CSK vs GT: கேப்டன்சியில் குருவை விஞ்சிய சிஷ்யன் ஆகிறாரா ஹர்திக் பாண்டியா?

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த அந்த நாளும் வந்துவிட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த ஐ.பி.எல். திருவிழாவில் லீக், பிளே ஆஃப் நிறைவடைந்து, கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. ஆமதாபாத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல், போட்டி ரிசர்வ் நாளான இன்றைய தினத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்திய குஜராத் டைட்டன்ஸ் அதனை தக்க வைக்கவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கோதாவில் மற்ற அணிகளை எல்லாம் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்துள்ள இரு அணிகளுமே மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களைக் கொண்டுள்ளன. சுப்மன் கில், முகமது ஷமி, ரஷித் கான், ருதுராஜ், கான்வே, ரஹானே, ரவீந்திர ஜடேஜா போன்ற மேட்ச் வின்னர்களைத் தாண்டி, இரு அணிகளின் வெற்றியிலும் அவற்றின் கேப்டன்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

வீரர்களை ஒருங்கிணைத்து, உற்சாகப்படுத்தி ஒரு அணியாக சிறப்பாக வழிநடத்துவதிலும், இக்கட்டான தருணங்களில் அந்த பரபரப்பை மனதிற்குள் ஏற்றிக் கொள்ளாமல் நிதானமாக முடிவுகளை எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தருவதிலும் இருவரும் வல்லவர்கள். "கேப்டன்சியில் தோனியே எனக்கு முன்னோடி, அவரைப் பார்த்தே பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்று ஹர்திக் பாண்டியா வெளிப்படையாகவே பலமுறை சொல்லியிருக்கிறார். ஆகவேதான், இன்றையப் போட்டி குருவுக்கும் சிஷ்யனுக்குமான போட்டியாக கிரிக்கெட் ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறது.

என்னதான் குரு - சிஷ்யன் என்று சொல்லிவிட்டாலும், போட்டி என்று வந்துவிட்டால் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு விடை காண வேண்டியது அவசியமாகிறது. கேப்டனாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் அணிக்கு அவர்கள் எவ்விதம் பங்களித்துள்ளனர்? பிளே ஆஃப், இறுதிப்போட்டி போன்ற மிகப்பெரிய போட்டிகளை ஒரு கேப்டனாக அவர்கள் எவ்விதம் அணுகுகின்றனர்? ஐ.பி.எல். இறுதிப்போட்டி வரலாறு என்ன சொல்கிறது? இருவருக்கும் காத்திருக்கும் சாதனைகள் என்ன? புள்ளிவிவரங்கள் வழியே விரிவாகப் பார்க்கலாம்.

மகேந்திர சிங் தோனி

தோனியின் கேப்டன்சி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் யாருக்கும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து மிகக் குறுகிய காலத்திலேயே யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் இந்திய அணியின் தலைமைப்பொறுப்பை ஏற்று, சுமார் 9 ஆண்டுகள் ஒட்டுமொத்த இந்தியர்களின் நம்பிக்கையை சுமந்து உலகக்கோப்பை உள்பட பல கோப்பைகளை வென்று கொடுத்தவர். ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே என்றால் தோனி, தோனி என்றால் சி.எஸ்.கே. என்று சொல்லும் அளவுக்கு மந்திரச் சொல்லாக நிலைத்துவிட்டவர். ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகரமான அணியாக உலா வருவதில் தோனிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐ.சி.சி. தொடர்கள், ஆசிய கோப்பை என சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக அழுத்தம் தரும் பல இக்கட்டான தருணங்களை சந்தித்துள்ள தோனி, ஐ.பி.எல்.லில் 11-ஆவது முறையாக இறுதிப்போட்டியை எதிர்கொள்கிறார். சூதாட்டத் தடை காரணமாக ஐ.பி.எல்.லில் சென்னை அணி பங்கேற்க முடியாத 2 ஆண்டுகளில் 2016-ம் ஆண்டில் மட்டும் புனே ரைசிங் சூப்பர் ஜெயென்ட்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய அவர், அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

சி.எஸ்.கே.வுடன் தோனியின் பந்தம் மிக நெருக்கமானது. ஒரு கேப்டனாக சி.எஸ்.கே. அணியை பத்தாவது முறையாக இறுதிப்போட்டிற்கு அழைத்துச் சென்றுள்ள தோனி, 4 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 2010, 2011-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2018, 2021 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியனாக ஜொலித்தது.

ஈராண்டு சூதாட்ட தடைக்குப் பின்னர் மீண்டும் ஐ.பி.எல்.லுக்கு திரும்பிய போது, மூத்தோர் அணி என்று விமர்சிக்கப்படும் அளவுக்கு 35 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் நிரம்பியதாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாம்பியனாக்கி காட்டினார் தோனி. அதன் மூலம், தோனி இனி அவ்வளவுதான் என்று கூறிய விமர்சகர்களை அவர் வாயடைக்கச் செய்தார்.

கேப்டன்சியில் தோனியைத் தாண்டி சிந்தித்திராத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த முறை, அடுத்த தலைமுறை கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை பரீட்சித்துப் பார்த்து கையை சுட்டுக் கொண்டது. கடந்த ஆண்டு கடைசி இடத்தைப் பிடித்த அதே அணியை, அதே வீரர்களைக் கொண்டே இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார் தோனி. அதுதான் தோனி ஸ்பெஷல்! தோனி கேப்டன்சியின் ஸ்பெஷல்!

பேட்டிங் வரிசையில் ஒன் டவுன் முதல் ஒன்பதாவது வீரர் வரை அணியின் தேவைக்கேற்ப எந்தவொரு இடத்திலும் களம் கண்டு சாதிக்கும் வல்லமை பெற்ற தோனி, சமீபத்திய ஆண்டுகளில் பின் வரிசையில் களம் காண்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, டெத் ஓவர்களில் களமிறங்கி முதல் பந்து முதலே அடித்தாடுவதையே அணிக்கான தன்னுடைய பங்களிப்பாக அவர் கொண்டிருக்கிறார். அந்த வகையில், நடப்புத் தொடரில் பெரும்பாலும் அவர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார்

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

நடப்புத் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி, ஒட்டுமொத்தமாக 56 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்களை எடுத்துள்ள அவரது சராசரி 34.67 ஆகும். காரணம், 8 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் கடைசி வரை அவர் களத்தில் இருந்துள்ளார். 3 பவுண்டரிகளையும், 10 சிக்ஸர்களையும் தோனி விளாசியுள்ளார். அவரது அதிகபட்ச ரன் 32, ஸ்டிரைக் ரேட் 185.71.

விக்கெட் கீப்பராக 6 கேட்சுகளை பிடித்துள்ள தோனி, 3 பேரை ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தனியொரு வீரராக தோனியின் பங்களிப்பு குறைவாக தென்பட்டாலும், ஒரு கேப்டனாக சென்னை அணியின் வெற்றியில் அவரது பங்கு மிகவும் அதிகம். களத்திலும், களத்திற்கு வெளியே வீரர்கள் ஓய்வறையிலும் தோனியின் இருப்பே மற்ற வீரர்களுக்கு உத்வேகம் தரக் கூடியது.

அணியின் வெற்றிக்கான திட்டங்களை வகுப்பதிலும், அதனை இம்மி பிசகாமல் களத்தில் செயல்படுத்துவதிலும் தோனிக்கு நிகர் தோனிதான். இக்கட்டான தருணங்களில் ஆட்டம் தரும் ஒட்டுமொத்த அழுத்தத்தையும் தானே உள்வாங்கிக் கொண்டு, எந்தவொரு உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் அணியின் மற்ற வீரர்கள் நெருக்கடிக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வதில் கைதேர்ந்தவர்.

ஒரு கேப்டனாக, அணி வீரர்களிடம் இருந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்வதில் தோனி நிபுணத்துவம் பெற்றவர். பார்மில் உள்ள வீரர்களை மற்ற அணிகள் எல்லாம் பயன்படுத்திக்கொள்ளும் போது, பார்மை இழந்து தவிக்கும் புறக்கணிக்கப்பட்ட வீரர்களையும், இளம் வீரர்களையும் மேட்ச் வின்னர்களாக்கும் வித்தை தோனிக்கே உரியது. ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்து, அதனை அணியின் வெற்றிக்கு தேவையான இடத்தில் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதே தோனி என்ற கேப்டனின் வெற்றிக்கான சூத்திரம் என்று அவருடன் விளையாடிய ஷேன் வாட்சன் போன்ற முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

அந்த வகையில், நடப்புத் தொடரில் ரஹானே நம் கண் முன் நிற்கும் உதாரணம். சி.எஸ்.கே. அணியில் தோனி தலைமையின் கீழ் விளையாடிய பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆட்டத்தரத்தை உயர்த்திக் கொள்ள முடிந்ததால் இங்கிலாந்து அணியில் தனது முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது என்பது மொயீன் அலியின் ஸ்டேட்மென்ட்.

வீரர்களை மெருகேற்றுவதுடன் மன அழுத்தம் தரும் ஐ.பி.எல். இறுதிப்போட்டிகளில் அணிக்காக தோனி மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அந்த வகையில், 8 இன்னிங்ஸ்களில் 180 ரன்கள் சேர்த்துள்ள தோனியின் அதிகபட்ச ரன் 63 ஆகும். ஐ.பி.எல். இறுதிப்போட்டிகளில் தோனியின் சராசரி 36, ஸ்டிரைக் ரேட் 135.

இன்றைய ஆட்டத்தில் தோனி 70 ரன் எடுத்தால், ஐ.பி.எல். இறுதிப்போட்டிகளில் ஒட்டுமொத்தத்தில் அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையை படைக்க முடியும். பேட்டிங்கில் பின் வரிசையில் களமாடும் தோனிக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், அதிக ரன் எடுத்தவர்கள் வரிசையில் முதல் 3 இடங்களுக்குள் அவர் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஹர்திக் பாண்டியா

தோனியைப் போன்றே, கேப்டன்சியில் அவரது சிஷ்யனாக வர்ணிக்கப்படும் ஹர்திக் பாண்டியாவும் யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டவர். எந்தவொரு அணியையும் தலைமையேற்று வழிநடத்திய அனுபவமே இருந்திராத ஹர்திக், குஜராத் அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டதுமே வழக்கமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி அறிமுக தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர் ஹர்திக் பாண்டியா.

குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த அவர், இன்று இந்திய அணியின் டி20 போட்டிக்கான கேப்டனாக வலம் வருகிறார். எதிர்காலத்தில் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி கேப்டனாக ஹர்திக் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம், BCCI/IPL

ஐ.பி.எல். களத்தில் ஜாம்பவான்களாக வலம் வந்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை பின்னுக்குத் தள்ளி, அறிமுக தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதிலும், தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்திருப்பதிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. கேப்டனாக மட்டுமின்றி, ஒரு வீரராகவும் ஆல் ரவுண்டராக தனிப்பட்ட வகையில் அவர் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

கடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிக ரன்களைக் குவித்தது ஹர்திக் பாண்டியாதான். பேட்ஸ்மேனாக 487 ரன்கள் சேர்த்த அவர், 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல் ரவுண்டராக ஜொலித்திருந்தார். நடப்புத் தொடரைப் பொருத்தவரை, பேட்டிங்கில் தொடக்க வீரர் சுப்மன் கில் நிலையாக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நான்காவது அல்லது பின்வரிசையில் வரும் ஹர்திக்கிற்கு ஒப்பீட்டளவில் சாதிக்க கிடைத்த வாய்ப்பு குறைவு. ஆனால், கிடைத்த வாய்ப்புகளில் நிறைவாகவே அவர் செயல்பட்டிருக்கிறார்.

நடப்புத் தொடரில் இதுவரை 15 ஆட்டங்களில் 325 ரன்களை சேர்த்துள்ள ஹர்திக், லீக் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயென்ட்ஸ் அணிக்கு எதிராக அடித்த 66 ரன்களே அதிகபட்சமாகும். முகமது ஷமி, ரஷித் கான், நூர் முகமது ஆகியோருடன் ஒரு வேகப்பந்துவீச்சாளராக பவுலிங்கிலும் அணிக்கு அவர் கைகொடுத்துள்ளார். இதுவரை 26 ஓவர்களை வீசியுள்ள அவர், 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப முகமது ஷமியுடன் இணைந்து பவர் பிளே ஓவர்களை அவர் வீசி வருகிறார்.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம், BCCI/IPL

கேப்டன்சி அணுகுமுறையில் தோனியிடம் இருந்து பல விஷயங்களை எடுத்துக் கொண்டுள்ள ஹர்திக் பாண்டியா, அவரைப் போன்றே வெற்றி, தோல்விகளைப் பொருட்படுத்தாமல் அணியின் செயல்பாட்டை தொடர்ச்சியாக மேம்படுத்துவதில் கவனம் செலுத்தக் கூடியவர். லீக் சுற்றில் முதலிடம் பிடித்து பிளேஆஃபில் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியுற்ற போது கூட, பெரிதாக சலனப்படாமல், "அடிப்படையில் சில தவறுகளைச் செய்துவிட்டோம். ஆனால், எங்களுக்கு பல விஷயங்கள் சரியாக அமைந்தன. அதைப்பற்றி அதிகம் சிந்திக்க விரும்பவில்லை. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. இரண்டே நாட்களில் வலுவுடன் மீண்டு வருவோம்" என்று ஹர்திக் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். அதனை செயலில் காட்டி, தற்போது இறுதிப்போட்டிக்கும் குஜராத் டைட்டன்சை தகுதிபெறச் செய்துவிட்டார்.

காத்திருக்கும் சாதனைகள்

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு கேப்டனாக 11-வது முறையாக இறுதிப்போட்டியில் அடியெடுத்து வைக்கும் தோனி 4 முறை தனது அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதுவே, ஹர்திக்கை எடுத்துக் கொண்டால் ஆறாவது முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விளையாடப் போகிறார். இதுவரை அவர் விளையாடிய 5 இறுதிப்போட்டிகளிலுமே வாகை சூடியுள்ளார். 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் வீரராகவும், ஒரு முறை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் ஐ.பி.எல். கோப்பையை உச்சி முகர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று வென்றால் தோனியின் கைகளில் ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கோப்பை தவழும். இதன் மூலம் அதிக முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற கேப்டன் என்ற வகையில், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவை தோனி சமன் செய்வார்.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

இதேபோல், மற்றொரு வகையில் ரோகித் சர்மா சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு உள்ளது. அது என்னவென்றால், அதிக முறை ஐ.பி.எல். கோப்பையை கையில் ஏந்தியவர் என்ற வகையில் ரோகித் சர்மா படைத்துள்ள சாதனையாகும். மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக 5 முறையும், 2009-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி வீரராக ஒரு முறையும் ஐ.பி.எல். கோப்பையை ரோகித் சர்மா கையில் ஏந்தியுள்ளார். இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றால் அது ஹர்திக் பாண்டியாவுக்கு ஆறாவது முறையாக அமையும் என்பதால் ரோகித் சாதனையை அவர் சமன் செய்துவிடுவார். மும்பை இந்தியன்ஸ் வீரராக 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக ஒரு முறையும் ஐ.பி.எல். கோப்பையை அவர் வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் வீரராகவும், கேப்டனாகவும் களம் கண்ட ஒவ்வொரு போட்டியிலுமே ஹர்திக் பாண்டியா வாகை சூடியுள்ளார். அந்த சிறப்பைத் தொடர ஹர்திக்கும், தனது பெருமைமிகு கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றிகரமாக தொடர தோனியும் முனைப்பு காட்டுவார்கள் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

தோனி vs ஹர்திக்

பட மூலாதாரம், BCCI/IPL

சர்வதேச கிரிக்கெட்லும், ஐ.பி.எல். வரலாற்றிலும் வெற்றிகரமான கேப்டன் என்று பெயரெடுத்துள்ள தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் இருக்கிறார். கேப்டன்சியில் அவரது அடியொற்றி வந்துள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு ஐ.பி.எல். இறுதிப்போட்டி புள்ளிவிவரங்கள் சாதகமாக இருந்தாலும், கேப்டன்சியைப் பொருத்தவரை இன்னும் தொடக்க காலத்திலேயே இருக்கிறார்.

ஐ.பி.எல்.லிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் சாதிக்க இன்னும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. கேப்டன்சியில் இப்போதே தோனியுடன் ஹர்திக்கை ஒப்பிடுவது சிறந்ததாக இருக்காது. ஹர்திக் மட்டுமல்ல இனி வரும் கேப்டன்கள் பலரிடமும் தோனியின் தாக்கம் இருக்கும் என்னும் வகையில் கேப்டன்சி அணுகுமுறைக்கு ஒரு தனி இலக்கணத்தையே அவர் படைத்துள்ளார். ஆகவே, கேப்டன்சியில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை என்பதே நிதர்சனம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: