தோனி கரங்களில் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பை - சி.எஸ்.கே. வெற்றியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இது மற்றுமொரு மகுடம் என கடந்துவிட முடியாது. அதற்கு காரணம் இருக்கிறது.
2007-ல் டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்ட தோனிக்கு முதல் ஐபிஎல் கோப்பை என்னவோ மூன்றாவது சீசனில் 2010-ல் தான் கிடைத்தது. அதுவே அதன் முதல் கோப்பை. கொண்டாடித் தீர்த்தது. அடுத்த ஆண்டே மீண்டும் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அணி கோப்பையை தக்க வைத்தது எனும் பெருமை சிஎஸ்கேவுக்கு கிடைத்தது. ஆகவே அதுவும் ஸ்பெஷல்.
அதன்பின்னர் மூன்று முறை இறுதிப்போட்டியில் கோட்டைவிட்டது. ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விவகாரத்தால் இரண்டு ஆண்டுகள் தடையை எதிர்கொண்டது. அதற்கு பிறகும் மீண்டும் 2018-ல் ஐபிஎல்லில் களம் கண்டது. தடைக்கு பிந்தைய என்ட்ரி குறித்து பேசும்போது தோனி பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கலங்கினார். வயதானவர்கள் அணி என வர்ணிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு மீண்டு வந்து அந்த கோப்பையை வென்றது சிஎஸ்கே. ஆகவே 2018 ஐபிஎல் கோப்பை மிகவும் ஸ்பெஷல்.
2020 கோவிட் தொற்று சமயத்தில் நடந்த ஐபிஎல் கோப்பையில் ஏழாமிடத்துக்குச் சரிந்தது. அதுவரை அப்படியொரு சரிவை சிஎஸ்கே சந்தித்ததே இல்லை. ஆனாலும் அடுத்த சீசனிலேயே மீண்டுவந்து கோப்பையை வென்றது.
2022 சீசன் சென்னைக்கு மிகவும் முக்கியமானது. புதிதாக இரண்டு அணிகள் உள்ளே நுழைந்திருந்தன. சென்னை அணியின் Core Team சிதைந்திருந்தது. ஒரு சிலரை மட்டுமே ஏலத்தில் எடுக்க முடிந்தது. தோனிக்கு பதில் ஜடேஜா தலைமையில் களமிறங்கியது. அந்த சீசனில் வரலாறு காணாத மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிஎஸ்கே. இரண்டாம் பாதியில் தோனி கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றாலும் அணியை கரை சேர்க்க முடியவில்லை. ஒன்பதாமிடம் பிடித்தது சிஎஸ்கே.
இப்போது ஆண்டு 2023. தோனியின் கடைசி ஐபிஎல் இதுவாகத் தான் இருக்கக்கூடும் என சிஎஸ்கே ரசிகர்கள் அஞ்சிய தருணம். சில சீசன்களுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் சென்னை சேப்பாக்கம் மண்ணில் காலடி எடுத்து வைத்தது தோனி அணி.
நான்கு முறை கோப்பை வென்ற வரலாறு கொண்டிருந்த சிஎஸ்கே அணியை கிட்டத்தட்ட முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் அனைவருமே புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடத்தில் வரும் என கணிக்கவில்லை. சென்னை அணியின் பந்துவீச்சு ஒன்றும் அப்படி பலமானதாக இருக்கவில்லை.
நரேந்திர மோதி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் முதல் போட்டியை தோல்வியுடன் தொடங்கியது சிஎஸ்கே. இப்படித்தான் இந்த சீசன் சிஎஸ்கேவுக்கு தொடங்கியது.
ஆனால், அதன் பின்னர் தோனி இந்திய மைதானங்களில் எங்கெல்லாம் காலடி எடுத்து வைத்தாரோ அங்கெல்லாம் கூட்டம் கூட்டமாய் அலைமோதியது ரசிகர்கள் கூட்டம். சென்னை போன்ற மைதானங்களில் தோனியின் கிளவுஸை காட்டினால் கூட அரங்கம் அதிர்ந்தது. பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சென்னை ரசிகர்கள் 75 வயது ஆனால் கூட தோனியை ஓய்வு பெறவிடமாட்டார்கள் என்றார்.

பட மூலாதாரம், Getty Images
பிளாக் டிக்கெட், அதிக விலை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மொத்தமாக டிக்கெட்டுகள் விற்பனை என சிஎஸ்கே நிர்வாகம் மீது அடுக்கடுக்கான புகார்களை ரசிகர்களை முன்வைத்தாலும், போலீசிடம் அடிதடி வாங்கினாலும் தோனியை பார்க்க குவிந்தனர்.
லீக் போட்டிகளை வெற்றிகரமாய் முடித்துவிட்டு புள்ளிபட்டியலிலும் இரண்டாம் பிடித்து பிளே ஆஃப் சென்றது சென்னை. அதுவரை மூன்று போட்டிகளில் தொடர்ந்து குஜராத்திடம் முதலில் பேட்டிங் செய்து மண்ணை கவ்விய சிஎஸ்கே குவாலிபயர் 1 போட்டியில் நேர்த்தியாக விளையாடி குஜராத்தை வென்று முதல் ஆளாய் ஃபைனலில் நுழைந்தது.
ஆனாலும், சிஎஸ்கே ஆட்டங்களை விட இந்த சீசனில் குஜராத் ஆட்டமே மெச்சப்பட்டது. அதிரடி சுப்மன் கில், அபாயகர ஷமி, சுழல் மன்னன் ரஷீத் கான் என பிளெயிங் 11 மொத்தமும் கிட்டத்தட்ட ஃபுல் ஃபார்மில் இருந்தது. சிஎஸ்கே அணியை பொருத்தவரை தோனி கடைசியாக மீண்டும் ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. பேட்டிங்கில் மிகப்பெரிய இன்னிங்ஸை தொடர்ச்சியாக வெளிப்படுத்தவில்லை என்றாலும் கேப்டன்சியில் தோனி பெரிய குறைவைக்கவில்லை. பலமுறை அவரது மதியூகம் வர்ணனையாளர்களால் பாராட்டு பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
இறுதியாக அந்த நாள் வந்தது. எந்த மண்ணில் ஐபிஎல் 2023 சீசன் தொடங்கியதோ அதே மண்ணில் இறுதிப்போட்டி அதே அணிகள் மோதும் தினம் வந்தது.
2008-ல் தோனியுடன் மேடையில் நின்ற கேப்டன்கள் யாரும் இப்போது கேப்டனாக மட்டுமில்லை, எந்தவொரு அணியிலும் கூட இல்லை.
எதிர்முனையில் இளம்வீரர்கள் வந்தபின்னும் மீண்டுமுறை போராடி இறுதிப்போட்டி வந்தது சென்னை அணி.
குவாலிபியர் 1 போட்டியில் குஜராத்தை வென்றபோது, முதன்முறையாக இது மற்றுமொரு இறுதிப்போட்டி அல்ல என தோனி சொன்னார், இரண்டு மாத கடின உழைப்பு என அழுத்திச் சொன்னார்.
சென்னையிடம் தோற்றாலும் வலுவான மும்பையை வேட்டையாடி விட்டு இறுதிப்போட்டிக்கு வந்த குஜராத்துக்கு மவுசு அதிகமாகவே இருந்தது.
மே 28 ஞாயிற்றுக்கிழமை இரவு கோடிக்கணக்கான ரசிகர்கள் கன்னத்தின் மேல் கைவைத்து விழித்துப் பார்க்க, மழையால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
தவிர, மறுநாளும் மழை பெய்து போட்டி கைவிடப்பட்டால் கோப்பை புள்ளிபட்டியல் அடிப்படையில் குஜராத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஒருவழியாக மே 29 திங்களன்று இரவு போட்டி தொடங்கியது. தோனி டாஸ் வென்று சேசிங் எடுத்தார். சுப்மன் கில்லை கண்டு அஞ்சியிருந்தனர் சிஎஸ்கே ரசிகர்கள். அவருக்கு ஃபீல்டர்கள் கேட்சுகளை கோட்டைவிட்டாலும் தனது அபாரமான ஸ்டம்பிங் மூலம் கில் விக்கெட்டை காலி செய்தார் தோனி.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், அதன் பின்னர் சென்னை பையன் சிஎஸ்கே பௌலர்களை வெளுத்து வாங்கினார். குஜராத் இமாலய இலக்கை குவித்தது. ஓவருக்கு 10.7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆட்டத்தை துவங்கியது சிஎஸ்கே. ஆனால் மூன்றே பந்துகளில் மழை ஆட்டத்தை கலைத்தது.
டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு மாற்றப்பட்டு 15 ஓவர்களில் 171 ரன்கள், அதாவது ஓவருக்கு 11.4 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டது.
ருதுராஜ் கான்வே சிறப்பான தொடக்கம் கொடுத்து ஓவருக்கு 11 - 12 ரன்கள் என கொண்டு செல்ல, ஆப்கன் வீரர் நூர் அஹமது ஏழாவது ஓவரில் இரு தொடக்க வீரர்களையும் பெவிலியன் அனுப்பினார். சிவம் துபே டைமிங் கிடைக்காமல் தடுமாற, பின்னர் வந்த ரஹானே அனாயச சிக்ஸர்கள் விளாசி சிஎஸ்கே பக்கம் அழுத்தம் கூடுவதை தவிர்த்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் மோஹித் தனது முதல் ஓவரில் ரஹானே விக்கெட்டை வீழ்த்தியதும் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ரஷீத் கான் வீசிய 12வது ஓவரின் கடைசி இரு பந்தை சிக்ஸர் வைத்து ஆட்டத்தை மீண்டும் சென்னை வழிக்கு கொண்டு வந்தார் துபே.
ராயுடு தனது கடைசி இன்னிங்ஸில் மூன்று பந்துகளை எல்லை கோட்டை நோக்கி அனுப்பினார். 4,6,4 என துவம்சம் செய்துவிட்டு மோஹித் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அப்போது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு தேவை 14 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே.
அரங்கம் அதிர களமிறங்கிய தோனி முதல் பந்திலேயே வீழ்ந்தார். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அடுத்த ஏழு பந்துகளில் சிஎஸ்கே அணியால் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலை. ஏற்கனவே மூவரின் விக்கெட்டை சாய்ந்திருந்த மோஹித் கடைசி ஓவரில் வீசினார்.

பட மூலாதாரம், Getty Images
அற்புதமான பந்துகளில் ஆட்டத்தை தமது பக்கம் திருப்பினார். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போது சிஎஸ்கே வெற்றிக்கு இரு பந்துகளில் 10 ரன்கள் தேவை. குஜராத் ஒரு நல்ல பந்தை வீசினால் கோப்பையை தக்கவைக்க முடியும் என சூழல்.
தோனி கீழே குனிந்து வெறுமையோடு இருக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காண்பிக்கப்பட்டது. மோஹித் யார்க்கர் வீச திட்டமிட்ட அந்த பந்தை லாங் ஆனில் ஒரு அபார சிக்ஸர் வைத்தார் ஜடேஜா. அடுத்த பந்தையை ஷார்ட் ஃபைன் லெக்கில் லாவகமாக ஒரு பௌண்டரியை தட்டிவிட்டார். மைதானமே ஆர்ப்பரித்தது. ஆனாலும் தோனியிடம் சலனமில்லை.
விளையாட்டு வீரர்கள் குறித்த திரைப்படங்களில் காட்டப்படுவது போன்ற ஒரு சம்பவம் அப்போது அரங்கேறியது. வெற்றிக்கான ரன்னை அடித்தபிறகு தோனியை நோக்கி நேராக ஓடி வந்தார் ஜடேஜா, அவரை கண்டதும் அவரை அள்ளித் தூக்கினார் தோனி. 41 வயதாகும் தோனி பார்க்காத கோப்பைகள் இல்லை, கொடுக்காத கம்பேக் இல்லை. ஆனால் தோனி இப்படியொரு உணர்ச்சிபூர்வ செய்கையை இதற்கு முன் செய்ததே இல்லை.

பட மூலாதாரம், Getty Images
களத்திற்குள் வந்ததும் இந்த சீசனில் இரு முறை தனது விக்கெட்டை வீழ்த்திய மோஹித் சர்மாவின் தலையை தட்டிக்கொடுத்தார்.
ஐந்தாவது முறையை கோப்பையை வென்றாலும் அதை கடைசியாக ஒருமுறை தான் பெறவேண்டும் என எண்ணாமல் அதைப் பெறுவதற்கு ராயுடு மற்றும் ஜடேஜாவை அழைத்தார்.
போட்டி முடிந்தபிறகு பேசியபோது உடல் ஒத்துழைத்தால் அடுத்த சீசனில் விளையாடுவேன், அதுவே எனது பரிசு என உருக்கமாக பேசினார்.
அடுத்த சீசனில் தோனி விளையாடலாம், விளையாடாமல் போகலாம். ஆனால் ஐபிஎல் வரலாற்றில் மே 30, 2023 இறுதிப்போட்டியை சிஎஸ்கே ரசிகர்கள் என்றும் தமது நினைவலைகளில் இருந்து மறக்கமாட்டர் என்பது திண்ணம்.
இது நிச்சயம் அவர்களுக்கு மற்றுமொரு கோப்பை அல்ல.

பட மூலாதாரம், Getty Images
2004-ம் ஆண்டு முதல்முறையாக இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்தபோது வங்கதேச மண்ணில் நடந்த ஒருநாள் போட்டியில் முதல் பந்திலேயே ரன்அவுட் ஆனார். கிரிக்கெட்டின் அத்தனை புகழையும் பெற்றபிறகு இதோ 41 வயது தோனி நேற்று இரவு மீண்டும் டக் அவுட் ஆனார்.
16 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது ஐபிஎல்லில் முதல் இறுதிப்போட்டில், 2008-ம் ஆண்டு சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதின. அந்த போட்டியில் கடைசி பந்தில் வெற்றிவாய்ப்பை இழந்தது சென்னை. இடையில் ஒரு ரன் வித்தியசத்தில் இரண்டு முறை கோப்பையை இழந்திருந்தார் தோனி. ஆனால் இந்த முறை தோனிக்கு அந்த துரதிருஷ்டம் நிகழவில்லை. கடைசி பந்தில் வென்றது சிஎஸ்கே. அதற்கு காரணம் ஜடேஜா.
கடந்த சீசனில் சொதப்பல் ஆட்டம், இந்த சீசனில் நிலையற்ற ஆட்டம், களத்தில் இறங்கினாலே தோனியை வருவதற்காக தான் அவுட் ஆக வேண்டும் என விரும்பிய சொந்த அணியின் ரசிகர்கள் என பல சவால்களை எதிர்கொண்ட பிளே ஆஃபிலும் சரி, இறுதிப்போட்டியில் சரி தனது சொந்த மண்ணை எதிர்த்து விளையாடும்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டார்.
குவாலிபயர் 1 போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார், பேட்டிங்கில் 22 ரன்கள் எடுத்தார்.
இறுதிப்போட்டியில் ஜடேஜா பந்தில் தான் சுப்மன் கில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 சீசனில் தோல்வியுடன் தொடங்கிய அதே மண்ணில், வெற்றியுடன் முடித்தது சிஎஸ்கே. அந்த வகையில் ஜடேஜா நேற்று வைத்தது ஒரு அழகான முற்றுப்புள்ளி .
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












