ஐபிஎல் இறுதிப்போட்டியில் 'விளையாடிய' மழை: இன்றும் மழை தடுத்தால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
மாலையில் இருந்து இடைவெளிவிட்டு, தொடர்ந்து மழை பெய்ததையடுத்து, குறைந்த அளவு ஓவர்களில்கூட போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.
ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, ரிசர்வ் டே-க்கு ஒத்தி வைக்கப்பட்டது இதுதான் முதல்முறை.
இதையடுத்து, ரிசர்வ் டே-வான திங்கட்கிழமை, இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. நாளையும் மழை குறுக்கிடாமல் இருக்கும் பட்சத்தில் 20 ஓவர்கள் கொண்டதாக போட்டி அமையும்.
இறுதிப்போட்டியில் விளையாடிய மழை
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்த ஐபிஎல் டி20 திருவிழா இன்றுடன் முடிவுக்கு வர இருந்தது. சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியும் மோதவிருந்தன.
மாலை 7.30 மணிக்கு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி ஆட்டம் நடக்கவிருந்தது. ஆனால் ஆமதாபாத்தில் மாலையிலிருந்து மழை பெய்யத் தொடங்கியது.
மழை இடைவெளி விட்டுப் பெய்து, பிறகு இடியுடன் கூடிய பலத்த மழையாக இருந்ததால், டாஸ் போடும் நிகழ்வைக் குறித்த நேரத்தில் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சிஎஸ்கே ரசிகர்கள் மஞ்சள் ஆடையுடன் நரேந்திர மோதி மைதானம் முழுவதும் நிரம்பியிருந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்திற்கு நம்பிக்கையுடன் வந்திருந்தனர்.
ஆமதாபாத் வானிலை நிலவரப்படி மழைக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் குறைவு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் மழையால், ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்
ஆமதாபாத்தில் மழை விட்டுவிட்டு பெய்தது. மழை நின்றபோது, சிஎஸ்கே ரசிகர்கள் குஷியாகி, தோனி, சிஎஸ்கே என்று கோஷமிட்டனர். ஆனால், மழை மீண்டும் தொடர்ந்து பெய்யத் தொடங்கியதையடுத்து, ரசிகர்கள் சோர்வடைந்தனர்.
மழை நின்றுவிட்டால் ஓவர்களை குறைத்துக்கூட இறுதிப்போட்டியை நடத்திவிடலாம் என்று நடுவர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், திடீரென நின்ற மழை மிகச் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பெய்யத் தொடங்கியதால் எந்த முடிவையும் நடுவர்களால் எடுக்க முடியவில்லை.
மழையால் மைதானத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கத் தொடங்கியது. ஆகவே, அதை வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடந்தது. இதனால், மழை நின்றாலும் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
பிறகு இரவு 9.30 மணியிலிருந்து மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால், ஆடுகளத்தை மூடியிருந்த கவர்களை எடுத்த ஊழியர்கள், ஆடுகளத்தை பாதுகாப்பதற்காக மீண்டும் அந்த கவர்களை கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
மழை ஓரளவுக்கு நின்றதால் 9.35 மணிக்கு முழு ஓவர்கள் கொண்டதாக ஆட்டம் நடத்தப்பட வாய்ப்பு இருந்தது. ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், சிறிது விட்ட மழை மீண்டும் பெய்யத் தொடங்கியதால், ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புறப்பட்டுச் சென்றனர்.
'கட் ஆஃப் டைமுக்கும்' வாய்ப்பில்லை
எப்படியும் இரவு 12 மணிக்குள் மழை நின்றுவிட்டால் “கட் ஆஃப் டைம்” என்ற அடிப்படையில் இறுதிப் போட்டியை 5 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்திவிடலாம் என்ற திட்டத்துடன் நடுவர்கள் இருந்தனர்.
ஆனால், மழை தொடர்ந்து பெய்தது. ஒருவேளை மழை நின்றாலும் மைதானத்தில் உள்ள நீரை அகற்றுவதற்கு ஊழியர்களுக்கு ஒரு மணிநேரம் தேவைப்படும். ஆனால், இரவு 11 மணிவரை மழை விட்டுவிட்டு பெய்தது.

பட மூலாதாரம், Getty Images
இதனால் 12 மணிக்கு மேல் போட்டியை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போட்டி நடுவர்கள் சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெம்மிங், குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் நெஹ்ரா ஆகியோருடன் ஆலோசனை செய்து, இறுதி ஆட்டத்தை ரத்து செய்யும் முடிவை அறிவித்தனர்.
இதையடுத்து, ரிசர்வ் நாளான திங்கட்கிழமை மழை இல்லாத பட்சத்தில் போட்டி 20 ஓவர்கள் கொண்டதாக முழுமையாக இறுதிப் போட்டி நடத்தப்படும்.
ரசிகர்கள் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை திங்கட்கிழமை பயன்படுத்தலாம் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமையும் மழை குறுக்கிட்டால், சாம்பியன் யார் என்பது சூப்பர் ஓவர் நடத்தி அதன் மூலம் அறிவிக்கப்படும்.
ஒருவேளை சூப்பர் ஓவர்கூட நடத்த முடியாத சூழலில் மழை பெய்தால், சாம்பியன் பட்டம் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் விதிப்படி வழங்கப்படும். குஜராத் டைட்டன்ஸ் 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியனாக அறிவிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
குஜராத் டைடன்ஸுக்கு சாதகமா?
குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்றில் 10 போட்டிகளில் வென்று 20 புள்ளிகளுடன் உள்ளது.
அதேநேரம், சிஎஸ்கே அணி 17 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் பிடித்தது.
ஆமதாபாத்தில் இதுவரை 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி குஜராத்துடன் மோதி, அனைத்திலும் சிஎஸ்கே அணி தோற்றுள்ளது.
ஒரு ஆட்டத்தில்கூட இங்கு சிஎஸ்கே வென்றது இல்லை. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஆடுகளத்தில் 9 ஆட்டங்களில் விளையாடி 6 போட்டிகளில் வாகை சூடியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












