவர்கள், டெத் ஓவர்களில் வீசக்கூடிய திறமையும் ஜடேஜாவுக்கு உண்டு என்பதால், எந்த சூழலிலும் ஜடேஜாவை பயன்படுத்தலாம் என்று தோனி திட்டத்தோடு இருப்பார். இதுபோன்ற காரணங்களால் தோனியோடு ஜடேஜாவும் பிரிக்க முடியாதவராகிவிட்டார், சிஎஸ்கே அணியோடு இணைபிரியாத அங்கமாக மாறிவிட்டார்.

பட மூலாதாரம், BCCI/IPL
மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்
ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜா தன்னை சிறந்த பந்துவீச்சாளராக, பீல்டராக, சிறந்த ஆல்ரவுண்டராக நிரூபித்துள்ளார். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஜடேஜாவின் திறமை பன்மடங்கு மெருகேறியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களைப் பட்டியலிட்டால் அதில் ஜடேஜாவுக்கு தனி இடமுண்டு. ஒருநாள் போட்டிகளில் 191 விக்கெட்டுகளை வீழ்த்தி, முதல்முறையாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடதுகை இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றவர்.
டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 264 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 3 விதமான ஃபார்மட்டுக்கும் தான்பொருத்தமானவர் என்பதை நிரூபித்துவிட்டார்.
சர்வதேச ஆல்ரவுண்டர்கள் வரிசையில் தனி இடம் வகிக்கும் ஜடேஜா 64 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் உள்ளிட்ட 2,658 ரன்களைக் குவித்துள்ளார். 174 ஒருநாள் போட்டிகளில் 13 அரைசதங்களுடன் 2,526 ரன்கள் சேர்த்துள்ளார்.
64 டி20 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா 457 ரன்கள் சேர்த்து, தனது ஸ்ட்ரைக் ரேட்டை 125க்கு குறைவில்லாமல் வைத்துள்ளார். ஏறக்குறைய 308 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட ஜடேஜா 214 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 3,359 ரன்களைக் குவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
திறமையை மெருகேற்ற தயங்காதவர்
இந்திய அணியின் அனைத்துவிதமான ஃபார்மட்டுக்கும் தன்னை பொருத்தமானவராக வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஜடேஜா தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் மெருகேற்றிக்கொண்டவர். ஏதாவது ஒரு தொடரில் ஜடேஜாவின் ஆட்டம் சரியில்லாமல் அடுத்தத் தொடரில் நீக்கப்பட்டால், உடனடியாக உள்ளூர் போட்டிகளில் களமிறங்கி விளையாடி தனது குறைபாடுகளைச் சரிசெய்து, தேவைப்படும் பயிற்சிகளை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவர் ஜடேஜா.
அதனால்தான் 2009ம் ஆண்டு உலக டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜாவின் மந்தமான பேட்டிங் காரணம் என விமர்சிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய பேட்டிங் ஃபார்மை ஜடேஜா நிரூபித்தவுடன், இந்திய அணிக்குள் மீண்டும் ஜடேஜா இடம் பெற்றார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமானநிலையி்ல் இருந்தபோது, அப்போது கேப்டனாக இருந்த தோனியுடன் சேர்ந்து 112 ரன்கள் ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்ததும், அஸ்வினுடன் சேர்ந்து 5 ஓவர்களி்ல் 59 ரன்கள் குவித்து இந்திய அணியின் ஸ்கோரை 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்த சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறக்கமாட்டார்கள்.

பட மூலாதாரம், Getty Images
ராணுவ வீரராக வேண்டும் என்று கனவு
1988ம் ஆண்டு குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் நவாம் கெட் நகரில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தவர் ரவிந்திர ஜடேஜா. ஜடேஜாவின் தந்தை அனிருத் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக இருந்தார். ஜடேஜாவை ராணுவத்தில் சேர்த்து அதிகாரியாக்க வேண்டும் என்ற கனவில் அவரின் தந்தை அனிருத் இருந்தார்.
ஆனால், ஜடேஜாவுக்கு கிரிக்கெட் மீது காதல் இருந்தது. கடந்த 2005ம் ஆண்டு ஜடேஜாவின் தாய் லதா விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, கிரிக்கெட் கனவுகளைப் புதைத்துவிட்டு, விலகவிடும் எண்ணத்தில் ஜடேஜா இருந்தார். ஆனால் அவரின் சகோதரி நைனா அளித்த ஊக்கத்தால் மீண்டும் கிரிக்கெட் விளையாடி ஜடேஜா தனக்குரிய அங்கீகாரத்தை அடைந்தார்.
உலகக்கோப்பை அணி
ஜடேஜா தனது 16வயதில் இந்திய அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இடம் பெற்று, இலங்கையில் நடந்த, ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்திய அணியில் இடம் பெற்றார். இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2008 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.
திறமையை மெருகேற்றும் வித்தை தெரிந்தவர்
இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் தங்களின் பேட்டிங் ஃபார்ம், பந்துவீச்சு ஃபார்ம் குறைந்து அணியிலிருந்து நீக்கப்பட்டால் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில் தயக்கம் காட்டுவதுண்டு. ஆனால், ஜடேஜா சர்வதேச அளவில் புகழ்பெற்ற வீரராக இருந்தாலும் உள்ளூர் போட்டிகள், ரஞ்சிக் கோப்பை, துலீப் டிராபி போன்றவற்றில் ஆடும் வழக்கத்தை வைத்து தனது திறமையை மெருகேற்றும் வித்தை தெரிந்தவர்.
2006-07ல் துலீப் டிராபி மூலம் ஜடேஜாவுக்கு முதல்தரப் போட்டிகளில் அறிமுகம் கிடைத்தது. மேற்கு மண்டலத்துக்காகவும், ரஞ்சிக் கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்காகவும் ஜடேஜா விளையாடியவர்.
2012-ல் முதல் தரப் போட்டிகளில் 3 முச்சதங்களை விளாசி ஜடேஜா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பிராட்மேன், பிரையன் லாரா, ஹேமண்ட், கிரேஸ், கிரேம் ஹிக், ஹசி ஆகியோர் வரிசையில் ஜடேஜாவும் இணைந்தார். ஒடிசா அணி, குஜராத் அணி, ரயில்வேஸ் அணிக்கு எதிராக முச்சதங்களை விளாசி ஜடேஜா தன்னை ஆல்ரவுண்டராக நிரூபித்தார்.
இந்திய அணியில் அறிமுகம்
2008-09ல் ரஞ்சிக் கோப்பையில் சவுராஷ்டிரா அணியில் இடம் பெற்ற ஜடேஜா 42 விக்கெட்டுகள், 739 ரன்கள் சேர்த்ததன் மூலம் பிசிசிஐ தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இந்திய அணியில் வாய்ப்புப் பெற்ற ஜடேஜா, 2009, பிப்ரவரி 8ம் தேதி நடந்த ஆட்டத்தில் அறிமுகமாகினார்.
2012-13ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களை சவுராஷ்டிரா அணிக்காக அடித்ததையடுத்து, ஜடேஜாவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் முதல்முறையாக வாய்ப்புக் கிடைத்தது
டெஸ்ட் தொடரில் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா அறிமுகமானார். இந்திய அணியில் 2009ம் ஆண்டு ஜடேஜாவுக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் 4 ஆண்டுகளுக்குப் பின்புதான் டெஸ்ட் அணியில் வாய்ப்புக் கிடைத்தது.
நாக்பூரில் நடந்த இங்கிலாந்து டெஸ்டில் அறிமுகமான ஜடேஜா, அந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கொச்சியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் 61 ரன்கள் குவித்து தன்னாலும் கேமியோ ஆட முடியும் என்பதை நிரூபித்து, 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா சாய்த்தார்.
2013ல் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜடேஜா. இதில் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கை மட்டும் 5 முறை ஜடேஜா ஆட்டமிழக்கச் செய்தார். 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்ல காரணமாக இருந்த ஜடேஜா, அந்த தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற கோல்டன்பால் விருதைப் பெற்றார்.
ஐசிசி தர வரிசையில் முதலிடம்
அந்த ஆண்டில் ஐசிசி ஒருநாள் போட்டியில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக ஜடேஜா உயர்ந்தார். இதன் மூலம் கபில்தேவ், மணிந்தர் சிங், கும்ப்ளே வரிசையில், 1996-ம் ஆண்டுக்குப் பிறகு நம்பர்ஒன் பந்துவீச்சாளராக உயர்ந்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று ஆல்ரவுண்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றாலும் முதல் அரைசதத்தை 2014ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராகவே அடித்தார். புவனேஷ்வர் குமாருடன் இணைந்து, 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 68 ரன்கள் சேர்த்த ஜடேஜாவால்தான் இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்கை இந்தியாவால் நிர்ணயிக்க முடிந்தது.
கடந்த 10 ஆண்டு காலப் பயணம்
2015ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜடேஜா மோசமான ஃபார்ம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு, வங்கதேசத் தொடரிலிருந்து கழற்றிவிடப்பட்டார். அதன்பின்பும் மனம் தளராமல், ரஞ்சிக் கோப்பைத் தொடரில் ஆடிய ஜடேஜா 38 விக்கெட்டுகளையும் 215 ரன்களும் அடித்தார்.
ஜடேஜாவின் ஃபார்மைப் பார்த்த பிசிசிஐ தேர்வாளர்கள், இந்தியாவில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பளித்தனர். 4 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார்.
2017ல் ஆஸ்திரேலியா சென்ற இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஜடேஜா 25 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு அரைசதங்களை விளாசினார். 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் ஒருநாள் போட்டியில் 2 ஆயிரம் ரன்களையும், 150 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்
2019ம் ஆண்டில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜடேஜா தனது 200-வது டெஸ்ட் விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். 2022 மார்ச் 5ம் தேதி இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 175 ரன்கள் சேர்த்தும், 9 விக்கெட்டுகளை வீழ்த்தியும் கபில் தேவின் சாதனையை ஜடேஜா முறியடித்தார்.
அது மட்டுமல்லாமல் 2022ல் இங்கிலாந்து பயணத்தில் முதல்முறையாக வெளிநாட்டில் ஜடேஜா சதம் அடித்தார். அந்த ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் சென்ற இந்திய ஒருநாள் அணிக்கு துணைக் கேப்டனாகவும் ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஃபார்ம் அல்ல, திறமைதான்
இதுபோன்று ஜடேஜா தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை மெருகேற்றிக்கொண்டே வந்துள்ளார். இந்திய அணியில் இருந்து ஃபார்ம் குறைவு போன்ற காரணத்தால் நீக்கப்பட்டால், உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி தனது திறமையை ஜடேஜா நிரூபிக்க சிறிது கூட ஜடேஜா தயங்கியது இல்லை.
ஃபார்ம் என்பது நிலையானது அல்ல, திறமைதான் நிலையானது என்பதை தனது பேட்டிங், பந்துவீச்சு மூலம் பிசிசிஐக்கு ஜடேஜா உணர்த்தியதால்தால் அணிக்குள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐபிஎல் “ராக் ஸ்டார்”
ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியபோது, மறைந்த ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜடேஜா இடம் பெற்றார். பைனலில் சிஎஸ்கே அணியை ராஜஸ்தான் அணி தோற்கடிக்க ஜடேஜா முக்கியக் காரணமாக அமைந்தார். ஜடேஜாவின் ஆட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன வார்ன், ஜடேஜாவை “ராக் ஸ்டார்” என்று அழைத்தார்.
அதன்பின் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளிலும் ஜடேஜா பயணித்தார்.
சிஎஸ்கேவும் ஜட்டுவும்
2012-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியால் ரூ.7 கோடிக்கு ஜடேஜா ஏலத்தில் வாங்கப்பட்டு அதன்பின் இப்போது ஜடேஜாவின் மதிப்பு ரூ.16 கோடியாக அதிகரித்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு வந்தது முதல் ஜடேஜா முக்கிய அங்கமாக நீடித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தருணங்களில் ஜடேஜா சிறப்பாக பேட் செய்தும், பந்துவீசியும் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
2013ல் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டம், 2020ல் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 11பந்துகளில் 31 ரன்கள், 2021ல் ஆர்சிபிக்கு எதிராக 28 பந்துகளில் 62 ரன்கள் என ஜடேஜா தன்னுடைய முழுமையாக பங்களிப்பை அளித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அங்கீகாரம் கிடைக்காதது ஏன்?
ஆனாலும், சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பங்களிப்புகள் பல செய்தபோதிலும் அணி நிர்வாகத்தாலும், சிஎஸ்கே ரசிகர்களாலும் உரிய அங்கீகாரம் ஜடேஜாவுக்கு கிடைக்கவில்லை. ஜடேஜா களமிறங்கியபோதெல்லாம் அவருக்கு அடுத்தாற்போல் தோனி களமிறங்க வேண்டும் என்பதால், ஜட்டு அவுட்ஆகுங்கள் என்ற ரசிகர்களின் கோஷம், அவரை வெகுவாகப் பாதித்தது. இது குறித்து ஜடேஜா வெளிப்படையாகவே சிரித்துக்கொண்டே தெரிவித்தார். குறிப்பாக சேப்பாக்கத்தில் தோனிக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த விசில் சத்தம், வரவேற்பு, ஜடேஜாவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கடந்த சீசனில் ஜடேஜாவிடம் கேப்டன் பதவியை வழங்கிவிட்டு பாதியிலேயே அவரிடம் இருந்து பதவியை பறித்ததும் அவரை பாதித்தது. இந்த விஷயத்தில் ஜடேஜாவுக்கு ஆதரவாக தோனி செயல்பட்டதால் ஜடேஜா அணியிலிருந்து வெளியேறுவதிலிருந்து தடுக்கப்பட்டார்.
ஜடேஜாவின் வருத்தம்
இந்த சம்பவத்துக்குப்பின் ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “ யாருக்காகவும் அல்லது எதற்காகவும் உங்கள் தரத்தை இழக்காதீர்கள். சுயமரியாதைதான் முக்கியம்”எ னத் தெரிவித்தார்.
இந்த சீசனிலும் ஜடேஜா தனது ட்விட்டில் புதிரான பதிவிட்டார். கடந்த 21ம் தேதி ட்விட்டரில் “ கர்மா உங்களுக்கு விரைவாகவோ அல்லது தாமதமாகவோ நிச்சயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டியதை வழங்கும்” எனத் தெரிவித்தார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ரசிகர்களுக்கு தெரியலயே?
இதற்கிடையே நேற்று சிஎஸ்கே சாம்பியன் பட்டம் பெற்ற நிகழ்ச்சியில், ஜடேஜாவுக்கு அப்டாக்ஸ் மதிப்பு மிக்க வீரர் விருது வழங்கப்பட்டது. அந்தபுகைப்படத்தை ஜடேஜா ட்விட்டரில் பதிவிட்டு “ அப்டாக்ஸ் என்னுடைய மதிப்பு தெரிந்திருக்கிறது. ஆனால், சில ரசிகர்களுக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தகுதியான வீரராக, திறமையான வீரராக, சிறந்த ஆல்ரவுண்டராக இருந்தும் ஜடேஜாவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏன் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது புதிராகவே இருக்கிறது. ஜடேஜாவின் பந்துவீச்சு கடந்த 15 ஆண்டுகளில் உலகத் தரத்துக்கு இணையாக உருமாறிவிட்டது. பந்துவீச்சாளராக பரிணமதித்த ஜடேஜா இன்று ஆல்ரவுண்டராக உலக அணிகள் மதிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்.
அதுமட்டும்லலாமல் இயான் போத்தம், கபில் தேவ், ஆன்ட்ரூ பிளின்டாப், ஷான் போலக் ஆகிய ஆல்ரவுண்டர்களின் பேட்டிங் சராசரியைவிட அதிகமாக ஜடேஜா வைத்துள்ளார். பிஷன்சிங் பேடி, எர்ரபள்ளி பிரசன்னா, வெங்கட்ராகவன், சந்திரசேகர் ஆகியோரைவிட சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியும் ஜடேஜாவுக்கு உரிய அங்கீகாரத்தை இந்திய ரசிகர்கள் இன்னும் வழங்கவில்லை என்பது நிதர்சனம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












