ரஷித் கான்: இவரது சுழல் பந்துவீச்சில் என்ன சிறப்பு?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
உலக கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே, ஷேன் வார்னேவுக்கு அடுத்தாற்போல் சிறந்த ‘லெக் ஸ்பின்னர்’ உருவாகியிருக்கிறார்களா என்று கிரிக்கெட் தெரிந்தவர்களிடம் கேட்டால் முதலில் உச்சரிப்பது இவரது பெயரைத்தான்…
17 வயதில் சர்வதேச கிரிக்கெட் அறிமுகம், 19 வயதில் தேசிய அணிக்கு கேப்டன், உலகில் நடக்கும் பெரும்பாலான லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் ஸ்டார் ப்ளேயர், பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும் பந்துவீச்சாளர் ரஷித் கான் பற்றித்தான் குறிப்பிடுகிறோம்.
அடையாளத்தை மாற்றுபவர்
ஆப்கானிஸ்தானில் இளைஞர்கள் அதிக அளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு வருவதற்கும், அவர்கள் நேர்வழிக்கு வருவதற்கும் ஏராளமான உதவிகளை ரஷித் கான் செய்து வருகிறார்.
போர்மேகம் சூழ்ந்த தேசம், எந்த நேரத்தில் எங்கு மரணம் நேரும் என்பது தெரியாத சூழல், இளைஞர்கள் எளிதாக பாதை மாறிச் செல்ல அதிகமான வாய்ப்புகள் இருக்கும் அந்நாட்டில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு வருவதற்குத் தூண்டுகோலாக, உத்வேகமாக, மிகப் பெரிய உந்துசக்தியாக மாறியுள்ளார் ரஷித் கான்.
ஐபிஎல் தொடரில் இன்று விளையாடும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் அகமது, ஃபரூக்கி, நவீன் உல் ஹக் போன்ற ஏராளமான வீரர்கள் கிரிக்கெட்டுக்கு வருவதற்கு மாடலாக, காரணகர்த்தாவாக இருந்தவர் ரஷித் கான். இதை அந்தந்த வீரர்களே தங்களின் பல்வேறு பேட்டிகளில் ரஷித் கான் குறித்துப் பெருமிதமாகத் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் ஆப்கன் இளைஞர்களுக்குத் தேவையான கிரிக்கெட் பயிற்சிகள், ஆலோசனைகள், அறிவுரைகள், உதவிகளையும் ரஷித் கான் செய்து வருகிறார்.
இதற்காக 'ரஷித் கான் ஃபவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் உடல்நலன், கல்வி, சுத்தமான குடிநீர் வழங்குவது மட்டுமின்றி, திறமையானவர்களை ஊக்கப்படுத்துவதுமாகும்.
2019ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளையைத் தொடங்கி ரஷித் கான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “என்னால் மிகப் பெரிய அற்புதங்களைச் செய்ய முடியாது, ஆனால், சிறிய விஷயங்களை உயர்ந்த அன்புடனும், ஊக்கத்துடனும் செய்ய முடியும்,” எனத் தெரிவித்தார்.
லெக் ஸ்பின் முடிசூடா மன்னர்
2015ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமாகிய ரஷித் கான், கடந்த 8 ஆண்டுகளாக லெக் ஸ்பின்னில் முடிசூடா மன்னராக இருந்து வருகிறார். ரஷித் கான் உண்மையில் சுழற்பந்து ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை.
உலகில் நடக்கும் பல்வேறு லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி, அனைத்து அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கும் தனது துல்லியமான லெக் ஸ்பின்னால் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் தொடங்கி, குஜராத் டைட்டன்ஸ், கரீபியன் லீக்கில் பர்படாஸ் ட்ரீடன்ட்ஸ், கயனா அமேசான் வாரியர்ஸ், பிக் பாஸ் லீக்கில், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், தென்னாப்பிரிக்காவில் டர்பன் ஹீட், பாகிஸ்தானில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ், காபூல் ஈகிள்ஸ், லாகூர் குலாலன்டர்ஸ் எனப் பல்வேறு லீக் போட்டிகளில் ரஷித் கான் விளையாடியுள்ளார்.
உலகளவில் இத்தனை லீக் தொடர்களில் விளையாடி பல பேட்ஸ்மேன்கள் மீது ஆதிக்கம் செய்து வருகிறார் ரஷித் கான்.

பட மூலாதாரம், BCCI/IPL
உலகளவில் 406 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் இதுவரை 553 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகளவில் பல்வேறு நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் ஆடும் ரஷித் கான், ஆப்கானிஸ்தான் அணிக்காக, 86 ஒருநாள் போட்டிகள் விளையாடி 164 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் 129 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
குறைந்த போட்டிகளில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டி சாதனை, டி20 போட்டி, ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடம், ஆல்ரவுண்டர் வரிசையில் முதலிடம் என சிறு வயதிலேயே ரஷித் கான் சாதித்து தன்னை ஜாம்பவான்கள் வரிசையில் சேர்த்துக்கொண்டார்.
இன்றைய சூழலில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக டி20 போட்டிகளில் உலகளவில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் எடுத்தால் அதில் ரஷித் கான் முதல் 3 இடங்களில் வரக்கூடியவர்.
ஒரு நாள் போட்டிகளில் ரஷித் கான் பிரகாசிக்க அவரின் தேசிய அணியில் வாய்ப்புகள் குறைவு என்றாலும் டி20 போட்டிகளில் அவரது ராஜ்ஜியம் தொடர்ந்து வருகிறது.

பட மூலாதாரம், BCCI/IPL
ரஷித் கான் பந்துவீச்சில் என்ன சிறப்பு?
ரஷித் கானின் பந்துவீச்சில் இருக்கும் துல்லியம், கூக்ளி வீச்சு, பேட்ஸ்மேன்களால் கண்டுபிடிக்க முடியாத பந்துவீச்சு ஸ்டைல் போன்றவைதான் அவரின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
ரஷித் கான் பந்துவீச களத்துக்குள் வந்துவிட்டாலே பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் விதத்தில் பந்துவீசக்கூடியவர். பந்துவீச்சில் மிகப்பெரிய ஆயுதமே துல்லியமான கூக்ளி பந்துவீச்சுதான். கூக்ளியில் இவர் காட்டும் பல்வேறு விதங்களும் அற்புதம்.
ரஷித் கான் பந்துவீச்சில் வெற்றிக்குக் காரணம் குறித்து முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் ஒரு பேட்டியில் கூறுகையில், “ரஷித் கான் வீசும் கூக்ளி பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் கணித்து ஆடுவது மிகக் கடினமாக இருக்கிறது. இதுதான் இவரை ஸ்பெஷல் கிரிக்கெட் வீரராக மாற்றியுள்ளது.
ரஷித் கான் சாதாரண மரபுவழி லெக் ஸ்பின்னர் அல்ல. மரபுவழிகளை உடைத்து வீசும் லெக் ஸ்பின்னர். பந்துவீசும்போது அவரின் கை மணிக்கட்டிலிருந்து பந்து பேட்ஸ்மேனை நோக்கி வெளியேறுவது வேகமாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
பேட்ஸ்மேன்கள் ஆடுவது கடினம்
பந்தை அவர் பிடித்திருக்கும் முறை என்பது லெக் ஸ்பின்னுக்கும், கூக்ளிக்கும் இடைப்பட்ட ஸ்டைலில் இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் ரஷித் கான் பந்துவீச்சைக் கணித்து ஆடுவது மிகக்கடினமாக இருக்கும்.
அவர் வீசும் பந்து பிட்ச் ஆன பிறகுதான் அது எந்த திசையில் டர்ன் ஆகிறது என்பதை அறிய முடியும். இதனால் பேட்ஸ்மேன்கள் பிரண்ட் ஃபுட் எடுத்து வைத்து ரஷித் கான் பந்துவீச்சை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும்.
ஏனென்றால், ஒரு ஆஃப் ஸ்பின்னர் பந்தை பிடித்திருக்கும் முறையில் பிடித்து வீசும் ரஷித் கான், நடுவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு இடையே பெரிய இடைவெளி வைத்து வீசுவார். இதனால்தான் அவரால் துல்லியமான கூக்ளியை வீசி பேட்ஸ்மேன்களை கதற வைக்க முடிகிறது.
ஒரு பேட்ஸ்மேன் ரஷித் கானின் கூக்ளி பந்துவீச்சை சரியாகக் கணித்து ஆடத் தவறினால் விக்கெட்டை இழப்பார் அல்லது அது டாட் பாலாக மாறும். ரன் சேர்ப்பதும் கடினமாக இருக்கும். இந்த மாயாஜால பந்துவீச்சால்தான் ரஷித் கான் உலக பேட்ஸ்மேன்களை ஆட்டிப் படைத்து வருகிறார்.
ரஷித் கான் பந்தைப் பிடித்திருக்கும் முறை எளிதாக கூக்ளியை சரியான லைன் லென்த்தில் வீச உதவுகிறது. மற்ற சுழற்பந்துவீச்சாளர்களிடம் இருந்து இதுதான் அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
மிரள வைக்கும் ‘எக்னாமி ரேட்’
உலகளவில் இதற்கு முன் வந்த சுழற்பந்துவீச்சாளர்களின் எக்னாமி ரேட் என்பது சற்று உயர்வாகவே இருக்கும். ஆனால், ரஷித் கான் தனது பந்துவீச்சில் டி20 போட்டிகளில் எக்னாமி ரேட்டை 6.18 ஆகவும், ஒருநாள் போட்டிகளில் 4.17 ஆகவும், டெஸ்ட் போட்டிகளில் 2.97 ஆகவும் வைத்துள்ளது வியப்புக்குரியதாகும்.
ரஷித் கானுக்கு அடுத்தாற்போல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், இலங்கையின் ஹசரங்கா ஆகியோர் 7 எக்கானமி ரேட் வைத்துள்ளனர்.
டி20 போட்டிகளில் உலகக் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, பிரவின் டாம்பேவுக்கு அடுத்தாற்போல் குறைவான எக்கானமி ரேட் வைத்திருப்பதும் ரஷித் கான் மட்டும்தான்.
கட்டுக்கோப்பான வேகம்
ரஷித் கான் பந்துவீச்சு டி20 போட்டிகளில் வெற்றிகரமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் அவரின் பந்துவீச்சு வேகம்தான்.
மற்ற லெக் ஸ்பின்னர்கள் மணிக்கு 95 கி.மீ வேகத்துக்குள் வீசுவார்கள். ஆனால், ரஷித் கான் பந்துவீச்சு பெரும்பாலும் 95 கி.மீ வேகத்துக்கு மேல் இருக்கும், தனது பந்துவீச்சில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் திறன் அதிகமாக இருக்கும்.
இதனால்தான் ரஷித் கான் வீசும் ஒவ்வொரு பந்தும் ஒரே மாதிரியான வேகத்தில் பேட்ஸ்மேனை நோக்கிச் செல்லாது. ஒவ்வொரு பந்தை வீசும்போதும், வேகத்தை மாற்றி, சரியான லைன் லென்த்தில் வீசுவதால் இவரது பந்தில் பேட்ஸ்மேன்கள் ஷாட்கள் ஆடக் கடினமாக இருக்கும்.
அலைகழிக்கப்பட்ட இளமை வாழ்க்கை
தன்னுடைய தாய் நாட்டின் முகத்தை மாற்றவும், புதிய அடையாளத்தை வழங்கவும் முயற்சிகள் செய்துவரும் ரஷித் கானின் இளமை வாழ்க்கை வசந்தத்தோடு இருந்தது இல்லை.
1998இல் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கார்ஹாரில் உள்ள ஜலாலாபாத்தில் பிறந்தவர் ரஷித் கான். இவரோடு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர்.
தன்னுடைய இளமைக் காலத்தைப் பற்றி ரஷித் கான் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், “நான் சிறுவயதாக இருந்தபோதே, ஆப்கானிஸ்தானில் இருந்த மோசமான சூழலால், அங்கிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தோம். அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தான் வந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினோம்.
நான் பள்ளிப்பருவத்தில் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர். என் குடும்பத்தில் மருத்துவப் படிப்பு யாரும் படிக்கவில்லை என்பதால், நான் மருத்துவம் படிக்க வேண்டுமென என் பெற்றோர் விரும்பினர். கிரிக்கெட் வீரராக என் வீட்டில் அனுமதிக்கவில்லை.
என் பெற்றோர் அடிக்கடி கூறுவது வெளியுலகில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதைப் பற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனமாக இரு, கிரிக்கெட் விளையாடுவது சகோதரர்கள் வீட்டோடு இருக்க வேண்டும், நண்பர்களுடன் சென்று விளையாட அனுமதியில்லை என்றனர்.
ஷாகித் அப்ரிடி உந்துசக்தி
என் சகோதரர்களுடன்தான் கிரிக்கெட் விளையாடி பயிற்சி எடுத்தேன். வெளியே நிலவும் உறுதியற்ற சூழலால் என்னை வெளியே சென்று கிரிக்கெட் விளையாட பெற்றோர் அனுமதிக்கவில்லை.
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கும், பந்துவீச்சுக்கும் உத்வேகமாகத் திகழ்ந்தவர், பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடிதான்.
டாக்டர்தான் என் கனவு
நான் ஒரு கிரிக்கெட் வீரராக உருவாகுவேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. கிரிக்கெட் விளையாடுவேன் என்றாலும் என் தேசத்தின் சார்பாகவும், இதுபோல் உலகளவில் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் நினைக்கவில்லை.
நான் ஒரு மருத்துவராகத்தான் விரும்பினேன், என் பெற்றோர்களும் அதைத்தான் விரும்பினர். குறிப்பாக என் தாய் என்னை மருத்துவராக்க விரும்பினார், என்னை மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி கூறினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
திருப்புமுனை தருணம்
கிரிக்கெட் ஆரம்ப காலத்தில் டென்னிஸ் பந்தில் விளையாடிய நிலையில், முதல்முறையாக பெற்றோருக்குத் தெரியாமல் நண்பர்களுடன் லெதர் பந்தில் கிரிக்கெட் விளையாடினேன்.
அப்போது 65 ரன்கள் சேர்த்தபோதுதான் எனக்குள் நம்பிக்கை வந்தது, கிரிக்கெட்டை நேசிக்கத் தொடங்கினேன்.
அங்கிருந்து கிரிக்கெட் கனவு எனக்குள் உருவானது. அதன்பின் ஆப்கனில் கிளப் போட்டிகளில் விளையாடினேன், என் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் ஏன் தேசிய அணியில் சேர்ந்து உள்நாட்டுப் போட்டியில் விளையாடக் கூடாது என்றனர்.
அதன்பின் பெற்றோரிடம் அனுமதி பெற்று, கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன், எனக்குத் தேவையான சுதந்திரத்தையும் அவர்கள் அளித்தனர்,” எனத் தெரிவித்தார்.
டி20 போட்டிகளில் உலகளவில் சிறந்த வீரர்களைக் கொண்டு ஓர் அணியை உருவாக்கினால், அதில் ரஷித் கான் இல்லாமல் அந்த அணியில் ப்ளேயிங் லெவன் நிரம்பாது எனலாம். டி20 போட்டிகளில் டெத் ஓவர்கள், நடுப்பகுதி ஓவர்களை வீசுவதில் ரஷித் கான் பந்துவீச்சு உலகத் தரமாக இருக்கும்.
பேட்டிங்கில் கண்டுகொள்ளப்படாத ரஷித் கான்
ரஷித் கான் இன்று உலகளவில் சிறந்த லெக் ஸ்பின்னராக மட்டுமே அடையாளம் காணப்பட்டு வருகிறார் என்றாலும், அவருக்குள் இருக்கும் பேட்டிங் திறமையை அணிகள் பெரிதும் பயன்படுத்தியதில்லை.
சமீபத்திய எடுத்துக்காட்டு, ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரஷித் கானின் மின்னல் வேக அரைசதம், 10 சிக்ஸர்கள் விளாசியதும் அவரின் பேட்டிங் திறமைக்குச் சான்று.
சர்வதேச அரங்கில் லெக் ஸ்பின்னராக அறிமுகமாகி இன்று ஆல்ரவுண்டராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் ரஷித் கான்.

பட மூலாதாரம், BCCI/IPL
ரஷித் கான் பேட்டிங் திறமையை அணிகள் சரியாகப் பயன்படுத்தாதது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் “டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் பேட்டிங்கை இன்னும் அணிகள் சரியாகப் பயன்படுத்தவில்லை.
ரஷித் கான் களமிறங்கும்போதெல்லாம் அருமையான கேமியோ ஆடுகிறார். சுழற்பந்து, வேகப்பந்துகளை அடித்து ஆடக்கூடிய பேட்டிங் திறமை அவரிடம் இருக்கிறது. யாரும் அடிக்காத பகுதிகளில் ஷாட்களை அடிக்கும் வல்லமை, இயற்கையின் பரிசு ரஷித் கானிடம் இருக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
ரஷித் கான் ஒரு பேட் பிரியர். எப்போதும் அவரிடம் குறைந்தபட்சம் 10 பேட்களை வைத்திருப்பார். இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் எப்போதும் குறைந்தபட்சம் 10 பேட்களையாவது வைத்திருப்பேன். 10 பேட்களுக்கு மேல் இல்லாமல் இருந்தால் நான் எதையாவது இழந்ததுபோன்று நினைக்கத் தோன்றும். நான் வைத்திருக்கும் அனைத்து பேட்களுமே எனக்குப் பிடித்தமானவே. நான் ஒரு பேட் பிரியன்,” எனத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












