தோனி: 41 வயதான 'சூப்பர் ஸ்டார்' டி20 தலைமை பொறுப்பை மாற்றியமைத்தது எப்படி?

தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுரேஷ் மேனன்
    • பதவி, விளையாட்டு எழுத்தாளர்

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, 38 வயது நிரம்பிய ஒருவர் தனது அணியை வழிநடத்தி முதல் ஐபிஎல் பட்டத்தை பெற்றுத் தந்தபோது, இந்த க்ளிஷே உண்மை என்று பலரும் நினைத்தனர். ஆனால் அவர் தனது நாட்டின் அணிக்காக ஒருபோதும் கேப்டனாக இல்லாத மிகச்சிறந்த வீரர்.

ஒருவேளை ஷேன் வார்னே இப்படி நினைத்திருக்கலாம் அல்லது நினைக்காமல் இருக்கலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வெற்றியை பெற்றுத்தந்த அவரை ஆஸ்திரேலியா அணி ஏனோ கேப்டனாக பார்க்கவில்லை.

ஆனால் ஐபிஎல் அணி அவர் மீது வைத்த நம்பிக்கைக்கு அவர் பாத்திரமாக செயல்பட்டு கோப்பையை பெற்றுத்தந்தார்.

இதேபோன்ற நம்பிக்கையை தன்மீது வைத்த அணிக்காக கோப்பையை வென்று கொடுத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

தனது 250-வது ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் இறுதிப் போட்டியில் வழிநடத்திய தோனி, அந்த அணியின் கேப்டனாக மட்டுமல்லாது, களத்தில் உத்திகளை வகுக்கும் பணியை ஏற்று நடத்தினார்.

களத்தில் தோனி

தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம், AFP

ஐபிஎல் போட்டிகள் பற்றிய தோனியின் அறிவும் அவரது அணியின் வீரர்கள் பற்றிய அவரது அறிவும் பொருந்திப்போனது.

போட்டியின் போது எந்த இடத்தில் எப்போது ஃபீல்டரை நிறுத்தவேண்டும் என்பதும், எந்த வீரருக்கு எப்போது வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதும் அவருக்கு நன்றாக தெரியும்.

களத்தில் தவறு செய்யும் வீரர்கள் மீது கடுமையான பார்வை எப்போது வீச வேண்டும், டெத் ஓவர்களில் பந்து வீசும் பந்துவீச்சாளரை எப்படி கையாள வேண்டும் என்பதில் தோனியின் பாணி தனித்துவமான ஒன்று.

குஜராத் அணியுடனான இறுதிப்போட்டியின் போது தொடக்க ஆட்டக்காரரான ‘டேஞ்சர் மேன்’ ஷுப்மன் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் தவறவிட்டார்.

ஆனால் ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்றவாறே பந்துவீச்சாளரை பாராட்டினார்.

538 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள 41 வயது நிரம்பிய தோனியின் அனுபவத்தை மதிப்பது எளிதானது. போட்டிகளின் போது வீரர்கள் செய்யும் சில தவறுகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். ஆனால் அதற்காக எல்லா தருணங்களிலும் அவர்களிடம் கடினமாக நடந்து கொள்ளாத தோனியின் அணுகுமுறை சற்று வித்தியாசமானது.

அவருக்கு விளையாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.

ஆட்டத்தின் போது சில நேரங்களில் கேட்சுகள் தவறவிடப்படும். உங்கள் பார்ட்னரை நீங்கள் ரன் அவுட்டாக்க நேரிடும். இது இயல்பானதுதான்.

ஆனால் இந்த தவறுகள் உங்கள் கவனச் சிதறலால் ஏற்பட்டால் கேப்டனாக சில கருத்துகளை தோனி சொல்வார். மற்றப்படி இதுவும் ஆட்டத்தின் ஒரு போக்கு என அதை எளிதாக கடந்து சென்றுவிடுவார் தோனி.

இந்த அணுகுமுறைதான் இந்த சீசனிலும் தொடர்ந்தது. அவரைப் போலவே அவரின் அணியும் முன்னேறியது. வீரர்கள் செய்யும் தவறுகள் குறித்து போட்டிகளுக்கு பிறகு ஆலோசனை செய்துகொள்ளலாம். அதை களத்தில் தோனி செய்யமாட்டார்.

ஐபிஎல் அணிகளுக்கு யார் கேப்டனாக வரலாம்?

தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம், BCCI/IPL

தோனி சிஎஸ்கேவை வழிநடத்தி முதல் கோப்பையை பெற்றுத் தந்தபோது போது அவருக்கு வயது 28. ஐபிஎல் தொடரின் மூன்றாவது சீசனில் இது நடந்தது.

அதற்கு முந்தைய ஆண்டு, 38 வயதான ஆடம் கில்கிறிஸ்ட் ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக கோப்பையை பெற்றுத் தந்திருந்தார்.

வேகமாக மாறும் ஆட்டத்தின் போக்கை அனைத்து கோணங்களிலிருந்தும் பார்க்கக்கூடிய அனுபவ வீரர்கள் ஐபிஎல் அணியை வழிநடத்துவது சிறந்ததா? அல்லது டக்அவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் முன்னாள் வீரர்கள் வகுக்கும் உத்திகளை கையாளும் ஒரு ‘மக்கள்’ நபர் இருப்பது பயனளிக்குமா?

35 வயதிற்குப் பிறகு தோனி தனது அணியை வழிநடத்தி மூன்று முறை ஐபிஎல் பட்டங்களை பெற்றுத் தந்திருக்கிறார்.

டி20 போட்டிகள் இளைஞர்களின் விளையாட்டாக இருக்கலாம். ஆனால் வயது மூத்த ஒருவரை கேப்டனைக் கொண்டிருப்பதன் மூலம் அதற்குரிய பலனை அடைகிறது.

"கேப்டனுக்காக இதைச் செய்வோம்" என்பது ஒரு நல்ல அணியின் கொள்கையாகும். இது டீம்வொர்க்கை பிரதிபலிக்கிறது.

வீரர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதன் மூலமும், தன் பார்வையில் அவர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியை தெரிவிப்பதன் மூலமும் சராசரி அணிகளை கூட ஒரு நல்ல கேப்டனால் வெற்றியாளர்களாக மாற்ற முடியும்.

தோனி மேஜிக்

தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம், AFP

கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜா, "இந்த டைட்டில் தோனிக்கானது" என்றார்.

எதிரணி கேப்டனின் கருத்துக்கள் இன்னும் தெளிவாக இருந்தன. "தோனிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

"அவரிடம் தோற்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. தோனியை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த கோப்பை அவருக்கென எழுதப்பட்டுள்ளது. நான் தோல்வி அடைந்தாலும், தோனியிடம் தோற்றதை மனதில் வைக்கமாட்டேன். நல்லவர்களுக்கு நல்லது நடக்கும். நான் சந்தித்த நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர் என்று நினைக்கிறேன்."

வார்னே மற்றும் தோனி இருவருமே இரும்புக் கைகளின் மேலே வெல்வெட் உறையை போட்டிருக்கும் கேப்டன்கள். தங்கள் அணியின் வீரர்கள் துவளும் போது தட்டிக்கொடுத்தும், அவர்களின் திறமைகளை கண்டறிந்து உத்வேகம் அளித்தும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ரவீந்திர ஜடேஜாவை "ராக்ஸ்டார்" என்று அழைத்தது வார்னே தான். அப்படி அவர் அழைத்தது அவரது ஆல்ரவுண்ட் கிரிக்கெட்டுக்காக அல்ல, அவரது அணுகுமுறைக்காக மட்டுமே.

ஒரு சிறந்த கேப்டன், ஒவ்வொரு வீரர்களும் அணிக்காக தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை உணர வைத்து காலப்போக்கில் தன்னுடைய தேவையை குறைக்கும் நோக்கில் செயல்படுவார்.

தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா, அவர் விளையாடவில்லை எனில் யார் கேப்டனாக பொறுப்பேற்பார்கள் என்பதை அறிந்து கொள்வது சுவாரசியமாக இருக்கும்.

அந்த பொறுப்புக்கு ருதுராஜ் கெய்க்வாட்-இன் பெயர் வலம் வருகிறது. ஆனால் தேசிய அணியில் இடம் பெற போராடாத ஒரு வீரர் எப்படி அதை செயல்படுத்தமுடியும் என்பதை பார்க்கவேண்டும்.

ஐபிஎல் தொடரில் நான்கு சீசன்களுக்குப் பிறகு வார்னே வெளியேறினார். அதன்பிறகு ராஜஸ்தான் அணியால் வெற்றி மேஜிக்கை மீண்டும் கண்டுபிடிக்க முடியாமல் போனது.

எனவே பழைய தரவுகளை அதிகம் படிப்பதிலும் ஒர் ஆபத்து ஒளிந்திருக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: