ஆகாஷ் மத்வால்: மும்பை அணியின் அடுத்த பும்ராவா - யார் இந்த பொறியாளர்?

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், வாத்சல்யா ராய்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

’ஐயாம் ப்ரெளட் ஆஃப் மைசெல்ஃப்’ அதாவது ’என் மீது நான் பெருமை கொள்கிறேன்’

ஐபிஎல் போட்டியில் தனது முதல் சீசனின் 7வது போட்டியில் விளையாடும் எத்தனை வீரர்கள் உலகமே கேட்டுக் கொண்டிருக்கும்போது இந்த வார்த்தைகளைச் சொல்லியிருப்பார்கள்?

அவ்வாறு கூறிய முதல் வீரராக ஆகாஷ் மத்வால் இருக்கலாம்.

ஐபிஎல் தொடரின் நாக் அவுட் போட்டியில் அவர் செய்த அற்புதத்தை, அவருக்கு முன் வேறு எந்த வீரரும் செய்ததில்லை. ஆகாஷ் மத்வால் ஒரு அன் கேப் பிளேயர். அவருக்கு முன்னால், எந்தவொரு சர்வதேச நாக் அவுட்டிலும் இவ்வளவு அற்புதமான பந்துவீச்சை யாரும் நிகழ்த்தியதில்லை.

ஐந்து ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள்.

ஐபிஎல் 2023இல் இருந்து லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸை 'நாக் அவுட்' செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சென்னை மைதானத்தில் அவர் வீசிய பந்துகள் செய்த மாயாஜாலம் இது.

மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • மும்பை 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெளவை வென்றது
  • மும்பை இந்தியன்ஸ்: 182/8 (20 ஓவர்கள்), கேமரூன் கிரீன் - 41 ரன்கள், நவீன் உல் ஹக் - 38/4
  • லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ்: 101/10 (16.3 ஓவர்கள்), மார்கஸ் ஸ்டோய்னிஸ் - 40 ரன்கள்
  • ஐந்து ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை எடுத்த ஆகாஷ் மத்வால் ஆட்ட நாயகன்

பெயரை நினைவில் கொள்ளுங்கள்

ஐபிஎல் போட்டியில் புதன்கிழமை நடந்த பந்தயத்திற்கு முன்பு லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியால் வீழ்த்த முடியவில்லை.

எலிமினேட்டர் பந்தயத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. முதலில் விளையாடிய மும்பை 182 ரன்கள் எடுத்தபோது கிரிக்கெட் வல்லுநர்கள் அனைவரும் போட்டி 'நெருக்கமான ஒன்றாக இருக்கும்' என்று கூறினர்.

மும்பைக்கு எதிரான லக்னெளவின் செயல்பாடு சிறப்பாக இருந்துள்ளது. கூடவே மும்பையின் பந்துவீச்சு சிறிது பலவீனமானது என்ற எண்ணமும் அவர்கள் மனதில் இருந்தது.

அந்த நேரத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நான்கு பேட்ஸ்மேன்களை 'டூ ஆர் டை' போட்டியில் ஆட்டமிழக்கச் செய்த 29 வயது பந்து வீச்சாளர் அவர்களது நினைவுக்கு வரவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

அவரது பந்து வீச்சுக்குப் பலியான பேட்ஸ்மேன்களில் ஹென்ரிச் கிளாசென், மயங்க் அகர்வால் போன்ற பெரிய தலைகளும் அடக்கம்.

புதன்கிழமை தனது நான்காவது ஓவரில் மொஹ்சின் கானின் ஸ்டம்பை யார்க்கரால் தூக்கியபோது, கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே, "இந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள்! ஆகாஷ் மத்வால்" என்று ட்வீட் செய்தார்.

ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஹர்ஷா போக்லே உடனான உரையாடலில், ஆகாஷ் மத்வால், ’தன்னைப் பற்றி பெருமைப்படுவதாக’ கூறினார்.

ஆனால், இதைச் சொல்லும்போது ஆகாஷ் மத்வாலின் முகத்திலோ உடல் அசைவுகளிலோ எந்தத் தற்பெருமையும் இருக்கவில்லை. அவர் கண்களில் பிரகாசம் தெரிந்தது. முகத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் துளிர்விட்டாலும் சிறிதளவு தயக்கமும் இருந்தது.

வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் ஷர்மா கைகுலுக்கியபோதும் அவரது கூச்சமும் தன்னிச்சையான ஸ்டைலும் தெரிந்தது.

மும்பையின் பெயரை வெற்றி வானில் எழுதி வைத்த மத்வால், தனது கேப்டனை கண்ணோடு கண் பார்க்கவில்லை. தலை குனிந்த நிலையில் ரோஹித் ஷர்மாவின் அணைப்பிற்குள் ஐக்கியமானார். ரோஹித் ஷர்மா மத்வாலின் தலையில் தட்டி வாழ்த்தினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

புகழ் வானில் மத்வால்

புகழாரம் சூட்டினால் கூச்சப்படும் இந்த பந்து வீச்சாளர், களத்தில் வித்தியாசமான உருவத்தில் காணப்படுகிறார். இவரது அதிரடி பந்துவீச்சின் காரணமாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

லக்னெளவுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மத்வால் தனது முதல் ஓவரிலேயே மும்பைக்கு முதல் விக்கெட்டை தந்தார். அப்போது அவர் லக்னெளவின் தொடக்க வீரர் பிரேரக் மன்கட்டை பெவிலியன் திரும்பச் செய்தார்.

ஆனால் மத்வாலின் உண்மையான அதிரடி பந்து வீச்சை அவரது இரண்டாவது ஓவரில் பார்க்க முடிந்தது. அது லக்னெள இன்னிங்ஸின் 10வது ஓவர்.

அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஆயுஷ் பதோனியால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. நான்காவது பந்து ஒரு நல்ல லென்த்துடன் வந்து பதோனியின் ஆஃப் ஸ்டம்பை எகிற வைத்தது.

மத்வாலின் பெயரை புகழ் வானில் எழுதிய பந்து, அந்த ஓவரின் ஐந்தாவது பந்து.

லக்னெளவின் மிகப்பெரிய பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் ஸ்டிரைக்கில் இருந்தார். ஆஃப்-ஸ்டம்பை விட்டு வெளியேறி பூரன் இந்தப் பந்தை விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மட்டையின் விளிம்பை தொட்ட இந்தப் பந்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷானின் கையுறைகளில் சிக்கியது.

இந்த விக்கெட்தான் லக்னெளவின் தோல்வியை முடிவு செய்தது. இந்தப் போட்டியில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

பொறியாளர் பட்டம், கிரிக்கெட் மோகம்

போட்டி முடிந்ததும், "இதுவரை எங்கே (மறைந்து) இருந்தீர்கள்?" என்று அவரிடம் கேட்கப்பட்டது.

மத்வால், "எங்கும் இல்லை. பயிற்சி செய்து கொண்டிருந்தேன். இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன்," என்று பதிலளித்தார்.

"முதலில் பொறியியல் படித்தேன். பிறகு கிரிக்கெட் மீதிருந்த மோகத்தால் கடுமையாக உழைத்தேன். பிறகு இங்கு வந்து சேர்ந்தேன்" என்றார்.

“இஞ்சினியர்களுக்கு சீக்கிரம் கற்கும் குணம் உண்டு,” என்று சொல்ல ஆகாஷ் மறக்கவில்லை.

டென்னிஸ் பந்து முதல் கிரிக்கெட் பந்து வரை

ஆகாஷ் உண்மையில் விரைவாக கற்றுக்கொள்பவர்.

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் 1993ஆம் ஆண்டு பிறந்த ஆகாஷ் மத்வால், ஐபிஎல் தொடரின் ஏழு போட்டிகளில் மட்டுமே விளையாடி கிரிக்கெட்டின் ஜாம்பவான்களை தனது ரசிகர்களாக மாற்றியுள்ளார்.

பல முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் அவரது சுயவிவரத்தை மனப்பாடம் செய்து வைத்துள்ளனர்.

ஆகாஷ் மத்வால் ரூர்க்கியில் இருந்து வந்த பி.டெக் பட்டதாரி. ‘‘23 வயது வரை அவர் டென்னிஸ் பந்தை வைத்து விளையாடி வந்தார்,” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கூறினார்.

மத்வால் 23 வயதுக்குப் பிறகுதான் கிரிக்கெட் பந்தை கையில் பிடித்தார். உத்தராகண்ட் அணியின் பயிற்சியாளர் வசீம் ஜாஃபர் தான் இவரது திறமையை முதலில் கவனித்தார்.

"அவர் (ஆகாஷ் மத்வால்) 2019இல் ட்ரயலுக்கு வந்தபோது, நாங்கள் அனைவரும் அவரால் மிகவும் ஈர்க்கப்பட்டோம்," என்று உத்தராகண்டின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான மணீஷ் ஜா கூறியதாக அவரை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.

வழி திறந்தது, ஆனால் மத்வாலின் இலக்கு வெகு தொலைவில் இருந்தது. ஐபிஎல் மூலம் கிரிக்கெட் உலகில் தனது பெயரைப் பதிக்க அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் தொடரில் மூன்று ஆண்டுகள் காத்திருப்பு

இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுடன் அவர் தனது போராட்டத்தின் கதையைப் பகிர்ந்து கொண்டார்.

"நான் மூன்று ஆண்டுகளாகக் காத்திருந்தேன். நான் ஆர்சிபியில் நெட் பந்துவீச்சாளராக இருந்தேன். பின்னர் மும்பை இந்தியன்ஸில் சப்போர்ட் பந்துவீச்சாளராக இருந்தேன்,” என்று ஆகாஷ் மத்வால் கூறினார்.

"மும்பை இந்தியன்ஸ் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, ஐபிஎல் விளையாட வேண்டும் என்று என் இதயம் கூறியது,” என்றார் அவர்.

கடந்த ஆண்டு சூர்யகுமார் யாதவ் காயமடைந்தபோது அவருக்கு பதிலாக ஆகாஷ் மத்வால் அணியில் இடம் பிடித்தார்.

ஆனால், களம் இறங்குவதற்கான காத்திருப்பு தொடர்ந்தது. இந்த ஆண்டும், அணியின் முதல் எட்டு போட்டிகளில் அவர் தனது முறைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. அவருக்கு முன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் பிற பந்துவீச்சாளர்கள் சோதிக்கப்பட்டனர்.

பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அவரால் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் 2023இல் செயல்பாடு

  • அவர் ஏழு போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்
  • அதுவும் 12.8 என்ற சிறந்த சராசரியுடன்
  • அவர் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளையும் மற்றொரு போட்டியில் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்
  • யார்க்கர் அவரது பலமாகக் கருதப்படுகிறது

சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்

தனது சமீபத்திய வெற்றியின் பெருமை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவையே சேரும் என்று ஆகாஷ் மத்வால் குறிப்பிட்டார்.

"ரோஹித் என்னை அமைதிப்படுத்தினார். எனது பலம் எதுவோ அதன் அடிப்படையில் பந்துவீசச் சொன்னார்," என்று அவர் கூறினார்.

"கடந்த ஆண்டு அவர் எங்களுடன் சப்போர்ட் பந்துவீச்சாளராக இருந்தார். அவருடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும்," என்று ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.

”ஜோஃப்ரா ஆர்ச்சர் திரும்பிச் சென்றபோது, வெற்றியை தேடித் தரக்கூடிய ஆளுமை ஆகாஷிடம் இருப்பதாக நான் நினைத்தேன்,” என்றார் ரோஹித்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

ரிஷப் பந்த் உடன் சிறப்பு தொடர்பு

ஆகாஷ் மத்வால் பலருக்கு மற்றொரு சாம்பியன் வீரரை நினைவுபடுத்துகிறார். அவர் பெயர் ரிஷப் பந்த்.

"அவர் ரிஷப்பின் பக்கத்து வீட்டுக்காரர்" என்று ரவி சாஸ்திரி கூறுகிறார்.

இருவரின் வீடுகளும் ரூர்க்கியில் அருகருகே உள்ளன. ரிஷப் பந்த் டெல்லிக்கு செல்வதற்கு முன்பு பயிற்சியாளர் அவதார் சிங்கிடம் பயிற்சி எடுத்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகாஷ் மத்வாலுக்கும் அவதார் சிங் கற்றுக் கொடுத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும்போது ஆகாஷ் மத்வால், 'பூம் பூம்' (ஜஸ்பிரீத்) பும்ராவுடன் ஒப்பிடப்படுகிறார். காயம் காரணமாக பும்ரா ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை.

ஆனால் தன்னை பும்ராவுடன் ஒப்பிடுவதை மத்வால் விரும்பவில்லை. அவர் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறார்.

"பும்ரா பாய் அவருடைய இடத்தில் இருக்கிறார், நான் என்னுடைய இடத்தில் இருக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

பும்ராவும் அவரைப் பாராட்டும் இடத்தை மத்வால் இப்போது அடைந்துள்ளார்.

புதன்கிழமையன்று மத்வாலின் மேட்ச் வின்னிங் செயல்பாட்டிற்குப் பிறகு பும்ரா ட்விட்டரில், "வாட் எ ஸ்பெல் பை ஆகாஷ் மத்வால்" என்று எழுதினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவும் ஆகாஷ் மத்வாலை பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

கில் Vs மத்வால்

புதன்கிழமையன்று 3.3 ஓவர்களில் ஐபிஎல் 2023இல் இருந்து லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 'அவுட்' செய்த ஆகாஷ் மத்வாலின் மாயாஜாலம், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை மிகவும் கவலையடையச் செய்திருக்கும்.

முன்னதாக மும்பை, குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த மோதலில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

குஜராத்தின் வெற்றிகரமான பேட்ஸ்மேன் ஷுப்மன் கில்லின் ஆஃப்-ஸ்டம்பை பிடுங்கி, அதைச் சுழலும் கம்பு போல மாற்றிய அந்தப் பந்தின் நினைவுதான் அந்தக் கவலைக்கு மிகப்பெரிய காரணம்.

கில்லுடன் ஆகாஷ் மத்வாலின் அடுத்த சந்திப்புக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. 2023 மே 26. அதாவது இன்று.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: