ஐபிஎல் ‘இறுதி யுத்தம்’: ஜடேஜா படைத்த வரலாறு - குஜராத்தை வீழ்த்தி கோப்பையை வென்ற சிஎஸ்கே

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

சிஎஸ்கே வெற்றிபெற கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டன. அரங்கம் முழுக்க ஒருவித பதற்றம். சிலரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.

போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சிஎஸ்கேவின் தீவிர ரசிகர்களுடைய இதயத்துடிப்பு நிச்சயம் சீரற்றதாகவே இருந்திருக்கும்.

இறுதி ஓவரின் முதல் 4 பந்துகளிலும் பவுலரே ஆதிக்கம் செலுத்தியிருந்தார். மோஹித் சர்மா 5வது பந்தை வீசினார். ஹர்திக் பாண்டியா நம்பிக்கையோடு அவரை தட்டிக்கொடுத்தார்.

குஜராத் அணியினர் வெற்றியைக் கொண்டாட ஆயத்தமாகினர். அந்தப் பந்து வெற்றியைத் தீர்மானிக்கும் முதற்படியாகவே இருந்தது. ஸ்டிரைக்கில் ஜடேஜா நின்றுகொண்டிருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

அரங்கத்தின் நிசப்தம்

இதுவரை ஜடேஜா ஆடும்போது ‘தோனி... தோனி...’ என எழுந்த முழக்கம் இப்போது நிசப்தம் அடைந்திருந்தது.

ஜடேஜா மீது அத்தனை விழிகளும் உற்று நோக்கின. வெற்றிக்கான ஒற்றை நம்பிக்கையாக ஜடேஜா மட்டுமே நின்று கொண்டிருந்தார்.

தோனி உட்பட பலரது முகங்களும் கலக்கத்திலேயே இருந்தன. 5வது பந்தை யார்க்கராக வீசும் முயற்சி. ஆனால் மோஹித் சர்மா தவறு செய்து விட்டார்.

யார்கர் மிஸ் ஆனது. பந்து ஸ்லாட்டில் விழுந்தது. அத்தனை ரசிகர்களின் நம்பிக்கையையும் ஆற்றலாகத் திரட்டி பந்தை சிக்சருக்கு விரட்டினார் ஜடேஜா.

அரங்கம் அதிர்ந்தது. குஜராத் ரசிகர்களின் உற்சாகம் காணாமல் போனது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன்

கடைசி பந்தில் சி.எஸ்.கேவின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை. இப்போது சென்னை ரசிகர்களோடு குஜராத் ரசிகர்களும் பதற்றப் போட்டியில் சேர்ந்து கொண்டனர்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

இறுதிப் பந்தில் மீண்டும் யார்க்கருக்கான முயற்சி. ஆனால் லோ ஃபுல்டாசாக மாறியது. சாமர்த்தியமாக அதை எதிர்கொண்டு பந்தை பவுண்டரிக்கு லேசாகத் தட்டி விட்டார் ஜடேஜா.

அவ்வளவுதான் அடித்த மாத்திரத்தில் கையை உயர்த்தியவாறு கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்தார். சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

பந்துகளை பவுண்டரிக்கு விளாசிய ருதுராஜ்-கான்வே

சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதியுத்தம் மழையால் திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சாய் சுதர்சனின் அதிரடியான ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை சேர்த்தது குஜராத்.

மழை குறுக்கிட்டதால் இரண்டாவது இன்னிங்ஸ் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 15 ஓவர்களுக்கு சுருக்கப்பட்டது. சிஎஸ்கேவுக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

பவர் பிளே 4 ஓவர்களுக்கும் பவுலர்கள் தலா 3 ஓவர்களை வீசிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

விறுவிறுப்பான சேசிங் முதல் பந்தில் இருந்தே தொடங்கிவிட்டது. ஹர்திக்கின் 2வது ஓவரில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி.

ஷமி வீசிய 3வது ஓவரின் முதல் 2 பந்துகளில் பவுண்டரி என ருத்துராஜ் கெய்க்வாட்டும் கான்வேவும் மாறி மாறி பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதே வேகத்தோடு, ரஷீத் கானின் பந்துவீச்சையும் எந்தவித தயக்கமுமின்றி விளாசித் தள்ளினர்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

சென்னையின் வேகத்தைத் தணித்த நூர் அகமது

சென்னையின் கை ஓங்கிக் கொண்டிருந்தபோது நூர் அகமதுவை கொண்டு வந்தார் ஹர்திக் பாண்டியா.

சென்னையின் வேகம் தணிந்தது. முதல் ஓவரை சிறப்பாக வீசிய நூர் அகமது, அவரது 2வது ஓவரில் அதுவரை அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட் 26 ரன்களை எடுத்திருந்தபோது கான்வே 47 ரன்களை எடுத்திருந்தபோதும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

நூர் அகமது 3வது ஓவரை வீச, அதில் பெரிதாக சென்னை பேட்டர்களால் ஆட முடியாமல் போனது. ஒரு பவுண்டரிகூட அடிக்க விடாமல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஆட்டத்தை குஜராத் பக்கம் திரும்பியிருந்தார் நூர் அகமது.

30 பந்துகளில் சி.எஸ்.கேவின் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டன.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

சோகத்தில் மூழ்கிய சிஎஸ்கே ரசிகர்கள்

ரஹானே கேமியோ ரோலில் 13 பந்துகளில் 27 ரன்கள் விளாசி விடைபெற்றார்.

துபே முதல் 12 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தார். பந்து சரியாக பேட்டில் படாததால் அவரே வெளிப்படையாக அதிருப்தி அடைந்திருந்தார்.

ரஷீத் கான் தனது கடைசி ஓவரை வீச வந்தார். முதல் 4 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே சேர்ந்தன. அதுவரை தடுமாறிக் கொண்டிருந்த துபே, ரஷீத் கானை குறி வைத்து கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்க விட்டார்.

இப்போது 3 ஓவர்களில் 39 ரன்கள் தேவை. அம்பத்தி ராயுடு ஸ்டிரைக்கில் நின்றார். மோஹித் சர்மா வீசிய முதல் பந்து சிக்ஸ், அடுத்த பந்து பவுண்டரி, 3வது பந்து சிக்ஸ் என ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றினார் ராயுடு. ஆனால் 4வது பந்தில் மோஹித்திடமே கேட்ச் கொடுத்து 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அரங்கம் தோனி தோனி என அதிர்ந்தது. களத்திற்குள் தோனி வந்தார். பெஸ்ட் ஃபினிசர் என அறியப்பட்ட கேப்டன் தோனி முதல் பந்தே டக் அவுட். அவரது முகம் வாடிப்போனது. ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். சிஎஸ்கேவின் வெற்றி சதவீதம் வெறும் 35 சதவீதம் மட்டுமே எனக் கணிப்புகள் வெளியாகின.

ஜடேஜா படைத்த வரலாறு

இப்போது 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை. ஷமி பந்து வீசினார். அந்த ஓவர் அவரது அனுபவத்தைக் காட்டியது. நேர்த்தியான பந்துவீச்சால் வெறும் 8 ரன்கள் மட்டுமே வழங்கினார்.

இப்போது சென்னையின் வெற்றிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

களத்தில் ஜடேஜாவும் துபேவும் நின்று கொண்டிருந்தனர். ஸ்டிரைக்கில் துபே நின்றார். முதல் பந்து டாட் பால். அடுத்த 3 பந்துகளும் சிங்கில். துல்லியமான யார்க்கர்களை வீசினார் மோஹித் சர்மா.

துபே, ஜடேஜா இருவராலும் முதல் 4 பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட முடியவில்லை. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டன. ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைத்து வரலாறு படைத்தார் ரவீந்திர ஜடேஜா.

களத்திற்குள் ஆர்ப்பரித்தவாறு ஓடிச் சென்றனர் சி.எஸ்.கே வீரர்கள். தோனி உட்பட பலரும் ஜடேஜாவை தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

தோனியின் மஞ்சள் படை

நரேந்திர மோதி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒருமுறைகூட குஜராத்தை வீழ்த்தியதில்லை என்கிற வாக்கியம் திருத்தி எழுதப்பட்டிக்கிறது.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாகக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கபட்டது. பிறகு, மீண்டும் மழையால் ஓவர்கள் சுருக்கம்.

இப்படியாக அடுத்தடுத்து எழுந்த அத்தனை தடைகளையும் தாண்டி நடந்த முக்கியமான ‘இறுதி யுத்தத்தில்’ பலம் வாய்ந்த குஜராத்தை வென்றுவிட்டது தோனியின் மஞ்சள் படை.

சிஎஸ்கே செய்த தவறுகள்

தோனி

பட மூலாதாரம், BCCI/IPL

சிஎஸ்கே வீரர்கள் நேற்றைய ஆட்டத்தில் ஏராளமான தவறுகளைச் செய்தனர். கேட்சைக் கோட்டைவிடுதல், ரன்அவுட்டை தவறவிடுதல், ஓவர்த்ரோ மூலம் ரன்களை விடுதல் என பல வாய்ப்புகளை வீணடித்தனர்.

குறிப்பாக, 2வது ஓவரிலே சுப்மான் கில் ஆட்டமிழக்க வேண்டியது. கில் லெக் திசையில் அடித்த ஷாட்டை தீபக் சாஹர் கையில் பந்து விழுந்தும், கேட்சைப் பிடிக்காமல் கோட்டை விட்டார்.

தீக்சனா வீசிய 5வது ஓவரில், சுப்மான் கில் அடித்த ஷாட்டில் பந்தை தடுக்க வாய்ப்பு இருந்தும், டேவன் கான் கோட்டைவிட்டதால் பவுண்டரி சென்றது.

அதன்பின், ரவிந்திர ஜடேஜா பந்துவீச வந்தபோது, இரு ரன் அவுட்டை கோட்டைவிட்டார். தீக்சனா, தேஷ் பாண்டே இருவரும் பல பவுண்டரிகளை கோட்டைவிட்டனர். ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கே வீரர்களின் பீல்டிங் மோசமாக இருந்தது. இதை கச்சிதமாக செய்திருந்தால், இன்னும் 20 ரன்கள் வரை குஜராத் அணியை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

கில், சாஹா அதிரடி

சுப்மான் கில், சாஹா இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி 2 ஓவர்கள்வரை பொறுமை காத்தனர். தேஷ் பாண்டே வீசிய 2வது ஓவரில் கில் ஸ்குயர் லெக் திசையில் அடித்த ஷாட்டை தீபக் சாஹர் கோட்டை விட்டார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் கோட்டைவிட்ட கேட்சால் கில் சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் என்னஆகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

3வது ஓவரில் இருந்து சாஹா அதிரடிக்கு மாறி சாஹர் ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினார்.

ஏற்கெனவே முரட்டுத்தனமான ஃபார்மில் இருக்கும் கில், தேஷ் பாண்டேவின் 4-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். கில்லின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த, தோனி தீக்சனாவைக் கொண்டுவந்தார். தீக்சனா வீசிய 5வது ஓவரில் கில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். இருவரின் அதிரடியால், 10 ரன்ரேட்டில் சென்றது. பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி, விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் சேர்த்தது.

தோனியின் மின்னல் ஸ்டெம்பிங்

தோனி

பட மூலாதாரம், BCCI/IPL

பவர்ப்ளே ஓவர் முடிந்து ஜடேஜா பந்துவீச அழைக்கப்பட்டார். ஜடேஜா வீசிய 7-வது ஓவரின் 2வது பந்தில் 2ரன்கள் ஓட கில் முயன்றார். அப்போது கில் ரன்அவுட் செய்யும் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார். அதே ஓவரில் 5வது பந்தில் சஹாவுக்கு ஒரு ரன்அவுட்டையும் ஜடேஜா கோட்டைவிட்டார்.

கடைசிப் பந்தில் அந்த திருப்புமுனை நடந்தது. ஜடேஜா வீசிய பந்து கில் பிரன்ட்புட்டில் அடிக்க முயல பந்து லெக் ஸ்பின்னாகி தோனியிடம் வந்தது. இந்த வாய்ப்பை தவறவிடாத தோனி, 0.1 வினாடிகளில், மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து கில்லை வெளியேற்றினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கில் 39 ரன்னில் வெளியேற்றி சிஎஸ்கே அணியினர் பெருத்த நிம்மதி அடைந்தனர். 250 ஐபிஎல் போட்டியில் விளையாடிய தோனி, கில்லை ஸ்டெம்பிங் செய்து தனது 300-வது டிஸ்மிசலை எட்டினார்.

தமிழ்நாடு வீரரின் மிரட்டல் ஆட்டம்

சாய் சுதர்சன்

பட மூலாதாரம், BCCI/IPL

அதன்பின் சாய் சுதர்ஷன் ஆட்டத்தை டாப்கியருக்கு மாற்றினார். தீக்சனா வீசிய 15-வது ஓவரில் சாய் சுதர்ஷன் மிட்விக்கெட்டில் இரு சிக்ஸர்களை விளாசி 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். சுதர்ஷன் அரைசதம் விளாசியதும் அவரைக் கட்டித்தழுவி ஹர்திக் பாண்டியா ஊக்கப்படுத்தினார்.

பதிரனா வீசிய 16-வது ஓவரிலும் 2 பவுண்டரிகள் விளாசி சுதர்ஷன் ரன்ரேட்டை வேகப்படுத்தினார். தேஷ் பாண்டே வீசிய 17-வது ஓவரை வெளுத்துவாங்கிய சுதர்ஷன் தேர்டு மேன் திசையில் ஒரு சிக்ஸர், மற்றும் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி 20 ரன்களைச் சேர்த்தார்.

தேஷ் பாண்டே வீசிய 19-வது ஓவரை ஹர்திக்கும், சுதர்ஷனும் பொட்லகம் கட்டினர். . ஹர்திக் இரு சிக்ஸர்களையும், சுதர்சன் பவுண்டரியும் அடித்து 18 ரன்கள் சேர்த்தனர்.

டக்அவுட்டில் வரவேற்பு

பத்திரணா வீசிய கடைசி ஓவரை சுதர்ஷன் எதிர்கொண்டார். முதல் பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸரும், 2வது பந்தில் லாங்ஆனில் ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். இதைப் பார்த்த ஹர்திக், சுதர்சனைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

3வது பந்தில் சாய் சுதர்ஷன் கால்காப்பில் வாங்கி 96 ரன்களில் ஆட்டமிழந்தார்(47பந்துகள், 6 சிக்ஸர், 8 பவுண்டரி). சாய் சுதர்ஷனின் அருமையான ஆட்டத்தை வரவேற்ற குஜராத் அணியினர் அவரை டக்அவுட் பகுதியில் வரவேற்று அவரை உற்சாகப்படுத்தினர். கடைசியில் களமிறங்கிய ரஷித் கான் சிக்ஸர் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்சன் தனது முதல்27 பந்துகளில் 37 ரன்கள்தான் சேர்த்திருந்தார். ஆனால், அதிரடிக்கு மாறியபின், கடைசி 20 பந்துகளில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக உயர்ந்தது. ஐபிஎல் பைனலில் மிகக்குறைந்த வயதில் அரைசதம் அடித்தவர் என்ற பெயரை சாய் சுதர்சன் பெற்றார். குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன் அடித்த 96 ரன்கள் என்பது ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த 3வது அதிகபட்ச ஸ்கோர்.

20 ஓவர்கள் முடிவில்குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.

‘தோனியிடம்தானே தோற்றேன்’

தோனி

பட மூலாதாரம், BCCI/IPL

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ இந்த சீசனில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். எந்த நேரத்திலும், இடத்திலும் தோல்வி அடையாமல் இருக்க குழுவாக மிகுந்தநம்பிக்கையுடன் விளையாடினோம். ஒன்றாகவே வென்றோம், ஒன்றாகவே தோற்றோம். இந்த ஆட்டமும் அப்படித்தான். தோல்விக்கு ஏதும் காரணம் கூறப்போவதில்லை.

சாய் சுதர்ஷன் ஆட்டம் அற்புதமானது, இனி அவர் வாழ்வில் அதியசங்கள் நிகழும். அவருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். ரஷித்கான், ஷமி, மோகித் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். சிஎஸ்கே சிறந்த கிரிக்கெட்டை ஆடினார்கள். தோனியை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த கோப்பை அவருக்கென எழுதப்பட்டுள்ளது, நான் தோல்வி அடைந்தாலும், தோனியிடம் தோற்றதை மனதில் வைக்கமாட்டேன் நல்ல மனிதர்களுக்கு நல்லது நடக்கும்” எனத் தெரிவித்தார்.

‘அடுத்த சீசனும் வருவேன்’

தோனி

பட மூலாதாரம், BCCI/IPL

வெற்றிக்குப்பின் மகிழ்ச்சியுடன் பேசிய தோனி “சூழலைப் பார்த்து ஓய்வை அறிவிக்க சிறந்த நேரமாக இருந்தால், எளிதாக நன்றி சொல்லி, ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால், இன்னும் 9மாதங்கள் கடினமாக உழைத்து, இன்னும் ஒரு சீசன் விளையாட முயல்கிறேன், ஆனால், அதற்கு என் உடல் ஒத்துழைக்க வேண்டும், அதற்கு தயார் செய்ய வேண்டும்.

ஏராளமான அன்பை, நான் சிஎஸ்கே ரசிகர்களிடம் இருந்து பெற்றுள்ளேன், இன்னும் ஒரு சீசன் ஆடுவது எனக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும். சிஎஸ்கே ரசிகர்கள் வெளிப்படுத்திய அன்பு, உணர்வுகள் அவர்களுக்கு ஏதாவது நான் செய்ய வேண்டும் என்கிறது. இது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப்பகுதி. நான் இங்குதான் பேசத் தொடங்கியதும், என் பெயரை ரசிகர்கள் உச்சரிக்கிறார்கள், இதேதான் சென்னையிலும் நடந்துத. என்னால்முடிந்த அளவு திரும்பி வந்து நான் விளையாடுவேன்.

ஒவ்வொரு கோப்பை, சீரிஸ் வெல்லும்போதும் அது எனக்கான சவால்தான். ஒவ்வொருவரும் விதவிதமான அழுத்தத்தைச் சந்தித்தார்கள். ரஹானே அனுபவமானவர். மற்ற வீரர்கள் இலைஞர்கள், புதியவர்கள், குழப்பத்தில் ஆழ்ந்தனர். ராயுடு களத்தில் இருந்தாலே 100% வெற்றியைக் கொடுத்துவிடுவார். இந்தியா ஏ அணிக்கு இருவரும் இணைந்து விளையாடியுள்ளோம். எப்போதும் சிறப்பாக ஏதேனும் செய்வார் என ராயுடு மீது எனக்கு நம்பிக்கை இருக்கும். என்னைப் போலவே அதிகம் செல்போன் பயன்படுத்தமாட்டார்” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: