ராஜஸ்தானை வீழ்த்திய ரஷித் கானின் பந்துவீச்சு - குஜராத் டைட்டன்ஸ் ‘டேபிள் டாப்பர்’

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ரஷித் கான் ஃபார்மில்லாமல் தவிக்கிறார் என்று யாரேனும் கூறியிருந்தால் நேற்றைய ஆட்டத்தைப் பார்த்தபின் அதை மாற்றியிருப்பார்க்ள், அனைவரின் விமர்சனங்களையும் ரஷித் கான் தனது பந்துவீச்சால் சிதைத்து, பொய்யாக்கியுள்ளார்.
ஜெய்பூரில் நேற்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 48-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய சூத்திரதாரியாக இருந்தவர் ரஷித் கான், நூர் அகமது ஆகிய இருவர்தான்.
ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர் ரஷித் கான் நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நூர் அகமது 3 ஓவர்கள் வீசி 25 ரன்கள் வழங்கி 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
அஸ்வினுக்கே படமா!
அதிலும் அஸ்வின் விக்கெட்டை ரஷித் கான் வீழ்த்தியவிதம் அற்புதமான பந்துவீச்சாகும், அஸ்வின் கண்ணில் மண்ணைத் தூவி, படம்காட்டி விக்கெட்டை வீழ்த்தினார் ரஷித் கான்.
7-வது ஓவரை வீசிய ரஷித் கான், முதல் சில பந்துகள் ஆப்-சைடில் சற்று விலக்கி லெக்-ஸ்பின் வீசினார், அதற்கு ஏற்றார்போல் ஸ்லிப்பையும் வைத்திருந்தார். இதை நம்பி அஸ்வினும் லெக் ஸ்பின்னை கவனமாக ஆடினார்.
ஆனால், கடைசிப் பந்தை 4வது ஸ்டெம்பிலிருந்து பிட்ச் செய்து ரஷித் கான் வீச, இதை அஸ்வின் சற்றும் எதிர்பார்க்காமல் பந்தை தவறவிட்டார். ஆனால், பந்து அருமையாக திரும்பி, ஆப்-ஸ்டெம்பை பதம்பார்க்க அஸ்வின் க்ளீன் போல்டாகினார்.
உண்மையில், அஸ்வின் ஆட்டமிழந்தவிதம், ரஷித் கான் ஃபார்மில்லாமல் இருக்கிறார் என்ற விமர்சனத்துக்கு மிகப்பெரிய பதிலடியாக இருந்தது, அது மட்டுமல்லாமல் ரஷித் கானின் லெக்-ஸ்பின், கூக்ளியின் சரியான கலவைக்கு உதாரணமாகவும் இருந்தது. அஸ்வின் தனது சுழற்பந்துவீச்சில் கேரம் பால், ஸ்லோவர் பால், கூக்ளி, ஆப்ஸ்பின், லெக்ஸ்பின் என பல மாற்றங்களைச் செய்து பேட்ஸ்மேன்களை திணறடிப்பார். அவருக்கே தண்ணி காட்டிவிட்டார் ரஷித் கான்.
இதேபோல ரியான் பராக், சிம்ரன் ஹெட்மயர் இருவரையும் கால் காப்பில் வாங்கி எல்.பி.டபிள்யூ முறையில் ரஷித் கான் ஆட்டமிழக்கச் செய்தார்.
ஒட்டுமொத்தத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நடுவரிசை பேட்டிங்கை உடைத்து வெற்றியை எளிதாக்கிய ரஷித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், BCCI/IPL
ராஜஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
ரஷித் கானுக்கு துணையாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுவும் கட்டுக்கோப்பாக நேற்று பந்துவீசினார்.
அஸ்வின் வி்க்கெட்டை ரஷித் கான் வீழ்த்தியதைப் போன்றே தேவ்தத் படிக்கல் விக்கெட்டையும் கிளீன் போல்டாக்கி நூர் அகமது எடுத்தார். 2வதாக, துருவ் ஜூரேலை கால்காப்பில் வாங்க வைத்து நூர் ஆட்டமிழக்கச் செய்தார்.
ரஷித் கான், நூர் அகமது இருவரும் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் துருப்புச் சீட்டுகளாக இருந்தார்கள். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் என்பதைவிட, ஆப்கானிஸ்தான் என்றுதான் கூற முடியும். ரஷித் கான், நூர் அகமது இருவரும் வீழ்த்திய 5 விக்கெட்டுகளும், ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், BCCI/IPL
ராஜஸ்தானுக்கு நெருக்கடி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் 118 ரன்களுக்கு சுருண்டது. 119 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி ஒருவிக்கெட்டை இழந்து 13.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது, ப்ளேஆஃப் சுற்றில் நுழைவதற்கான முதல் அடியை குஜராத் எடுத்து வைத்துள்ளது.
ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வி என 10 புள்ளிகளுடன்4வது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் 5 ஆட்டங்களில் 4 வெற்றி, ஒரு தோல்வி எனத் தொடங்கியது. ஆனால், கடைசி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி, தொடர்ந்து 4 தோல்வி என துவண்டுள்ளது.
ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் தற்போது நீடிப்பதும் ஆபத்தானதே, ஏற்கெனவே மும்பை, ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் அதே புள்ளிகளுடன் இருப்பதால், அடுத்துவரக்கூடிய ஆட்டங்களில் இந்த 3 அணிகளின் வெற்றி ராஜஸ்தான் அணியை பட்டியலில் பின்னுக்குத் தள்ளக் கூடும்.
மோசமான ஃபார்மில் பட்லர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தை நிதானமாகத்தான் தொடங்கியது. ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் பட்லர் 2 பவுண்டரிகள் அடித்த நிலையில், அடுத்த பந்தை ஷார்ட் தேர்டு திசையில் பட்லர் அடிக்க அதை மோகித் ஷர்மா அருமையாக கேட்ச் பிடித்தார். இந்த கேட்சை பட்லரே எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிர்ச்சியோடு வெளியேறினார்.
இந்த சீசனில் பட்லரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்துவருவது ராஜஸ்தான் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் கடந்த 5 போட்டிகளில் பட்லர் 8, 18, 27, 0, 40, 0 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் ஜாஸ் பட்லரின் மோசமான ஆட்டமும், ஃபார்மின்றி தவித்து வருவதும் தெளிவாகத் தெரிந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
ஜெய்ஸ்வால் எனும் அச்சாணி சரிவு
அடுத்துவந்த சாம்ஸன், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பல ஷாட்களை ஆடி பவுண்டரி, சிக்ஸருக்கு விளாசினார். ஷமி ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என ஜெய்ஸ்வால் விளாசி தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். இருவரும் களத்தில் இருந்தவரை ராஜஸ்தான் ரன்ரேட் 10 என்ற வீதத்தில் உயர்ந்தது.
ஆனால், ரஷித் கான் வீசிய 6-வது ஓவரில் தவறான புரிதலில், சாம்சன் ஓடி வந்துவிடுவார் என நம்பி ஜெய்ஸ்வால் ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு ஓடினார். ஆனால், பந்தை அபினவ் மனோகர் பீல்டிங் செய்ய, அதைப் பிடித்து மோகித் சர்மா ரஷித் கானிடம் எறிந்தார். இதைப் பார்த்து ஜெய்ஸ்வால் மீண்டும் நான்-ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு ஓடிவருவதற்குள் 14 ரன்னில் ரன் அவுட் ஆகினார்.
ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததுதான் ராஜஸ்தான் அணியின் அச்சாணியை அகற்றியதுபோல் ஆகிவிட்டது. இந்தச் சரிவிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் கடைசிவரை மீளமுடியாமல், சீராக விக்கெட்டுகளை இழந்து வந்தது.
இந்த சீசனில் மிரட்டல் ஃபார்மில் இருந்துவரும் ஜெய்ஸ்வால், மும்பைக்கு எதிராக சதமும் அடித்துள்ளார். இவரின் விக்கெட்டை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய சுமை குறைந்தது போல் இருந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
சாம்ஸன் ஏமாற்றம்
ஜெய்ஸ்வால், பட்லர் ஆட்டமிழந்ததால், சுமை அனைத்தும் சாம்ஸன் தலையில் விழுந்தது. ஆனால் லிட்டல் வீசிய 7-வது ஓவரில் பந்தை சாம்ஸன் ஃப்ளிக் செய்ய முயன்றபோது, பேட்டின் முனையில் பட்டு ஹர்திக் பாண்டியாவிடம் கேட்சானது. இதனால் சாம்ஸன் 30 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
இந்த சீசனில் முதல் பாதியில் மட்டுமே ஹெட்மயர் ஓரளவுக்கு அடித்து ஆடினார். ஆனால் கடைசி 5 போட்டிகளாக ஹெட்மயரிடம் இருந்து பெரிதாக எந்தப் பங்களிப்பும் இல்லை.
முதல் 5 ஓவர்களில் ஒருவிக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்திருந்த ராஜஸ்தான் அணி 12.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதாவது, அடுத்த 24 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி இழந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆட்டம் 17.5 ஓவர்களில் 118 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. ஜெய்ப்பூர் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதால், இதுபோன்ற குறைவான ஸ்கோர்கள் எந்த வீதத்திலும் வலிமையான பேட்டிங் வரிசை கொண்டிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஒருபோதும் கட்டுப்படுத்தாது.

பட மூலாதாரம், BCCI/IPL
‘வெற்றிப்பசியோடு வருவோம்’
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சாம்ஸன் கூறுகையில் “ எங்களுக்கு கடினமான இரவாக இருக்கும். பவர் ப்ளேயில் நன்றாகத் தொடங்கினோம், 120 ரன்களை டிபெண்ட் செய்வது கடினம்தான். குஜராத் அணியினர் சிறப்பாகப் பந்துவீசினார்கள், நடுப்பகுதியில் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதை நாங்கள் செய்யவில்லை. எங்கள் தவறுகளைப் பற்றி ஆய்வு செய்வோம், அடுத்துவரும் போட்டிகளில் வெற்றிக்கான பசியோடு வருவோம்” எனத் தெரிவித்தார்
ராஜஸ்தான் அணி செய்த தவறுகள்
குறைந்த ஸ்கோரையும் டிபெண்ட் செய்வதற்கு முடிந்தவரை கேப்டன் சாம்ஸன் திட்டமிட்டிருக்க வேண்டும். பவர்ப்ளே ஓவரிலேயே அஸ்வின், சஹலை பந்துவீசச் செய்திருந்தால், அதற்கு நிச்சயம் பலன் கிடைத்திருக்கும். குஜராத் அணியும் குறைந்த ஓவர்களில் சேஸிங் செய்திருக்க முடியாது. ஏறக்குறைய 15 ஓவர்களுக்கு மேல் அந்த அணியை இழுத்து வந்திருக்கலாம்.
இந்த 3 சுழற்பந்துவீச்சாளர்களைத் தவிர ரியான் பராக்கும் ஓரளவு சுழற்பந்துவீசக்கூடியவர் அவரையும் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அதைவிடுத்து, ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெறும் தருவாயில் 12-வது ஓவரை அஸ்வினுக்கு வழங்கி சாம்சன் அவரை வீணடித்துவிட்டார்.
இந்த ஆட்டத்தில் ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கியதற்கு பதிலாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட்டை களமிறக்கி இருக்க இருந்தால், நடுவரிசை பலமாகி இருந்திருக்கும். அதேபோல ஆடம் ஸம்பாவிற்குப் பதிலாக முருகன் அஸ்வினை பந்துவீசச் செய்திருக்காலம்.
ராஜஸ்தான் அணி குறைந்த ஸ்கோர் எடுத்திருந்த போதிலும் அதை டிபெண்ட் செய்ய போராட்டக் குணத்தை முடிந்த அளவு வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் எளிதாக ராஜஸ்தான் அணி பணிந்துவிட்டது.
சாம்சன், ஹெட்மெயர், படிக்கல், பட்லர், ஜூரேல் ஆகியோர் முதல் 5 ஆட்டங்களில் மட்டுமே ஓரளவுக்கு விளையாடினார். ஆனால், கடைசி 5 ஆட்டங்களில் இவர்களின் பேட்டிங் பங்களிப்பு சொற்பமாக இருக்கிறது. ஒரு அணியில் நடுவரிசை, தொடக்க வரிசை சொதப்பும் பட்சத்தில் தோல்வி தவிர்க்க முடியாததாக அமையும்.

பட மூலாதாரம், BCC/IPL
எளிய இலக்கு
குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாகத் தெரிவித்தார். அதிலிருந்து பாடம் கற்ற ஹர்திக் பாண்டியா, ஆட்டத்தை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அதைச் செய்தார்.
சுப்மான் கில், விருதிமான் சாஹா அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளேயில் விக்கெட்இழப்பின்றி 49 ரன்களை குஜராத் அணி சேர்த்தது. நம்பிக்கையற்று ராஜஸ்தான் வீரர்கள் நேற்று பந்துவீசியதை கில், சஹா இருவரும் எளிதாகக் கையாண்டு ரன்களைச் சேர்த்தனர்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 71 ரன்கள் சேர்த்தநிலையில், சுப்மான் கில் 34 ரன்னில் சஹல் பந்தில் சாம்ஸனால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஆட்டத்தை விரைவாக முடிக்கும் நோக்கில் பேட் செய்தார்.
பாண்டியாவின் திடீர் அதிரடி
ஆடம் ஸம்பா வீசிய 10வது ஓவரின் முதல் பந்தில் ஸ்ட்ரைட்டில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். 2வது பந்தில் டீப் எக்ஸ்ட்ரா கவரில் பாண்டியா ஒரு பவுண்டரி விளாசினார். 3வது பந்திலும் பாண்டியா ஒரு சிக்ஸரை விளாசினார். ஸம்பா வீசிய 4-வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் என 24 ரன்களை ஹர்திக் சேர்த்தார்.
அதன்பின், சஹா, ஹர்திக் இருவரும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எளிதாக வெற்றியை தேடித்தந்தனர். ஹர்திக் 15 பந்துகளில் 39 ரன்களுடனும், சஹா 41 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சீசனில் வெளிமாநிலங்களில் நடந்த டெல்லி, மொஹாலி, லக்னெள, ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி தொடர்ந்து வருகிறது.

பட மூலாதாரம், BCCI/IPL
"தவறைத் திருத்திவிட்டேன்"
வெற்றிக்குப்பின் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ நூர், ரஷித் கானை அதிகமாகப் பயன்படுத்தினேன். நான் விரும்பியவாறுதான் அவர்களும் பந்துவீசினர். ரஷித் கானுக்கு ஈடாக யாரும் சிறப்பாக பந்துவீச முடியாது. அவர்கள் பந்துவீசும்போது, நம்பிக்கையுடன் பந்துவீசுகிறார்கள்.
நான் விளையாடியதில் இதுவரை சிறந்த விக்கெட் கீப்பர் சஹா மட்டும்தான். விக்கெட் கீப்பிங்கிற்கும், பேட்டிங்கிற்கும் சிறந்த மதிப்பை சஹா வழங்குகிறார், கடந்த போட்டியில் தவறான முடிவுகளையும், கணிப்புகளையும் செய்தேன், அதை திருத்திவிட்டேன்” எனத் தெரிவித்தார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












