சிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டமா? 'கூல்' கேப்டன் தோனியின் வியூகமா?

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சீசன் ஆரம்பத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்று, பெரிய இலக்கை சேஸிங் செய்து டாம்பீகம் செய்த அணிகள் இறுதியில் ப்ளே ஆஃப் கூட செல்லாமல் போனதுண்டு.

ஆனால், தொடக்கம் முதல் கடைசிவரை பேட்டிங், பந்துவீச்சில் நிலைத்தன்மையை உறுதி செய்து, திட்டமிட்டு போட்டியை எதிர்கொண்டு வென்ற அணிகள், பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்காத அணிகள்தான் ப்ளே ஆஃப் வரை செல்கின்றன, சாம்பியன்களாக உருநஎடுக்கின்றன என்பதற்கு புள்ளிவிவரங்களே சாட்சி.

ஸ்மார்ட் கேப்டன்

அதில் முக்கியமானதும் முதலிடத்தில் இருப்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் கேப்டன் மகேந்திர சிங் தோனியும்தான்.

மகேந்திர சிங் தோனியை ‘கூல் கேப்டன்’ என்று ரசிகர்கள் வர்ணிக்கும் அதேநேரத்தில் அவர் திட்டங்களை வகுத்து, சரியாகச் செயல்படுத்தும் ‘ஸ்மார்ட் கேப்டன்’ என்பதையும் மறுக்க முடியாது.

மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று, பெரிய ஸ்கோரை மிகவும் சிரமப்பட்டு சேஸிங் செய்து, போராடி ப்ளே ஆஃப் செல்வதை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி பெரும்பாலும் விரும்புவது இல்லை.

இதற்கு கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து நடப்பு தொடர் வரை சிஎஸ்கே எந்தவிதமான டென்ஷமும் இல்லாமல் பெற்ற வெற்றிகளே சாட்சி.

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல என்ன தேவை, எத்தனை புள்ளிகள் வேண்டும், நிகர ரன்ரேட்டை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தக்கூடியவர்.

ப்ளே ஆஃப் சுற்றில் பாதுகாப்பாக இடம் பெறுவதற்கு நிகர ரன்ரேட்டை பராமரிப்பது அவசியம் என்பதை உணர்ந்து, அதை ஒவ்வொரு போட்டியிலும் கடைபிடித்து எதிர்கொண்டு வெற்றிகளைப் பெறக்கூடிய அணி சிஎஸ்கே.

அதனால்தான் சிஎஸ்கே அணி கடந்த 14 சீசன்களில் 10வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நிகர ரன்ரேட் மாயஜாலம்

தோனியின் திட்டமிட்ட அணுகுமுறையை ஒரு சிறிய சான்றின் மூலம் விளக்க முடியும்.

புராணங்களில் வரும் கதையில் உலகத்தைச் சுற்றிவர முருகன் மயிலை எடுத்துக்கொண்டு சென்ற நிலையில், விநாயகரோ தனது, தாய், தந்தையைச் சுற்றி ஞானப்பழத்தைப் பெற்றார் எனக் கூறப்படுவது உண்டு.

விநாயகரைப் போலத்தான் தோனியும். சுருக்கமான, ஸ்மார்ட்டான வழியில் எவ்வாறு இலக்கை அடைவது என்பதைத் தெரிந்துகொண்டு நிகர ரன்ரேட்டை பின்பற்றியே ப்ளே ஆஃப் சுற்றுக்கும் எளிதில் சென்றுவிடுவார்.

ஒரு போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிப்பாதைக்குச் சென்று திடீரென விக்கெட் சரிவை சந்தித்து தோல்வியின் பிடிக்குச் சென்றாலும், எளிதாகத் தோல்வியை எதிரணியிடம் தந்துவிடமாட்டார்கள். அந்தப் போட்டியை கடைசி ஓவர்வரை இழுத்துச் சென்று, குறைந்த ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியை ஏற்பார்கள்.

அதாவது மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட, மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்திக்காமல் இருப்பதில் சிஎஸ்கே அணி எப்போதும் கவனமாக இருக்கும்.

ஒவ்வொரு சீசனிலும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இதைத் தாரக மந்திரமாக எடுத்துச் செயல்படுகிறது. அவ்வாறு செயல்பட்டு ஐபிஎல் தொடரில் 5 சீசன்களில் நிகர ரன்ரேட் மூலமே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சிஎஸ்கே பெற்றிருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

2010 ஐபிஎல்

கடந்த 2010இல் நடந்த ஐபிஎல் சீசனில் 4 அணிகள், அதாவது, சிஎஸ்கே, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஆர்சிபி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

ஆனால், நிகர ரன்ரேட்டில் மற்ற 3 அணிகளை விடவும் சிறப்பாக பிளஸ் 0.279 ரன்ரேட்டுடன் சிஎஸ்கே அணி அரையிறுதி வாய்ப்பைப் பெற்றது.

நிகர ரன்ரேட்டிலும் டாப்-4 அணிகளில் 3வது இடத்தையும் சிஎஸ்கே பெற்றது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டமும் வென்றது.

2012 சீசனில் 4வது இடம்

இரண்டாவதாக 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் முறை கொண்டுவரப்பட்டது. அதில் முதல் இரு இடங்களில் இடம் பெறுவது முக்கியமாகக் கருதப்பட்டது.

மூன்றாவது மற்றும் 4வது இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, சிஎஸ்கே அணிகள் போட்டியிட்டன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி நிகர ரன்ரேட் மைனசில் இருந்தாலும், புள்ளி அடிப்படையில் 20 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்தது.

ஆனால், சிஎஸ்கே அணியும், ஆர்சிபியும் 17 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. அப்போது நிகர ரன்ரேட் ஒப்பீட்டில் ஆர்சிபி மைனஸ் 0.22 என்ற நிலையில் இருந்தபோது, சிஎஸ்கே பிளஸ் 0.100 எனப் பெற்று 4வது இடத்தைப் பெற்றது. அந்த சீசனில் 2வது இடத்தையும் சிஎஸ்கே உறுதி செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகேந்திர சிங் தோனி 2009ஆம் ஆண்டில் சென்னை அணியின் கேப்டன் ஸ்டீஃபன் ப்ளெம்மிங் உடன் பயிற்சி வேளையின்போது...

2019இல் டாப் 2

மூன்றாவதாக 2019ஆம் ஆண்டு சீசனில் டாப் 2 இடங்களைப் பிடிக்க டெல்லி கேபிடல்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்தது.

இரு அணிகளும் 18 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. ஆனால், நிகர ரன்ரேட்டில் டெல்லி கேபிடல்ஸ் அணி 0.044 என பிளசில் இருந்தது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் 0.131 என பிளசில் உயர்வாக இருந்து 2வது இடத்தைப் பிடித்தது. இந்த சீசனில் சிஎஸ்கே 2வது இடத்தைப் பிடித்தது.

2021இல் ஆர்சிபி-சிஎஸ்கே போட்டி

2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில், டாப் 2 இடங்களைப் பெற ஆர்சிபிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே போட்டி உருவானது.

இரு அணிகளும் 18 புள்ளிகளுடன் மல்லுக்கட்டின. முடிவில் ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.140 ஆக இருந்தது. ஆனால், சிஎஸ்கேவின் நிகர ரன்ரேட் 0.455 என்று உயர்வாக இருந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

2014இல் கோட்டைவிட்ட சிஎஸ்கே

ஆனால் 2014ஆம் ஆண்டில் மட்டும்தான் சிஎஸ்கே அணி நிகர ரன்ரேட்டை பராமரிக்காமல் இருந்தது. அதற்கு தண்டனையாக 2வது இடத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சிஎஸ்கே இழந்தது.

இரு அணிகளும் 18 புள்ளிகளுடன் சமநிலை வகித்து 2வது இடத்திற்குப் போட்டியிட்டனர். ஆனால், நிகர ரன்ரேட்டியில் சிஎஸ்கே அணி பிளஸ் 0.385 ஆக இருந்தது. ஆனால், கொல்கத்தா அணி பிளஸ் 0.418 ஆக வைத்து இரணாவது இடத்தைப் பிடித்தது.

சாகச கேப்டன் அல்ல

பெரும்பாலான ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணியால் எவ்வாறு ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடிகிறது. இது அதிர்ஷ்டத்தால் இடம் கிடைக்கிறதா என்றால் இல்லை.

சிஎஸ்கே அணி அதன் கேப்டன் தோனியின் திட்டமிட்ட செயல்பாட்டால், அணுகுமுறையால் நிகர ரன்ரேட் பராமரிப்பால் கிடைத்து வருகிறது.

ஐபிஎல் தொடரில் பிற அணிகளின் கேப்டன்களை போல் ‘சாகச கேப்டனாக’ தோனி தன்னை எப்போதும் வெளிப்படுத்தியதே இல்லை. திட்டங்களை வகுப்பவராக, திட்டங்களைச் செயல்படுத்தும் ‘புத்திசாலித்தனமான கேப்டனாக’ தோனி தொடர்ந்து செயல்பட்டுள்ளார்.

வெற்றிக்கும், நிகர ரன்ரேட் உயர்வுக்கும் என்ன தேவை, ஓர் இலக்கை அடைவதில் சிரமம் இருக்கும்பட்சத்தில் நிகர ரன்ரேட்டை பராமரிப்பது எப்படி என்பதைத் திட்டமிட்டு வீரர்களைக் களமாடச் செய்வதில் தோனியின் ஸ்மார்ட் திறன் மதிப்பெண்களை அள்ளுகிறது.

மிகப்பெரிய சாதனை வெற்றிகளை விரும்புவதைவிட, மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் சந்திக்கும் தோல்வியை சிஎஸ்கே அணியும், கேப்டன் தோனியும் சந்திக்க விரும்பாதவர்கள்.

நிகர ரன்ரேட்டை எவ்வாறு உயர்த்துவது, ஓர் இலக்கை எவ்வளவு விரைவாக எட்டுவது, பெரிய வித்தியாசத்தில் எதிரணியை சுருட்டுவது எப்படி என்பதில் சிஎஸ்கே அணி கவனத்துடன் செயல்படும்.

சுருக்கமாகக் கூறினால், தோற்றாலும் பெரிய சேதாரத்தைச் சந்திக்காமல் இருக்க வேண்டும், வெற்றியானாலும், தோல்வியானாலும், நிகர ரன்ரேட் அடிவாங்கிவிடக் கூடாது என்பதில் சிஎஸ்கேவின் கவனம் அலாதிதான்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

2023 ஐபிஎல் சீசனில் எப்படி

இதைத்தான் சிஎஸ்கே கடந்த 14 ஐபிஎல் சீசன்களிலும் துல்லியமாகச் செய்து ஸ்மார்ட் கிரிக்கெட்டை விளையாடி வந்துள்ளது. இதற்கான பாதையை வகுத்து தோனியும் அணியை வழிநடத்தி ஸ்மார்ட் கேப்டனாக ஜொலித்து வருகிறார். இந்த சீசனில்கூட சிஎஸ்கே அணி இதைத்தான் செய்தது.

சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் தோற்றபோதிலும்கூட அனைத்து ஆட்டங்களையும் கடைசி ஓவர் அல்லது 19வது ஓவர்வரை இழுத்து வந்திருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 32 ரன்களில் தோற்றதுதான் சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியாகும்.

ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எடுத்துக்கொண்டால், ஈடன் கார்டனில் இரு போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும்கூட ஆர்சிபி, குஜராத்திடம் மோசமான தோல்விகளைச் சந்தித்தது.

இதன் விளைவு, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி, ஆர்சிபியிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது...

நிகர ரன்ரேட்டை கடும் ஏற்றத்தாழ்வுகளுடன் பராமரிப்பதால்தான் ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதில் திட்டமிட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது கடினமாக இருந்தது.

கடைசி நேரத்தில் சன்ரைசர்ஸ் அணியை மும்பை அணி வீழ்த்தியது ராஜஸ்தான் அணிக்குப் பாதகமாக அமைந்தது. நிகர ரன்ரேட்டை ராஜஸ்தான் அணி தொடக்கத்திலிருந்தே சீராகப் பராமரித்து இருந்தால், நிச்சயமாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வந்திருக்க வாய்ப்புள்ளது.

சிஎஸ்கேவுக்கு மட்டும் திட்டமிடல் எவ்வாறு பலன் அளிக்கிறது?

“ஐபிஎல் என்பது நீண்ட டி20 தொடர். இதில் விளையாடும்போதே ஒவ்வோர் அணியும் நிகர ரன்ரேட்டை மனதில் வைத்தே செயல்படும். சில நேரங்களில் அணிகளின் திட்டங்கள், செயல்பாடுகள் தோல்வியில் முடியலாம், எதிர்பாராத பலன்களை அளிக்காமல் போகலாம், அந்த நேரத்தில் நிகர ரன்ரேட்டை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

“முக்கியமான விஷயம் என்னவென்றால், சிஎஸ்கே கேப்டன் தோனி புதிய பரிசோதனைகளை அணியில் செய்யக்கூடியவர், புதிய திட்டங்களை தீட்டி அதை வெற்றி பெற வைக்கும் அனுபவமான புத்திசாலியான கேப்டன்.

அணிக்குள் கேப்டன் செய்யும் புதிய முயற்சி அது எந்த அளவுக்கு வெற்றியாக மாறும் எனக் கூற முடியாது. ஆனால் தோனியை பொறுத்தவரை அவரின் திட்டமிடல், ஊகங்கள், கணிப்புகள் அடிப்படையில் செய்யும் பரிசோதனைகள் பெரும்பாலும் வெற்றியைத் தந்துள்ளது,” என்று பிபிசி தமிழிடம் பேசியபோது கூறினார் தமிழக கிரிக்கெட் வீராங்கனை சைலஜா.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

மேலும், “சிஎஸ்கேவின் திட்டமிடல் மட்டும் வெற்றியாக மாறுகிறது எனக் கூற முடியாது. இந்த சீசனில் சிஎஸ்கே தவிர்த்து, குஜராத், லக்னெள, மும்பை ஆகிய அணிகளும்கூட திட்டமிடலை சரியாகச் செய்தனர்.

அதனால்தான் லீக் சுற்றின் கடைசிவரை டாப்-4 பிரிவில் யார் வருவார்கள் எனக் கூறுவது கடினமாக இருந்தது,” என்கிறார் சைலஜா.

மேற்கொண்டு பேசிய சைலஜா, “சிஎஸ்கேவை பொறுத்தவரை ஒவ்வொரு வீரருக்குமான பொறுப்பு தெளிவாகத் தெரிந்துள்ளது. தொடக்க வீரர்கள் என்ன செய்ய வேண்டும், பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தங்களின் பங்களிப்பைச் சரியாக வழங்குகிறார்கள். அதேநேரம் ஒவ்வொரு வீரரின் மனதிலும் நிகர ரன்ரேட் மீதான கவனம் நிச்சயம் இருக்கும்,” என்று கூறினார்.

தோனி கூறியது என்ன

ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு, நிகர ரன்ரேட்டை பராமரிப்பது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டியில் கூறுகையில் “176 ரன்களை சேஸிங் செய்ய நினைத்தோம், ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

இருப்பினும் எங்களால் நிகர ரன்ரேட்டை இழக்க முடியாது, நிகர ரன்ரேட் முக்கியம் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நாங்கள் தயாராக இல்லை,” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: