மும்பை போல தமிழ்நாட்டில் பெரிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் உருவாகாதது ஏன்?

பட மூலாதாரம், BCCI
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சர்வதேச கிரிக்கெட்டிற்கு இந்தியா சார்பில் இளம் நட்சத்திரங்களை அடையாளம் காணும் போட்டியாக மாறிவிட்டதால் ஐ.பி.எல். உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அதில் ஒவ்வொரு வீரரின் ஆட்டமும் எப்படி இருந்தது என்பது குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடித்து விட்டன. அந்த வகையில், ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற தமிழ்நாடு வீரர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்று பார்ப்பது முக்கியமானதாகிறது.
இந்த ஐபிஎல் தொடர் தமிழ்நாட்டில் இருந்து புதிய நட்சத்திரத்தை கிரிக்கெட்டிற்கு அடையாளம் காட்டியுள்ளதா? பல்வேறு அணிகளிலும் இடம் பெற்ற தமிழ்நாடு வீரர்கள் சாதித்தார்களா? சறுக்கினார்களா? புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?
கிரிக்கெட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டு உலகிலும் அதிகமான ரசிகர்களை மகிழ்விக்கும் முக்கிய தொடர்களில் ஒன்றாக ஐ.பி.எல். உருவெடுத்துள்ளது.
அத்தகைய கவுரவம் மிக்க தொடரில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை மையமாகக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணி இருந்தாலும், அந்த அணியில் ஒரு தமிழர் கூட இல்லை என்ற வருத்தம் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே இருந்தது என்பதை மறுக்க முடியாது.
சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக இருந்தது மட்டுமின்றி, மாநில சட்டப்பேரவையிலும் கூட அதற்கான குரல்கள் ஒலித்தன.
சி.எஸ்.கே அணியின் வெற்றி, தோல்வி மட்டுமின்றி மற்ற ஒவ்வொரு போட்டியிலும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கவனித்தபடியே இருந்தனர்.
ஐ.பி.எல் புள்ளிவிவரங்களை உற்று நோக்கும் போது, சில வீரர்கள் களத்தில் சாதித்ததன் மூலம் ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளனர்.
சில வீரர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விளையாடவில்லை. அதுகுறித்த புள்ளிவிவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்காக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கடந்த காலத்தில் வழிநடத்திய அனுபவமும் கொண்டவர்.
வலது கை சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின், பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடியவர்.
நடப்புத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அஸ்வின், 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவரது சிறந்த பந்துவீச்சு 23/2. ஒவருக்கு சராசரியாக 7.51 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
சிக்கனமாக பந்துவீசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சுழற்பந்துவீச்சில் கைகொடுத்த அஸ்வினுக்கு, யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விஸ்வரூபத்தால் பேட்டிங்கில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.
கிடைத்த வாய்ப்புகளில் களம் கண்டு 67 ரன்களை எடுத்த அவரது அதிக பட்ச ரன்கள் 30 ஆகும். ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சை கவனித்துக் கொண்ட அஸ்வினிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டம் வெளிப்படவில்லை என்பதே நிதர்சனம்.

பட மூலாதாரம், Getty Images
தினேஷ் கார்த்திக்
சர்வதேச கிரிக்கெட்டுடன், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வழிநடத்திய அனுபவமும் கொண்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு அதிரடிச் சரவெடி ஆட்டம் மூலம் மிகச்சிறந்த 'கம்பேக்' கொடுத்திருந்தார்.
இதனால், கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல இம்முறை பெரிதும் உதவுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவை அனைத்துமே பொய்யாய் போயின. 13 ஆட்டங்களில் சேர்த்து ஒட்டுமொத்தமாக 140 ரன்களை மட்டுமே அவர் சேர்த்தார். சராசரி 11.67, ஸ்டிரைக் ரேட் 134 ஆகும்.
மிடில் வரிசையில் அணிக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவார் என்று அந்த அணி எதிர்பார்த்திருந்ததை அதன் கேப்டன் பாப் டூப்ளெஸிஸ் கடைசிப் போட்டியின் முடிவில் வெளிப்படுத்தினார்.
தொடர் முழுவதுமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பங்களித்தும், மிடில் வரிசை பேட்டிங் ஏமாற்றம் தந்ததாக அவர் அதிருப்தி தெரிவித்தார். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வந்த தினேஷ் கார்த்திக்கிடம் அத்தகைய ஆடடம் நடப்புத் தொடரில் வெளிப்படாததால் இக்கட்டான தருணங்களில் அந்த அணி திணறிப் போனது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோலி, மேக்ஸ்வெல், டூப்ளெஸிஸ் ஆகியோரையே நம்பியிருக்கிறது என்ற பொருள்படும் 'கேஜிஎஃப்' என்ற சொற்பதம் வைரலானது. ஆர்சிபி என்றால் கேஜிஎஃப் தான் என்று அதன் ரசிகர்களே வர்ணித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி, அந்த அணிக்காக சிறப்பான பங்களிப்பை நல்கியுள்ளார். சுனில் நரைனுடன் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு தனது வெரைட்டியான சுழற்பந்துகளால் எதிரணிகளை கலங்கடித்தார்.
நடப்புத் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பெற்ற வெற்றிகளில் சுழற்பந்துவீச்சுக்கு முக்கிய இடம் உண்டு. மிடில் வரிசையில் ரன் ரேட்டை கட்டுப்படுத்தியதுடன், முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளையும் வீழ்த்திக் கொடுத்து பல முறை அணிக்கு சாதகமாக போட்டிகளை வருண் சக்கரவர்த்தி திருப்பியுள்ளார்.
நடப்புத் தொடரில் லீக் சுற்றின் 14 போட்டிகளிலும் ஆடியுள்ள வருண் சக்கரவர்த்தி, 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் அவர் இருக்கிறார்.
ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். சுனில் நரைனையும் விஞ்சி, நடப்புத் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முதன்மையான சுழற்பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி உருவெடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஷாரூக் கான்
நடப்புத் தொடரில் ஏமாற்றம் தந்த தமிழ்நாட்டு வீரர்களில் ஷாரூக் கானும் ஒருவர். பேட்டிங்கில் கீழ் வரிசையில் களம் கண்டு, முதல் பந்தில் இருந்தே பவுண்டரி, சிக்சர்களை விளாசும் திறன் கொண்ட, ஷாரூக் கானை, சர்வதேச கிரிக்கெட்டில் சாதிக்காதவராக இருந்தாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
பின் வரிசையில் களம் கண்டு ஓரிரு போட்டிகளில் அசத்திய அவர், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார். 14 போட்டிகளில் 156 ரன்களை மட்டுமே எடுத்துள்ள இவரது சராசரி 22 ரன். ஸ்டிரைக் ரேட் 165.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ஷாரூக் கான் 23 பந்துகளில் 41 ரன்கள் விளாசி அசத்தினார். லக்னோ சூப்பர் ஜெயேன்ஸ்ட் அணிக்கு எதிராக, சிக்கந்தர் ரசாவுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற போது அவர் எடுத்த 23 ரன்களும் முக்கியமானவை. மற்ற எந்த ஆட்டங்களில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
விஜய் சங்கர்
நடப்புத் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டரான விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார். 11 ஆட்டங்களில் 287 ரன்களைக் குவித்த அவர் 3 அரைசதங்களை அடித்துள்ளார்.
அவரது அதிகபட்ச ரன் குவிப்பு 63 ரன்களாகும். ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 41 ரன்களை அவர் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட்டும் மிகச் சிறப்பாக, 161.24 ரன் என்கிற அளவில் இருக்கிறது.
லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடவும் செய்துள்ளார். விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறிய போது சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை தூக்கி நிறுத்தவும் செய்துள்ளார். லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில், வாழ்வா சாவா என்ற நிலையில் ஆடிக் கொண்டிருந்த ஆர்.சி.பி. அணியை தொடரை விட்டே குஜராத் டைட்டன்ஸ் அணி வெளியேற்றியதில் விஜய் சங்கருக்கு முக்கிய பங்கு உண்டு.
198 ரன் என்ற இலக்கைத் துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி தொடக்க விக்கெட்டை விரைவாக இழந்துவிட, சுப்மான் கில்லுடன் இணைந்து விஜய் சங்கர் அமைத்த பாட்னர்ஷிப்பே அந்த அணி வெற்றி பெறக் காரணமாக அமைந்தது. அந்தப் போட்டியில் 35 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் அவர் 53 ரன்களைக் குவித்தார். இந்த சீசன் விஜய் சங்கருக்கு நல்ல 'கம்பேக்' சீசனாக அமைந்தது என்றே சொல்லலாம்.
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசுர பலத்துடன் திகழ்வதால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆல்ரவுண்டரான விஜய் சங்கரின் பவுலிங் திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடி எழவில்லை. அதனால், இந்த சீசனில் அவர் ஒரு ஓவர் கூட பந்துவீசவில்லை.

பட மூலாதாரம், Getty Images
நடராஜன்
2019-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் கலக்கியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கான மூன்று வித போட்டிகளிலும் ஆடும் வாய்ப்பைப் பெற்ற நடராஜன், அது முதல் எப்போதுமே தமிழ்நாடு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராகவே இருந்து வருகிறார்.
காயங்களால் சர்வதேச கிரிக்கெட் பயணம் தடைபட்டிருந்த நிலையில், நடப்புத் தொடரில் சாதித்து மீண்டும் இந்திய அணியில் அவர் இடம் பிடிப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலுமே நடராஜனின் செயல்பாட்டை தமிழ்நாட்டு ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்தே வந்தனர்.
'இந்தப் போட்டி சரியாக அமையவில்லை, அடுத்த போட்டியில் சாதிப்பார்' என்று தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லி வந்த ரசிகர்களுக்கு கடைசிப் போட்டி வரையிலுமே ஏமாற்றம்தான் மிஞ்சியது. நடப்புத் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய நடராஜன் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக 3 ஓவர்களில் 23 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியதே இவரது சிறப்பான பந்துவீச்சாக பதிவானது.

பட மூலாதாரம், Getty Images
யார்க்கர் கிங் என்று பெயரெடுத்த நடராஜன், காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு இன்னும் தனது இயல்பான பார்முக்கு வர முடியாமல் தவிக்கிறார். அவரது பந்துவீச்சில் இன்னும் 'ரிதம்' கைகூடி வரவில்லை. உச்சக்கட்ட பார்மில் இருக்கும் போது, டெத் ஓவர்களை வீசுகையில் 3 அல்லது 4 யார்க்கர்களை சாதாரணமாக வீசிய நடராஜன் தற்போது அந்த நிலையை எட்ட முடியாமல் தடுமாறுகிறார்.
யார்க்கருக்கு முயற்சிக்கும் போது அது புல்டாசாக மாறி பேட்ஸ்மேன்கள் அடிக்க எளிதாகி விடுகிறது. இதனால், அவரது பந்துவீச்சில் ரன்கள் அதிகம் எடுக்கப்பட்டு விடுகின்றன. இதனால், டெத் ஓவர்களில் அவரை, குறிப்பாக அவரது யார்க்கரை நம்பியிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏமாற்றம் அடைந்தது.
சாய் சுதர்சன், நாராயணன் ஜெகதீசன்

பட மூலாதாரம், Getty Images
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த சாய் சுதர்சனும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய நாராயணன் ஜெகதீசனும் லீக் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பைப் பெறவில்லை. சாய் சுதர்சனை ஓரிரு முறை இம்பாக்ட் பிளேயராக பேட்டிங்கில் மட்டும் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறக்கியது.
கிடைத்த வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட சாய் சுதர்சன் 6 போட்டிகளில் 223 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளார். 2 அரைசதங்களை அடித்துள்ள இவரது அதிகபட்சம், ஆட்டமிழக்காமல் எடுத்த 62 ரன்களாகும். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த சாய் சுதர்சன், 3 போட்டிகளை அந்த அணி வெற்றிகரமாக முடிக்க உதவியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படாத சாய் சுதர்சன், நடப்புத் தொடரில் அமர்க்களமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய நாராயணன் ஜெகதீசனை அந்த அணி 6 ஆட்டங்களில் பயன்படுத்திக் கொண்டது. தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. ஆனால், ஒருநாள் போட்டிகளைப் போல மந்தமாக விளையாடி கிடைத்த வாய்ப்புகளை இவர் வீணடித்துவிட்டார். 6 போட்டிகளிலும் சேர்த்து 89 ரன்களையே சேர்த்த இவரது சராசரி 14 ரன்களே. ஸ்டிரைக் ரேட் 109. அதிகபட்சமாக 36 ரன்களே எடுத்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியில் தமிழ்நாடு வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
ஐ.பி.எல். தொடரில் தமிழ்நாடு வீரர்களின் செயல்பாடு எப்படி இருந்தது? இதன் மூலம் தேர்வாளர்களைக் கவர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்க யாருக்கேனும் வாய்ப்பு உள்ளதா என்று விளையாட்டு விமர்சகர் சுமந்த் சி.ராமனிடம் கேட்டோம்.
"நடப்பு சீசனைப் பொருத்தவரை, தமிழ்நாட்டு வீரர்களுக்கு அவ்வளவு சிறப்பான ஒன்றாக அமையவில்லை. காயம் காரணமாக சில வீரர்களால் முழுமையாக விளையாட முடியவில்லை. முழு திறனை வெளிப்படுத்த முடியவில்லை.
தினேஷ் கார்த்திக்கிற்கு இது மோசமான சீசனாகவே அமைந்துவிட்டது. ஷாரூக் கானும் பெரிதாக ஜொலிக்கவில்லை. வருண் சக்கரவர்த்திக்கு வழக்கம் போல் சிறந்த தொடராகவே அமைந்தது. நடராஜனுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக இந்த சீசன் அமையவில்லை.
இதனால், இந்த சீசன் மூலமாக இந்திய அணியில் தமிழ்நாட்டில் இருந்து வீரர் ஒருவர் இடம்பிடிக்கும் வாய்ப்பு குறைவுதான். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் விஜய் சங்கர் லீக் போட்டிகளில் ஓரளவு சிறப்பாக விளையாடியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இன்னும் போட்டிகள் இருப்பதால், அவற்றில் விஜய் சங்கர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு உண்டு." என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், FACEBOOK/SUMANT C.RAMAN
மும்பையைப் போல தமிழ்நாட்டில் இருந்து அதிக நட்சத்திரங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது, "மும்பை வீரர்கள் பொதுவாக உள்ளூர் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள். சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் கூட, மும்பை அணிக்கான போட்டிகளைத் தவறவிட மாட்டார்கள். அண்மையில் வெளிநாட்டில் இருந்து காலை நேரத்தில் விமானத்தில் வந்த ரஹானே, 10 மணிக்குத் தொடங்கிய மும்பை அணியின் ஆட்டத்தில் அந்த அணிக்காக விளையாடினார்.
தமிழ்நாட்டு வீரர்களோ அதற்கு நேர்மாறாக இருக்கிறார்கள். இங்கே, உள்ளூர் போட்டிகளில் விளையாட சீனியர் வீரர்களிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கெஞ்ச வேண்டிய நிலை இருக்கிறது. சென்னையில் இருந்தால் கூட, காயம் போன்ற ஏதாவது சாக்குப்போக்கு கூறி அதனைத் தட்டிக்கழிக்கும் நிலையே இருக்கிறது. இதனால்தான், சர்வதேச, ஐ.பி.எல் ஆட்டங்களை விளையாடிய வீரர்கள் அதிகம் இருந்தும் உள்நாட்டுத் தொடர்களில் தமிழ்நாடு அணி பெரிதாக சாதிக்காத நிலை நீடிக்கிறது. அதுவே மும்பை அணியின் சாதனைகளைத் சொல்லவே தேவையில்லை." என்று அவர் கூறினார்.
மேலும் தொடர்ந்த சுமந்த் சி.ராமன், "கிரிக்கெட்டில் நுழையும் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கிய பங்கு உண்டு. நடப்புத் தொடரில் சாதித்த ஜெய்ஸ்வால் 5 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வீதிகளில் பானிபூரி விற்றவர். ரிங்கு சிங், இளம் வயதில் சிலிண்டர்களை வீடுவீடாக விநியோகம் செய்தவர். அவர்களிடம் சாதிக்கும் உத்வேகம் அதிகமாக இருக்கிறது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற தாகம் அவர்களிடம் இருக்கிறது. இரண்டு, மூன்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால், தமிழ்நாடு வீரர்களில் பெரும்பாலானோர் உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். மும்பை வீரர்களிடம் உள்ள சாதிக்கும் வேட்கையோ, ஜெய்ஸ்வால், ரிங்குசிங் ஆகியோரிடம் உள்ள தாகமோ அவர்களிடம் கிடையாது. உள்ளூர் போட்டிகளை அலட்சியமாக அணுகுகிறார்கள். இதுபோன்ற காரணங்களால்தான், மும்பையைப் போல தமிழ்நாட்டில் இருந்து பெரிய நட்சத்திரங்கள் சமீப காலத்தில் உருவாகவில்லை" என்று விவரித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












