சாய் சுதர்சன் - தோற்றாலும் சிஎஸ்கேவுக்கு தலை வலியை கொடுத்த தமிழக வீரர்

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

நரேந்திர மோதி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒருமுறைகூட குஜராத்தை வீழ்த்தியதில்லை என்கிற வாக்கியம் திருத்தி எழுதப்பட்டிக்கிறது.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாகக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கபட்டது. பிறகு, மீண்டும் மழையால் ஓவர்கள் சுருக்கம்.

இப்படியாக அடுத்தடுத்து எழுந்த அத்தனை தடைகளையும் தாண்டி நடந்த முக்கியமான ‘இறுதி யுத்தத்தில்’ பலம் வாய்ந்த குஜராத்தை வென்றிருக்கிறது தோனியின் மஞ்சள் படை.

சிஎஸ்கே-வுக்கு தலைவலியான சாய் சுதர்சன்

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் டைடன்ஸை கடைசி பந்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஆனால், முதல் இன்னிங்ஸில் ஆடிய ஒரு வீரரும் சென்னைக்குப் பெரிய தலை வலியைக் கொடுத்தார்.

அவர் ஆடத் தொடங்கியபோது பெரியளவில் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லை. தொடக்கத்தில் அமைதியாகவே ஆடினார். குறிப்பிட்டு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அனுபவம் வாய்ந்த பேட்டரும் இல்லை. கில் வெளியேறியதும் இனி குஜராத்தின் அதிரடி முடிந்தது என்றே பலரும் நினைத்திருப்பர்.

பதுங்கிப் பாய்வது போல மெல்லத் தமது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கி இறுதியில் முதல் இன்னிங்ஸின் ஆட்டநாயகனாகவே உருவெடுத்திருக்கிறார் சாய் சுதர்சன்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

அதிரடியான ஷாட்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரே தலைவலியாக மாறிப் போயிருக்கிறார். குஜராத் டைடன்ஸுக்கு கில் இல்லை என்றால் என்ன, நான் அடித்துக் கொடுக்கிறேன் என ஆமதபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் 96 ரன்களை விளாசியிருக்கிறார்.

'இன்றிரவு சாய் சுதர்சன் குஜராத் கண்களுக்கு விருந்து படைத்துவிட்டார்' என சச்சின் டெண்டுல்கரே புகழாரம் சூட்டும் அளவுக்கு அமைந்திருக்கிறது இளம் வீரரின் அதிரடி ஆட்டம்.

கடைசி 15 பந்துகளில் மட்டுமே 48 ரன்கள்

33 பந்துகளில் அரைசதம் விளாசியவர் அடுத்த பதினாங்கே பந்துகளில் 96 ரன்களை எட்டிவிட்டார். ஒரு கட்டத்தில் 9 பந்துகளுக்கு 6 ரன்கள், 12 பந்துகளுக்கு 10 ரன்கள் என பந்துவீச்சை எதிர்கொள்வதற்குத் தயக்கம் காட்டியவர் பிறகு அடித்து ஆடத் துவங்கினார்.

47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசிய சாய், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது மதீஷ பதிரானா பந்தில் ஆட்டமிழந்தார்.

களத்தை விட்டு வெளியேறியபோது அவரது ஸ்டிரைக் ரேட் 204.26 ஆக இருந்தது. மதீஷ பதிரானா பந்தில் ஆட்டமிழந்தாலும் அவரை எதிர்கொண்ட விதம் சாய் சுதர்சனின் அதிரடி நுட்பத்தை விவரித்தது. பதிரானாவையும் தீக்‌ஷனாவையும் குறிவைத்துப் பொளந்து கட்டினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

டெத் ஓவர்களில் சாய் பந்துகளை பவுண்டரிக்கும் சிக்சருக்கு விளாசும் போதெல்லாம் மறுமுனையில் நின்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டுவதைக் காண முடிந்தது.

சதத்தைப் பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும் பெவிலியன் திரும்பியபோது அரங்கம் நிறைந்த ரசிகர்களின் கரகோஷம் மட்டுமின்றி சக அணி வீரர்களின் பாராட்டுக்கும் ஆளானார் சாய் சுதர்சன்.

சாய் சுதர்சன் அடுத்து எங்கே?

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

ஆல்வார்பேட்டை கிரிக்கெட் க்ளபில் இருந்து, ஜாலி ரோவர்ஸ் க்ளப், பிறகு அங்கிருந்து தமிழ்நாடு கிரிக்கெட் அணி.

இதற்கு 3 ஆண்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறது. அடுத்து எங்கே என சாய் சுதர்சனை பாராட்டும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் ராஜஸ்தான் ராயஸ்ல் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின்.

சாய் சுதர்சனை அடிப்படை விலையில் எடுத்த குஜராட் டைடன்ஸ்க்கு வாழ்த்துகள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அடிப்படைத் தொகையான 20 லட்சம் ரூபாய்க்கே குஜராத் டைடன்ஸால் ஏலம் எடுக்கப்பட்டவர் சாய் சுதர்சன்.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் லைகா கோவை அணியால் 21 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

இளம் வீரர்களை அடையாளம் காட்டிய ஐபிஎல் 2023

டிஎன்பிஎல் தொடருக்காக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். டி.என்.பி.எல் தொடரைவிட ஐபிஎல் தொடரில் இவர் ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறைவுதான்.

2023 ஐபிஎல் தொடர் பல இளம் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் அவிழ்த்துவிட்ட தமது முழு திறன் மூலம் இப்போது அந்தப் பட்டியலில் தன்னையும் சாய் சுதர்சன் இணைத்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் இறுதிப்போட்டியோடு சேர்த்து 3 அரைசதங்களை விளாசினார். மூன்றுமே முக்கியமான தருணங்களில் அவரது பேட்டில் இருந்து வெளிப்பட்டவை.

இதுதவிர, ஷேன் வாட்சன், விருத்திமான் சாஹா போன்ற அனுபவசாலிகள் வரிசையில் தனக்கான இடத்தையும் பிடித்திருக்கிறார். இறுதிப்போட்டியில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் 22 வயது சாய் சுதர்சன்.

குஜராத் அணி ஒருவேளை கோப்பையை உச்சி முகர்ந்தால் நிச்சயம் அது சாய் சுதர்சனின் கைகளில் தவழ்ந்தே தீரும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: