சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வெல்லுமா? சுப்மன் கில்லை எப்படி சமாளிக்கப் போகிறது?

GT vs CSK

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

50 நாட்களுக்கும் மேலாக நடந்த ஐபிஎல் டி20 திருவிழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சாம்பியன் யார் என்பதை உறுதி செய்ய ஆமதாபாத்தில் உள்ள மொடீரா மைதானத்தில் இன்று இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் தொடர் தொடங்கும்போது முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே அணிகள் மோதின, இன்று நடக்கும் இறுதி ஆட்டத்திலும் இரு அணிகளுமே களம் காண்கின்றன.

பைனலில் சிஎஸ்கே

குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றாலும், சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில், சிஎஸ்கேவிடம் தோற்றது குஜராத். முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது சிஎஸ்கே அணி.

முதல் தகுதிச்சுற்று நடந்த சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் இருந்தது. ஆனால் இன்று நடக்கும் ஆமதாபாத் ஆடுகளம், பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி. இங்கு முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 193 ரன்களை தாராளமாக சேர்க்க முடியும். இதனால், இரு அணிகளும் பேட்ஸ்மேன்களை கூர்தீட்டி வருகின்றன

மைதானம் யாருக்கு சாதகம்?

ஆமதாபாத்தில் இதுவரை 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி குஜராத்துடன் மோதி, அனைத்திலும் சிஎஸ்கே அணி தோற்றுள்ளது, ஒரு ஆட்டத்தில்கூட இங்கு சிஎஸ்கே வென்றது இல்லை. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஆடுகளத்தில் 9 ஆட்டங்களில் விளையாடி 6 போட்டிகளில் வாகை சூடியுள்ளது.

சிஎஸ்கே அணி இந்த முறை கோப்பையை வென்றால், 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிஎஸ்கேயும் சேர்ந்துவிடும். அதேசமயம், அறிமுக சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, 2 வது முறையாக கோப்பையைத் தக்கவைக்கவும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியும் கடுமையாகப் போராடும்,

இரு அணிகளின் போராட்ட உத்தியைத் தவிர்த்து சில விஷயங்களை பொதுவாகச் செய்து வருகின்றன. அணியில் உள்ள வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது, பதற்றத்தைப் போக்கும் விதத்தில் பயிறச்சிகள், சூழலை உருவாக்குதல், இனிமையான சூழலில் வீரர்கள் ஓய்வெடுத்தலை இரு அணியினரும் செய்தனர்.

GT vs CSK

பட மூலாதாரம், BCCI/IPL

தோனிக்கு 11வது பைனல்

இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி ஆட்டம் என்பது தோனிக்கு சிஎஸ்கே கேப்டனாக 10-வது ஐபிஎல் பைனலாகும், ஒட்டுமொத்தத்தில் 11வது பைனல். ஹர்திக் பாண்டியாவுக்கு 5வது பைனலாகும்,

ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ நான் அதிகமாகக் கற்றுக்கொள்வேன். கிரிக்கெட்டை மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கைக்கு தேவையானதையும் தோனியிடம் இருந்து அதிகமாகக் கற்றுக்கொள்வேன்” எனத் தெரிவித்திருந்தார். ஆதலால், இன்று நடக்கும் ஆட்டம், ஹர்திக் பாண்டியா இதுவரை கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு ஒரு சவாலாக அமையும்.

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுமே பெரும்பாலும் ப்ளேயிங் லெவனில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய மாட்டார்கள் எனத் தெரிகிறது. இம்பாக்ட் ப்ளேயர் விதியில் சுப்மான் கில், ஜோஷ் லிட்டல் ஆகியோரும், சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே, மதீஷா பத்திரணாவும் இம்பாக்ட் ப்ளேயராக வரக்கூடும்.

GT vs CSK

பட மூலாதாரம், BCCI/IPL

ஷமி, ரஷித்கான் துருப்புச்சீட்டு

பேட்ஸ்மேன்கள் சிறப்பாகச் செயல்பட்டால் போட்டியை வெல்லலாம், பந்துவீச்சாளர்கள் செயல்பட்டால் தொடரையே வெல்லலாம் என்பார்கள். அதுபோல குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் முக்கியத் துருப்புச் சீட்டாக இருப்பார்கள்.

அதிலும் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஊதா தொப்பியுடன் இருக்கும் ஷமி, சிஎஸ்கே தொடக்க வீரர்கள் டேவோன் கான்வே, கெய்க்வாட்டுக்கு சிம்மசொப்னாக இருப்பார். கடந்த 3 இன்னிங்ஸில் கான்வே 3 முறை ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், ஷமி பந்துவீச்சில் இதுவரை கெய்க்வாட் ஆட்டமிழந்தது இல்லை. ஆமதாபாத்தில் இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் ஆடிய ஷமி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

GT vs CSK

பட மூலாதாரம், BCCI/IPL

ரஷித் கானைப் பொறுத்தவரை கெய்க்வாட், அம்பதி ராயுடுவுக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் ரஷித் கான் பந்துவீச்சில் கெய்க்வாட், ராயுடு திணறித்தான் செய்துள்ளார்கள், ஸ்ட்ரைக் ரேட்டும் குறைவாகவே வைத்துள்ளனர்.

அதேநேரம், ராயுடுவுக்கு எதிராக மோகித் சர்மாவின் பந்துவீச்சு சவாலாக இருக்கும். இதுவரை 6 முறை ராயுடுவை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் மோகித் சர்மா. 44 பந்துகளைச் சந்தித்த ராயுடு 54 ரன்களையே சேர்த்துள்ளார்.

அதேபோல சிஎஸ்கே அணியில் ஜடேஜாவுக்கு எதிராக டேவிட் மில்லர் 168 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். கில் ஒருவேளை களத்தில் நின்றாலும் அது ஜடேஜாவுக்கு சவாலாக இருக்கும். இதுவரை கில்லை ஒருமுறைகூட ஜடேஜா ஆட்டமிழக்கச் செய்தது இல்லை.

சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர் தீக்சனா சென்னையில் இல்லாமல் பல்வேறு மைதானங்களில் நடந்த ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை தீக்சனா கைப்பற்றியுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் அவரின் பந்துவீச்சும் குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கும்.

GT vs CSK

பட மூலாதாரம், BCCI/IPL

ஆடுகளம் எப்படி?

ஆமதாபாத் மொட்டீரா மைதானத்தின் ஆடுகளம் இந்த சீசனில் ஹை-ஸ்கோரின் பிட்சாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆடுகளத்தில் நடந்த 8ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணியின் சராசரி ஸ்கோர் 193 ரன்களாக இருக்கிறது. இங்கு நடந்த 8 ஆட்டங்களில் 5 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளனர்.

இந்த ஐபிஎல் சீசனில் கூட முதலில் பேட் செய்த அணிகளே 40 வெற்றிகளையும், 32 தோல்விகளையும் சந்தித்துள்ளன. ஆதலால், முதலில் பேட் செய்யும் அணிக்கே புள்ளிவிவரங்கள் சாதகமாக உள்ளன. இன்றைய ஆட்டத்தில் பனிப்பொழிவு பெரிதாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மழைக்கு வாய்ப்பு இருந்தாலும் அச்சுறுத்தும் அளவுக்கு இருக்காது மேகமூட்டத்துடனே பெரும்பாலும் இருக்க வாய்ப்புள்ளது.

இதுவரை இந்த ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் இருமுறை மோதியுள்ளன. இதில் இரு போட்டிகளிலும் டைட்டன்ஸ் டாஸ் வென்றுள்ளது. முதல் ஆட்டத்தில் குஜராத் அணியும், 2வது ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் வென்றன. இதுவரை 4 ஆட்டங்களில் குஜராத்துடன் மோதியுள்ள சிஎஸ்கே ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2வது தகுதிச்சுற்றில் ஹர்திக் பாண்டியா பந்துவீசியதால், இன்றைய ஆட்டத்திலும் அவரின் பந்துவீச்சு நடுப்பகுதி ஓவர்களில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

GT vs CSK

பட மூலாதாரம், BCCI/IPL

சுப்மன் கில்லை எப்படி சமாளிக்கப் போகிறது சிஎஸ்கே?

சிஎஸ்கே கேப்டன் தோனி, ஒவ்வொரு அணிக்கும், ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கும் தனித்தனியாக யுத்திகளை வகுத்து செயல்படக்கூடியவர். முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஒவ்வொரு வீரரையும் கட்டம் கட்டி தூக்கினார். அந்த ஆட்டத்தில்கூட கில்லை ஆட்டமிழக்கச் செய்வது கடினமாக இருந்தது. அதன்பின் நடந்த 2வது தகுதிச்சுற்றில் கில் அற்புதமான சதம் அடித்து மிரட்டலான ஃபார்மில் இருப்பதால், கில்லைச் சமாளிக்க தனியாகத் திட்டம் சிஎஸ்கேவிடம் இருக்கும்.

சுப்மன் கில் கடந்த போட்டிகளிலும் சிஎஸ்கேயின் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், தனக்கிருக்கும் ஷார்ட் பால் சிக்கலை சரி செய்த கில், மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் வீசிய ஷார்ட் பந்தை வெளுத்து வாங்கினார். ஆதலால், கில்லுக்கு ஷார்ட் பந்துவீசும் சிஎஸ்கேவின் யுத்தி எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பது தெரியாது. கில்லுக்கு வீசப்படும் ஷார்ட் பந்து, ஸ்லோவர் பாலாகவோ அல்லது, ஸ்டெம்பை நோக்கியோ, லென்த்தில் வீசப்படுகிறதா என்பதைப் பொருத்து கில்லுக்கு கடிவாளம் போடும். இல்லாவிட்டால் கில் பேட்டிங் சிஎஸ்கேவுக்கு தில்லாக இருக்கும்.

தீபக் சாஹர் புதிய பந்தில், அதிலும் பவர்ப்ளேயில் விக்கெட் வீ்ழ்த்தக்கூடியவர். அதிலும் 2021ல் கில்லுக்கு 18 பந்துகளை வீசி 21 ரன்கள் கொடுத்து 2 முறை சாஹர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆனால், நிலைமை இப்போது மாறிவிட்டது. இந்த சீசனில் 14 பந்துகளை கில்லுக்கு வீசிய தீபக் சாஹர் 17 ரன்கள் கொடுத்து ஒருமுறை மட்டுமே விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஆதலால், தீபக் சாஹரை கில்லுக்கு எதிராக எவ்வாறு தோனி பயன்படுத்தப்போகிறார் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

GT vs CSK

பட மூலாதாரம், BCCI/IPL

டாஸ் வென்றால் என்ன செய்வது?

டாஸ் வெல்லும் அணி அடுத்து என்ன செய்யும், பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்குமா அல்லது பீல்டிங்கைத் தேர்வு செய்யுமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் முதலில் பேட் செய்த அணிகளே அதிகம் வென்றுள்ளன, அதாவது 40 போட்டிகளில் 54.8% வெற்றியை பெற்றுள்ளன. இதில் விதிவிலக்காக இம்பாக்ட் ப்ளேயரை சரியாகப் பயன்படுத்தும் அணி, சேஸிங்கில் வென்றுள்ளது.

கடந்த 2வது தகுதிச்சுற்றில் மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு பெரிய தவறு செய்தது. கில்லின் அதிரடி ஆட்டம் மும்பைக்குத் தலைவலியாக மாறியது, பனிப்பொழிவும் இல்லாதது மும்பைக்கு பாதகமாக அமைந்தது. இன்றைய ஆட்டத்தில் ஆமதாபாத்தில் மழைக்கு சிறிய வாய்ப்புள்ளது, ஆனால், பனிப்பொழிவுக்கும் வாய்ப்பு இருக்கிறது, இந்த கணிப்புகள் மாற்றத்துக்கு உட்பட்டவைதான். ஆதலால், டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வதா, அல்லது பந்துவீசுவதா என்பது சூழல் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பொறுத்து தேர்ந்தெடுக்கும்.

GT vs CSK

பட மூலாதாரம், BCCI/IPL

குஜராத் டைட்டன்ஸ்(உத்தேச அணி)

சுப்மான் கில், விருதிமான் சாஹா, சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ரஷித் கான், ராகுல் திவேட்டியா, நூர் அகமது, மோகித் சர்மா, முகமது ஷமி, ஜோஷ் லிட்டில்

சென்னை சூப்பர் கிங்ஸ்(உத்தேச அணி)

ருதுராஜ் கெய்க்வாட், டேவான் கான்வே, ஷிவம் துபே, அஜிங்கியே ரஹானே, மொயின்அலி, அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்சனா, மகேஷ் பத்திரணா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: