புதிய நாடாளுமன்ற கட்டடம்: எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு முடிவை விமர்சிக்கும் என்டிஏ - எம்.பிக்களின் பதில் என்ன?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருக்கும் நிலையில், இதற்கு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்துள்ளன. ஆனால், தங்களது 'புறக்கணிப்பு' சரிதான் என்கின்றன எதிர்க்கட்சிகள்.
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், மே 28ஆம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த புதிய கட்டடத்தை இந்திய குடியரசுத் தலைவரை வைத்துத் திறந்துவைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூறியது ஏற்கப்படாத நிலையில், இந்தத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.
மொத்தமாக 19 எதிர்க்கட்சிகள் இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், எதிர்க்கட்சிகளின் இந்தச் செயல்பாடு மரியாதைக் குறைவானது எனக் கூறப்பட்டுள்ளது.
"கடந்த ஒன்பதாண்டுகளாகவே எதிர்க் கட்சிகள் நாடாளுமன்ற நடைமுறைகள் மீது எவ்வித மரியாதையையும் காட்டுவதில்லை. முக்கியமான சட்டம் இயற்றும் நடவடிக்கைகளின்போது நாடாளுமன்ற கூட்டத்தில் கலகம் செய்வது, வெளிநடப்புச் செய்வது ஆகியவற்றின் மூலம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீது ஒரு அலட்சியத்தையே வெளிப்படுத்திவந்துள்ளனர். சமீபத்திய புறக்கணிப்பு அறிவிப்பும் அதுபோன்றதுதான்.
எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைகள் நகைப்புக்குரியவை. குடியரசுத் தலைவர் பங்கேற்ற சிறப்பு ஜிஎஸ்டி கூட்டத்தை இவர்கள் புறக்கணித்தார்கள். பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட நிகழ்வை புறக்கணித்தார்கள். தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, அதனை ஏற்க மறுத்து இந்த நாட்டின் பழங்குடி மக்களை அவமானப்படுத்தினார்கள்.
இந்தக் கட்சிகள்தான் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தன. மக்களை இந்த நாடாளுமன்றம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதாலேயே, எதிர்க்கட்சிகள் அதனைப் புறக்கணிக்கின்றன. குடும்பங்களால் நடத்தப்படும் கட்சிகள், துடிப்புமிக்க ஜனநாயகத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்துகின்றன.
தேசத்தின் வளர்ச்சிக்கான பார்வையால் இவர்கள் ஒன்றுபடவில்லை. வாக்கு வங்கி அரசியலாலும் ஊழலின் மீதான நாட்டத்தினாலுமே இவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். இவர்களால் இந்திய மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவே முடியாது. எதிர்க் கட்சிகள் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யாவிட்டால் இந்தியாவின் 140 கோடி மக்களும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். இந்த நடவடிக்கை அவர்களின் எதிர்காலப் பாரம்பரியத்தின் மீது கரு நிழலாகப் படியும்" என இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையில் பா.ஜ.க., சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு, மேகாலயாவைச் சேர்ந்த மக்கள் தேசியக் கட்சி, நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி, சிக்கிமைச் சேர்ந்த சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, ஹரியாணாவின் ஜனநாயக ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி, சோனே லாலின் அப்னா தள், மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ராம்தாஸ் அத்வாலேவின் ரிபப்ளிகன் பார்டி ஆஃப் இந்தியா, தமிழ் மாநில காங்கிரஸ், அ.தி.மு.க., ஜார்கண்டைச் சேர்ந்த ஏஜேஎஸ்யு, மிஸோராமின் மிஸோ தேசிய முன்னணி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகியவை இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
"முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்" - நிர்மலா சீதாராமன்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்வு குறித்து தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களிடம் விளக்குவதற்காக சென்னையில் அசாதாரணமான முறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேறு மாநில ஆளுநர்களான தமிழிசை செளந்தரராஜன், இல. கணேசன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோருடன் தமிழ்நாடு ஆளுநர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பு ராஜ் பவனில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமனிடம் மோதி என்ற நபரின் அரசியல் லாபத்துக்காக இதுபோன் செங்கோல் நிகழ்வை மத்திய அரசு நடத்துகிறதா என்றும் இதில் குடியரசு தலைவர் திறந்து வைக்காமல் பிரதமர் திறந்து வைப்பது ஏன் என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நிர்வலா சீதாராமன், "நாடாளுமன்றம் என்பது ஜனநாயக கோவில், பிரதமர் நரேந்திர மோதி கூட நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது அதன் படிகளை வணங்கித்தான் அதன் உள்ளே நுழைந்தார். இந்த நேரத்தில் நான் (எதிர்க்கட்சிகளுக்கு) தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விழாவில் பங்கேற்கவும்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நமக்கெல்லாம் பெருமை மற்றும் மதிப்புமிக்க தருணம். இதில் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இந்தியாவின் பெருமைக்குரிய சின்னம் என்று," அவர் கூறினார்.
"புதிய நாடாளுமன்றம் அடுத்த 200 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு ஒரு பெருமைக்குரிய சின்னமாக விளங்கும்," என்று அவர் தெரிவித்தார்.
அறிக்கையை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்
ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விஷயங்களைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
"குடும்ப ஆட்சியைப் பற்றி அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். சவுதாலா, ஜி.கே. வாசன் எல்லாம் யார்?" எனக் கேள்வியெழுப்புகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.
"இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பல குற்றச்சாட்டுகள் அவர்களுக்குத்தான் பொருந்தும். சவுதாலாவும் வாசனும் வாரிசுகள் இல்லையா, அது குடும்ப அரசியல் இல்லையா? எதற்காக தங்கள் கூட்டணிக் கட்சி மீதே இந்த அறிக்கை மூலம் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள் எனப் புரியவில்லை" என்ற ரவிக்குமார், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கை தற்போதைய ஆளும்கட்சி ஏற்றதே கிடையாது. அது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகாதா எனக் கேள்வி எழுப்புகிறார்.
"நடந்து முடிந்த பட்ஜெட் தொடரை அவர்கள்தான் காலி செய்தார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆளுங்கட்சியே போராட்டம் நடத்தி, அவையை நடக்காமல் செய்தார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை ஒருபோதும் விவாதம் இல்லாமல் நிறைவேறியதே கிடையாது. ஆனால், இந்த முறை நடந்தது.
தவிர, பிரதமர் அவையில் வந்து அமர்வதே இல்லை. இதுவரை இருந்த பிரதமர்களிலேயே அவைக்கு அதிகம் வராத பிரதமர் இவர்தான். அப்படியே வந்தாலும், பேசுவது மிகக் குறைவு. பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி பேசியதோடு ஒப்பிட்டால் அதில் நான்கில் ஒரு பங்குகூட இவர் பேசியதில்லை. மன்மோகன் சிங் அவைக்கு வந்து மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்பார்.

நம்முடைய நாடாளுமன்ற அமைப்பில் நிலைக் குழுக்களுக்கு ஒரு முக்கியமான ரோல் உண்டு. அந்த நிலைக்குழுக்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் செய்துவிட்டார்கள். மசோதாக்களை நிலைக் குழுக்களுக்கு அனுப்புவதில்லை. மிக அரிதாக அனுப்பினாலும்கூட, நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்பதில்லை.
ஒரு மசோதாவை அறிமுகப்படுத்த உரிய கால வரையறையையும் அளிப்பதில்லை. பின்னிரவில் இணையத்தில் வெளியிட்டு, காலையில் அவையில் அறிமுகப்படுத்திவிடுவார்கள். இவையெல்லாம் நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானவை. இவ்வளவையும் செய்துவிட்டு, நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள்" என்கிறார் ரவிக்குமார்.
இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல எதிர்க்கட்சிகளின் பங்கும் முக்கியமானது. இந்த விழாவில் குடியரசுத் தலைவரையும் மதிக்கவில்லை; எதிர்க்கட்சிகளையும் மதிக்கவில்லை. ஒரு மின்னஞ்சல் அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள், அவ்வளவுதான். காந்தி சிலையை வைத்துக்கொண்டு சாவர்கர் பிறந்த நாளில் இதனைத் திறப்பது நாடாளுமன்றத்திற்கே அவமரியாதை என்கிறார் அவர்.
''இது மோதியின் சொந்த வீட்டின் புதுமனை புகுவிழா அல்ல'' - ஜோதிமணி
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிக்கையில் கையெழுத்திட்டிருப்பவர்கள், குடியரசுத் தலைவரால் நாடாளுமன்றம் திறக்கப்படக்கூடாது என்கிறார்களா எனக் கேள்வியெழுப்புகிறார் காங்கிரஸ் கட்சியின் கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி.
"புதிய நாடாளுமன்ற கட்டடம் தேவையில்லாத ஒன்று. இன்று உள்ள நாடாளுமன்றக் கட்டடம். பழமையானது. ஆனால், வசதிகள் மிக்கது. கோவிட்டிற்கு சற்று முன்பாக இந்தப் பணிகளைத் துவங்கினார்கள். கோவிட் காலகட்டத்தில் மக்கள் துன்பத்தில் இருந்தபோது இதற்காக பணத்தை இறைத்தார்கள். இதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும்போதும் குடியரசுத் தலைவரை வைத்து செய்யவில்லை, இப்போதும் செய்யவில்லை. இது மோதியின் சொந்த வீட்டின் புதுமனை புகுவிழா அல்ல. ஆகவே குடியரசுத் தலைவரை வைத்துத்தான் இந்தக் கட்டடத்தின் திறப்பு விழாவை நடத்தவேண்டும்" என்கிறார் ஜோதிமணி.
குடும்ப கட்சிகள் என்று விமர்சனம் குறித்துக் கேட்டபோது, "அந்தக் குடும்பம் ஆட்சியில் இருந்தபோதுதான் இந்தியா வளர்ச்சியடைந்தது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை" என்று குறிப்பிட்ட ஜோதிமணி, இந்த நிகழ்வை ஆதரிப்பதன் மூலம் திராவிடக் கட்சியான அ.தி.மு.க. தங்களுக்கு இழிவைத் தேடிக் கொள்வதாக குறிப்பிட்டார்.

மாநிலங்களவை தலைவர் பெயர் இல்லை
இந்த விவகாரத்தைப் பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டியிருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
"பல பெரிய பிராந்தியக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என 19 கட்சிகள் ஒன்றிணைந்து இந்த விழாவை இப்படி நடத்துவது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அ.தி.மு.கவைத் தவிர பெரிய கட்சி ஏதும் இல்லை. அதேபோல, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகள்தான் இந்தப் பட்டியலில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் வலியுறுத்தப்பட்டு, இதில் இடம்பெற்றிருக்க வேண்டும். காரணம், அவர்கள் இதுபோன்ற விவகாரங்களில் தங்கள் கருத்துக்களை பொதுவாக பகிர்வதோ, கையெழுத்திடுவதோ கிடையாது" என்கிறார் அவர்.
மேலும், அழைப்பிதழ் விவகாரத்தையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "அழைப்பிதழில் மக்களவை தலைவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், மாநிலங்களவை தலைவரின் பெயர் கிடையாது. காரணம், மாநிலங்களவைத் தலைவராக குடியரசு துணைத் தலைவரே இருப்பார். நெறிமுறைகளின்படி, அழைப்பிதழில் குடியரசுத் தலைவரின் பெயர், துணைக் குடியரசுத் தலைவரின் பெயர் முதலில் வரும். அதற்குப் பிறகுதான் பிரதமரின் பெயர் இடம்பெறும். மூன்றாவது இடத்தில் பிரதமரின் பெயர் வரக்கூடாது என்பதற்காகவே இப்படி செய்திருக்கிறார்கள்" என்கிறார் அவர்.
புதிய நாடாளுமன்ற கட்டடம் வரும் மே 28ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த கட்டடத்திற்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், சி.ஆர். செயா சுகின் என்பவர், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரை வைத்துத் திறக்காமல் பிரதமரை வைத்து திறப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












