கேரளா: ஒரு தவறும் செய்யாத தந்தைக்கு 54 நாட்கள் சிறைவாசம் - சிசிடிவி காட்சியால் ஏற்பட்ட அவலம்

பட மூலாதாரம், VK THAJUDHEEN
- எழுதியவர், அஷ்ரஃப் பதானா
- பதவி, பிபிசி, திருவனந்தபுரம்
2018ஆம் ஆண்டில், கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் 'திருடன்' என்று தவறாக கருதப்பட்டு 54 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்த நிலையில், நீதிமன்றத்தால் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும், குற்ற வழக்கில் இருந்து இவரது பெயர் அழிக்கப்பட்டாலும், அதற்கு பெரும் விலையை கொடுத்திருக்கிறார் அந்த நபர். தனக்கு நேர்ந்த அநீதிக்காக இன்னும் அவர் நீதி கேட்டு போராடி வருகிறார்.
இந்திய தென் மாநிலமான கேரளாவைச் சேர்ந்த வி.கே.தாஜுதீன் என்பவர் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் 'நெக்லஸ் திருடன்' என்று தவறாகக் கருதி கைது செய்யப்பட்டார். திருட்டு நடந்ததாக சொல்லப்பட்ட நேரத்தில் அவர் வேறொரு இடத்தில் இருந்தார் என்பதை நிரூபிக்க அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வாக்குமூலம் அளித்ததுடன் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும் உதவினர். இதற்காக அவர்கள் பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்த பிறகே அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடிந்தது.
இந்த விவகாரத்தில் தாஜுதீனுக்குக் கிடைத்த அனுபவம் சாதாரணமானது அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹைதராபாத்தில் ஒரு தினசரி கூலித் தொழிலாளியின் மரணம், சிசிடிவி காட்சிகளில் தென்பட்ட அவரது தோற்றத்தை அடிப்படையாக வைத்து காவலில் வைக்கப்பட்டார். காவல்துறையினர் தன்னை சித்ரவதை செய்ததாக அந்த தினக்கூலி குற்றம்சாட்டினார். ஆனால், அதை காவல்துறையினர் மறுத்தனர்.
இந்த சம்பவம் பொதுவெளியில் பொருத்தப்பட்டுள்ள ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுட்ப சிசிடிவி கேமராக்களின் செயல்திறனை சந்தேகப்பட வைத்ததுடன் அதன் விளைவாக நிரபராதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பொதுமக்களிடையே சீற்றத்தைத் தூண்டியிருக்கிறது.
இந்திய நகரங்களில் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுவெளியில் சட்ட அமலாக்க அமைப்புகள் நிறுவும் கேமராக்கள் மற்றும் பிற கண்காணிப்புக் கருவிகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. குற்றங்களை தடுக்க சட்ட அமலாக்க அமைப்புகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஃபேஷியல் ரெகக்னிஷன் சாதனங்களை நிறுவும்போது அதன் விளைவாக இதுபோன்ற மனித உரிமை மீறல் சம்வபங்கள் ஏற்படும் சாத்தியத்தை ஒதுக்கி விட முடியாது என்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வழக்கில் தாம் சேர்க்கப்பட்டதை அறிந்து "மனமுடைந்து போனேன்" என்கிறார் தாஜுதீன். தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரி பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன் அவருக்கு சம்பள உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டது என்று கூறும் தாஜுதீன் "இது மிகவும் குறைவான தண்டனை" என்று கூறுகிறார்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஷெவ்லின் செபாஸ்டியன் என்ற பத்திரிகையாளருடன் இணைந்து புத்தகமாக எழுதியுள்ள தாஜுதின், இப்போது காவல்துறை தனக்கு இழப்பீடு தர உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

பட மூலாதாரம், VK THAJUDHEEN
தாஜுதீன் 2018ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி தனது மகளின் திருமணத்தை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரது மகளின் திருமணம் சில தினங்களுக்கு முன்புதான் நடந்து முடிந்திருந்தது. கத்தாரின் தோஹாவில் வாடகை கார் தொழிலில் ஈடுபட்டு வந்தார் தாஜுதீன். திருமணத்திற்காக 15 நாட்கள் விடுமுறையில் அவர் சென்றிருந்தார்.
"எல்லாம் திட்டத்தின் படி நடந்து கொண்டிருந்ததால் நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். ஆனால் திடீரென்று, என் வாழ்க்கை நரகமாக மாறியது," என்கிறார் அவர்.
அன்றைய தினம் நள்ளிரவை கடந்த நிலையில் தனது வீட்டை நெருங்கியபோது, தனக்காகக் அங்கே சில காவலர்கள் காத்திருப்பதை கண்டார் தாஜுதீன்.
சிசிடிவி காட்சியில் ஒரு நபரை அடையாளம் காணும்படி தாஜுதீனின் மனைவி நசீராவை அவர்கள் கேட்டுக் கொண்டனர். அதனால் காரை விட்டு இறங்கும்படி தாஜுதீனிடம் கூறப்பட்டது.
"அப்போது நடுநிசி இரவாக இருந்ததால் நசீரா குழப்பமாக இருந்தார். அப்போது அந்த போலீஸ் காட்டிய காட்சியில் இருப்பவர் என்னை போல் இருப்பதாக போலீஸாரிடம் நசீரா சொன்னாள்."
"உடனே என்னை தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு என்ன நடக்கிறது என்பதை என் மனைவி மற்றும் குழந்தைகளால் நம்ப முடியவில்லை," என்று தாஜுதீன் கூறுகிறார்.
நசீராவின் பதிலை வைத்து, ஒரு பெண்ணிடம் தங்க நகை பறித்ததாக தாஜுதீன் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பதை அவரது குடும்பம் பின்னர் தான் உணர்ந்தது.
சிசிடிவி படத்தில், தாடியுடன் வெள்ளை நிற ஸ்கூட்டரில் ஒரு நபர் செல்வதை பார்க்க முடிகிறது. படத்தில் இருந்தவரின் உருவ ஒற்றுமை மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முதல் பார்வையில் அது என்னைப் போலவே தோன்றியதாக தாஜுதீன் கூறுகிறார்.
மகளின் திருமணத்திற்காகவும், வீடு கட்டுவதற்காகவும் பணம் தேவைப்பட்டதால் நகையை தாஜுதீன் திருடியதாக போலீசார் கூறினர். நகையை பறிகொடுத்த பெண்ணும் தாஜுதீன் தான் திருடன் என அடையாளம் காட்டினார்.
நல்வாய்ப்பாக தாஜுதீனுக்கு சார்பாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலரது வாக்குமூலம் இருந்தன. நகை திருடு போனதாக சொல்லப்படும் நேரத்தில் தாஜுதீனும் அவரது குடும்பத்தினரும் ஒரு அழகு நிலையத்தில் இருந்ததாக ஒரு பெண் கூறினார். தாஜுதீன் திருடும் நபர் அல்ல என்றும் அவர்கள் கூறினர்.
ஆனால் போலீசார் "வழக்கை முடிக்க அவசரம்" காட்டினர் என்று தாஜுதீன் கூறுகிறார்.
"அந்த நேரத்தில் எனக்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை," என்று கூறிய அவர், "என் மனைவி குழந்தைகளுடன் என்னை காவல் நிலையத்தில் சந்திக்க வந்தபோது போலீஸார் என்னை அவர்களிடம் பேச அனுமதிக்கவில்லை," என்று தாஜுதீன் தெரிவித்தார்.
காவல் துறையினரால் தாம் சித்ரவதை செய்யப்பட்டதாக தாஜுதீன் குற்றம்சாட்டினார். நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை போலீஸார் மறுத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் பெறுவதற்கு முன்பு தாஜுதீன் 54 நாட்கள் சிறையில் இருந்தார்.

பட மூலாதாரம், VK THAJUDHEEN
தாஜுதீன் கொடுத்த விலை
தாஜுதீன் வீடு திரும்பியபோது, அவர் 23 கிலோ உடல் எடையை இழந்திருந்தார்.
அண்டை வீட்டாரின் சந்தேக பார்வைக்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்தினார். ஏழு வயதாக இருந்த அவரது மகன், தந்தையின் அவலநிலையைக் கண்டு மனம் உடைந்து பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டான்.
நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் சிசிடிவி காட்சியில் தோன்றும் நபரின் தோற்றம், தாஜுதீனுடன் "அதிக ஒற்றுமை" கொண்டதாக இருப்பதாக வாதிட்டனர். அவரது சொந்த குடும்பத்தினரே அவரை திருடன் என்று அடையாளம் காட்டியுள்ளனர் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இந்த வழக்கில் விரைவாக நம்பிக்கை இழந்ததால், தோஹாவில் இவரது தனது நண்பர்கள் அவருக்கு நீதியைப் பெற ஆன்லைன் பிரசாரத்தை தொடங்கினர்.
தாஜுதீனின் மூத்த மகன், சிசிடிவி படத்தில் உள்ள நபரை தமது நண்பர்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியுடன் தேடத் தொடங்கினார்.
அவர்களின் கூட்டு முயற்சிகள், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க உதவியது - அந்த நபர் ஏற்கெனவே மற்றொரு திருட்டு வழக்கில் சிறையில் இருந்தார்.
இதைத்தொடர்ந்து, தாஜுதீனின் குடும்பத்தினர், மாநில முதல்வர் மற்றும் காவல்துறை தலைவரை அணுகி, வழக்கை வேறு ஒரு அதிகாரியால் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அதன் விளைவாக நடந்த மறுவிசாரணையில், குற்றவாளி பயன்படுத்திய ஸ்கூட்டர் மற்றும் திருடப்பட்ட நகையை போலீசார் மீட்டனர்.
இப்போது இந்த வழக்கில் தாஜுதீனின் பெயர் அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் தாஜுதீனின் கனவு சிதைந்து போய் விட்டது.
கைது செய்யப்பட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் கத்தாருக்குத் திரும்பினார். ஆனால், இடைப்பட்ட நாட்களில் மீண்டும் பணிக்கு சேராததால் தாஜுதீன் அவர் தலைமறைவாகி விட்ட ஊழியர் என அவரது முதலாளி அந்நாட்டில் வழக்குப் பதிவு செய்திருந்தார். அதன் விளைவாக கத்தாரில் இருந்து அவர் நாடு கடத்தப்பட்டார். மீண்டும் கத்தாருக்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குத் திரும்பிய தாஜுதீனும் அவரது குடும்பத்தினரும் அவமானம் மற்றும் களங்கத்திலிருந்து விடுபட கேரளாவை விட்டு வெளியேறினர்.
இப்போது அண்டை மாநிலமான கர்நாடகத்தில் அவர்கள் வசிக்கின்றனர். புதிய இடத்தில் தாஜுதீன் துணி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த இழப்புகளுக்காக கேரள காவல்துறையிடம் இருந்து ஒரு கோடியே 40 லட்சம் கேட்டு தாஜுதீன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமது புதிய புத்தகம் காவல்துறையினரால் தவறாகக் கைது செய்யப்பட்ட நபர்களின் துன்பங்கள் பற்றிய வெகுஜன கவனத்தை ஈர்க்கும் என்று தாஜுதீன் நம்புகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












