ஜெய்ஸ்வால், சுப்மான் கில்: சச்சின், கோலி வரிசையில் இந்திய அணியின் அடுத்த 'ரன் மெஷின்' யார்?

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடப்பு ஐ.பி.எல். தொடர் இரண்டு திறமையான இளம் நட்சத்திரங்களை அடையாளம் காட்டியுள்ளது. ஒருவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், மற்றொருவர் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மான் கில். தொடக்க ஆட்டக்காரர்களான இருவருமே தத்தமது அணிகளுக்காக அதிரடியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தங்களது அணிகளுக்கு பேட்டிங்கில் தூணாக திகழும் அவர்கள் இருவரும் பல போட்டிகளில் தனி ஒருவராகவே எதிரணிகளை கலங்கடித்துள்ளனர். சச்சின், கோலி வரிசையில் அடுத்த இடம்பெறப் போவது யார் என்ற கேள்விக்கு விடையாக இருவரையும் முன்னிறுத்தி இப்போதே பட்டிமன்றங்கள் தொடங்கிவிட்டன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருவரின் செயல்பாடுகளை அலசி ஆய்வு செய்வதுடன், கிரிக்கெட் ஜாம்பவான்கள், நட்சத்திரங்கள், நிபுணர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் என்பதையும் பார்க்கலாம்.
இளம் புயல் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்த ஐ.பி.எல். தொடர் மூலம் இந்திய கிரிக்கெட் அரங்கில் இளம் புயலாக தன்னை அடையாளம் காட்டியுள்ளார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அவர் இடது கை ஆட்டக்காரர். 21 வயதே நிரம்பியவர். ஐ.பி.எல். லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃபுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது. அந்த அணி நடப்பு ஐ.பி.எல்.லை மிகவும் வெற்றிகரமாகவே தொடங்கியது.
லீக் சுற்றில் முதல் பாதி ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே முன்னிலை வகித்தது. ஆனாலும் பிற்பாதியில் அந்த அணி சறுக்கியதால் தற்போது தொடரை விட்டே வெளியேற்றப்பட்டுவிட்டது. ஆனாலும், அந்த அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலின் அச்சமற்ற அதிரடி ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களில் இருந்து அகலாது.
லீக் சுற்றின் 14 போட்டிகளில் 382 பந்துகளை எதிர்கொண்டுள்ள ஜெய்ஸ்வால் 625 ரன்களைக் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 163.61. சராசரி 48.08. ஒரு சதமும், 5 அரை சதங்களும் அடித்துள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் 82 பவுண்டரிகளையும், 26 சிக்சர்களையும் அவர் விளாசியுள்ளார். ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடாமல், ஒரே ஐ.பி.எல். தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக மிக சொற்ப ரன்களில் அவர் சதத்தை தவறவிட்டார். அதாவது இரண்டாவது பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதற்குள் இலக்கை அடைந்துவிட்டதால் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார் ஜெய்ஸ்வால். அந்த போட்டியில் வரலாற்றிலேயே உச்சகட்டமாக முதல் ஓவரிலேயே 26 ரன்கள் அடித்து 13 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்த அவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
மும்பை அணிக்கு எதிராக தனி ஆவர்த்தனம் செய்து அதிரடியாக 124 ரன்களைக் குவித்ததே அவரது அதிகபட்ச ரன்களாகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஷாட்டுகள் அனைத்தும் தரமானவை. சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த அனுபவம் மிக்க வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சுழற்பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா ஆகியோரின் பந்துகளில் அவர் சர்வசாதாரணமாக சிக்சர்களை விளாசி அசத்தினார்.
இங்கிலாந்தின் பிரம்மாஸ்திரமாக, எதிரணிகளை கதிகலங்கச் செய்யும் ஜோப்ரா ஆர்ச்சர் ஓவரில் அடுத்த பந்துகளில் மிட் விக்கெட் திசையில் ஜெய்ஸ்வால் சிக்சர்களை விளாசி பிரமிக்க வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றுப் போனாலும் கூட, தனி ஒருவனாக களமாடி சதம் கண்ட ஜெய்ஸ்வாலே அந்த ஆடடத்தில் நாயகனாக ஜொலித்தார்.
ஜெய்ஸ்வாலுக்கு தோனி பாராட்டு
அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் பவுண்டரி மழை பொழிந்தார். இதனால், மறுமுனையில் 'ஜோஸ் தி பாஸ்' ஜோஸ் பட்லர் ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதையே பார்வையாளர்கள் மறந்துவிட்டனர். "ஜோஸ் பட்லருடன் பேட்டிங் செய்துகொண்டு, அவரை விட ஆக்ரோஷமாக இருக்கும் பேட்ஸ்மேனை உலக கிரிக்கெட்டில் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால் இந்த இன்னிங்ஸில், ஜெய்ஸ்வால் அவ்வாறு செய்துள்ளார்," என்று அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த பீட்டர்சன் தெரிவித்தார்.
அந்தப் போட்டியில் 26 பந்துகளிலேயே அரைசதத்தை பூர்த்தி செய்த ஜெய்ஸ்வால், 43 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். போட்டி முடிந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இன்னிங்ஸைப் பாராட்டி, எட்டுவதற்கு சிரமான இலக்கை ராயல்ஸ் அணி நிர்ணயித்ததே சென்னையின் தோல்விக்குக் காரணம் என்று கூறினார். இன்னிங்ஸின் தொடக்கத்தில் யஷஸ்வி ஆக்ரோஷமான பேட்டிங் செய்த விதம், போட்டியின் திசையை ராஜஸ்தானை நோக்கித் திருப்பியது என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
நடப்பு ஐபிஎல் போட்டிக்கு முன் சையது முஷ்டாக் அலி போட்டியில் மும்பை அணி கோப்பையை வென்றதில் யஷஸ்விக்கு முக்கிய பங்கு உண்டு. ஒன்பது இன்னிங்ஸ்களில் அவர் 33 ரன் சராசரி மற்றும் 142 ஸ்ட்ரைக் ரேட்டில் 266 ரன்கள் எடுத்தார். மும்பையின் இன்னிங்ஸுக்கு வலுவான அடித்தளம் ஏற்பட இது உதவியது.
இது தவிர அவர் 15 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் 1845 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோரான 265 ரன்களும் அடங்கும்.
பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் என்று வர்ணிக்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், நடப்பு ஐ.பி.எல். தொடரில் தன்னால் 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்து சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். ஒரு புறம் விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்து கொண்டிருக்கும் போது, எந்தவொரு நெருக்கடிக்கும் இடம் கொடுக்காமல் சரியான பார்ட்னர்ஷிப் இல்லாமலேயே ஜெய்ஸ்வால் தனி ஆவர்த்தனம் செய்ததன் மூலம் இளம் வீரர்களில் தனித்துவம் மிக்க ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
3 வித போட்டிகளிலும் அசத்தும் சுப்மான் கில்
மறுபுறம் கடந்த 3 மாதங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இடம் பிடிப்பதற்கான வலுவான போட்டியாளராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலதுகை தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். கேஎல் ராகுல் காயமடைந்துள்ள நிலையில் ஷிகர் தவான் தடுமாறுவதால் ரோகித் சர்மாவுடன் உலகக் கோப்பையில் களமிறங்கும் அளவுக்கு தனது திறமையை நிரூபித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடி சதம் கடந்த சுப்மான் கில் அதே பார்மை நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் தொடர்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக, 14 போட்டிகளில் 446 பந்துகளை எதிர்கொண்டு 680 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் இரண்டு சதமும், 4 அரைசதங்களும் அடங்கும். அவரது சராசரி 56.66. ஸ்டிரைக் ரேட் 152.46. மொத்தம் 62 பவுண்டரிகள், 22 சிக்சர்களை அவர் விளாசியுள்ளார். இருமுறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் செயல்பாட்டை மட்டும் கருத்தில் கொண்டால், ஸ்டிரைக் ரேட்டில் ஜெய்ஸ்வால் மேலானவராக இருக்கிறார். அடித்து நொறுக்க வேண்டிய தொடக்க வரிசையில் ஜெய்ஸ்வாலைக் (166.18) காட்டிலும் சுப்மன் கில்லின் ஸ்டிரைக் ரேட் சற்று குறைவுதான்.

பட மூலாதாரம், Getty Images
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் என்றால் சுப்மான் கில் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன். ஜெய்ஸ்வால், சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் கால் பதிக்கவில்லை. ஆனால், சுப்மான் கில்லோ ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று விதமான போட்டிகளிலும் அழுத்தமாக தடம் பதித்துவிட்டார். கடந்த ஜனவரியில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் கடந்து அசத்தினார். 149 பந்துகளைச் சந்தித்த அவர், 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகளுடன் அதனை சாதித்தார். 43-ஆவது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 150 ரன்களை எட்டினார். 48 மற்றும் 49-ஆவது ஓவர்களில் மொத்தம் 5 சிக்சர்களை அடித்து இரட்டைச் சதத்தை எட்டினார்.
சுப்மன் கில்லின் ஆட்டம் 360 டிகிரி ஆட்டம் என்று கூற முடியாது. ஆனால் எல்லா வகையான கிரிக்கெட் ஷாட்களையும் அவர் ஆடுவதை களத்தில் பார்க்க முடிகிறது. புல் ஷாட்களும், கவர் டிரைவ்களும் ஒரு கிளாசிக் கிரிக்கெட் வீரரை நினைவூட்டக் கூடியவை. இரண்டு ஃபீல்டர்களுக்கு நடுவே குறுகிய இடைவெளியிலும் பந்தை துல்லியமாக பவுண்டரிக்கு அனுப்புவதில் அவர் தேர்ச்சி பெற்றவர்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு நாள் போட்டியில் குறைந்த வயதில் 150 ரன்களை அடித்தவரும், 200 ரன்களை அடித்தவர் என்ற பெருமை சுப்மன் கில்லுக்கு கிடைத்திருக்கிறது. ஜாம்பவான்கள் பலருக்கும் கிடைக்காத பெருமை இது. அதே போல் ஒரு நாள் போட்டியில் அதி வேகமாக 1000 ரன்களை அடித்தவர் என்ற சாதனையையும் கில் படைத்திருக்கிறார்.
சச்சின், கோலி வரிசையில் அடுத்தது யார்?
சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த சூப்பர் ஸ்டாராக சுப்மான் கில் முளைவிடும் நேரத்தில்தான் அவருக்குப் போட்டியாக ஜெய்ஸ்வால் உருவெடுப்பார் என்ற எண்ணத்தை நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏற்படுத்தியுள்ளது. எனினும், 21 வயதான யஷஸ்விக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அவர் இன்னும் தனது உச்சத்தை எட்டவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகி வரும் வீரராக உள்ளார். விரைவில் அவர் அணியில் இடம்பெறும் வாய்ப்பும் உள்ளது. இதற்கு தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியது போல் அவர் தொடர்ந்து பெரிய இன்னிங்ஸுகளை விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நேரத்தில், ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் வீரரான டாம் மூடியின் கருத்து இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்மான் கில்லும், ஜெய்ஸ்வாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 விதமான ஆட்டங்களிலும் தொடக்க வீரர்களாக களம் காண்பார்கள். இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் உண்டு என்பது அவரது கருத்து.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அவரது கூற்றுப்படியே, வலது கை ஆட்டக்காரரான சுப்மான் கில்லும் இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வாலும் இணைந்து இந்தியாவின் சிறந்த தொடக்க ஜோடியாக உருவெடுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












